என் மலர்
நீலகிரி
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் வருகிற 15-ந் தேதி ஊட்டிக்கு வருகின்றனர்.
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வரும் வெங்கையா நாயுடு, அங்கிருந்து கோவைக்கு வருகிறாா். கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு வருகிறாா்.
அங்கிருந்து மற்றொரு ராணுவ ஹெலிகாப்டரில் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். மே 20-ந்தேதி வரை அவர் ஊட்டியிலேயே தங்கி இருக்கிறார். அவருடன் தமிழக கவர்னர் ஆா்.என்.ரவியும் ஊட்டிக்கு வருகிறாா்.
இருப்பினும் அவர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 20-ந்தேதி வரை ஊட்டியில் தங்கியிருக்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் ஆர்.என்.ரவி மட்டும் வருகிற 24-ந்தேதி வரை ஊட்டியிலேயே தங்க உள்ளதாகவும், அன்று நடக்கும் மலர் கண்காட்சி நிறைவு நாளன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது.
இந்த காய்கறி கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 600 கிலோ முள்ளங்கி மற்றும் கேரட் கொண்டு உருவாக்கப்பட்ட குட்டியுடன் கூடிய ஒட்டக சிவிங்கி சுற்றுலாபயணிகளை வெகுவாக கவர்ந்தது. மலை காய்கறிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மீன், வீணை, கடிகாரம், ஊட்டி உருவாகி 200 ஆண்டுகளை நினைவு படுத்தும் வகையில் ஊட்டி 200 என்ற வடிவங்களும், செல்பி ஸ்டாண்ட், காய்கறி சிற்பம் உள்ளிட்டவைகளும் தோட்டக்கலைத் துறையால் அமைக்கப்பட்டிருந்தன.
பிற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் அரங்குகளில் மயில், முதலை, பஞ்சவர்ணக்கிளி, பாண்டா கரடி, கப்பல், மீன், டோரா உள்ளிட்ட காய்கறி சிற்பங்களை அமைத்து காட்சிப்படுத்தி இருந்தனர்.
இந்த கண்காட்சியை சுமார் 15 ஆயிரம் பேர் வரை ரசித்துள்ளனர். குடும்பத்தினருடன் திரண்ட சுற்றுலாபயணிகள் காய்கறி சிற்பங்கள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கண்காட்சியின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. கலெக்டர் அம்ரித் பங்கேற்று கண்காட்சியில் சிறப்பாக செயல்பட்ட 84 நபர்களுக்கு பரிசுகளும், சுழற்கோப்பைகளும் வழங்கினார். கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பயன்படுத்தப்பட்ட டயர்களில் மான், முயல், காட்டுமாடு உள்ளிட்டவை அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனை பாராட்டி கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டனுக்கு கலெக்டர் அம்ரித் பரிசுகளை வழங்கினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் அதிகளவிலான வனப்பகுதியை கொண்டதாகும்.
இங்கு யானை, காட்டெருமை, மான், கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி வனத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது.அவ்வாறு புகும் வனவிலங்குகள் அங்கு மக்கள் வசிக்க கூடிய வீடுகள், அவர்கள் விளைநிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சியில் பில்லூர் மட்டத்தில் பவானி எஸ்டேட் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 40). தொழிலாளி. இவருக்கு ஜானகி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
முருகன் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக குடியிருப்பையொட்டிய வனப்பகுதிக்குள் சென்றதாக தெரிகிறது.
அப்போது அங்கு புதருக்குள் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென முருகனை தாக்க தொடங்கியது. யானையை பார்த்ததும் பதறிபோன முருகன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் யானை விரட்டி வந்து அவரை தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அவரது சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அப்போது அங்கு அவர் இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர். தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் நிறைந்த பகுதிகளையும், அங்குள்ள சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்க நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை விழா நேற்று கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் களை கட்ட தொடங்கியது.
