என் மலர்tooltip icon

    நீலகிரி

    மேட்டுப்பாளையம்-குன்னூர் பாதையில் பாறை விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்ததால், மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.
    ஊட்டி:

    கொரோனா ஊரடங்கு காரணமாக ஊட்டி மலைரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்வை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி முதல் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஊட்டி-குன்னூர் இடையே 3 முறை, மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே ஒரு முறை இயக்கப்படுகிறது.

    ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.350, 2-ம் வகுப்பு ரூ.150, மேட்டுப்பாளையத்துக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.600, 2-ம் வகுப்பு ரூ.295 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் பாதையில் பாறை விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்ததால், மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன் பின்னர் சீரமைப்பு பணி முடிந்து நேற்று மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலைரெயில் இயக்கப்பட்டது. இதையொட்டி ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ஊட்டி மலை ரெயில்

    இந்நிலையில், இன்று கல்லார்-அடர்லி இடையே மண் சரிவு மீண்டும் ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி ரெயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    2 நாட்களாக ரத்தாகிய மலைரெயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கிய நிலையில் இன்று மண் சரிவு காரணமாக ரெயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    புலியை கண்காணிப்பதற்காக ஏற்கனவே 25 காமிராக்கள் பொருத்தி இருந்த நிலையில் எந்த காமிராவிலும் புலி சிக்கவே இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் டி.23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கடந்த 14 நாட்களாக வனத்துறையினர், அதிரடிப்படையினர், கால்நடை டாக்டர்கள் மசினகுடி, சிங்காரா வனப்பகுதிகளில் முகாமிட்டு புலியை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் மசினகுடி- மாயார் பகுதியில் வனத்துறையினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் காயத்துடன் ஆண் கரடி ஒன்று சுற்றி திரிந்ததை பார்த்தனர். பின்னர் அந்த கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கால்நடை டாக்டர் கலைவாணன் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து கரடி வனத்திற்குள் விடப்பட்டது.

    தொடர்ந்து அந்த பகுதிகளில் டி.23 புலியை தேடினர். ஆனால் 14-வது நாளான நேற்றும் புலியை தேடுவதில் வனத்துறையினருக்கு தோல்வியே மிஞ்சியது. இன்று காலை மீண்டும் 15-வது நாளாக 60க்கும் குறைவான வனத்துறையினர் வனப்பகுதிகளில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    டி.23 புலி முதலில் கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் சுற்றி திரிந்துள்ளது. தற்போது கூடலூர், மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி கொண்டிருக்கிறது. 4 பேரை கொன்ற அந்த புலியை பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் புலி இதுவரை கண்ணில் தென்படவே இல்லை.

    இந்த பகுதி சமவெளி நிறைந்த புதர்கள் அடர்த்தியாக காணப்படுகிறது. புலி புதர்களுக்குள் சென்று மறைந்து கொள்வதால் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

    ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் புலி வெளியில் வராமல் புதர்களுக்குள்ளேயே இருக்கிறது. முதலில் 150-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வந்தோம். தற்போது அதனை குறைத்து, 60-க்கும் குறைவான வீரர்கள் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

    புலியை கண்காணிப்பதற்காக ஏற்கனவே 25 காமிராக்கள் பொருத்தி இருந்தோம். ஆனால் எந்த காமிராவிலும் புலி சிக்கவே இல்லை. தற்போது புலியின் கால்தடங்கள் பதிவான 23 இடங்களை கண்டறிந்துள்ளோம்.

    அங்கு தற்போது கூடுதலாக 25 காமிராக்களை பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். பணியாளர்களை குறைத்து விட்டு கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி புலியை கண்காணித்து பிடிக்க உள்ளோம். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதால் விரைவில் புலியை பிடித்து விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், அறிவியல் பூர்வமாக புலி தேடும் பணி நடக்கிறது. டிரோன்கள் மூலம் புலியை தேடுகிறோம். புலி வேறு இடத்திற்கு சென்று விட்டதா? என்பதையும் தொடர்ந்து கண்காணிக்கிறோம். விரைவில் புலியை பிடித்து விடுவோம் என்றார்.

