என் மலர்
நீலகிரி
- சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
- கூட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் 110 மனுக்களை வழங்கினார்கள்
நீலகிரி
ஊட்டியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
நீலகிரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து கட்டுமான பணியின்போது உயிரிழந்த கூடலூர் அருகே ஓவேலி சின்னசூண்டி பகுதியை சேர்ந்த கலியபெருமாள் என்பவரது குடும்பத்துக்கு தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் நிவாரண தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
மேலும் ஊட்டி அருகே தலைகுந்தா உல்லத்தி கிராமத்தில் உயிரிழந்த கார்த்திக் என்பவரது தாயாருக்கு ரூ.2½ லட்சத்துக்கான காசோலை, மனைவிக்கு ரூ.2½ லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
இது தவிர இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தல் தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற சுவரொட்டி தயாரித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, முதல் பரிசாக ரூ.500-க்கான காசோலை மற்றும் சான்றிதழ், 2-வது பரிசாக ரூ.300-க்கான காசோலை மற்றும் சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் 110 மனுக்களை வழங்கினார்கள். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வாசுகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி பிரிவு) மணிகண்டன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது.
- நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி
மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் பாதுகாப்பான பயன்பாடு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது. இதனை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. இதில் பணப்பரிவர்த்தனையின்போது செய்யப்படும் மோசடி, ஆன்லைன் செயலிகளை கவனமாக கையாளுதல், ரகசிய எண்களை ரகசியமாக வைத்து கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- திருச்சி மண்டலத்தில் கூட்டுறவு சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்
- புதிய துணை பதிவாளருக்கு அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஊட்டி :
ஊட்டியில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) சை.அ.மீர் அஹசன் முசபர் இம்தியாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கு முன்பு திருச்சி மண்டலத்தில் கூட்டுறவு சார்பதிவாளராக பணியாற்றி வந்தார். அவர் பதவி உயர்வு பெற்று நேற்று கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் க.வாஞ்சிநாதன் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய துணை பதிவாளருக்கு சரக துணைப்பதிவாளர் இரா.மது, கூட்டுறவு சார்பதிவாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- நேற்று காலை முதல் ஊட்டியில் லேசான பனிப்பொழிவு காணப்பட்டது.
- ஊட்டியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியசும், அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் இறுதி வாரம் முதல் பிப்ரவரி இறுதி வரையிலோ அல்லது மார்ச் முதல் வாரம் வரையிலோ உறைபனி விழுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு மாத தொடக்கத்தில் மழை பொழிவு இருந்ததால் பனிக்காலம் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.
கடந்த வாரம் முழுவதும் மாவட்டத்தில் நீர் பனி கொட்டியது. இதனால், மாவட்டத்தில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக துவங்கின.
இந்த நிலையில் நேற்று காலை முதல் ஊட்டியில் லேசான பனிப்பொழிவு காணப்பட்டது.
இன்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், உறைபனி விழுந்தது. தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், சூட்டிங்மட்டம், கோத்தி போன்ற பகுதிகளில் உறைபனி கொட்டி கிடந்தது. இதனால், புல் மைதானங்கள் அனைத்தும் வெள்ளை கம்பளம் விரித்தார் போல வெண்மை நிறத்தில் காட்சி அளித்தது.
இதேபோல் தாவரவியல் பூங்கா, தாழ்வான பகுதிகளில் இருக்க கூடிய புல்வெளிகளிலும் உறைபனி காணப்பட்டது.
காலையில் கடும் குளிர் நிலவி வருகிறது. இருப்பினும் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவோர் வழக்கமாக பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
ஊட்டியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியசும், அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. உறைபனியுடன் கடும் குளிரும் வாட்டுவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
- தேயிலை தோட்டத்தின் மேல் செல்லும் உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக சித்தியம்மா மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.
- பொதுமக்கள் இறந்த சித்தியம்மாவுக்கு தேயிலை தோட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரியம் சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலையில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது.
இந்த தேயிலை தோட்டத்தில் தேவர்சோலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த தேயிலை தோட்டத்தின் மேல் பகுதியில் உயர் அழுத்த மின்கம்பம் செல்கிறது. இன்று காலை தேவர்சோலையை சேர்ந்த சித்தியம்மா என்பவர் தன்னுடன் வேலை பார்க்கும் 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் தேயிலை தோட்டத்திற்கு சென்றார்.
