search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரத்தில் பரண் அமைத்து புலியை கண்காணிக்கும் வனத்துறையினர்.
    X
    மரத்தில் பரண் அமைத்து புலியை கண்காணிக்கும் வனத்துறையினர்.

    மசினகுடி, சிங்காராவில் 13-வது நாளாக புலியை தேடும் பணி தீவிரம்

    புலி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாகவும், விரைவில் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து விடுவோம் என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி, சிங்காரா பகுதிகளில் கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை புலி ஒன்று குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி கொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலியை பிடிக்க கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து வனத்துறையினர், அதிரடிப்படையினர் கூட்டாக இணைந்து, 3 மோப்ப நாய்கள், 2 கும்கி யானைகள் உதவியுடன் சிங்காரா, மசினகுடி வனப்பகுதி முழுவதும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த மாதம் 25-ந் தேதியில் இருந்து புலியை தேடி வரும் வனத்துறையினர் தங்களுக்கு கிடைத்த புலியின் உடலில் உள்ள கோடுகள் அடிப்படையில் டி.23 என்ற புலி தான் மனிதர்களை தாக்கியதை உறுதி செய்தனர். இதையடுத்து கண்காணிப்பு கேமரா பொருத்தியும், புலியின் படங்களை கையில் வைத்து கொண்டும் தேடுகின்றனர்.

    12 நாட்களை கடந்து இன்று 13-வது நாளாக புலி இருக்கக்கூடிய சிங்காரா வனப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் பரண் அமைத்து, கால்நடை டாக்டர்களுடன் புலியை பார்த்ததும் மயக்க ஊசி செலுத்த தயார் நிலையில் இருக்கிறார்கள். புலி புதருக்குள் மறைந்து கொண்டு வெளியில் வராமல் பதுங்கியே உள்ளது.

    13 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இன்னமும் புலியை பிடிக்க முடியாதது ஏன் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. தற்போது புலி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாகவும், விரைவில் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து விடுவோம் என்று கூறியுள்ளனர். இதுதவிர அறிவியல் பூர்வமாகவும், டிரோன்களை பறக்க விட்டும் புலியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து வன ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

    முதுமலை புலிகள் காப்பக வெளிச்சுற்று பகுதியாக மசினகுடி, மாயார், சிங்காரா போன்ற பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கு இயல்பாகவே புலிகள் நடமாட்டம் இருப்பது வனத்துறைக்கு தெரியும். இதில் ஒரு புலியை மட்டும் தனியாக அடையாளப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. மனிதர்களை கொன்ற புலி வேறு இறைச்சியை தேடாது. மீண்டும் மனிதர்களை தேடும் என்ற கருத்து நிலவுகிறது.

    இருப்பினும் வனத்துறையினர் வனத்தில் புலி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். கூட்டமாக செல்லாமல் மரங்களில் பரண் அமைத்து குறிப்பிட்ட வீரர்களுடன் கண்காணித்தால் புலியை பிடிக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் கூறுகையில், புலி தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. முட்புதர்களில் இருப்பதால் இடத்தை அறிவதில் சிரமம் உள்ளது. விரைந்து பிடிக்கப்படும். இதற்காக காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியாது. புலி வனப்பகுதியை விட்டு தப்பி செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிருடன் பிடித்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


    மரத்தில் பரண் அமைத்து புலியை கண்காணிக்கும் வனத்துறையினர்.

    Next Story
    ×