என் மலர்
புதுக்கோட்டை
- மணிகண்டன்அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய–தாக புகார்கள் வந்தன.
- இதை தொடர்ந்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
புதுக்கோட்டை
ஆலங்குடி கல்லுக்குண்டு கரையைச் சேர்ந்தவர் துப்பாக்கி முருகன் மகன் மணிகண்டன் (வயது 23). இவர் தற்போது ஆலங்குடி கே.வி.எஸ். தெருவில் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டியதாக புகார்கள் வந்தன. அதன் பேரில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் ஆய்வாளர் அழகம்மை விசாரித்து வழக்குப்பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் நேற்று அடைத்தனர். தீபாவளி அன்று கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் கைதான மணிகண்டன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அறந்தாங்கி அருகே எரிச்சி ஸ்ரீமெய்யர் அய்யனார் கோவில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாக கருதப்படுகிறது.
- கோயில் பழமையானதால், சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எரிச்சி ஸ்ரீமெய்யர் அய்யனார் கோவில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாக கருதப்படுகிறது. எரிச்சி, சிதம்பரவிடுதி, நற்பவளக்குடி, வடவயல், ஆமாங்குடி, குன்னக்குரும்பி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வழிபடுகின்ற இக்கோயிலானது, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கோயில் பழமையானதால், சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த சிலர் கோவில் தங்களுக்கு மட்டுமே உரிமையானது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதனால் கோவில் திருப்பணிகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பகுதி தலைவர் பாண்டித்துரை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
அப்போது மெய்யர் அய்யனார் ஆலயத்தின் திருப்பணிகளை விரைந்து முடித்து அனைத்து மக்களும் வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும் என போராட்டத்தின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது. போராட்டத்தில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே உள்ள துவார் பெத்தாரிப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- இந்நிலையில் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே உள்ள துவார் பெத்தாரிப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. தீபாவளி நாளில் குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி கிராமமக்கள் துவார் பெத்தாரிப்பட்டியில் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் மற்றும் மழையூர் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக மின்மோட்டாரை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஆலங்குடி அருகே உள்ள திருக்கட்டளை கிராமத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
- 30 அடி உயரம் கொண்ட யூக்கலிப்டஸ் தைல மரத்தில் 10 கிலோ கிரீஸ், ஐந்து கிலோ விளக்கெண்ணை, 5 கிலோ கத்தாழை ஜெல் உள்ளிட்டவைகளை ஒன்றாக சேர்த்து தேய்த்து கடந்த ஒரு வார காலமாக ஊற வைத்து வழுக்கு மரமாக உருவாக்கப்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருக்கட்டளை கிராமத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
இதில் 30 அடி உயரம் கொண்ட யூக்கலிப்டஸ் தைல மரத்தில் 10 கிலோ கிரீஸ், ஐந்து கிலோ விளக்கெண்ணை, 5 கிலோ கத்தாழை ஜெல் உள்ளிட்டவைகளை ஒன்றாக சேர்த்து தேய்த்து கடந்த ஒரு வார காலமாக ஊற வைத்து வழுக்கு மரமாக உருவாக்கப்பட்டது. பின்னர் அந்த மரத்தை அப்பகுதியில் ஊன்றி வைக்கப்பட்டு போட்டி தொடங்கியது.
இதல் வீரர்கள் வழுக்கி விழுந்தால் காயமடையாமல் இருக்க வழுக்கு மரத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு மீண்டும் நடத்தப்பட்டதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த வழுக்கு மரம் ஏறும் போட்டியில் 9 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த 6 அணிகள் பதிவு செய்து பங்கேற்றனர். ஒவ்வொரு அணிக்கும் வழுக்கு மரத்தின் எல்லையை தொட 10 நிமிட நேரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது. முதல் அணியாக மேலக்கொள்ளை சுந்தர காளியம்மன் குழுவைச் சேர்ந்த அணியின ர் வழுக்கு மரம் ஏறினர். ஆனால் அவர்கள் பலமுறை முயற்சித்தும் நிர்ணயிக்கப்பட்ட 10 நிமிடத்திற்குள் எல்லையை தொட முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பின்னர் இரண்டாவதாக எரிச்சி ராமு பாய்ஸ் அணியினர் ஒன்பது பேர் பங்கேற்க விழா கமிட்டி அறிவித்திருந்த நிலையில் எட்டு பேர் மட்டுமே பங்கேற்று பின்னர் அதிலும் ஏழு பேர் மட்டுமே முதல் முயற்சியிலேயே வழுக்கு மரத்தில் ஏறி 56 நொடிக்குள் இலக்கை எட்டி வெற்றி வாகை சூடினர்.