    ரெயில் பாதையில் மண் சரிவால் நிறுத்தப்பட்ட மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை இன்று காலை தொடங்கியது.
    கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் கடந்த 6-ந்தேதி இரவு மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் பாதையில் அடர்லி- ஹில்குரோவ் இடையே மண் சரிவு ஏற்பட்டதுடன், ரெயில் பாதையில் பாறைகளும் உருண்டு விழுந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரெயில்வே தொழிலாளர்கள் ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

    ரெயில் பாதையில் விழுந்து கிடந்த பாறைகளை வெடி வைத்து தகர்த்தனர். மேலும் ரெயில் பாதையின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்களையும் வெட்டி அகற்றினர். ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

    இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை இன்று தொடங்கியது. இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் ஊட்டிக்கு செல்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே ரெயில் நிலையத்திற்கு கூட்டம், கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர்.

    இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் மலைரெயில் புறப்பட்டுச் சென்றது. இதில் 180 பயணிகள் பயணித்தனர். அவர்கள் மலை ரயில் புறப்பட்டதும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.
    மழையால் பெயர்ந்த தொட்டபெட்டா சாலையை சீரமைப்பது எப்போது? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக 4 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி முதல் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டது. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.

    இதற்கிடையே ஊட்டி அருகே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் தொட்டபெட்டா மலைச்சிகரம் திறக்கப்படாமல் மூடிய நிலையிலேயே உள்ளது. தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து மலை சிகரத்துக்கு செல்லும் சாலை தொடர் மழையால் பெயர்ந்து விழுந்து உள்ளது. இதனால் சாலை அந்தரத்தில் தொங்குகிறது. இதன் காரணமாக தொட்டபெட்டா மூடப்பட்டு உள்ளது என்று சோதனைச் சாவடி அருகே தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் மற்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு தொட்டபெட்டா வருகிறவர்கள் சாலை மூடப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக சுற்றுலா வாகனங்கள் செல்லாததால் அந்த சாலையில் காட்டெருமை, கடமான் போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் இருந்து நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம், குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு, மாவட்ட எல்லைகள், அடர்ந்த வனப்பகுதிகள், அணைகள் போன்றவற்றை கண்டு ரசிக்கலாம். அங்கு நிலவும் பனிமூட்டம் மற்றும் சீதோஷ்ண காலநிலையை சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். இதனால் சாலையை சீரமைத்து, தொட்டபெட்டா செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதையடுத்து மழையால் சேதமடைந்த தொட்டபெட்டா சாலையை சீரமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தடுப்பு சுவர் அமைத்து சாலையை சீரமைக்கவும், மழைநீர் செல்ல அடிப்பகுதியில் குழாய் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. தற்போது வரை பணிகள் தொடங்கவில்லை. ஊரடங்கால் தொட்டபெட்டா மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வராததால் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது பிற சுற்றுலா தலங்கள் திறந்தும் தொட்டபெட்டா திறக்கப்படாததால் வருவாய் இழப்பு நீடித்து வருகிறது.
    புலி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாகவும், விரைவில் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து விடுவோம் என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி, சிங்காரா பகுதிகளில் கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை புலி ஒன்று குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி கொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலியை பிடிக்க கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து வனத்துறையினர், அதிரடிப்படையினர் கூட்டாக இணைந்து, 3 மோப்ப நாய்கள், 2 கும்கி யானைகள் உதவியுடன் சிங்காரா, மசினகுடி வனப்பகுதி முழுவதும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த மாதம் 25-ந் தேதியில் இருந்து புலியை தேடி வரும் வனத்துறையினர் தங்களுக்கு கிடைத்த புலியின் உடலில் உள்ள கோடுகள் அடிப்படையில் டி.23 என்ற புலி தான் மனிதர்களை தாக்கியதை உறுதி செய்தனர். இதையடுத்து கண்காணிப்பு கேமரா பொருத்தியும், புலியின் படங்களை கையில் வைத்து கொண்டும் தேடுகின்றனர்.

    12 நாட்களை கடந்து இன்று 13-வது நாளாக புலி இருக்கக்கூடிய சிங்காரா வனப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் பரண் அமைத்து, கால்நடை டாக்டர்களுடன் புலியை பார்த்ததும் மயக்க ஊசி செலுத்த தயார் நிலையில் இருக்கிறார்கள். புலி புதருக்குள் மறைந்து கொண்டு வெளியில் வராமல் பதுங்கியே உள்ளது.

