search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புலி
    X
    புலி

    மசினகுடி பகுதியில் புலியை கண்காணிக்க கூடுதலாக காமிராக்கள் பொருத்தம் - வனத்துறையினர் நடவடிக்கை

    புலியை கண்காணிப்பதற்காக ஏற்கனவே 25 காமிராக்கள் பொருத்தி இருந்த நிலையில் எந்த காமிராவிலும் புலி சிக்கவே இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் டி.23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கடந்த 14 நாட்களாக வனத்துறையினர், அதிரடிப்படையினர், கால்நடை டாக்டர்கள் மசினகுடி, சிங்காரா வனப்பகுதிகளில் முகாமிட்டு புலியை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் மசினகுடி- மாயார் பகுதியில் வனத்துறையினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் காயத்துடன் ஆண் கரடி ஒன்று சுற்றி திரிந்ததை பார்த்தனர். பின்னர் அந்த கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கால்நடை டாக்டர் கலைவாணன் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து கரடி வனத்திற்குள் விடப்பட்டது.

    தொடர்ந்து அந்த பகுதிகளில் டி.23 புலியை தேடினர். ஆனால் 14-வது நாளான நேற்றும் புலியை தேடுவதில் வனத்துறையினருக்கு தோல்வியே மிஞ்சியது. இன்று காலை மீண்டும் 15-வது நாளாக 60க்கும் குறைவான வனத்துறையினர் வனப்பகுதிகளில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    டி.23 புலி முதலில் கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் சுற்றி திரிந்துள்ளது. தற்போது கூடலூர், மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி கொண்டிருக்கிறது. 4 பேரை கொன்ற அந்த புலியை பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் புலி இதுவரை கண்ணில் தென்படவே இல்லை.

    இந்த பகுதி சமவெளி நிறைந்த புதர்கள் அடர்த்தியாக காணப்படுகிறது. புலி புதர்களுக்குள் சென்று மறைந்து கொள்வதால் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

    ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் புலி வெளியில் வராமல் புதர்களுக்குள்ளேயே இருக்கிறது. முதலில் 150-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வந்தோம். தற்போது அதனை குறைத்து, 60-க்கும் குறைவான வீரர்கள் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

    புலியை கண்காணிப்பதற்காக ஏற்கனவே 25 காமிராக்கள் பொருத்தி இருந்தோம். ஆனால் எந்த காமிராவிலும் புலி சிக்கவே இல்லை. தற்போது புலியின் கால்தடங்கள் பதிவான 23 இடங்களை கண்டறிந்துள்ளோம்.

    அங்கு தற்போது கூடுதலாக 25 காமிராக்களை பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். பணியாளர்களை குறைத்து விட்டு கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி புலியை கண்காணித்து பிடிக்க உள்ளோம். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதால் விரைவில் புலியை பிடித்து விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், அறிவியல் பூர்வமாக புலி தேடும் பணி நடக்கிறது. டிரோன்கள் மூலம் புலியை தேடுகிறோம். புலி வேறு இடத்திற்கு சென்று விட்டதா? என்பதையும் தொடர்ந்து கண்காணிக்கிறோம். விரைவில் புலியை பிடித்து விடுவோம் என்றார்.

    Next Story
    ×