என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • தடுப்பு சுவரில் கார் மோதியதில் பெண் பலியானார்.
    • படுகாயம் அடைந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை

    பெரம்பலூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 55). இவரது மனைவி பானுமதி (45). இவருடைய மகன் சேமன் (24). இவர்கள் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் ரகுபதி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களான துரைசாமி (60), சுலோச்சனா (54), ஜனனி (24) ஆகியோருடன் காரில் பழனி சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ரகுபதி ஓட்டி சென்றார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையின் நடுேவ இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில், படுகாயம் அடைந்த பானுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது
    • பெரம்பலூரில் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    பெரம்பலூர்:

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு பேரிடர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் லாடபுரம், திருவாளந்துறை, வேள்விமங்களம், சிறுகன்பூர் கிழக்கு கொட்டரை ஆகிய கிராமங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லாடபுரம் சின்ன ஏரியில் பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் மூலம் நடைபெற்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் பார்வையிட்டார்.

    அப்போது தீயணைப்புத்துறையின் மூலம் ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, மீட்பு பணியின் போது 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளிச்சம் தரவல்ல உயர் கோபுர விளக்கு, உயிர் காக்கும் மிதவை மற்றும் உயிர்காக்கும் உடை, இரும்பு பொருட்களை வெட்ட வல்ல ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு, விபத்து நேரங்களில் வாகனங்களின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் பொருட்கள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவற்றின் இயக்கம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    வெள்ள நேரங்களில் பொதுமக்களை காப்பாற்ற, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி அவர்களை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு பல்வேறு முறைகளை பின்பற்றி அழைத்து செல்வது குறித்த செயல்விளக்கம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்:

    கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இந்திய ஆயுள் காப்பீட்டு (எல்.ஐ.சி.) கழக முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு தொடர் போராட்டத்தை தொடங்கினர். அதன்படி பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள எல்.ஐ.சி. கிளை முன்பு இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர் சங்கத்தினர் காப்பீடு வார விழாவினை புறக்கணித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் கிளை தலைவர் சுத்தாங்காத்து தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கருப்பையா, சங்கத்தின் தஞ்சை கோட்ட இணை செயலாளர் முருகானந்தம், பெரம்பலூர் மாவட்ட தலைவர் பார்த்த சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலிசிதாரர்களுக்கு பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். பாலிசி மற்றும் இதர பாலிசியின் சேவை மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். முகவர்களுக்கு பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவக்குழு காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். முகவர் நல நிதி அமைத்திட வேண்டும். முகவர்களை தொழில்முறை முகவர்களாக அங்கீகரிக்க வேண்டும். முகவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். முதன்மை காப்பீட்டு ஆலோசகர் மூலமாக வருகின்ற அனைத்து விதமான வருமானத்தையும் முன்பணம் பெறுவதற்கு கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எல்.ஐ.சி. முகவர்கள் கோஷங்களை எழுப்பினர்."

    • சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ), தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து தனி தனியாக ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் குரும்பலூர், புது ஆத்தூர் ஆகிய இடங்களில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் பெற்ற கடன் உதவித்தொகை மூலம் அமைக்கப்பட்டுள்ள சிறு வணிகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசங்கரன் உடனிருந்தார்.

    • தியாகராஜன் (வயது 38), விவசாயி. இவர் வயலுக்கு உரம் போட பணம் எடுக்க கொளக்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.
    • தியாகராஜனுக்கு ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி பணம் எடுக்க ெதரியாததால், மையத்தின் வெளியே நின்ற சரத்குமார், பிரசாத், கபில் ஆகிய 3 பேரை உதவிக்கு அழைத்துள்ளார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே உள்ள நாரணமங்கலத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 38), விவசாயி. இவர் வயலுக்கு உரம் போட பணம் எடுக்க கொகளக்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.

    தியாகராஜனுக்கு ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி பணம் எடுக்க ெதரியாததால், மையத்தின் வெளியே நின்ற சரத்குமார், பிரசாத், கபில் ஆகிய 3 பேரை உதவிக்கு அழைத்துள்ளார்.