இந்த கண்காட்சியில் ஒன்றரை டன் எடை கொண்ட கேரட் மற்றும் முள்ளங்கிகளை கொண்டு குட்டியுடன் கூடிய ஒட்டகசிவிங்கி, கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல வகையான காய்கறிகள் கொண்டு வரப்பட்டு, முதலை, மயில் பஞ்சவர்ண கிளி, கங்காரு, பாண்டா கரடி, கப்பல் டோரா உள்ளிட்ட விலங்குகளின் உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர மக்காத குப்பைகளை கொண்டு காட்டெருமை, மான், கோமாதா முயல், வீட்டு அலங்கார பொருட்கள், கடிகாரம், வீணையும் வைக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தினம் என்பதாலும், கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவும் சுற்றுலா பயணிகள் கடந்த சில மாதங்களாகவே ஊட்டிக்கு படையெடுத்த வண்ணம் உள்னர். நேற்று காய்கறி கண்காட்சியை தொடங்கியதை அறிந்து கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
2-வது நாளான இன்றும் காலை முதலே பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்பட்டது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் பூங்காவில் குவிந்தனர்.
அவர்கள் அங்கு பல வகை காய்கறிகளை கொண்டு செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையிலான வனவிலங்குகளின் உருவங்களை கண்டு ரசித்ததுடன், அவற்றுடன் நின்று செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர். குறிப்பாக பூங்காவில் ஒன்றரை டன் காய்கறிகளை கொண்டு குட்டியுடன் காட்சிபடுத்தப்பட்டிருந்த ஒட்டகசிவிங்கி சுற்றுலா பயணிகளையும், குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்திழுத்தது. அனைத்து சுற்றுலா பயணிகளும் இதனை ஆச்சரியத்துடன், அதிசயமாகவும் பார்த்து வியப்பில் ஆழ்ந்து, செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுதவிர பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், அதற்கு மாற்றாக மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசன் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோடை விழா நடத்தப்படவில்லை.
2 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுக்கான கோடை விழா இன்று கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. காய்கறி கண்காட்சியை நீலகிரி கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். கண்காட்சியையொட்டி பூங்காவின் நுழைவு வாயிலில் தக்காளி, வெண்டை, பாகற்காய், கேரட், முட்டைகோஸ், காலி பிளவர் உள்பட 25 வகையான காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
காய்கறி கண்காட்சியில் தோட்டக்கலை சார்பில் மீன், கிட்டார் வடிவிலான கடிகாரங்களும் செய்யப்பட்டு பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கத்திரிக்காய்களை கொண்டு யானையும், 2 மயில்களும், கேரட்டை கொண்டு டிராகன், முதலையும், பாகற்காய்களை கொண்டு டைனோசரும் செய்யப்பட்டுள்ளது.
முட்டைக்கோஸ், பீட்ரூட், கத்தரிக்காய் கொண்டு சேவல், கோழி, பாண்டா கரடி, பூசணிக்காயில் கங்காரு, குடை மிளகாய், வெள்ளரிக்காயை கொண்டு இரட்டை கிளி செய்யப்பட்டுள்ளது. கருணை கிழங்கு, பரங்கிக்காய், கத்தரி, பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு மீன்களும், முள்ளங்கி, கத்திரியை கொண்டு குதிரையும் பூங்காவில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
கண்காட்சியில் குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் கவரும் வகையில் ஒன்றை டன் கேரட்டை கொண்டு 600 கிலோ எடையில் குட்டியுடன் கூடிய ஒட்டகசிவிங்கி மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊட்டி உதயமாகி 200 ஆண்டுகள் ஆவதையொட்டி அதனை கொண்டாடும் வகையில் பூக்களை கொண்டு ஊட்டி 200 என்ற வாசகமும் வைக்கப்பட்டுள்ளது. கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து மயில், முதலை, கிளி, கங்காரு, பாண்டா கரடி கப்பல், மீன், டோரா, போன்ற வடிவங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பயன்படுத்தப்பட்ட டயர்களை கொண்டு மான், மயில், காட்டுமாடு, கொக்கு, வாத்து, முயல் உள்ளிட்ட வனவிலங்குகளும் செய்யப்பட்டு பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று நடந்த கண்காட்சியை கண்டு களிக்க தமிழகத்தின் பிற மாவட்டத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் உள்ளூர் மக்களும் பூங்காவில் குவிந்திருந்தனர்.