அங்கு அவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சித்தியம்மா நடந்து சென்றபோது வழுக்கி விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மின்கம்பியை சித்தியம்மா தொட்டதாக தெரிகிறது.
அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் சித்தியம்மா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சத்தம் கேட்டதும் அருகே நின்றிருந்த மற்றொரு பெண் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சியான மற்ற தொழிலாளர்கள் காயம் அடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேயிலை தோட்டத்தின் மேல் செல்லும் உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக சித்தியம்மா மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.
இதற்கிடையே மின்சாரம் தாக்கி இறந்த சித்தியம்மாவின் உடலை எடுக்க மறுத்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் இறந்த சித்தியம்மாவுக்கு தேயிலை தோட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரியம் சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
- நடுரோட்டில் துள்ளி விளையாடியதை பார்த்தது புது அனுபவமாக இருந்தது என்றனர்.
கூடலூர்,
முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி வனப்பகுதியில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 2 காட்டு யானைகள் வந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பசுந்தீவனங்களை காட்டு யானைகள் தின்றது. சிறிது நேரத்தில் சாலையில் நின்றவாறு காட்டு யானைகள் விளையாடியது. இதனை சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் இருந்தவாறு கண்டு ரசித்தனர். மேலும் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, சாதாரணமாக சாலையோரம் வனவிலங்குகள் நடந்து செல்லும். ஆனால், திடீரென காட்டு யானைகள் நடுரோட்டில் துள்ளி விளையாடியதை பார்த்தது புது அனுபவமாக இருந்தது என்றனர்.
- ஆா்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவா் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.
- தொழிலாளா்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஊட்டி,
டேன்டீ தொழிலாளா்களை பாதுகாக்க வலியுறுத்தி தி.மு.க அரசுக்கு எதிராக கூடலூரில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்களுக்கு தி.மு.க அரசு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. மத்திய பா.ஜ.க அரசு இவா்களை காப்பாற்றுவதில் உறுதியாக உள்ளது.
199 ஆண்டுகளுக்கு முன் கிழக்கிந்திய கம்பெனி மூலம் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கொடிய நோய்களையும் பொருட்படுத்தாமல் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி வருவாயை ஈட்டிக் கொடுத்தது இந்த சமூகம்.
சிறிமாவோ-லால் பகதூா் சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர்கள் இந்தியாவுக்கு வந்தனர். இங்கும் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி அரசுக்கு வருவாயை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனா். இவா்களுக்குத் தீப்பெட்டி அளவில் ஒரு வீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதில் எந்த வசதியும் இல்லை.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலாளா்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அந்த வீடுகளில் உள்ள வசதிகள் கூட இங்கு தமிழக அரசால் வழங்கப்படும் வீடுகளில் இல்லை.
தற்போதுள்ள தி.மு.க அரசு 5,315 ஏக்கா் தேயிலைத் தோட்டங்களை மீண்டும் வனத்துறைக்கு ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதன் மூலம் தமிழா்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
எனவே ஆட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டு, ரூ.211 கோடி நஷ்டத்தில் இருக்கும் டேன்டீ நிறுவனத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். 1998-ம் ஆண்டிலிருந்தே இந்த நிறுவனத்தை முடக்க சதி நடந்து வருகிறது. தனியாா் எஸ்டேட்டுகள் அனைத்தும் லாபத்தில் இயங்கும்போது அரசு நிறுவனம் மட்டும் எப்படி நஷ்டத்தில் இயங்குகிறது? இதற்கு முக்கியக் காரணம் தி.மு.க அரசுதான்.
தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவா்களிடம் டேன்டீ தேயிலைத் தூளை விற்றாலே சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் இயங்கும் நிறுவனமாக இது மாறும். அதை செய்ய அரசு ஏன் தயங்குகிறது?
