என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்
- மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கின
- அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:
கலைத்திருவிழா நடைபெறும் இடமனது வேடிக்கை பார்க்கும் இடம் அல்ல. அது சிறந்த கலைஞர்களை உருவாக்கும் இடம் ஆகும். கலைத்துறையில் ஈடுபடும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகள் கலைத்துறையின் மூலம் கிடைக்கும். பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலைஞர்கள் இன்று கலைத்துறையில் சாதித்து வருகிறார்கள். கலைத்துறையின் மூலம் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை ஈட்ட முடியும். கலைத்துறை வருங்கால வாழ்க்கைக்கு உதவும் என்பதை மாணவ, மாணவிகள் மனதில் பதிய வைக்கவும், திறமைகளை வெளிக் கொணரவும் கலைத்திருவிழா உதவும்.
எனவே கலைத் திருவிழாவில் தங்களது முழுத் திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரால் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்ட 'வானவில் மன்றம்" திட்டத்தின்கீழ், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் கணிதம் ஆகியவற்றை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆர்வமுடன் கற்றுக் கொடுக்கும் வகையில், கேள்விக் கேட்கும் திறன் மற்றும் ஆராயும் திறனை மேம்படுத்தும் வகையில் ஸ்டெம் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 27 ஸ்டெம் கருத்தாளர்களுக்கான அறிவியல் உபகரணங்களையும் மற்றும் மாவட்டக் கலைத்திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு ஜெ.ஜெ.கல்வி நிறுவனத்தின் சார்பில் ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் அமைச்சர் வழங்கினார்.