அவர்கள் பூங்காவில் பல்வேறு வகையான காய்கறிகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விலங்குகள் மற்றும் பொருட்களை கண்டு ரசித்தனர். மேலும் அவற்றுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழா தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சந்திப் நந்தூரி, கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், கோத்தகிரி பேரூராட்சி துணைத்தலைவர் உமாநாத், நீலகிரி மாவட்ட எஸ்.பி.ஆசிஸ் ராவத், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னூர் சப் கலெக்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளால் யானைகள் சாலையை கடக்க முடியாமல் தவிப்பதாக புகார்கள் எழுந்தன.
இந்த விவகாரத்தை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கையிலெடுத்து, தாமாகவே முன் வந்து விசாரணை நடத்தியது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவினர் கடந்த மாதம் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
யானைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் சாலையை கடந்து வனத்துக்குள் செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
மேலும் சாலையை கடக்கும் பகுதிகளில் ஆய்வு செய்து அந்த இடங்களில் வேகத்தைடகள் அமைக்க அறிவுறுத்தினர்.
இதை தொடர்ந்து ஆய்வு செய்ததில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பகுதியில் 9 இடங்களில் யானைகள் சாலையை கடப்பதை கண்டறிந்தனர். இதில் தற்போது 8 இடங்களில் 16 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைப்பது கிடையாது. தவிர்க்க முடியாத நிலையில் விபத்துக்கள் அதிகரிக்கும் பகுதிகளில் வேகத் தடைகள் அமைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் பாதுகாப்பாக சாலையை கடக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதல் முறையாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
யானைகள் செல்வதற்கு விசாலமான வழியை ஏற்படுத்தவும், யானைகள் சாலையை கடக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்கவும் ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
யானைகள் கடக்கும் 9 இடங்களில் 18 வேகத்தடைகள் அமைக்க முடிவு செய்தோம். தற்போது 8 இடங்களில் 16 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள இடங்களில் விரிவாக்க பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. பணி முடிந்ததும் அமைக்கப்படும்.இதனால் யானை உள்பட வனவிலங்குகள் விபத்தின்றி சாலையை கடந்து செல்ல முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மலை பிரதேசமாக உள்ளது. இதன் காரணமாக இந்த காட்சிகளை கண்டுகளிக்க குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
அப்படி வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை திறந்த வெளி மற்றும் வனப்பகுதிகளில் வீசி செல்வது வாடிக்கையாக இருந்தது.
இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உருவானதுடன், வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு உடல் நிலை பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது.
மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வனவிலங்குகளை காக்கவும் மாவட்டம் நிர்வாகம் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தது.
தடையை மீறி யாராவது பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்களா என்பதும் குறித்தும் அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே பிளாஸ்டிக் மற்றும் காலி மது பாட்டில்களை திறந்த வெளியில் தூக்கி எறியாமல் இருக்க மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் சேகரிப்பு மையங்களும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் விற்பனை பரவலாக நடைபெற்று வருகிறது.
ஒரு பாட்டில் விலை ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து காலி கண்ணாடி பாட்டில்களை கடையில் திருப்பி வழங்கினால் ரூ.30 வரை தள்ளுபடி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஊட்டி, குன்னூர் பகுதியில் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் விற்பனை நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்தி விட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அதிமாக வீசி செல்கின்றனர். வனம் மற்றும் விவசாய நிலத்தில் தூக்கி எறிவதால் உடைந்து காணப்படுகிறது. எனவே கண்ணாடி பாட்டில்களை பொது இடத்தில் தூக்கி வீசுவதை தடுக்க சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.






