என் மலர்
பெரம்பலூர்
- போராட்டத்தில் சுருண்டு விழுந்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.
- 6 -வது நாளாக நீட்டிப்பு
பெரம்பலூர்:
பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியா்கள் தொடா்ந்து 6- வது நாளாக உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், ஊழியா் ஒருவா் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், ஆா்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் 180 ஊழியா்கள் பணிபுரிந்து வந்த நிலையில், 28 பணியாளா்களை தனியாா் ஒப்பந்த நிறுவனம் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஆள்குறைப்பு நடவடிக்கையாக கடந்த 30-ந் தேதி இரவு பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணியாளா்களை மீண்டும் பணியமா்த்தக் கோரியும் ஏ.ஐ.டி.யு.சி. சங்க கிளைத் தலைவா் ஏ.ஆா். மணிகண்டன் தலைமையில், சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் கடந்த 1 ஆம் தேதி காலை முதல் தொடா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கலெக்டர் ப.ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையிலான அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும் இந்த அலுவலகம் பாண்டிச்சேரியில் அமைந்துள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சரு டன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால்
உடன்பாடு ஏற்படாததால் ஊழியா்கள் தொடா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஊழியா் மயக்கம்
இந்த நிலையில், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியரான கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள அதா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் மாயவேல் (வயது38), மயங்கி விழுந்தாா். இதனை பார்த்த சக ஊழியர்கள் அவரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதனால் ஆத்திரமடைந்த ஊழியா்கள், சுங்கச்சாவடி நிா்வாகத்தைக் கண்டித்தும், உரிய தீா்வு காண வலியுறுத்தியும் முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
- திருட்டு வழக்கில் தொடர்புடையவன் கைது செய்யப்பட்டார்
- கேமரா பதிவை வைத்து நடவடிக்கை
பெரம்பலூர்:
பெரம்பலூரில் பாலக்கரையில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் கேஸ் லாக்கரை திருடி சென்ற குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில்அ டைக்கப்பட்டார்.
பெரம்பலூர் பாலக்கரை அருகே பிரபல தனியார் பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில் கடந்த 25-ந் தேதி இரவு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 2 பேர், கேஷ் லாக்கரை திருடிச்சென்றனர். அந்த லாக்கரில் ரூ 3.36 லட்சம் பணம் இருந்தது திருடு போனது.
இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர். எஸ்பி மணி உத்தரவின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை , எஸ்.மலையானூரை சேர்ந்த கோவிந்தன் மகன் மணிகண்டன் சிறுவாச்சூர் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ1.70லட்சம் பணம் மற்றும் டூவிலரை கைப்பற்றினர்.
இதுகுறித்து பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிந்து குற்றவாளி மணிகண்டனை பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
- தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்
- கீழப்புலியூர் கிராமத்தில் குடிபோதையில் விபரீதம்
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்து குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராம காலனி தெருவில் வசிப்பவர் சுப்பராயன் மகன் சக்கரவர்த்தி (வயது 59) இவரது மகன் சதீஷ் (28) கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று மதியம் சதீஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தந்தை சக்கரவர்த்தியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போதை தலைக்கேறிய நிலையில் திடீரென சதீஷ் அருகில் கிடந்த கடப்பாரையால் சக்கரவர்த்தியை நெஞ்சில் குத்தியுள்ளார்.
இதில் அவர் ரத்தம் வெள்ளத்தில் மயக்கம் அடைந்து விட்டார் . பின்னர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். 108-ல் வந்த நபர்கள் சக்கரவர்த்தியை பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாக கூறி சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வந்த மங்களமேடு காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் காவல்துறையினர் சக்கரவர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சதீஷ்சை கைது செய்தனர்.