இதையடுத்து அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வழுக்கு மரத்தில் ஏறி எல்லையை தொட்ட இளைஞர்களை கைகளை தட்டி ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற எரிச்சி ராமு பாய்ஸ் அணியினருக்கு 10 ஆயிரத்து ஒரு ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற எரிச்சி ராமு பாய்ஸ் அணியினர் நூற்றுக்கணக்கான வழுக்கு மரம் ஏறும் போட்டியில் கலந்து கொண்டு பல போட்டியில் வெற்றி வாகை சூடியது குறிப்பி டத்தக்கது.
- கருப்பர் கோவில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டது
- மர்ம நபர்கள் அட்டூழியத்தால் பரபரப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ளது சுணை கருப்பர் கோயில். அப்பகுதி கிராம மக்களின் காவல் தெய்வமாக கருதப்படும் சுணை கருப்பர் கோயில் வரலாற்று புகழ் பெற்ற பழங்கால கோயிலாகும். இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ஆகிய ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.
தீபாவளியை முன்னிட்டு நேற்று பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் நள்ளிரவு கோயிலின் முன் பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள், கருவறை உள்ளே செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த மரத்திலான கதவின் ஸ்க்ருவை கழட்டிவிட்டு உள்ளே சென்றவர்கள் உள்ளிருந்த மூலவர் கருப்பர் சிலை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கோயில் சுற்றுப்புறத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த வேல், அருவாள், கம்பு உள்ளிட்ட பொருட்களை சிதறடித்து சென்றுள்ளனர்.
மர்ம நபர்களின் இந்த செயலால் அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள், கோயில் முன் திரண்டனர். இதனை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- பேரையூர் விளக்கு சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பேரையூரில் பிரசித்தி பெற்ற நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பேரையூர் விளக்கு சாலையில் புதுக்கோட்டை- பொன்னமராவதி சாலை செல்கிறது.
இந்த சாலை வழியாக புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அதிகளவு சென்று வருகிறது. இதனால் பக்தர்கள், முதியோர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்சிலிருந்து இறங்கி சாலையை கடந்து கோவில் செல்லவும், ஊருக்கு செல்லவும் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் பேரையூர் விளக்கு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில், சிலர் இறந்து உள்ளனர். பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று சென்றுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- கறம்பக்குடி அருகே நிற்காமல் சென்றதால்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள செம்பட்டி விடுதி நால்ரோடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 42). இவர் புதுக்கோட்டையிலிருந்து கறம்பக்குடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு பஸ்சை இயக்கி சென்றார்.
மழையூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பஸ் புறப்பட்டபோது பின்னால் அதிரான்விடுதி கிராமத்தை சேர்ந்த சூர்யா (21) என்பவர் தனது நண்பரை பஸ்சில் ஏற்றி விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று பஸ்சை நிறுத்த கூறியுள்ளார். ஆனால் பஸ் நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த நிலையில் அந்த பஸ் புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடிக்கு திரும்பி சென்ற போது மழையூர் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது அங்கு வந்த சூர்யா ஏன் பஸ்சை நிறுத்தவில்லை என்று கூறி ஆத்திரம் அடைந்து டிரைவர் சுரேஷ்குமாருடன் தகராறில் ஈடுபட்டதுடன் பஸ் கண்ணாடியை உருட்டுக்கட்டையால் அடித்து உடைத்தார். இதில் பஸ்சின் முகப்பு கண்ணாடி நொறுங்கியது.
இதுகுறித்து டிரைவர் சுரேஷ்குமார் மழையூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த சூர்யாவை கைது செய்தார். பின்னர் அவர் ஆலங்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்."
