search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு வேலை வாங்கி தருவதாக 23 பேரிடம் ரூ.1.83 கோடி மோசடி செய்த போலி அதிகாரி கைது
    X

    அரசு வேலை வாங்கி தருவதாக 23 பேரிடம் ரூ.1.83 கோடி மோசடி செய்த போலி அதிகாரி கைது

    • பணமோசடியில் ஈடுப்பட்ட பிரகாஷ் மீது சிவகங்கை, துறையூர், ஜீயபுரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    • சுபாஷ், சசிக்குமார் ஆகியோர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போல் நடித்து வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்து சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர்:

    திருச்சி மாவட்டம், துறையூர் சிங்கிளாந்தபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணி மகன் பிரகாஷ் (வயது 40). இவருடன் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 11-ந் தேதி அன்று பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மோகன்பாபுவிற்கு (25) அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரகாஷ், ஹோம் அன்ட் ரூரல் டெவலப்மெண்ட் துறையில் இணை செயலாளராக வேலை பார்த்து வருவதாகவும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சுபாஷ், சசிக்குமார் ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என கூறி, இவர்கள் மூலம் உங்களுக்கு ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாகவும், உங்கள் மனைவி சாருமதிக்கு (22) விஏஓ வேலை வாங்கி தருவதாகவும் மோகன் பாபுவிடம் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய மோகன்பாபு, தனது உறவினர் மற்றும் நண்பர்களாகிய பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் ராஜலிங்கம், உளுந்துபேட்டை பார்த்திபன் உட்பட 23 பேரிடம் மொத்தம் ரூ.1.83 கோடி பணத்தை வசூல் செய்து பிரகாஷிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் பிரகாஷ் தலைமறைவாகி விட்டார். இதனால் வேலைவாங்கி தரமாமல் பண மோடிசயில் ஈடுப்பட்ட பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெரம்பலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிபு போலீசில் மோகன்பாபு புகார் கொடுத்துள்ளார்.

    இதற்கிடையே பணம் கொடுத்த நபர்கள் மோகன்பாபுவிடம் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

    மோகன்பாபு மற்றும் அவரது மனைவி இருவருக்கும் வேலைவாங்கி தராமல் ஏமாற்றிய பிரகாசை, கடந்த 29-ந்தேதி சென்னை கோயம்பேட்டிலிருந்து காரில் பெரம்பலூர் அழைத்து வந்து பணத்தை தந்து விட்டு செல்லும்படி தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.

    இதையறிந்த பிரகாஷின் அண்ணன் பால்செல்வனின் மனைவி ஆரோக்கியமேரி 100 நம்பருக்கு போன் செய்து தனது கொழுந்தன் பிரகாஷை மோகன்பாபு கடத்தி சென்று அவரது வீட்டில் அடைத்து வைத்துள்ளார் என புகார் கொடுத்துள்ளார்.

    தகவலின்பேரில் பெரம்பலூர் போலீசார் மோகன்பாபுவின் வீட்டிற்கு சென்று பிரகாஷை மீட்டனர். பிரகாஷை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிரகாஷ் ஹோம் அன்ட் ரூரல் டவலப்மெண்ட் துறையில் இணை செயலாளராக பணிபுரியவில்லை என்பதும், சுபாஷ், சசிக்குமார் ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரியே கிடையாது என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து பண மோசடியில் ஈடுபட்ட பிரகாஷை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பணமோசடியில் ஈடுப்பட்ட பிரகாஷ் மீது சிவகங்கை, துறையூர், ஜீயபுரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சுபாஷ், சசிக்குமார் ஆகியோர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போல் நடித்து வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்து சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×