என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது
    • சாலை மறியல் போராட்டம் ரத்து

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதியில் இருந்து வேகுப்பட்டி காட்டுப்பட்டி வழியாக பர்மிட் உள்ள அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஊருக்குள் வராமல் இருப்பதை கண்டித்து, இன்று காட்டுப்பட்டி விலக்கு ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற இருந்தது. இதனை அறிந்த பொன்னமராவதி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பழனிச்சாமி, அவர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.இதில் வேகுப்பட்டி காட்டுப்பட்டி வழியாக பர்மிட் உள்ள பஸ்கள் வழக்கம்போல இயக்கப்படும் என உறுதி கூறியதன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர்.வட்டார போக்குவரத்து நேர்முக உதவியாளர் நடராஜன், துணை தாகில்தார் திலகம், புதுக்கோட்டை அரசு போக்குவரத்து வணிக பொது மேலாளர் சுப்பு, கிளை மேலாளர் அருண்குமார், பொன்னமராவதி எஸ்.ஐ. முத்து, வேகுப்பட்டி ஊராட்சி தலைவர் அர்ச்சுணன், காட்டுப்பட்டி ஊராட்சி தலைவர் அழகி, ஊராட்சி துணைத் தலைவர் முத்து, பொன்னமராவதி ஆர்.ஐ வேளாங்கண்ணி, விஏஓ ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கின
    • அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:

    கலைத்திருவிழா நடைபெறும் இடமனது வேடிக்கை பார்க்கும் இடம் அல்ல. அது சிறந்த கலைஞர்களை உருவாக்கும் இடம் ஆகும். கலைத்துறையில் ஈடுபடும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகள் கலைத்துறையின் மூலம் கிடைக்கும். பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலைஞர்கள் இன்று கலைத்துறையில் சாதித்து வருகிறார்கள். கலைத்துறையின் மூலம் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை ஈட்ட முடியும். கலைத்துறை வருங்கால வாழ்க்கைக்கு உதவும் என்பதை மாணவ, மாணவிகள் மனதில் பதிய வைக்கவும், திறமைகளை வெளிக் கொணரவும் கலைத்திருவிழா உதவும்.

    எனவே கலைத் திருவிழாவில் தங்களது முழுத் திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரால் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்ட 'வானவில் மன்றம்" திட்டத்தின்கீழ், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் கணிதம் ஆகியவற்றை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆர்வமுடன் கற்றுக் கொடுக்கும் வகையில், கேள்விக் கேட்கும் திறன் மற்றும் ஆராயும் திறனை மேம்படுத்தும் வகையில் ஸ்டெம் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 27 ஸ்டெம் கருத்தாளர்களுக்கான அறிவியல் உபகரணங்களையும் மற்றும் மாவட்டக் கலைத்திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு ஜெ.ஜெ.கல்வி நிறுவனத்தின் சார்பில் ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் அமைச்சர் வழங்கினார்.



    • அடிப்படை வசதி கோரி போராட்டம் நடைபெற்றது
    • ேகாரிக்கைகள் நிறைவேற்ற அதிகாரிகள் உறுதி

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருமலைராயசமுத்திரம் ஊராட்சியில் உடையனேரி காலனி யில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களது காலனிக்கு சாலை, குடிநீர், தெருவிழக்கு, வீட்டு வரி ரசீது, 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சமையல் செய்து சாப்பிட்டு அங்கயே தங்கினர். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் புதுக்கோட்டை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறை வேற்றித் தருவதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.

    • 28 ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது
    • ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தகவல்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சாதாரண ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், 28 ஊராட்சிகளுக்கான ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை முன்வைத்தனர். அதற்கு அந்தந்த துறை அதிகாரிகள் பதிலளித்தனர்.

    கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான பரணி கார்த்திகேயன் கூறுகையில்,

    மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 28 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம், கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட முதல்வர், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளார். பெருமருதூர் வெள்ளாற்றுப் படுகையிலிருந்து மும்பாலை வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 28 ஊராட்சிக்கும் தண்ணீர் கிடைக்கும் என தெரிவித்தார்.

    மேலும் இப்பகுதியில் போதிய பருவமழை இல்லாததால் விவசாயம் பொய்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கணக்கெடுத்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதே போன்று ஆவுடையார் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் மக்கள் குறைகள் விவாதிக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்டது.