    13 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இன்னமும் புலியை பிடிக்க முடியாதது ஏன் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. தற்போது புலி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாகவும், விரைவில் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து விடுவோம் என்று கூறியுள்ளனர். இதுதவிர அறிவியல் பூர்வமாகவும், டிரோன்களை பறக்க விட்டும் புலியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து வன ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

    முதுமலை புலிகள் காப்பக வெளிச்சுற்று பகுதியாக மசினகுடி, மாயார், சிங்காரா போன்ற பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கு இயல்பாகவே புலிகள் நடமாட்டம் இருப்பது வனத்துறைக்கு தெரியும். இதில் ஒரு புலியை மட்டும் தனியாக அடையாளப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. மனிதர்களை கொன்ற புலி வேறு இறைச்சியை தேடாது. மீண்டும் மனிதர்களை தேடும் என்ற கருத்து நிலவுகிறது.

    இருப்பினும் வனத்துறையினர் வனத்தில் புலி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். கூட்டமாக செல்லாமல் மரங்களில் பரண் அமைத்து குறிப்பிட்ட வீரர்களுடன் கண்காணித்தால் புலியை பிடிக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் கூறுகையில், புலி தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. முட்புதர்களில் இருப்பதால் இடத்தை அறிவதில் சிரமம் உள்ளது. விரைந்து பிடிக்கப்படும். இதற்காக காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியாது. புலி வனப்பகுதியை விட்டு தப்பி செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிருடன் பிடித்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


    மரத்தில் பரண் அமைத்து புலியை கண்காணிக்கும் வனத்துறையினர்.

    கோத்தகிரி பகுதிகளில் மழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளதால், அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்து உள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வந்தது. ஜூலை மாதம் மழை அதிகமாக பதிவானது. குறிப்பாக கூடலூர், பந்தலூர், அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் அதிக மழைப்பொழிவு காணப்பட்டது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்தது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகமாக பெய்தது. இதனால் போத்திமந்து அணை உள்பட பல்வேறு அணைகள் நிரம்பின.

    இதுகுறித்து பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நீலகிரியில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 938.40 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் 206.53 மில்லி மீட்டர், ஜூலை மாதம் 376.15 மில்லி மீட்டர், ஆகஸ்டு மாதம் 202.67 மில்லி மீட்டர், செப்டம்பர் மாதம் 160.54 மில்லி மீட்டர் என மொத்தம் 945.9 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. இது சராசரியை விட 7 மில்லி மீட்டர் அதிகமாகும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 1296.81 மில்லி மீட்டர் பதிவானது.

    இது சராசரியை விட 38 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் மழை குறைவாக பெய்து உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் மழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளதால், அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-5.8, நடுவட்டம்-13, குந்தா-15, அவலாஞ்சி-37, எமரால்டு-45, கெத்தை-34,

    பர்லியார்-43, கேத்தி-35, எடப்பள்ளி-46, கோத்தகிரி-38, கூடலூர்-16, தேவாலா-21 உள்பட மொத்தம் 476.3 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 16.42 ஆகும்.


    வனத்துறையினருக்கு உதவியாக கால்நடைகளை மேய்ப்பதில் அனுபவம் பெற்ற உள்ளூர் இளைஞர்கள் 10 பேரும் இணைந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் 4 பேரை அடித்து கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் கடந்த 10 நாட்களாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் ஆட்கொல்லி புலி வனத்துறையினரின் கண்ணில் சிக்காமல் புதர்களுக்குள் பதுங்கி, பதுங்கி வனத்துறையினரிடம் இருந்து தப்பி வருகிறது. இதனால் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.

    இதற்கிடையே சிங்காரா வனப்பகுதியில் புலி சுற்றி திரிவதாக வந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சிங்காரா மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தக்கூடிய துப்பாக்கியுடன் கும்கி யானைகள் மீது அமர்ந்து வனத்திற்குள் சென்று புலியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். கும்கி யானைகள் உதவியுடன் 4 மணி நேரம் தேடியும் புலியின் இருப்பிடம் தென்படவில்லை.

    இந்த நிலையில் மாலையில் சிங்காரா வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள மூங்கில் புதரில் புலி பதுங்கி இருப்பதை வனத்துறையினர் அறிந்தனர். உடனடியாக வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் மூங்கில் புதரை சுற்றி வளைத்தனர். ஆனால் அதிகமான புதர் காரணமாக மயக்க ஊசி செலுத்த முடியவில்லை.

