என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே மறமடக்கி வத்திரான் குடியிருப்பை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 50). இவர் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் புல் அறுக்க நேற்று சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மதியழகன் அவரை தேடி சென்றபோது, வயலில் அறுந்து கிடந்த மின்சார கம்பியின் மூலம் மின்சாரம் பாய்ந்து தமிழ்செல்வி இறந்து கிடந்தார். இதையறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தமிழ்செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே உள்ள வயலோகத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது வயலோகம் கடைவீதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த பொன்னமராவதி தொட்டியம் பட்டியை சேர்ந்த பகுருதீன் அலிஅகமது (வயது 30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 17 லாட்டரி சீட்டுக்கள், ரூ.2 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 381 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து 33 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 321 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 370 ஆக உள்ளது.
    கோட்டைப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    கோட்டைப்பட்டினம்:

    கோட்டைப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் கோட்டைப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டனர். வர்த்தகர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கோட்டைப்பட்டினம் வர்த்தக சங்கத்தினர் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
    பொன்னமராவதி அருகே காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி 20 ஆண்டுகளாக பாறையிலேயே அமர்ந்து இருக்கிறார்.
    பொன்னமராவதி:

    மனித வாழ்வில் காதல் மிகவும் புனிதமானது. இரு மனங்கள் இணைவதற்கு அடித்தளமாக அமையும் காதல் பலரை வாழ வைத்திருக்கிறது. பலரை வீழ்த்தியும் இருக்கிறது.

    காதல் தோல்வியால் தனது வாழ்க்கையை தொலைத்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் என பலர் இருப்பார்கள். ஆனால் காதல் தோல்வி காரணமாக மனநலம் பாதித்தவர்களை அரிதாகவே பார்க்க முடியும். அந்த வகையில் புதுக்கோட்டை அருகே ஒருவர் காதலி தனக்கு கிடைக்காததால் மனநோய்க்கு ஆளாகி ஊரைவிட்டு ஒதுங்கி இருக்கும் பாறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அமர்ந்து இருக்கிறார் என்றால் பரிதாபம்தானே!

    அவரை பற்றிய சோகக்கதையை பார்ப்போம்.

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மூலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சாயி (வயது 70). இவரது மகன் நாகராஜன் (40). இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு மளிகை கடையில் கூலிவேலை செய்து வந்தார்.

    அப்போது, அவருக்கும், கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து நாகராஜன் அந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக தனது சொந்த ஊரான மூலங்குடிக்கு அழைத்து வந்தார்.

    இதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் மூலங்குடிக்கு வந்து இரவோடு இரவாக அந்த பெண்ணை வேன் மூலம் அழைத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் அன்று முதல் புலம்ப தொடங்கினார். தொடர்ந்து அவர் சுய சிந்தனையற்ற நிலைக்கு மாறினார். அவரது நிலையை அறிந்த அண்ணன் சேகர், அவரது தாய் நஞ்சாயி ஆகியோர் நாகராஜனை பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு நாகராஜனுக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

    இதையடுத்து நாகராஜன் மன விரக்தியில் மூலங்குடி பகுதியிலுள்ள தெய்னி கண்மாய் பகுதியில் உள்ள ஒரு பாறையில் உட்கார ஆரம்பித்தார். அன்று முதல் இன்று வரை அந்த பாறையில் உட்கார்ந்த நிலையிலேயே உள்ளார். ஊர்க்காரர்கள், உறவினர்கள் அவரை அழைத்து பார்த்தபோது அவர் வராமல் அதே இடத்தில் இருக்கிறார்.

    தினமும் அவரது தாய் நஞ்சாயி உணவினை பாறைக்கு எடுத்து சென்று மகனுக்கு வழங்கி வருகிறார். நஞ்சாயி 100 நாள் வேலைக்கு சென்று தனது மகனை காப்பாற்றி வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    வீட்டில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து இருக்கும் மகனை தினமும் சந்தித்து அவருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி வருகிறேன். தற்போது, வயது முதிர்வுகாரணமாக என்னால் வேலைக்கு செல்ல முடியாததால் மகனை கவனிக்க முடியவில்லை. எனவே எனது மகன் நாகராஜனை கவனிக்க அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    எங்கே செல்லும் இந்த பாதை... என்ற நிலையில் மனநலம் பாதித்த நாகராஜன் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த சேது என்ற படத்தை நினைவூட்டுவதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
    இறால் பண்ணையில் வயர் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோட்டைப்பட்டினம்:

