என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேர்தலில் தோற்றதால் கிண்டல்: தி.மு.க. தொண்டரை கொன்ற அ.தி.மு.க. வேட்பாளரின் கணவர் கைது
கூடலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் பெரும்பான்மையாக தி.மு.க. வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, தேவர்சோலை பேரூராட்சி 10-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் கணியம்வயலை சேர்ந்த நவுசாத் என்பவரின் மனைவி ஷிம்ஜித் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. பெண் வேட்பாளர் எமிபோல் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் ஷிம்ஜித் வீட்டின் முன்பு நின்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த தி.மு.க தொண்டரான சமீர் என்பவர், ஷிம்ஜித்தை பார்த்து, தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனை ஷிம்ஜித் தனது கணவரிடம் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நவுசாத், சமீரிடம் சென்று வாக்குவாதம் செய்தார். அப்போது தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அவர் கத்தியை எடுத்து சமீரை குத்தினார். அப்போது இதனை அங்கிருந்த அஸ்கர் என்பவர் பார்த்து தடுக்க வந்தார். இதில் அவருக்கும் கத்திக்குத்து ஏற்பட்டது.
நவுசாத் குத்தியதில் சமீர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நவுசாத் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
தேவர்சோலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த அஸ்கரை மீட்டு சுல்தான்பத்தேரி ஆஸ்பத்திரிக்கும், இறந்த சமீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி நவுசாத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் பதுங்கி இருந்த நவுசாத்தை தேவர்சோலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மனைவியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