- விபத்தில் விவசாயி பலியானார்
- வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள முதுகுளம் பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் (வயது 52), விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை கந்தர்வகோட்டையில் வாங்கி கொண்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நமச்சிவாயம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
- மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான ஜுடோ போட்டிகள் கந்தர்வகோட்டையில் அண்மையில் நடைபெற்றது.போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ்.அப்துல் ஆரிப் 60 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று முதலிடமும், மாணவன் கே.சிராஜ் 66 கிலோ எடைப்பிரிவில் முதவிடமும், மாணவன் டி.சண்முகசுந்தரம் 55 கிலோ எடைப்பிரிவில் முதலிடமும், மாணவன் கேஎம்.அருளானந்தன் 90 கிலோ பிரிவில் முதலிடமும், மாணவன் பி.சந்தோஷ்குமார் 66 கிலோ எடைப்பிரிவில் முதலிடமும், மாணவன் வி.மனோஜ் 50 கிலோ எடைப்பிரிவில் முதலிடமும் பெற்றனர்.மேலும் பள்ளி மாணவ, மாணவியர் 6 பேர் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் கராத்தே பயிற்சியாளர் வீரையா, பயிற்சியாளர் பிரகாஷ் உள்ளிட்டோரை பள்ளியின் முதல்வர் ச.ம.மரியபுஷ்பம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர்.
- மழை இல்லாததால் வியாபாரிகள் உற்சாகம்
புதுக்கோட்டை
தீபாவளி பண்டியை புதுக்கோட்டை மக்கள் நாளை சிறப்பாக கொண்டாட தயார் ஆகி வருகின்றனர். இரண்டு ஆண்டுகள் கொரேனா தொற்று காரணமாக தீபாவளி கொண்டாட்டங்கள் மந்தகதியில் இருந்தன. தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையில் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட முன்வந்துள்ளனர்.
துணிகடைகள் மற்றும் இனிப்பு கடைகள் மட்டுமின்றி நகைகடைகளிலும் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக கீழராஜவீதி, நகை கடை வீதி, வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி, பழைய பேரூந்து நிலையம், புதிய பேரூந்து நிலையம், அண்ணாசிலை போன்ற பகுதிகளில் மக்களின் படையெடுப்பால் எங்கும் பார்த்தாலும் மக்களின் தலைகள்தான் தெரிகிறது. இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக சாரல் மற்றும் பலத்த மழை காரணமாக வியாபாரம் மந்தமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முழுவதும் மழை பெய்யாத காரணத்தினால் மக்கள் தீவிரமாக பொருட்கள் வாங்கிவருகின்றனர். இதனால் வியாபாரிகளும் நம் போட்ட முதலீட்டை நல்ல லாபத்துடன் எடுத்துவிடலாம் என்று உற்சாகத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மக்கள் கூட்டம் அலை மோதுவதால் காவல் துறையினர் கீழராஜவீதியில் பிரத்தியோமாக கண்காணிப்பு நிலையம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக பொருட்கள் வாங்க வேண்டும். அறிமுகம் தெரியாத நபர்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம் என்று அவ்வப்போது எச்சரிக்கை செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறையினர் சார்பாகவும், தனியார் தொண்டு நிறுவனம் சார்பாகவும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை நகர் முழுவதும் கொடுத்து வருகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த வருடம் தீபாவளி வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமில்லை.
- மைக்ரோவன் வெடித்து பேக்கரி மாஸ்டர் உயிரிழந்தார்
- பணி செய்து கொண்டிருந்த போது நடந்தது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமசாமி மகன் முருகேசன் (வயது 39). இவர் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஒரு கடையில் ஸ்வீட் உணவுகளை தயார் செய்து கடந்த எட்டு ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி உணவுகள் ஆர்டரின் பேரில் அதிகளவு தயாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த மைக்ரோவன் வெடித்து சிதறியது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 70) என்பவர் மது விற்றுக்கொண்டிரு ந்ததை பார்த்த போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 20 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 1900 கைப்பற்றி ஆலங்கு டி காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் அவர் மீது ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் நித்தியா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