கூடலூா் பகுதியில் உள்ள பிரிவு-17 நிலங்களில் குடியிருக்கும் பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. 2024 மக்களவைத் தோ்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக வெற்றி பெறும். அது இங்குள்ள பிரச்னைகளைத் தீா்க்க நல்ல வாய்ப்பாகவும் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் போஜராஜ், சபிதாபோஜன், வினோத்குமார் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்
- போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும்.
- போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்து விளக்கப்பட்டது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் குஞ்சப்பனை பகுதி பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்தும், போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பன குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் குன்னூா் வெலிங்டன் தங்கராஜ் மைதானத்தில் நடைபெற்றது.
- இந்த கிராஸ் கன்டரி போட்டியில் 10 கிலோ மீட்டா் போட்டியில் 24 ஓட்டப் பந்தய வீரா்கள் கலந்து கொண்டனா்
ஊட்டி,
மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டா் சாா்பில் ஆண்டுதோறும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கான இன்டா்கிராஸ் கன்ட்ரி போட்டிகள் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் குன்னூா் வெலிங்டன் தங்கராஜ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த கிராஸ் கன்டரி போட்டியில் 10 கிலோ மீட்டா் போட்டியில் 24 ஓட்டப் பந்தய வீரா்கள் கலந்து கொண்டனா். மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டா் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். புள்ளிகளின் அடிப்படையில் ஆா்மி ரெட் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இவா்களை மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டா் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் பாராட்டினாா்.
- தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை கடந்த 2019 முதல் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
ஊட்டி,
தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை கடந்த 2019 முதல் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளா்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேருராட்சியில் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரிகள், வணிக வளாகங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் சுகாதார அலுவலர் ரஞ்சித் மற்றும் அலுவலர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.5500 அபராதம் விதிக்கபட்டது.
- கூட்டுறவுத்துறை அமைச்சர் சரி இல்லை என்று நிதி அமைச்சர் சொல்கிறார்.
- சாராய வருமானம் உயர்ந்தாலும், அரசுக்கு வருமானம் வரவில்லை என்கிறார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் டான்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகம் வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக திராவிடக் கட்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி, பதவியேற்ற பிறகு இலங்கையில் வசிக்கும் மலைவாழ் தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்தார். வடக்குப் பகுதியில் இருக்கின்ற தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்தார்.

இதையெல்லாம் செய்து கொடுத்த பிரதமர் மோடியின் கட்சியிலிருந்து நாங்கள் பேசுகிறோம். பேசுவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. இப்போதும் டான்டீ நிறுவனத்தை எங்களுக்கு வேண்டாம், இந்த 5315 ஏக்கரை மத்திய அரசே எடுத்துக் கொள்ளுங்கள், மத்திய அரசே இந்த நிறுவனத்தை நடத்துங்கள் என்று தமிழக முதல்வர் எழுத்துப்பூர்வமாக எழுதி தந்தால், டான்டீ நிறுவனத்தை மத்திய அரசு எடுத்து நடத்துவதற்கு நாங்கள் தயார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் சரி இல்லை என்று தமிழக நிதி அமைச்சர் சொல்கிறார். அவர் சரியாக வேலை பார்க்கவில்லை என்று கூறுகிறார். மேலும் சாராய வருமானம் உயர்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் அரசுக்கு வருமானம் வரவில்லை என்கிறார். அடிப்படை சுய ஒழுக்கம் இல்லாத கட்சி ரொம்ப நாள் நீடிக்காது. திமுகவின் முடிவுரை ஒவ்வொரு நாளும் எழுதப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
- கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அங்குள்ள ஒரு கடையில் சம்சுதீன் என்பவர் மீன், கோழி வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அவரது கடையில் கியாஸ் சிலிண்டர் மற்றும் கோழி சுத்தம் செய்யும் எந்திரத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கு புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சம்சுதீன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், அது பலன் அளிக்கவில்லை. பின்னர் தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் மாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் அங்கிருந்து கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். தகவல் அறிந்த தாசில்தார் காயத்ரி, பள்ளி விட்டு மாணவ-மாணவிகள் செல்லும் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்ட காரணத்தால், பாதுகாப்பு கருதி அந்த வழியாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லாத வகையிலும், கடைக்கு பின்புறம் உள்ள தாசில்தார் அலுவலக சாலையில் போக்குவரத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தும் நடவடிக்கை எடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.