    • பணியின் போது அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்
    • மாரடைப்பு ஏற்பட்டதும் பேருந்தை நிறுத்தியுள்ளார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பணியின் ே பாது ஏற்பட்ட மாரடைப்பால் அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம், உலகம்பட்டி அருகே உள்ள படமிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் குமார் (வயது40). இவர் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்றுகாலை 8 மணியளவில் சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி சென்ற அரசு பேருந்தை சுமார் 70 பயணிகளுடன் குமார் ஓட்டிவந்தார். மேலச்சிவபுரி அருகே வந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே பேருந்தை நிறுத்திய குமார் பேருந்திலேயே மயங்கி விழுந்தார். தகவலறிந்த பொன்னமராவதி போலீசார் அங்கு வந்து வலையப்பட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்தனர். அவங்கு அவரை பரிசோதிதத் மருத்துவர்கள் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முன்னதாக உயிரிழந்த ஓட்டுநர் குமார், பேருந்தை உடனடியாக நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

    • மேற்பனைக்காடு அய்யனார், பத்ரகாளியம்மன் கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது
    • 3 நாட்களாக நான்குகால யாகபூஜை நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ பூர்ணபுஷ்பகலா அய்யனார், ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக யாகசாலை அமைத்து கணபதி ஹோமத்துடன் விழாதொடங்கியது.அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நான்குகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம்புறப்பாடானது

    கோயிலை வலம் வந்து பின்பு கோபுரக் கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து பிரபாகர சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்காண திரண்டிருந்த அப்பகுதியைச்

    சுற்றியுள்ள கிராம பொதுமக்கள்,ஆன்மீக மெய்யன்பர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீ அய்யனார்,ஸ்ரீ பத்ரகாளியம்மனின் அருள்பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.30க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நடைபெற்று வரும் பஸ் நிலைய விரிவாக்க பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்
    • கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு வசதியாகவும், மேலும் பேருந்து நிலையத்தின் தரைத்தளத்தை செப்பனிடவும், கூடுதல் கழிப்பறை கட்டவும், குடிநீர் வசதி வேண்டியும் பொதுமக்கள்அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர்ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோரின் முயற்சியால் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

    இந்த நிலையில் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு அருகில் உள்ள குட்டையை தனியார் நிறுவன உதவியுடன் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.

    இந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், துணைத் தலைவர் செந்தாமரை குமார், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், திமுக நகரச் செயலாளர் ராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    • காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை மறைந்த தனது தந்தையின் சமாதியில் பதக்கத்துடன் அஞ்சலி செலுத்தினார்
    • நான் வென்ற பதக்கத்தை தந்தையிடம் காட்டி வாழ்த்து பெற முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது என்றும் கூறினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த கல்லுகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வமுத்து- ரீட்டா மேரி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இவர்களின் மூத்த மகள் லோகேஸ்வரி நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.

    இதில் பளு தூக்கும் போட்டியில் 52 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார். இந்த நிலையில் போட்டி நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக லோகேஸ்வரியின் தந்தை செல்வமுத்து மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    ஆனால் உடனடியாக தந்தையின் மரணச் செய்தியை அவரது மகள் லோகேஸ்வரிக்கு தெரிவிக்கவில்லை. போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவுடன் தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.

    இதனைக்கேட்ட அவர் கதறி அழுதார். அவரை சக வீரர், வீராங்கனைகள் தேற்றி ஆறுதல் கூறினர். மகிழ்ச்சியோடு தாயகம் திரும்ப இருந்த நிலையில் தந்தையின் மரணச் செய்தி லோகேஸ்வரிக்கு பெரும் துயரமாக அமைந்தது. இந்த நிலையில் லோகேஸ்வரி தனது சொந்த கிராமமான கல்லுகாரன்பட்டிக்கு வந்தார்.

    பின்னர் அவர் தனது தந்தையின் சமாதிக்கு சென்று தான் வென்ற தங்க பதக்கத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

    தான் தமிழ்நாட்டிலிருந்து சென்று இந்தியாவிற்காக பதக்கம் வென்றதை பெருமையாக கருதுகிறேன் என்றும், எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு பளு தூக்கும் சங்க தலைவர் ராஜா, செயலாளர் நாகராஜன், பயிற்சியாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

    மேலும் நான் வென்ற பதக்கத்தை தந்தையிடம் காட்டி வாழ்த்து பெற முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது என்றும் கூறினார்.

