என் மலர்
பெரம்பலூர்
- இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா சென்று வந்த அரசு பள்ளி மாணவர், ஆசிரியர்களுக்கு பாராட்டு நடைபெற்றது.
- முதன்மை கல்வி அலுவலர் பாராட்டி வாழ்த்தினர்
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சிகுரு கோ- லேப் நிறுவனத்தின் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் தன்னார்வ அமைப்பின் சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் கல்வி பெருவாரியாக போய் சேராத பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான குறிப்பாக அறிவியல் ரீதியான விஷயங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வகையில் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா பயணமாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்படி பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் கல்வி மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், இலந்தங்குழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை லெட்சுமி தலைமையில் அப்பள்ளி 8ம்வகுப்பு மாணவி அபிதா, தீபிகா மற்றும் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிரணவிகா, மாணவன் திருக்குமரன் ஆகியோர் திருவனந்தபுரம் அருகே தும்பாவில் உள்ள இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர்.அங்கு 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வானிலை ஆய்வுக்காக ராக்கெட் ஏவப்படுவதை கண்டு கழித்தனர். மேலும் விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பல்வேறு விண்வெளி பயணங்கள் குறித்து மாணவர்கள் கேட்டறிந்து கொண்டனர்.சுற்றுலா சென்று வந்த ஆசிரியை லட்சுமி மற்றும் மாணவ, மாணவிகளை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பாராட்டி வாழ்த்தினார். மேலும் நிகழ்ச்சியின்போது வேப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் மற்றும் ஆலத்தூர் வட்டார கல்வி அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அனுமதியற்ற கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது
- ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் அமையும் திட்ட மில்லாப்பகுதிகளில் 1.1.2011க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேல் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் 6 மாதம் காலநீடிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
- மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ரூ.2.77 கோடி மதிப்பில் மாணவியர் விடுதிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் வெங்கடபிரியா தலைைம வகித்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ.பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது,
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. முதலமைச்சர் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து அது கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதில் தனி கவனம் செலுத்துவதனால் தமிழ்நாடு முதன்மையாக திகழ்ந்து வருகிறது. வேப்பூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக மாணவர்கள் விடுதி அமைப்பதற்கு ரூ.2.77 கோடி செலவில் கட்டிடங்கள் கட்டுவதற்காக அடிக்கல் நடப்பட்டுள்ளது. வேப்பூர் அரசினர் மகளிர் கல்லூரிக்கு வருகின்ற மாணவர்களுடைய வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுடைய வசதிக்காக மருவத்தூர் குரும்பபாளையம் எறையூர் வரையிலான பேருந்து வழித்தடம் இன்றைக்கு துவங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கென 21,000 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளை தவறாக நடத்துகின்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- பாடாலூரில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது
பெரம்பலூர்:
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (8-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும்பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், எஸ. குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
- குட்கா,புகையிலை பொருட்கள் விற்ற டீக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
- தண்டனைக்குரிய குற்றமாகும்
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர் பந்தல் பகுதியில் தேவேந்திரன் என்பவர் டீக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு புகார் எழுந்தது. இதன்பேரில் பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அந்த டீக்கடைக்கு சென்று ஆய்வு செய்தபோது குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்ததையடுத்து அப்பொருட்களை பறிமுதல் செய்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இந்நிலையில் மீண்டும் தொடர்ந்து தேவேந்திரன் டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதையறிந்த பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சின்னமுத்து, இளங்கோவன், ரவி ஆகியோர் தேவேந்திர டீக்கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடையினுள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 750 கிராம் இருந்தது தெரியவந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்து டீக்கடைக்கு சீல் வைத்தனர்.
பின்னர் மாவட்ட நியமன அலுவலர் கவிக்குமா கூறுகையில், தேவேந்திரன் என்பவரது டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் விற்பனைக்கு இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுந்த அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் எண்ணை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இக்கடையில் வணிகம் செய்வது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் படி சட்ட விரோதமானதாகும். இந்த அறிவிப்பாணையே அல்லது பூட்டின் மீதுள்ள அரக்கு சீலையோ அகற்றுவது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவித்தார்.
- பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூர் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது
- இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ் குமார் , ரந்தினி பிரகதீஷ் குமார் மற்றும் மலேசிய தொழிலதிபர்கள் டத்தோ மணிவாசகம், சுந்தர், பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி, துணைத் தலைவர் செல்வ லட்சுமி கலந்துகொண்டனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூர் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நாளடைவில் சிதிலமடைந்ததையடுத்து கோவில் புனரமைப்பு குழுவினர் அம்மன் அருள் வாக்குப்படி பிரபல தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ் குமாரை சந்தித்தனர்.
