என் மலர்
நீலகிரி
- மோட்டார் சைக்கிள்களில் திரும்பி வந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.
- பொதுமக்களுக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர்.
மோட்டார்சைக்கிள்கள் ஒவ்வொன்றும் பயங்கர சத்தத்துடன் வேகமாக சாலைகளில் சென்றன. அதில் சென்ற வாலிபர்கள் 'வீலிங்' செய்தபடி பாய்ந்து சென்றனர். இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அங்கு திரண்ட அவர்கள், அதே பாதையில் மோட்டார் சைக்கிள்களில் திரும்பி வந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.
அப்போது பொதுமக்களுக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி குமார், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், ஊட்டி நகரை சேர்ந்த தினேஷ் பாலன் (வயது 25), தீபக்ராஜ் (24), ரித்தீஷ்(24) ஆகியோர் என்பதும், தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றும் இவர்கள் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு மட்டுமின்றி பிறருக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே இளைஞர்கள் யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்றனர்.
- பழங்குடியினா் ஆய்வு மையத்தில் புகைப்படக் கண்காட்சி மற்றும் தகவல் மையத்தை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் திறந்துவைத்தாா்.
- பழங்குடியினரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை என்பது பிற சமூகத்தின் வளா்ச்சியை விட குறைவாக உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், பாலடாவில் உள்ள பழங்குடியினா் ஆய்வு மையத்தில் புகைப்படக் கண்காட்சி மற்றும் தகவல் மையத்தை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் திறந்துவைத்தாா்.
பின்னா் நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது-
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுமாா் 8 லட்சம் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனா். இது மொத்த மக்கள் தொகையில் 1.10 சதவீதம் ஆகும். தமிழகததில் 36 வகையான பழங்குடியினா் வாழ்ந்து வரும் நிலையில், தோடா், குறும்பா், கோத்தா், இருளா், அடயன் மற்றும் காட்டுநாயா் ஆகிய 6 வகையான பழங்குடி இனம் அழிவின் விளிப்பில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பழங்குடியினரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை என்பது பிற சமூகத்தின் வளா்ச்சியை விட குறைவாக உள்ளது. இந்த இடைவெளியை குறைக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் 1.81 லட்சம் பழங்குடியின மாணவா்கள் கல்வி கற்கின்றனா். இவா்களின் கல்வியறிவு 54.5 சதவீதமாக உள்ளது. இதனை அதிகரிக்க தமிழகத்தில் உள்ள 120 பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகள், 8 ஏகலைவா பள்ளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக, நடப்பு ஆண்டு 4 ஆயிரம் பழங்குடியினா் மாணவா்கள் புதிதாக பள்ளிகளில் சோ்ந்துள்ளனா். இந்தப் பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.45.79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பதாக கண்டறியப்பட்ட நில உரிமை இழப்பு, வேலையின்மை, கலாசாரம் மாற்றம், சாதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல், ஊட்டச்சத்து குறைபாடு, வனங்கள் அழிப்பால் மக்கள் இடம்பெயா்த்தல் போன்ற இன்னல்களை களைய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
- 16 வயது சிறுமி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- சிறுமி கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் பிரியதர்ஷன் (25) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்தனர்.
இது நாளடைவில் காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பிரியதர்ஷன் சிறுமியிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி பாலியல் பலத்காரம் செய்தார்.
இதனால் அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமானார். இது நாளடைவில் சிறுமியின் குடும்பத்திற்கு தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி நடந்தவற்றை கூறினார்.பின்னர் இதுகுறித்து சிறுமி கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரியதர்ஷனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- புலி சோலை வனப்பகுதியில் சிறுத்தை, கரடி, காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன.
- சிறுத்தை மீது மோதிய வாகனம் யாருடையது என்பது பற்றி விசாரணை நடக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மேல்குந்தா, தாய்சோலை இடையே புலி சோலை வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் சிறுத்தை, கரடி, காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன.
குறிப்பாக சிறுத்தைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு புலிசோலை அருகே சாலையில் சிறுத்தை ஒன்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. சாலையின் நடுவே சிறுத்தை இறந்து கிடந்ததால் அந்த வழியாக சென்ற அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனசரகர் சீனிவாசன் சாலையில் இறந்து கிடந்த சிறுத்தையை மீட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.
