என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி ரோஜா பூங்காவை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பூங்காவில் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 4,201 ரோஜா ரகங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 500 ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பூங்காவை கண்டு ரசிக்க நிலா மாடம், காட்சி முனைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் அலங்கார செடிகள் அழகாக வெட்டி அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது. கோடை சீசனையொட்டி ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த செடிகள் நன்றாக வளர்ந்து பூக்கள் பூக்கும் வகையில் இயற்கை உரம் இடும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக ஊட்டி அருகே சாண்டிநல்லா ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆட்டு சாணம் 50 டன் கொள்முதல் செய்து கொண்டு வந்து ரோஜா செடிகளுக்கு உரமாக இடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ஆட்டு சாணம் மண்ணோடு கலந்து செடிகளுக்கு ஊட்டமளிக்கும் வகையில் பணியாளர்கள் மண்ணை மாற்றி விடுகிறார்கள். இதைத்தொடர்ந்து மாட்டு சாணம், காளான் கழிவுகள் உரமாக போடப் பட உள்ளது. களை எடுத்தல், மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது முக்கியமான பகுதிகளில் ரோஜா செடிகள் கவாத்து செய்யப் பட்டு உள்ளது. பிற 2 பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் செடிகள் கவாத்து செய்யப்பட்டது. அதில் ரோஜா மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன.
இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். நீலகிரியில் நடப்பாண்டில் கோடை சீசனையொட்டி தோட்டக்கலை பூங்காக்களில் கண்காட்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் பெரும்பான்மையாக தி.மு.க. வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, தேவர்சோலை பேரூராட்சி 10-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் கணியம்வயலை சேர்ந்த நவுசாத் என்பவரின் மனைவி ஷிம்ஜித் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. பெண் வேட்பாளர் எமிபோல் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் ஷிம்ஜித் வீட்டின் முன்பு நின்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த தி.மு.க தொண்டரான சமீர் என்பவர், ஷிம்ஜித்தை பார்த்து, தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனை ஷிம்ஜித் தனது கணவரிடம் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நவுசாத், சமீரிடம் சென்று வாக்குவாதம் செய்தார். அப்போது தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அவர் கத்தியை எடுத்து சமீரை குத்தினார். அப்போது இதனை அங்கிருந்த அஸ்கர் என்பவர் பார்த்து தடுக்க வந்தார். இதில் அவருக்கும் கத்திக்குத்து ஏற்பட்டது.
நவுசாத் குத்தியதில் சமீர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நவுசாத் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
தேவர்சோலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த அஸ்கரை மீட்டு சுல்தான்பத்தேரி ஆஸ்பத்திரிக்கும், இறந்த சமீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி நவுசாத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் பதுங்கி இருந்த நவுசாத்தை தேவர்சோலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மனைவியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுமுறையை கொண்டாட ஏராளமான மக்கள் சுற்றுலா தலமான நீலகிரியில் குவிந்தனர். இதனால் நீலகிரியில் வழக்கத்தை விட கடந்த 2 நாட்கள் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் மலர் செடிகள், இயற்கை காட்சிகள் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் 7 ஆயிரம் பேர் வந்திருந்தனர். அதேபோல் அரசினர் ரோஜா பூங்காவுக்கு 2,000 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 342 பேரும், மரவியல் பூங்காவுக்கு 68 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 2,000 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 450 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 350 பேரும் வந்திருந்தனர்.
இந்த எண்ணிக்கை நேற்று அதிகரித்தது. நேற்று ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு 11,000 பேர் வந்திருந்தனர்.
ரோஜா பூங்காவுக்கு 3,500 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 700 பேரும், மரவியல் பூங்காவுக்கு 200 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 2,300 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 600 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 550 பேரும் வருகை தந்திருந்தனர். ஊட்டி படகு இல்லத்துக்கு 6,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 3,000 பேரும் வருகை தந்திருந்தனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் ஊட்டி தாவரவியல் பூங்காவை 18 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு ரசித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டி நகரின் பெரும்பாலான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்தை எளிமையான முறையில், அமைதியாக நடத்த கவர்னர் திட்டமிட்டார்.
இதனால் திருமணத்தை நடத்த இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியை தேர்வு செய்தார். அதன்படி ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே உள்ள ராஜ்பவன் மாளிகையில் வருகிற 21 மற்றும் 22-ந்தேதிகளில் திருமண நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இதையொட்டி கவர்னர் ரவி 7 நாள் பயணமாக நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் அவர் நீலகிரிக்கு சென்றார்.அவருடன் அவரது மனைவி, மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வந்துள்ளனர்.
இவர்கள் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்கி உள்ளனர். வருகிற 24-ந் தேதி வரை கவர்னர் ஊட்டியிலேயே தங்க உள்ளார்.
திருமணத்தை ஒட்டி ராஜ்பவன் மாளிகை முழுவதும் வர்ணம் பூசப்பட்டு, பொலிவு படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர மாளிகை முழுவதும் சுத்தப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
கொரோனா காலம் என்பதால் கவர்னரின் மகள் திருமணம் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் நடக்கிறது. இந்த திருமணத்தில் யார்? யார்? கலந்து கொள்கிறார்கள். எத்தனை பேர் பங்கேற்கிறார்கள்? என்ற எந்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இருப்பினும் இந்த திருமண நிகழ்வில் கவர்னர் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிகிறது.
திருமண நிகழ்வில் பங்கேற்கும் உறவினர்களுக்காக ஊட்டியில் உள்ள 3 தனியார் ஓட்டல்கள் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்தில் பங்கேற்பதற்காக கவர்னின் உறவினர்கள் அனைவரும் நாளையே ஊட்டிக்கு வர உள்ளனர். அவர்கள் ஓட்டல்களில் தங்கி இருந்து திருமணத்தில் பங்கேற்கின்றனர்.
திருமணத்திற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் ராஜ்பவன் மாளிகையில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை கவர்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகிறார்கள்.
கவர்னர் வருகையை முன்னிட்டு ராஜ்பவன் மாளிகை, தாவரவியல் பூங்கா, உறவினர்கள் தங்க உள்ள தனியார் ஓட்டல்கள் என ஊட்டி முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கவர்னர் ரவி, தனது மகளின் திருமண நிகழ்ச்சியை முடித்து கொண்டு, 24-ந் தேதி ஊட்டியில் இருந்து மீண்டும் சென்னை திரும்புகிறார்.