    ஆட்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்ததும் புலி வெளியில் வராமல், புதர்களுக்குள்ளேயே பதுங்கி, பதுங்கி தப்பியோடியது.

    தொடர்ந்து இன்று 11-வது நாளாக வனத்துறையினர், அதிரடிப்படையினர், கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி, துப்பாக்கியுடன் சிங்காரா வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். தற்போது புலி இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களுடன் கும்கி யானைகள், மோப்ப நாய்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

    வனத்துறையினருக்கு உதவியாக கால்நடைகளை மேய்ப்பதில் அனுபவம் பெற்ற உள்ளூர் இளைஞர்கள் 10 பேரும் இணைந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    புலி நிமிடத்திற்கு நிமிடம் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு வேகமாக தப்பி சென்று கொண்டிருப்பதால் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. தற்போது புலி இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டதாகவும், அதனை விரைவில் மயக்க ஊசி செலுத்தி பிடித்து விடுவோம் என வனத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே இன்று காலை சிங்காரா வனப்பகுதியில் புலியை தேடுதல் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது வனத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த எருமை மாடு ஒன்றை புலி அடித்து கொன்றது மட்டுமில்லாமல் அதனை தின்று சென்றுள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தெரியவந்ததும் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள்ளாகவே அங்கிருந்து சென்று விட்டது. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.



    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் மரப்பாலம் தர்கா அருகே தண்டவாளத்தில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதனால் 150 பயணிகளுடன் வந்த மலைரெயில் தொலைவிலேயே நிறுத்தப்பட்டது.
    ஊட்டி :

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மின்கம்பம் சரிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையில் அதே சாலையில் குஞ்சப்பனை அருகே ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது. இதன் காரணமாக அதிகாலை 1 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இது தவிர மழை காரணமாக டானிங்டன் பகுதியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

    இதேபோன்று குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் மரப்பாலம் தர்கா அருகே தண்டவாளத்தில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதனால் 150 பயணிகளுடன் வந்த மலைரெயில் தொலைவிலேயே நிறுத்தப்பட்டது.

    அதற்குள் ஒருசில பயணிகள் மலைரெயிலை விட்டு இறங்கி குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலைக்கு வந்து, பஸ் மற்றும் வாடகை வாகனங்களில் ஊட்டி, குன்னூருக்கு சென்றனர்.

    ஊட்டியில் பெய்த மழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று பலத்த காற்று காரணமாக பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வேருடன் சாய்ந்தது. கோத்தகிரி பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த கரடி ஒன்று உயிரிழந்தது.

    ஈரோட்டில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடைய மகன் காயம் அடைந்தார்.
    புலியை 3 டிரோன் கேமராக்கள் மூலமும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் கண்காணித்து வருகின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 4 பேரை அடித்து கொன்ற ஆட்கொல்லி புலியை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

    இன்று 9-வது நாளாக தமிழக, கேரள வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மயக்க ஊசி செலுத்த கால்நடை டாக்டர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

    புலியை 3 டிரோன் கேமராக்கள் மூலமும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் கண்காணித்து வருகின்றனர்.

    இதற்கிடையே இன்று தமிழக முதன்மை வன உயிரின காப்பாளர் சேகர்குமார் நீரஜ் இன்று காலை மசினகுடிக்கு வந்தார். அவர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக, கேரள வனத்துறை அதிகாரிகள், அதிரடிப்படையினர், கால்நடை டாக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுபிடிக்க எந்த உத்தரவும் பிறக்கப்படவில்லை.

    மாறாக, புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிப்பதற்கான பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. இதற்காக கால்நடை டாக்டர்கள், வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புலி எக்காரணத்தை கொண்டும் சுட்டு கொல்லப்பட மாட்டாது. மயக்க ஊசி செலுத்தி மட்டுமே பிடிக்கப்படும் என்றார்.
    கூடலூர் பகுதியில் 4 பேரை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    கடந்த ஏழு நாட்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன் எஸ்டேட் பகுதியில் வனத்துறையினருக்குப் போக்குகாட்டி வரும் டி23 புலி இதுவரை நான்கு பேரைக் கொன்றுள்ளது. 

