என் மலர்
புதுக்கோட்டை
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் புதுபட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் வேளாங்கண்ணி (38). இவரது மனைவிக்கு சத்துணவு துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சத்தை, கடந்த 2019ம் ஆண்டு விராலிமலை தெற்குதெருவை சேர்ந்த ஜேசுராஜ் (36) மற்றும் இவரது மனைவி அனுசியா ஆகிய இருவரும் வாங்கி னார்களாம்.
ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லையாம். இது குறித்து ஜேசுராஜ் மற்றும் அவரது மனைவி அனுசியாவிடம் பல முறை சென்று கேட்ட போது, அவர்கள் வேளாங் கண்ணியை மிரட்டினார்களாம்.
இதனால் மனம் விரக்தியடைந்த வேளாங்கண்ணி விராலிமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஜேசுராஜ் மற்றும் அனுசியா ஆகிய இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விராலிமலை போலீசார் ஜேசுராஜை கைது செய்தனர்.
இதேபோல் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக போலீஸ் நிலையத்தில் 3 பெண்கள் புகார் மனு கொடுத்தனர்.
ஜேசுராஜின் மனைவி அனுசியா விராலிமலை ஒன்றியத்தில் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிகளில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கறம்பக்குடி கடைவீதி பகுதியில் பேரூராட்சியினர், வருவாய்துறையினர், காவல் துறையினர் இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடைவீதியில் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 20 நபர்களுக்கு தலா 200 வீதம் 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள நகை கடை, மளிகைக்கடை மற்றும் இதரகடைகள் என அனைத்து கடைகளிலும் உள்ள வியாபாரிகளிடமும், மக்களிடமும் முக கவசத்தை வழங்கி தனிமனித இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தினர்.
ஆலங்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள கலியரான் விடுதி தொண்டைமான் புஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மோனிஷா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. மோனிஷாகர்ப்பமாக இருந்தார். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி மோனிஷா இறந்து விட்டார். அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர்.
இதனிடையே மோனிஷா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் இறப்பிற்கான காரணத்தை அறிய வேண்டும் என்று கலியரான் விடுதி கிராம நிர்வாக அதிகாரி சதிஸ் குமார் கறம்பக்குடிபோலீசில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை பிள்ளையார் பட்டியை சேர்ந்தவர் மாதவன் (வயது 20). இவர் கேட்டரிங் படித்து வந்தார். இந்நிலையில் விராலிமலை அருகே உள்ள பொத்தப்பட்டியில் நடைபெற்றுவரும் கருப்பர்கோவில் திருவிழாவிற்கு வந்தார்.
இந்நிலையில் அதிகாலை அதேபகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நடந்து சென்ற போது அங்கிருந்த ஒரு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி மாதவனின் உடலை மீட்டனர்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.