இறந்த சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை ரோட்டை கடக்க முயன்றபோது வாகனம் மோதி இறந்துள்ளது தெரியவந்தது. சிறுத்தை மீது மோதிய வாகனம் யாருடையது என்பது பற்றி விசாரணை நடக்கிறது.
- கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
- வழக்குகளில் சாட்சிகள் விசாரணை நிறைவு பெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ெகாலக்ெகாம்பை போலீஸ் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை போலீஸ் இன்ஸ்பெக்டராக சண்முகசுந்தரம் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பணிபுரிந்த போது விபத்து, அடிதடி, வெடிமருந்து ஆகிய வழக்குகள் குன்னூர் குற்றவியல் கோர்ட்டில் விசாரணையில் இருந்து வந்தது. மேற்கண்ட வழக்குகளில் சாட்சிகள் விசாரணை நிறைவு பெற்றது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திடம் விசாரணை நடத்த கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பபட்டது. தற்போது சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சண்முகசுந்தரம் குன்னூர் குற்றவியல் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து நீதிபதி இசக்கிமகேஷ்குமார் விசாரணைக்கு ஆஜராத போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். கடந்த 1-ந் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாத வெலிங்டன் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தங்கம் என்பவருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு நடைபெற்றது.
- அருவங்காடு நூலகத்தில் நடைபெற்றது.
குன்னூர்
55-வது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி அருவங்காடு நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக ஆய்வாளர் வசந்தமல்லிகா தலைமை தாங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ -மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் உறுப்பினர் புரவலர் சேர்க்கை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையின் பொது மேலாளர் பங்கஜ் கோயல் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
- கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது.
- கடைகளுக்கு முன் குளோரின் பவுடர் போடப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகள் மற்றும் பொது இடங்களில் அவ்வப்போது முழு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் முழு சுகாதாரப் பணிகள் நடைபெற்றது. குப்பைகள், செடிகள் அகற்றப்பட்டு, கடைகளுக்கு முன் குளோரின் பவுடர் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கழிவு நீர் கால்வாய் அடைப்புகள் அகற்றப்பட்டு, கால்வாய்கள் மற்றும் கடைகளின் முன்புறம் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது. இந்தப் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
- கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன.
- யானையின் நடமாட்டத்தை கண்கா–ணித்து வருகின்றனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் தேவாலா வாழவயல் பகுதியில் பாப்பாத்தி என்ற மூதாட்டி யானை தாக்கி இறந்தார். இதையடுத்து பொதுமக்கள், யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் அவர்களி டம் மயக்க ஊசி செலு த்தி பிடிப்பதற்கான நடவடி க்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும் தலைமை வன உயிரின பாதுகாவலர் வெங்கடேஷ் தலைமையில் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் வன பணியாளர்கள் உள்ளி ட்ட 60 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வனத்திற்குள் சென்று, யானையின் நடமாட்டத்தை கண்கா–ணித்து வருகின்றனர்.
இதற்கிடையே தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரியும் காட்டு யானையை பிடி ப்பது குறித்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ் தலைமையில் நாடுகாணி பகுதியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், கூடலூா், பந்தலூா் மற்றும் நாடுகாணி வனத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். இதில் யானையை பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.
யானையின் நட–மாட்டம் குறித்தும், அதனை பாதுகாப்பாக பிடிப்பது குறித்தும் ஆலோசனை செய்தனர். யானையை பிடிப்பதற்காக முதுமலையில் இருந்து விஜய், வசீம் என்ற 2 கும்கி யானைகள் வரவழை க்கப்பட்டுள்ளது. கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் யானை–யை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பந்தப்ப ட்ட யானை தேவாலா நீர்மட்டம் பகுதியில் தமிழக, கேரளா எல்லை வனப்பகுதியில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இரவு நேரத்தில் இந்த யானை ஊருக்குள் வரலாம் என்பதால் யானையை இரவுநேரத்திலும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்து–றையினர் கூறியதாவது:-
யானை கடந்த 2 நாட்களாக கூடலூர் பகதியில் அடிக்கடி செல்லும் இடங்களில் தென்படவில்லை. யானை யை கண்காணித்த போது கேரள எல்லைக்கு அருகே ஒரு கூட்டத்துடன் நிற்பது கண்டறியப்பட்டது. இந்த யானையை கண்கா ணிப்பதற்காக 4 குழுக்கள் அமைக்க ப்பட்டுள்ளது.இந்த குழுக்கள் யானையை கண்டறியும் பட்சத்தில் 5-வது குழுவான டிராக்கிங் குழு அந்த இடத்திற்கு சென்று யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொ–ள்ளும். 4 குழுக்களும் விழிப்பு–ணர்வுடன் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். யானையை பிடிக்க கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட வனத்துறை சிறப்பு நிபுணர்கள் வரவ–ழைக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டினார்.