    இதையடுத்து அவர்கள் வந்து தியாகராஜனின் ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு, அவரது கார்டுக்கு பதிலாகமாற்று ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு, ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று கூறிஉள்ளனர்.

    இந்நிலையில் ஏ.டி.எம். கார்டு மாற்றப்பட்டதை அறிந்த தியாகராஜன் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர்விரைந்து வந்தனர். பொது மக்கள் வருவதை பார்த்ததும் பிரசாந்த் தப்பியோடி விட்டார். சரத்குமார், கபிலை பிடித்து வைத்துக் கொண்டு மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நூதன முறையில் விவசாயிடம் பண மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் மருத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தப்பியோடி பிரசாந்தை தேடி வருகிறார்கள்.

    • வாகன விபத்தில் வியாபாரி பலியானார்.
    • வாகனத்தையும், அதன்டிரைவரையும் தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, வசிஷ்டபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 42). இவர் திட்டக்குடி பஸ் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கொய்யாப்பழ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி வேல்விழி(30). இவர்களுக்கு அஸ்வின்(10), சஸ்வின்(6) என்ற இருமகன்களும், சுபிக்சா(3) என்ற மகளும் உள்ளனர். இவர் வழக்கமாக விழுப்புரத்திற்கு சென்று கொய்யாப்பழங்களை மொத்த விலையில் வாங்கி வந்து விற்பது வழக்கம். விநாயகர் சதுர்த்தியையொட்டி நெல்லிக்காய் மற்றும் விளாம்பழம் மொத்த விலையில் வாங்குவதற்காக பாபு தனது மனைவியிடம் ரூ.2,500-ஐ வாங்கிக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு செல்லும் வழியில் பெரம்பலூர் வந்துவிட்டு, கலெக்டர் அலுவலக சாலைவழியாக திருச்சி-சென்னை நான்குவழிச்சாலையில் துறைமங்கலம் ஏரிக்கரை அருகே திருச்சியை நோக்கி யூ வளைவில் திரும்புவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பாபுவின் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாபு ரத்தம் சொட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேல்விழி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும், அதன்டிரைவரையும் தேடி வருகின்றனர்.

    • தலா ரூ. 5.80 லட்சத்தில் புதிய குளங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
    • மத்திய அரசின் புதிய திட்டமான அம்ரித் சரோவர் திட்டத்தின்கீழ் புதிய குளங்கள் உருவாக்குதல் மற்றும் புனரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

    பெரம்பலூர்:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் இதர திட்டங்கள் மூலமாக பணி மேற்கொள்ளப்படாத நீர் ஆதாரங்களை மத்திய அரசின் புதிய திட்டமான அம்ரித் சரோவர் திட்டத்தின்கீழ் புதிய குளங்கள் உருவாக்குதல் மற்றும் புனரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தனூர் வெள்ளி மலை அருகிலும், மருதடி ஈச்சங்காடு அருகிலும் தலா ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் புதியதாக உருவாக்கப்பட்டு வரும் குளங்களின் பணிகளின் நிலை குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த நிதியாண்டில் 32 குளங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நாட்டார்மங்கலம் ஊராட்சியில் கூத்தனூர் வெள்ளிமலை நாரணமங்கலம் ஊராட்சியில் மருதடி ஈச்சங்காடு அருகில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.இதேபோன்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், செங்குணம் ஊராட்சியிலும், எசனை ஊராட்சியில் பூந்தோப்புக்குளம் அருகிலும், வேப்பந்தட்டை ஒன்றியம், பசும்பலூர் ஊராட்சியில் ரெட்டிச்சி குளம் அருகிலும், தொண்டமாந்துரை ஊராட்சி விஜயபுரம் கிராமத்திலும் மொத்தம் ரூ.34 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் 6 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. வேப்பூர் ஒன்றியம் பரவாய் ஊராட்சியில் உள்ள சிலம்பூரான் குட்டை மற்றும் புள்ளக்குட்டை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். மேலும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 6 பணிகள் என 24 பணிகள் தொடங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

    • மின்னல் தாக்கி 2 மாடுகள் இறந்தன.
    • மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வ.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 70). விவசாயியான இவர் மாடுகள் வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் குன்னம் பகுதியில் நேற்று மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. அகரம் கிராம ஊர் எல்லைப் பகுதியான வைத்தியநாதபுரம் செல்லும் சாலை அருகே கோவிந்தன் தனது மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது பலமாக இடி விழுந்தது. இதில் 2 மாடுகள் மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தன. இது குறித்து வேப்பூர் கால்நடை மருத்துவர் கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மருத்துவர் கண்ணன், கால்நடை ஆய்வாளர் மணிமேகலை, விரைந்து வந்து இறந்த மாடுகளை பிரேத பரிசோதனை செய்து அருகில் உள்ள காட்டில் அடக்கம் செய்தனர்.

    • கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • சிறையில் அடைக்கப்பட்டார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடக்குமாதவி ஏரிக்கரை அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமார்(வயது 25) என்ற வாலிபரை பிடித்து பெரம்பலூர் போலீசில் ஒப்படைத்தனர். பெரம்பலூர் போலீசார் அஜித்குமாரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 கிராம், 20 கிராம் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். கைதான அஜித்குமார் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • 126 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • மகாதீப ஆராதனைகளும் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 126 இடங்களில் விநாயகர் உருவசிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்படி பெரம்பலூர் நகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில், கடைவீதியில் தேரடி, காந்திசிலை அருகே உள்ள செல்வவிநாயகர் கோவில், எளம்பலூர் சாலையில் மேட்டுத்தெரு, மேரிபுரம் அருள்சக்தி விநாயகர் கோவில், துறையூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் பாலமுத்துமாரியம்மன் கோவில், இந்திராநகர், வடக்குமாதவி சாலையில் சவுபாக்கிய விநாயகர் கோவில், சங்குப்பேட்டை பகுதி, வெங்கடேசபுரம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள ஸ்ரீமகாலிங்க சித்தர் ஆசிரமத்தின் சார்பில் மகாலிங்க சித்தர்சுவாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்திவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனைகளும், மகாதீப ஆராதனையும் நடந்தது. மதியம் அன்னதானமும், மாலை சிறப்பு பூஜையும் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் மற்றும் பெரம்பலூர் தாலுகா என மொத்தம் 126 இடங்களில் விநாயகர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    • பெண்ணிடம் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    • கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் சரகம் லெப்பைக்குடிகாட்டை அடுத்த சு.ஆடுதுறை கிராமத்தில் மீனவத்தெருவில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி சாந்தி (வயது 48). நேற்று காலை சாந்தி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று 100 நாள் வேலை திட்டத்தில் மராமத்து பணிக்கு தேவையான உபகரணங்களை எடுத்துக் கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    அபராத ரட்சகர் கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் சாந்தியை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், திடீெரன சாந்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சாந்தி சங்கிலியை கைகளால் பற்றிக் கொண்டதால் சங்கிலி அறுந்து 3¼ பவுன் மர்ம நபர்கள் கையில் சிக்கியது.2 பவுன் கீழே விழுந்தது. அதனை சாந்தி எடுத்துக்கொண்டார். இதற்கிடையில் சாந்தியை அந்த மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சாந்திக்கு காயம் ஏற்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குபதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அரசு பள்ளியில் கணித மன்ற விழா நடந்தது.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித மன்ற விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிதம்பரம் தலைமை தாங்கி, கணிதங்கள், மனக்கணக்குகள், கணித புதிர்களை குறிப்பிட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடைபெற்றது. அதில் கணிதம் சார்ந்த புதிர்கள், கேள்விகள் மற்றும் கணக்குகள் இடம் பெற்றிருந்தன. வினாடி-வினாவில் மதிப்பீட்டாளராக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செல்வராஜ் செயல்பட்டார். நிகழ்ச்சிகளை ஆசிரியை பைரவி தொகுத்து வழங்கி, எளிய முறையில் கணக்குகள் செய்தல் மற்றும் இரட்டை இலக்க பெருக்கல் வாய்ப்பாடுகள் படித்தல் பற்றிய குறிப்புகளை கற்பித்தார். அவனைத்தொடர்ந்து வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகள் கணிதம் பற்றிய பாடல் மற்றும் கணித மேதை ராமானுஜம் வாழ்க்கை வரலாறு பற்றி விளக்கி பேசினார்கள்.

    ×