- விஜயதசமி பண்டிகை பெருமாள் வீதி உலா நடைபெற்றது
- சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் தாலுகா,நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பெருமாள் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வரதராஜ கம்ப பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்த விழாவில் முக்கிய சிறப்பு நிகழ்வான பெருமாள் கோவில் முன்பு தென்னங்கிற்றில் பந்தல் அமைத்து வாழை மரம் கட்டி அதற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமிக்கு அம்பு விடும் பின்பு இரவு ஸ்ரீ வரதராஜ கம்பபெருமாள் சாமி அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
கிராம பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கோவில் நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- சரோஜா தனியாக வீட்டில் வசித்து வருகிறார்
- மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், எசனை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி சரோஜா (வயது 65). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அதில் ஒரு மகள் பென்னகோணத்தில் வசித்து வருகிறார். மற்றவர்கள் எசனையில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஏற்கனவே சின்னத்தம்பி இறந்து விட்டார். இதனால் சரோஜா தனியாக வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் இருந்த சரோஜா நேற்று அதிகாலை திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றிக் தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அவருடைய மகன் மற்றும் மகள்கள் சரோஜாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- 2 வீடுகளில் நகைகள்-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
- வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகராட்சி துறைமங்கலம் 9-வது வார்டுக்கு உட்பட்ட ரெங்கம்மாள் நகர், அவ்வை தெருவை சேர்ந்தவர் கலைவாணன்(வயது 37). பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தில் கணினி பிரிவில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வரும் இவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் குடும்பத்துடன், அதே பகுதியில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
ஜெயராமன் துபாயில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருவதால், பெரம்பலூரில் உள்ள வீட்டில் திவ்யா(34) தனது 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 1-ந்தேதி திவ்யா வீட்டை பூட்டிவிட்டு திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, நெய்குளத்தில் உள்ள தனது அண்ணன் பொய்யாமொழி வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி, 2 குழந்தைகளுடன் திருச்சியில் உள்ள மாமனார் வீட்டிற்கு கலைவாணன் சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று வேலைக்கு செல்வதற்காக அவர் மட்டும் திருச்சியில் இருந்து புறப்பட்டு பெரம்பலூருக்கு வந்தார். அப்போது வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் 1.15 மணிக்கு கலைவாணன் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவும் சாவியால் திறக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.47 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கேமரா ஒன்று ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து அவர் உடனடியாக தரைதளத்தில் உள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கேயும் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. கலைவாணன் இதுகுறித்து திவ்யாவுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரும் வீட்டிற்கு வந்து பார்த்தார்.
அப்போது அவரது வீட்டிலும் பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 28 பவுன் நகைகள், ரூ.35 ஆயிரம், 4 ஜோடி வெள்ளிக்கொலுசுகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து கலைவாணனும், திவ்யாவும் இது குறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சன்மார்க்க சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
- தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சிறுவாச்சூர் சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட சன்மார்க்க சங்க தலைவர் வக்கீல் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சென்னையில் வருகிற 5-ந் தேதி நடைபெறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள அருட்பிரகாச வள்ளலார் 200 விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சன்மார்க்க சங்கத்தினர் திரளாக கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சிவநடராஜன் வரவேற்றார். பொதுச்செயலாளர் நாராயணசாமி ஆண்டறிக்கையும், வரவு, செலவு அறிக்கையும் சமர்ப்பித்தார். முடிவில் சந்திரசேகர் நன்றி கூறினார்.
- ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் நீரில் மூழ்க்கி உயிரிழந்தார்
- அரியலூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயசு 35). இவர் அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்மசிஷ்டாக பணிபுரிந்து வந்தார். ஆயுத பூஜை விடுமுறையில் தனது சொந்த ஊரான அந்தூர் ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்றார்.
ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத பிதமாக நீரில் மூழ்க்கினார். இதனை பார்த்த பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், கதறி அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனை கேள்விப்பட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் இறந்த நிலையில் சத்தியமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் குன்னம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தமிழக எம்.பி.க்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
- டோல்கேட் பணியாளர்கள் தொடர் போராட்டம்
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம்,
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் , மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி, ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளில் 56 -பேரை நிரந்தர பணி நீக்கம் செய்துள்ளது.