அதன் பின்னர் புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டு திருக்கடையூர் உலக புகழ்பெற்ற ஸ்தபதி கிருஷ்ணமூர்த்தி வசம் திருப்பணிகளை ஒப்படைத்தனர். இதையடுத்து விரைவாக திருப்பணிகள் முடிக்கப்பட்டன. பின்னர் இந்த கோவில் புனராவர்த்தன நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது.
முன்னதாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை தொடங்கியது. பின்னர் காலை 7 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி விமான ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். மேலும் மூலாலய மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ் குமார் , ரந்தினி பிரகதீஷ் குமார் மற்றும் மலேசிய தொழிலதிபர்கள் டத்தோ மணிவாசகம், சுந்தர், பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி, துணைத் தலைவர் செல்வ லட்சுமி,
பிரகதீஸ் குமார் இளைஞர் நற்பணி மன்ற பொறுப்பாளர்கள் கிருஷ்ணராஜ், மோகன், சிவா, மணி, துரைசாமி, தொழிலதிபர் எஸ். பெரியசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் பூலாம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது.
- 29- ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2.08.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது.
பெரம்பலூர் வட்டத்தில் வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வருகிற 15-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், பொம்மனப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 19-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 20-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 21.07.2022 காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
வேப்பந்தட்டை வட்டத்தில் தேவையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணிவரையிலும், கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 26-தேதி காலை 9.00மணி முதல் 2.00 மணி வரையிலும், பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 27-ந் தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 28-ந் தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், வெண்பாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29- ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2.08.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வீட்டு கொட்டகை தீ பிடித்து வாகனங்கள்-தானியங்கள் எரிந்து நாசமானது.
- வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் 3-வது வார்டு மேற்கு தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்தவர் நீதி (வயது 50). விவசாயி. இவரது மனைவி லட்சுமி(47). இவர்களது மகன் பிரபாகரன்(34), மகள் பிரியா(33). இதில் பிரியாவுக்கு திருமணமாகி கூகையூரில் தனது கணவர் முருகனுடன் வசித்து வருகிறார். பிரபாகரனுக்கு திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பிரபாகரன் அவரது மனைவியுடன் களரம்பட்டிக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் நீதி, லட்சுமி ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் நீதியின் வீட்டையொட்டி முன்புறம் கல்நார் வேயப்பட்டு அமைக்கப்பட்டிருந்த கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து கண் விழித்த நீதி, கொட்டகை கொழுந்துவிட்டு எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரும், லட்சுமியும் உடனடியாக வீட்டின் பின்புற வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர். இதில் பைக் மற்றும் தானியங்கள் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது
- தி,மு.க.அரசை கண்டித்து நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தி.மு.க. அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் புறநகர் பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், நகர தலைவர் ஜெயக்குமார், நிர்வாகிகள் மகிழ்அசோக், பாலாஜிதேவேந்திரன் மற்றும் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்."
- கிணற்றில் தவறி விழுந்த சலவை தொழிலாளி உயிரிழந்தார்.
- கல்லூரி வளாக கிணற்றில் தவறி விழுந்தார்
பெரம்பலூர்:
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 45). இவர், பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சலவைத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் ராஜா நேற்று தவறி விழுந்து உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, ராஜாவின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ராஜாவின் மனைவி மணிமேகலை கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- பெரம்பலூரில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
- 249 பேர் பலியாகி உள்ளனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 607 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 261 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்கு 249 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று பெரம்பலூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 97 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் 82 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 பேர் திருச்சி, பெரம்பலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 174 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
- ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
பெரம்பலூர்:
தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்கள் ஒருங்கிணைந்த மாத கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் பிரகாஷ், அரியலூர் மாவட்ட தலைவர் வெள்ளிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் சாமிவேல் சங்கத்தின் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த சங்கத்தின் மாநாடு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி நடத்தப்படும். ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரிகள் சங்க உறுப்பினர்களிடம் விரோத போக்கை கடைபிடித்து வருவதை கண்டித்து மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும். 3 மாவட்டங்களில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்சுகளை இயக்குவதற்கு பொதுமக்களுடன் நல்லுறவு கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் சட்டவிரோத செயலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து தொழிற்சங்கம் எடுத்து வருவதால் சங்க பொறுப்பாளர்கள், தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிராக சங்கத்தின் மாநில தலைமை முன்னெடுக்கும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும், போராட்டங்களுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கத்தின் கோவை மண்டல தலைவர் சரவணன் தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.