    மீமிசல் அருகே உள்ள உப்பளம் பகுதியில் தனியார் இறால்பண்ணை உள்ளது. இங்குள்ள மோட்டார் அறையில் இருந்த காப்பர் வயர்களை திருடி கொண்டு இருந்தனர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மீமிசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வயர்களை திருடிக்கொண்டிருந்த மணமேல்குடி ராஜா தோப்பு பகுதியைச் சேர்ந்த முனியன் (வயது 27) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 334 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 45 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 370 ஆக உள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் வட்டாரம், வி.கோட்டையூரில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வி.கோட்டையூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை தேடி மருத்துவம் என்கிற சிறப்பான திட்டத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் வட்டாரம், வி.கோட்டையூரில் ‘மக்களை தேடி மருத்துவம்” திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் முதல்வர் கலைஞர் 2006-2011 ஆட்சிக் காலத்தில் வரும் முன் காப்போம் என்ற திட்டத்தை செயல்படுத்தி ஒவ்வொரு ஊராட்சியிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தற்பொழுது அதைவிட கூடுதலாக கலைஞர் வழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை தேடி முகாம்களை அனுப்புகின்ற பணியை செயல்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழகத்தில் துவக்கி வைத்துள்ளார்.

    தற்பொழுது இல்லங்கள் தோறும் நேரடியாக சென்ற மருத்துவ சிகிச்சை அளிப்பதால் பொதுமக்கள் மிகுந்த பயன்பெறுவார்கள். மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் படிப்படியாக செயல்படுத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். எனவே இத்திட்டத்தை பொது மக்கள் உரிய முறையில் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்வில் பொது சுகாதாரத்துணை இயக்குநர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அழகு (எ)சிதம்பரம், வளர்மதி, ஊராட்சி மன்றத் தலைவர் ராமதிலகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் முதன் முதலில் திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சுற்றுச் சூழல்துறை அமைச்சர் மெய்ய நாதன் தொடங்கிவைத்தார்.

    கடந்த 2011 ஆம் ஆண்டு கிராமப்புற மக்களின் மருத்துவத் தேவைக்காக வருமுன் காப்போம் என்ற திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செயல்படுத்தினார். அவரின் தொடர்ச்சியாக தற்போது மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி மக்களின் வரவேற்பை பெற்று உள்ளார் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கவிதா- ராமு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் மருத்துவ வாகனத்தின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பொது சுகாதார துணை இயக்குனர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆனந்த் இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

    அரியலூர் மாவட்டம், வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டமானது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மருத்துவ வசதி தேவைப்படும் நபர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தினை மேலும் முன்னெடுத்து செல்லும் வகையில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ வசதி தேவைப்படும் நபர்களுக்காக மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தின் மூலமாக மருத்துவப் பணியாளர்கள் பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவு பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும்.

    அதனடிப்படையில் அரியலூர் மாவட்டம் கடுகூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட 17 துணை சுகாதார நிலையத்திலும் இத்திட்டம் செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில், 1,60,135 மக்கள் தொகை கொண்ட கடுகூர் வட்டாரத்தில் வெங்கட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் அடிப்படையில், கடுகூர் வட்டாரத்தில் 5,136 நோயாளிகளில், ரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்ட 2,077 நோயாளிகளுக்கும், 2,335 சர்க்கரை நோயாளிகளுக்கும், 724 ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயாளிகளும், நோய்க்கான மருந்து வழங்கப்பட உள்ளது. மேலும் நமது மாவட்டத்தில் நோய்த் தடுப்பு சிகிச்சை மற்றும் பிசியோதெரபிஸ்ட் மூலம் (கை, கால் அசைவு) 70 நபர்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மேலும், வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 713 மக்கள் தொகையில் 13 நபர்களுக்கு தொற்றா நோய்க்கான மருந்து மற்றும் 4 நபர்களுக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் (கை கால் அசைவு) சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து, கடுகூர் வட்டாரத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை பணி நாட்களில் (செவ்வாய்க்கிழமை தவிர) பெண் களப்பணியாளர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு கீழ் உள்ள உடல் குன்றிய நோயாளிகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன என்றார்.