- மன மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது.
ஊட்டி,
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் சீர்வரிசை பொருட்கள் பெற்ற நீலகிரி மாவட்ட கர்ப்பிணி பெண்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கூடலுாரில் 300 கர்ப்பிணிகளுக்கும், ஊட்டியில் 300 கர்ப்பிணிகளுக்கும், குன்னூரில் 200 கர்ப்பிணிகளுக்கும், கோத்தகிரியில் 200 கர்ப்பிணிகளுக்கும் என மொத்தம் 1,000 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்வில் சாதி, மொழி, இனம் என எந்த வேறுபாடுமின்றி அனைத்து கர்ப்பிணிகளையும் ஓரிடத்திற்கு அழைத்து மஞ்சள், குங்குமம், வளையல், பூ, மாலை போன்ற மங்கல பொருட்களை அணிவித்து சீர்வரிசை தட்டு வழங்கி ஐந்து வகையான உணவு வகைகள், இனிப்பு, பழம் பரிமாறி கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அவர்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை எதிர் கொள்ளவும் பிறந்த குழந்தைகள் முதல் 1,000 நாட்களில் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் கர்ப்ப கால பராமரிப்பு குறித்து அறிந்து கொள்ளவும் சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பயன் அடைந்த கர்ப்பிணி பெண் சீனா ஜூனைத் கூறியதாவது:-
எனது பெயர் சீனா ஜூனைத். எனக்கு 22 வயதாகிறது. நான் நடுகூடலூர் அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு இது முதல் கர்ப்பம் ஆகும். நான் கர்ப்பமாக உள்ளதாக கண்டறிந்ததில் இருந்து அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து எடை, உயரம் எடுத்தும், சத்துமாவு வாங்கியும் உண்டு வருகிறேன்.
மேலும் அங்கன்வாடி மையத்தில் நடத்தப்படும் சமுதாயம் சார்ந்த நிகழ்ச்சிகளில், கர்ப்பகால பராமரிப்பு குறித்த நிகழ்ச்சிகளிலும், ஊட்டச்சத்து மற்றும் சுத்தம் சுகாதாரம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் நான் தவறாமல் கலந்து கொண்டேன்.
அந்நிகழ்ச்சிகள் மூலமாக கர்ப்ப கால பராமரிப்பு, தன்சுத்தம் பேணுதல், கர்ப்பத்திற்கு தயாராகுதல், ஊட்டச்சத்து உணவுகளின் முக்கியத்துவம் போன்றவற்றை அறிந்து கொண்டு அவற்றை பின்பற்றியும் வருகிறேன்.
மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி பணியாளர் என்னை அழைத்து சென்றார். அங்கு கர்ப்பிணிகளை ஒரே இடத்தில் பார்க்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.
மேலும், இந்நிகழ்வில் அவரவர்கள் பின்பற்றும் உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளை எங்களுக்குள் பரிமாறிக்கொண்டோம். மேலும் வனத்துறை அமைச்சர் தலைமையில் எங்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு ஒரு புது அனுபவமாகவும், மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது. இந்த வாய்ப்பினை வழங்கிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்ப்பிணி பெண் முசீநா கூறுகையில்:-
எனது பெயர் முசீநா. நான் மேல் கூடலூர் பகுதியில் வசித்து வருகிறேன். நான் 3 மாத கர்ப்பிணியாக இருந்த போது நடு கூடலூர் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்ய அங்கன்வாடி பணியாளர் அறிவுறுத்தியதன் பேரில் பதிவு செய்தேன் அன்று முதல் அவர் என்னை தொடர்ந்து கவனித்து வருகிறார்.
