என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VETERAN ANJALI"

    • காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை மறைந்த தனது தந்தையின் சமாதியில் பதக்கத்துடன் அஞ்சலி செலுத்தினார்
    • நான் வென்ற பதக்கத்தை தந்தையிடம் காட்டி வாழ்த்து பெற முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது என்றும் கூறினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த கல்லுகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வமுத்து- ரீட்டா மேரி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இவர்களின் மூத்த மகள் லோகேஸ்வரி நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.

    இதில் பளு தூக்கும் போட்டியில் 52 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார். இந்த நிலையில் போட்டி நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக லோகேஸ்வரியின் தந்தை செல்வமுத்து மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    ஆனால் உடனடியாக தந்தையின் மரணச் செய்தியை அவரது மகள் லோகேஸ்வரிக்கு தெரிவிக்கவில்லை. போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவுடன் தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.

    இதனைக்கேட்ட அவர் கதறி அழுதார். அவரை சக வீரர், வீராங்கனைகள் தேற்றி ஆறுதல் கூறினர். மகிழ்ச்சியோடு தாயகம் திரும்ப இருந்த நிலையில் தந்தையின் மரணச் செய்தி லோகேஸ்வரிக்கு பெரும் துயரமாக அமைந்தது. இந்த நிலையில் லோகேஸ்வரி தனது சொந்த கிராமமான கல்லுகாரன்பட்டிக்கு வந்தார்.

    பின்னர் அவர் தனது தந்தையின் சமாதிக்கு சென்று தான் வென்ற தங்க பதக்கத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

    தான் தமிழ்நாட்டிலிருந்து சென்று இந்தியாவிற்காக பதக்கம் வென்றதை பெருமையாக கருதுகிறேன் என்றும், எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு பளு தூக்கும் சங்க தலைவர் ராஜா, செயலாளர் நாகராஜன், பயிற்சியாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

    மேலும் நான் வென்ற பதக்கத்தை தந்தையிடம் காட்டி வாழ்த்து பெற முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது என்றும் கூறினார்.

    ×