என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா மே மாதத்தில் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகளை இணைத்து நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப்பயணிகளுக்கு தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அவா்களை மகிழ்விக்கும் வகையிலும் இந்த விழா நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கோடை விழா கோத்தகிரியில் நேரு பூங்காவில் நடைபெறவுள்ள காய்கறி கண்காட்சியுடன் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது. அதைத்தொடா்ந்து நீலகிரி கோடைவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் மே மாதத்தில் கொண்டாடப்படவுள்ளது.
7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் ஊட்டியில் புகைப்படக் கண்காட்சி சேரிங்கிராஸில் உள்ள தோட்டக்கலைத்துறை அரங்கில் நீலகிரி மாவட்ட வனத்துறை மூலம் நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழில், வனவிலங்குகள் மற்றும் பாரம்பரிய கட்டிடம் போன்ற சிறப்புமிகு வண்ண புகைப்படங்கள் சுற்றுலாப்பயணிகளின் பாா்வைக்காக இக்கண்காட்சியில் இடம்பெறும்.
இதையடுத்து 13, 14 மற்றும் 15-ந்தேதிகளில் கூடலூரில் கோடை விழாவுடன் வாசனை திரவிய கண்காட்சியும், 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் ஊட்டியில் அரசினா் ரோஜா பூங்காவில் ரோஜா மலா்கண்காட்சியும் நடக்கிறது.
கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊட்டி மலா்க்கண்காட்சி 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளது. 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும் நடைபெறுகிறது.
கோடைவிழாவில் பரதநாட்டியம், கிராமிய கலைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பழங்குடியினா் கலாச்சார மையத்திலும், 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை அரசினா் தாவரவியல் பூங்காவிலும், 18-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஊட்டி படகு இல்லத்திலும் நடத்தப்படவுள்ளது.
18-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மகளிா் சுய உதவிக்குழு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், ஆவின், இன்கோசா்வ், டான்டீ போன்றவற்றின் பொருட்காட்சி ஊட்டி பழங்குடியினா் கலாச்சார மைய தரை தளத்தில் நடைபெறவுள்ளது. கோடைவிழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளான படகுப்போட்டி 19-ந்தேதி ஊட்டி ஏரியில் நடக்கிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்குடன் கோடையை கழித்த மக்கள் இம்முறை எந்த கட்டுப்பாடும் இன்றி ஊட்டிக்கு படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான ஊட்டிஅரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் இன்று ரம்ஜான் பண்டிகையை யொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் ஊட்டியில் அலைமோதுகிறது. ஊட்டியில் உள்ள படகு இல்லத்தில் பயணம் மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். மிதவை படகு, துடுப்பு படகு, எந்திரப் படகு உள்ளிட்ட படகுகளில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் உற்சாகமாக பயணம் செய்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
அரவேணு:
நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. யானைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக பலாப்பழமே உள்ளது.
இதனால் பலா வாசனையை நுகரும் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி பலா உள்ள இடங்களை நோக்கி படையெடுத்து வருகிறது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையிலும், குடியிருப்பையொட்டிய பகுதிகளிலும் காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மேட்டுப்பாளையம் கோத்தகிரி நெடுஞ்சாலை குஞ்சப்பனை சோதனை சாவடி அருகே யானை கூட்டம் சென்றது.
அதில் இருந்து பிரிந்த ஒற்றை பெண் காட்டு யானை பலாப்பழத்தை தேடி அந்த பகுதியில் நீண்ட நேரமாக தனியாக சுற்றி திரிந்தது.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. யானை வருவதை பார்த்தும் காரை ஓட்டி வந்தவர் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். இதற்கிடையே கார் வருவதை பார்த்த யானை காரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. ஆவேசத்துடன் காரின் அருகே வந்த யானை திடீரென காரின் முன்பகுதியில் தும்பிக்கையால் தாக்கியது. இதில் கார் சேதமடைந்தது.
காரில் இருந்தவர் சுதாரித்து கொண்ட காரை பின்நோக்கி இயக்கி சென்றார். இருப்பினும் அந்த யானை சுமார் ஒரு மணி நேரம் சாலையில் உலா வந்தது. இது அந்த பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த சாலையில் சிறிது நேரம் வாகன போக்குவரத்தை நிறுத்தினர். பின்னர் நீண்ட நேரம் போராடி யானையை வனத்திற்குள் விரட்டினர்.
தற்போது சாலையில் உலா வரும் யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் சாலையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் யானைகளை சாலை ஓரங்களில் கண்டால் புகைப்படம் எடுக்க முயற்சி மேற்கொள்ள கூடாது எனவும் வாகனத்தை நிறுத்த கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