எனக்கு மட்டுமல்லாமல் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒரு கர்ப்பிணியை எவ்வாறு கவனிக்க வேண்டும் என எடுத்து கூறியதன் மூலம் எனது வீட்டிலும் நல்லசூழலை ஏற்படுத்தி தந்துள்ளார். இதற்காக நடவடிக்மகை மேற்கொண்ட முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு நிலையை களையும் வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு என்ற திட்டம் தமிழக அரசிற்கு பெருமை சேர்க்கும் திட்டமாக அமைந்துள்ளது என கர்ப்பிணிகள் தெரிவித்தனர்.
- அப்பர் பவானி, அவலாஞ்சி, தலைகுந்தா, கிளைன்மார்கன், பைக்காரா, எச்.பி.எப், சூட்டிங்மட்டம் மற்றும் நடுவட்டம் போன்ற பகுதிகளில் உறைபனியின் தாக்கம் காணப்பட்டது.
- பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் தேயிலை செடிகள் கருகும் அபாயம் நீடிக்கிறது.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் நவம்பா் மாதத்தில் நீா்ப்பனி தாக்கம் அதிகமாக காணப்படும்.
டிசம்பா் மாதம் முதல் பிப்ரவரி வரை கடும் உறைபனி நிலவுவது வழக்கம்.
இந்த சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள புல் மைதானங்கள், காய்கறி செடிகள் மற்றும் தேயிலை செடிகளில் உறைபனி கொட்டி கிடக்கும். தேயிலை, மலைகாய்கறிகள் விவசாயமும் பாதிக்கும்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கடந்த 3 நாட்களாக நீா்ப்பனி பொழிவால் கடுங்குளிா் நிலவி வந்தது.
ஊட்டியில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவில், மலைப்பகுதி முழுவதும் கடும் குளிா் வாட்டியது. இதுமட்டுமின்றி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வாட்டி வதைக்கும் வகையில் ஊட்டியில் உறைபனி தாக்கம் இருந்தது.
அப்பர் பவானி, அவலாஞ்சி, தலைகுந்தா, கிளைன்மார்கன், பைக்காரா, எச்.பி.எப், சூட்டிங்மட்டம் மற்றும் நடுவட்டம் போன்ற பகுதிகளில் உறைபனியின் தாக்கம் காணப்பட்டது.
இதனால் புற்கள், கார்கள், செடிகள் ஆகியவற்றின் மீது வெள்ளை கம்பளம் விரித்தாற் போன்று உறைபனி படர்ந்து காணப்பட்டது.
குறிப்பாக, ஊட்டி படகு இல்லம், தலைக்குந்தா, கோல்ப் கிளப் உள்ளிட்ட இடங்களில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை 8 மணி வரை குளிரின் தாக்கம் காணப்பட்டது. இதனால் காலையில் பணிக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் விறகுகளை எரித்து குளிர் காய்ந்தனர்.
பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் தேயிலை செடிகள் கருகும் அபாயம் நீடிக்கிறது. உறைபனியில் இருந்து காக்க விவசாயிகள் தென்னை ஓலைகள், தாவை எனப்படும் செடிகள் மற்றும் வைக்கோல்களை போட்டு விவசாயிகள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று ஊட்டியில் அதிகபட்சமாக 19.5 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 6.2 டிகிரி செல்சியசும் பதிவாகி இருந்தது. இந்த வெப்ப நிலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பதிவானது.
- கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை.
- அரசு சம்பளம் வழங்க உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் நேற்று மாலை கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறும்போது, அரசு பள்ளிக்கூடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 சம்பளமாக வழங்கப்படுகிறது. கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. அரசு சம்பளம் வழங்க உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றனர்.
- பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி செல்ல முயற்சி செய்தார்.
- கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
நீலகிரி
வெலிங்டன், குன்னூரில் மதுபோதையில் பெண்ணை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பெண்ணுக்கு பாலியல் தொல்லை நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன. சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர் மதுகுடித்து விட்டு போதையில் யார் வீட்டுக்குள்ளாவது நுழைந்து அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு மது குடித்துவிட்டு சரவணன் வெலிங்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது, அங்கிருந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் அந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி செல்ல முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் அந்த பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து சரவணனை மடக்கி பிடித்தனர். கட்டிட தொழிலாளி கைது இதுகுறித்த தகவலின்பேரில் வெலிங்டன் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணன் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததும், தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சரவணன் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.