அந்த நிர்வாகத்தைக்கண்டித்து தொழிலாளர்கள் நேற்று 3- வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.பிரபாகரன், ஊராட்சி குழு தலைவர் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் தொழிலாளர்களோடு தரையில் அமர்ந்து தொழிலாளர்களிடம் அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும் போது,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த 13- ஆண்டுகளாக இங்கு பணி புரிந்து வந்த 56 தொழிலாளர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளனர். இந்த அலுவலகம் பாண்டிச்சேரியில் அமைந்துள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சரு டன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தமிழக எம்.பி.க்கள் வாயிலாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். இந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
அப்போது பெரம்பலூர் கோட்டாட்சியர் ச.நிறைமதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இரா. கிட்டு, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட துணை செயலாளர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், ஒன்றிய கழக செயலாளர்கள் தி.மதியழகன், வீ.ஜெகதீசன், எஸ்.நல்வத்தம்பி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஏ.எஸ்.ஜாஹிர்உசேன், துணை தலைவர் எ.ரசூல்அகமது, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், திருமாந்துறை ஒன்றிய குழு உறுப்பினர் பெரு.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பணமோசடியில் ஈடுப்பட்ட பிரகாஷ் மீது சிவகங்கை, துறையூர், ஜீயபுரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சுபாஷ், சசிக்குமார் ஆகியோர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போல் நடித்து வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்து சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர்:
திருச்சி மாவட்டம், துறையூர் சிங்கிளாந்தபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணி மகன் பிரகாஷ் (வயது 40). இவருடன் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 11-ந் தேதி அன்று பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மோகன்பாபுவிற்கு (25) அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரகாஷ், ஹோம் அன்ட் ரூரல் டெவலப்மெண்ட் துறையில் இணை செயலாளராக வேலை பார்த்து வருவதாகவும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சுபாஷ், சசிக்குமார் ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என கூறி, இவர்கள் மூலம் உங்களுக்கு ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாகவும், உங்கள் மனைவி சாருமதிக்கு (22) விஏஓ வேலை வாங்கி தருவதாகவும் மோகன் பாபுவிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய மோகன்பாபு, தனது உறவினர் மற்றும் நண்பர்களாகிய பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் ராஜலிங்கம், உளுந்துபேட்டை பார்த்திபன் உட்பட 23 பேரிடம் மொத்தம் ரூ.1.83 கோடி பணத்தை வசூல் செய்து பிரகாஷிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் பிரகாஷ் தலைமறைவாகி விட்டார். இதனால் வேலைவாங்கி தரமாமல் பண மோடிசயில் ஈடுப்பட்ட பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெரம்பலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிபு போலீசில் மோகன்பாபு புகார் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே பணம் கொடுத்த நபர்கள் மோகன்பாபுவிடம் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
மோகன்பாபு மற்றும் அவரது மனைவி இருவருக்கும் வேலைவாங்கி தராமல் ஏமாற்றிய பிரகாசை, கடந்த 29-ந்தேதி சென்னை கோயம்பேட்டிலிருந்து காரில் பெரம்பலூர் அழைத்து வந்து பணத்தை தந்து விட்டு செல்லும்படி தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.
இதையறிந்த பிரகாஷின் அண்ணன் பால்செல்வனின் மனைவி ஆரோக்கியமேரி 100 நம்பருக்கு போன் செய்து தனது கொழுந்தன் பிரகாஷை மோகன்பாபு கடத்தி சென்று அவரது வீட்டில் அடைத்து வைத்துள்ளார் என புகார் கொடுத்துள்ளார்.
தகவலின்பேரில் பெரம்பலூர் போலீசார் மோகன்பாபுவின் வீட்டிற்கு சென்று பிரகாஷை மீட்டனர். பிரகாஷை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிரகாஷ் ஹோம் அன்ட் ரூரல் டவலப்மெண்ட் துறையில் இணை செயலாளராக பணிபுரியவில்லை என்பதும், சுபாஷ், சசிக்குமார் ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரியே கிடையாது என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து பண மோசடியில் ஈடுபட்ட பிரகாஷை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
பணமோசடியில் ஈடுப்பட்ட பிரகாஷ் மீது சிவகங்கை, துறையூர், ஜீயபுரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுபாஷ், சசிக்குமார் ஆகியோர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போல் நடித்து வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்து சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
- மருத்துவமனைக்கு செல்லும் வழியில்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மருதபாண்டியன் மனைவி பிரபாவதி (வயது 23). ஏற்கனவே இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வது முறையாக பிரபாவதி கர்ப்பம் அடைந்தார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரபாவதி பிரசவத்திற்காக லெப்பைகுடிகாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் காலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் பிரபாவதியை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜா வாகனத்தை நிறுத்தினார். இதையடுத்து மருத்துவ உதவியாளர் இளையராஜா பிரசவம் பார்த்தார். இதில் பிரபாவதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 2 பேரும் நலமாக உள்ளனர்."
- பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மதனகோபாலபுரம் ஆரோக்கியா நகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சக்தி பிரசாத் (வயது 25). பட்டதாரியான இவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் அவரிடம், அவரது பெற்றோர் அவ்வவ்போது சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 2 நாட்களாக வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தினருடன் சக்தி பிரசாத் தூங்கினார். நேற்று அதிகாலை 4 மணியளவில் மணி எழுந்து வந்து பார்த்த போது மகன் சக்தி பிரசாத்தை காணவில்லை. இதனால் அவர் அருகே உள்ள இடங்களுக்கு மகனை சென்று தேடியுள்ளார். அப்போது வீட்டின் அருகே மணிக்கு சொந்தமான மாவு மில்லில் சக்தி பிரசாத் சேலையால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் குடும்பத்தினர் உதவியுடன் சக்தி பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சக்தி பிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