    தற்போது எஸ்டேட்டை அச்சுறுத்தி வரும் புலிக்கு வயது 13. மேலும் உடலில் காயங்களோடு இந்த புலி சுற்றி வருவதால் ஆட்கொல்லி புலியாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது. மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வண்டலூர் பூங்காவிற்குக் கொண்டுசென்று பராமரிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த வனத்துறையின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 

    இந்நிலையில் கூடலூர் பகுதியில் 4 பேரை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளித்த வனத்துறையினர், புலியை சுட்டுப்பிடிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தேடுதல், பொறி வைத்துப் பிடித்தல், அமைதிப்படுத்தல் நடவடிக்கைகள் பலன் தராத நிலையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போதைய சூழலில் புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றும் வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். 

    ஆட்கொல்லி புலியை சுட்டு பிடித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.
    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் இன்று டுவிட்டரில் ‘‘மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல. கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் T-23 புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் கடந்த ஆண்டு  புலி ஒன்று அப்பகுதியை சேர்ந்த கெளரி என்ற பெண்ணை அடித்து கொன்றது. பின்னர் அப்பகுதியிலிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி கடந்த சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன்,  சந்திரன் ஆகிய இருவரையும்  அடித்து கொன்றது.  இதைத்தவிர அப்பகுதியில் 30-கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றது. இந்நிலையில் இந்த ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களை மேற்கொண்டனர்.

    பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க  புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்து 3 வன கால்நடை மருத்துவக் குழு மற்றும் 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை தேடும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வந்தனர். கடந்த 7 நாட்களாக ஆட்கொல்லி புலி வனத்துறையினருக்கு பலமுறை தென்பட்ட போதிலும் அடர்ந்த புதர்களில் மறைந்து கொண்டு வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.

    கமல் ஹாசன்

    இந்நிலையில் நேற்று இந்த ஆட்கொல்லி புலி தேவன் எஸ்டேட் பகுதியிலிருந்து மசினகுடி பகுதிக்கு நகர்ந்ததாக வனத்துறையினர்க்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மசினகுடி பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டனர். இந்நிலையில் ஆட்கொலி புலி மசினகுடி அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில்  கால்நடை  மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசுவன் என்பவரை அடித்து கொன்றது. இதனைதொடர்ந்து புலியை சுட்டு பிடிக்க கோரி பொதுமக்கள் மசினகுடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் புலியை சுட்டு பிடிக்க உத்தரவு ஆணையை  காண்பித்த பிறகு மக்கள் கலைந்து சென்றனர்.

    ஆட்கொல்லி புலியை  தேட 6 பேர் கொண்ட 3 வன குழுவினர் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். இந்தக் குழு புலியை கண்டவுடன் சுட்டுக்கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

    குட்டி யானையின் உடலை நெருங்க விடாமல் அதனை சுற்றி தாய் யானை உள்பட 4 யானைகள் நின்று பாச போராட்டம் நடத்தி வருகின்றன.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்குபட்ட அய்யன்கொல்லி அருகே உள்ளது மழவன் சேரம்பாடி பகுதி. இந்த பகுதியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாய வேலை செய்து வருகின்றனர்.

    அருகே வனப்பகுதி உள்ளதால் அடிக்கடி கிராமத்திற்குள் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து பயிர்களையும், பொருட்களை சேதப்படுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மழவன் சேரம்பாடி கிராமத்தையொட்டிய வயல் பகுதிக்குள் இருந்து யானைகள் பிளிறும் சத்தம் கேட்டது. தொடர்ந்து யானை பிளிறும் சத்தம் அதிகரிக்கவே அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக சத்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது வயல் பகுதி அருகே உள்ள சேற்றுக்குள் குட்டி யானை ஒன்று சிக்கி இறந்த நிலையில் கிடந்தது. அதனை சுற்றிலும் தாய் யானை உள்பட 4 யானைகள் நின்று பிளிறி கொண்டு இருந்தன.

    இதை பார்த்ததும் பொதுமக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் குட்டி யானையின் உடலை மீட்பதற்காக வனத்துறையினர் அருகே செல்ல முயன்றனர். ஆனால் தாய் யானை வனத்துறையினரை நோக்கி வந்தது. இதனால் அவர்கள் சற்று பின்வாங்கினர்.

    தொடர்ந்து குட்டி யானையின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் குட்டி யானையின் உடலை நெருங்க விடாமல் அதனை சுற்றி தாய் யானை உள்பட 4 யானைகள் நின்று பாச போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் குட்டி யானையின் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் அந்த யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.




    ×