    • ஆலங்குடி பகுதியில் திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகள் வாங்குவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர்
    • கடைவீதிகள் மற்றும் காய்கறி மார்க்கெட் வீதியில் விற்பனையாகும் அகல் விளக்குகளையும் அவற்றை பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்

    புதுக்கோட்டை:

    கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அனைவரும் விளக்கேற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

    கடந்த சில ஆண்டுகளாக மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வாங்குவதிலும், பாரம்பரிய முறைப்படி அதில் எண்ணை ஊற்றி, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றுவது அதிகரித்துள்ளது

    இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கடைவீதிகளில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அகல் விளக்கு வியாபாரம் சூடு பிடித்தது. இந்த ஆண்டு தொடர்ந்து மழை பெய்து வருவதால் அகல் விளக்கு தயாரிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்ட போதிலும் அதிக அளவில் அகல் விளக்குகள் வாங்குவதில் மக்கள் காட்டும் ஆர்வம் விற்பனையையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

    தொடர் மழையால் மிகக்குறைந்த அளவே அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்திருந்தது. கடந்த வருடங்களில் ரூ.10-க்கு 15 விளக்குகள் வரை வழங்கப்பட்டன. ஆனால் இவ்வாண்டு ஐந்து அல்லது ஆறு விளக்குகள் வழங்கப்படுகிறது.

    அகல் விளக்குகளில் மெழுகு விளக்குகளும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் மரபுப்படி களி மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் தீபம் ஏற்ற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மேலும் களிமண் அகல் விளக்குகளை வாங்குவது இத்தொழில் ஈடுபட்டிருக்கும் ஏழை தொழிலாளர்களின் வாழ்வில் விளக்கு ஏற்றுவதற்கு ஒப்பாகும் என்பதால் அதன் விற்பனை அதிகரித்துள்ளது.

    இன்று தீபத்திருநாளை முன்னிட்டு நேற்று மழையூர், துவார், வாடிமனைபட்டி, மாங்குடி ஆகிய ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்டு ஆலங்குடி கடைவீதிகள் மற்றும் காய்கறி மார்க்கெட் வீதியில் விற்பனையாகும் அகல் விளக்குகளையும் அவற்றை பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    • ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது
    • உலக நன்மைக்காகவும், நோய் நொடி இன்றி மக்கள் வாழவும் நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்கவும் வேண்டி ஒரே நேரத்தில் விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அப்பகுதியைச்சேர்ந்த அய்யப்ப பக்தர்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளுடன் திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

    கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறாமல் இருந்தது.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 19-ந்தேதி அன்று ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனாவால் விளக்கு பூஜை நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் நேற்று 18 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் 301 பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், நோய் நொடி இன்றி மக்கள் வாழவும் நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்கவும் வேண்டி ஒரே நேரத்தில் விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    இந்த திருவிளக்கு பூஜையுடன் கார்த்திகை சோமவார பிரதோஷமும் சேர்ந்து வந்தது தனி சிறப்பாக பார்க்கப்பட்டது. மேலும் 18 படிகளும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாதரனை காட்டி சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்
    • மேலும் ஒரு சலுகையாக மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவரும், நல வாரிய உறுப்பினருமான ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் ரெ.தங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதோடு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

    மாற்றுத்திறனாளிகளின் நீண்டநாள் கனவான மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைத்து கடல் நீரில் தங்களது பாதங்களை பதித்து மகிழ்ச்சியை அலங்கரிக்க செய்தாா்.

    இதனை தொடர்ந்து இலவச வீட்டுமனை பட்டா, மாநக போக்குவரத்து பேருந்துகளில் துணையுடன் சென்றுவர இலவச பயணச்சலுகை, 5 சதவீத வீடு வழங்க அரசாணை பிறப்பித்தல், சாலை ஓர ங்களில் வியபாரம் செய்ய அனுமதி, திருமண உதவித்தொகையை ரொக்கமாக வழங்க அரசாணை, அரசு வளாகங்களில் ஆவின் பாலகம் அமைக்க வாடகை முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல்,

    இந்து சமய அறநிலைய கோவில்களில் சீர் வரிசையுடன், இலவச திருமணம் நடத்திட அரசாணை பிறப்பித்தல், சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு மாத மதிப்பூதியம் ரூ.14 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கி அர சாணை வெளியிடல் போன்ற வரலாற்று திட்டங்களோடும், மேலும் ஒரு சலுகையாக மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சார்பாக நன்றி தெரிவித்து மகிழ்கின்றேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • பெற்றோர்களுடன் அனுப்பிவைத்தனர்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் செல்வம் மகள் கார்த்திகா (வயது 23), இவரும் ஆலங்குடி கலைஞர் காலனியை சேர்ந்த மூக்கன் மகன் கார்த்திக் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் திருச்சி மாரியம்மன்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேசினர். இரு தரப்பினரும் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து போலீசார் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை அவர்களது பெற்றோர்களுடன் அனுப்பிவைத்தனர்.

    ×