    பின்னர், பிசியோதெரபி சிகிச்சைக்கு தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து, பொது மக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அவர்களுக்கு தேவையான மருந்துபொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துகிருஷ்ணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த் காந்தி, கோட்டாட்சியர் ஏழுமலை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் சந்திரலேகா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஏற்கனவே கொரோனா சிகிச்சை பெற்றவர்களில் 44 பேர் குணமடைந்ததால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 612 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 பேர் உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவுக்கு 310 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகே பிரபல மருந்து கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலை அவர்கள் கடையை திறக்க வந்தபோது மருந்து கடையின் கதவில் பூட்டப்பட்டு இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. பின்னர், கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.30 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா வயரை மர்ம நபர்கள் அறுத்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ள மருந்து கடையில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கறம்பக்குடி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்து தூக்கில் தொங்கவிட்டு கணவர்-மாமியார் தப்பி சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலங்குடி:

    தஞ்சாவூர் மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள இடையாத்தி பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா மகன் அய்யப்பன். இவருக்கும் கவுசல்யாவுக்கும் கடந்த 5½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 4½ வருடங்களாக கணவனும், மாமியாரும் சேர்ந்து கவுசல்யாவை கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கவுசல்யா கந்தர்வகோட்டை அருகே மட்டங்காள் பகுதியில் உள்ள தனது தந்தை ரவி வீட்டிற்கு சென்றார்.

    கடந்த ஆடிப்பெருக்கு அன்று மனைவியை குடும்பம் நடத்த அழைத்து வந்த கணவர் அய்யப்பன் மீண்டும் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி துன்புறுத்தி உள்ளார். இதற்கு அய்யப்பனின் தாய் சரோஜாவும் உடந்தையாக இருந்துள்ளார்.

    நேற்று மதியம் 12 மணி அளவில் வீட்டில் உள்ள உத்திரத்தில் கவுசல்யாவை தூக்கில் தொங்க விட்டதோடு கதவை பூட்டி விட்டு இருவரும் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

    அக்கம்பக்கத்தினர் கவுசல்யா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக வாண்டாத்திக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆனாலும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வராததால் ஆத்திரம் அடைந்த கவுசல்யாவின் உறவினர்கள் கறம்பக்குடி- பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் ஆர்.டி.ஒ. இரவு 9 மணி அளவில் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து கவுசல்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக இரவு 9.30 மணியளவில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். வாண்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    நோய் தாக்கம் இல்லாத தாய்மார்கள் தாய்ப்பால் தானம் செய்யலாம் என புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அங்கமான அரசு ராணியார் மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி தலைமை தாங்கினார். மேம்படுத்தப்பட்ட தாய் சேய் நல மையத்தின் ‘தாய்ப்பால் கொடுக்கும் கொள்கை’ கையேட்டினை வெளியிட்டு அவர் பேசுகையில், ``தாய்ப்பால் கொடுப்பது பெற்றோரின் பங்கு மட்டுமல்ல சமுதாயத்தின் பங்கு. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை பாதுகாப்பது நம் அனைவருக்குமான பொறுப்பு. நோய்தாக்கம் இல்லாத தாய்மார்கள் அனைவரும் தாய்ப்பால் தானம் செய்யலாம். தானமாக பெறப்பட்ட தாய்ப்பால் தேவையான பரிசோதனைகளுக்கு பிறகு பதப்படுத்தப்பட்டு சேமிக்கப்பட்டு பிறகு தேவைப்படும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும்'' என்றார்.

    விழாவில் சிசு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பிய 1 கிலோவிற்கும் குறைவான எடையுடன் பிறந்த 10 குழந்தைகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தாய்மார்கள் எழுப்பிய தாய்ப்பால் பற்றிய சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்பட்டது.

    விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்மோகன், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் கலையரசி, நிலைய மருத்துவ அதிகாரி இந்திராணி, குழந்தைகள் நலப் பிரிவு துறைத்தலைவர் ஸ்ரீதர் மற்றும் மகப்பேறு மருத்துவத்துறைத் தலைவர் அமுதாஉள்பட அனைவரும் தாய்பால் வார விழாவின் உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக குழந்தைகள் மருத்துவர் இங்கர்சால் வரவேற்று பேசினார். முடிவில் பச்சிளங்குழந்தைகள் பிரிவு மருத்துவர் பீட்டர் நன்றி கூறினார்.

    இதேபோல் கீரனூரை அடுத்த உப்பிலியக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தும், குழந்தைகளுக்கு புத்தாடைகளும் அரிமா சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரிமா சங்க தலைவர் ஜான் கென்னடி, வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா, அரசு டாக்டர்கள் ராமமூர்த்தி, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அறந்தாங்கி அரசு மருத்துவனையில் தலைமை மருத்துவர் சேகர் தலைமையில் தாய்ப்பால் வார விழா நடைெபற்றது. இதில் குழந்தைகள் நல மருத்துவர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×