search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுரோட்டில் நின்ற காட்டு யானை
    X
    நடுரோட்டில் நின்ற காட்டு யானை

    கோத்தகிரி குஞ்சப்பனையில் சாலையில் வந்த காரை தாக்கிய ஒற்றை காட்டு யானை

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. யானைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக பலாப்பழமே உள்ளது.

    இதனால் பலா வாசனையை நுகரும் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி பலா உள்ள இடங்களை நோக்கி படையெடுத்து வருகிறது.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையிலும், குடியிருப்பையொட்டிய பகுதிகளிலும் காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மேட்டுப்பாளையம் கோத்தகிரி நெடுஞ்சாலை குஞ்சப்பனை சோதனை சாவடி அருகே யானை கூட்டம் சென்றது.

    அதில் இருந்து பிரிந்த ஒற்றை பெண் காட்டு யானை பலாப்பழத்தை தேடி அந்த பகுதியில் நீண்ட நேரமாக தனியாக சுற்றி திரிந்தது.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. யானை வருவதை பார்த்தும் காரை ஓட்டி வந்தவர் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். இதற்கிடையே கார் வருவதை பார்த்த யானை காரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. ஆவேசத்துடன் காரின் அருகே வந்த யானை திடீரென காரின் முன்பகுதியில் தும்பிக்கையால் தாக்கியது. இதில் கார் சேதமடைந்தது.

    காரில் இருந்தவர் சுதாரித்து கொண்ட காரை பின்நோக்கி இயக்கி சென்றார். இருப்பினும் அந்த யானை சுமார் ஒரு மணி நேரம் சாலையில் உலா வந்தது. இது அந்த பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

    உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த சாலையில் சிறிது நேரம் வாகன போக்குவரத்தை நிறுத்தினர். பின்னர் நீண்ட நேரம் போராடி யானையை வனத்திற்குள் விரட்டினர்.

    தற்போது சாலையில் உலா வரும் யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் சாலையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் யானைகளை சாலை ஓரங்களில் கண்டால் புகைப்படம் எடுக்க முயற்சி மேற்கொள்ள கூடாது எனவும் வாகனத்தை நிறுத்த கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×