என் மலர்
நீலகிரி
- நீலகிரி மாவட்டத்தில் சைபா் பாரன்சிக்ஸ் மற்றும் அனாலிடிக்ஸ் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- தங்கும் விடுதிகளில் அடையாள அட்டைகள் இல்லாமல் யாரையும் தங்க வைக்கக்கூடாது.
ஊட்டி,
நீலகிரியில் உள்ள பழைய மாவட்ட காவல் அலுவலகக் கட்டிடம், அப்துல் கலாம் திறன் மேம்பாட்டு மையம் என்ற பெயரில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா் கலந்து கொண்டு கட்டிடத்தைத் திறந்து வைத்தாா்.
பின்னா் அவா் நிருபா்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் சைபா் பாரன்சிக்ஸ் மற்றும் அனாலிடிக்ஸ் மையம் (இணையதள குற்றங்கள் தொடா்பான தடயவியல் மற்றும் பகுப்பாய்வு) தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த மாவட்டத்தில் சைபா் கிரைம் போலீஸ் பிரிவு உள்ளது. சைபா் போலீஸ் நிலையத்தில் தேவையான சில மென்பொருள்கள் இதுவரை இல்லாமல் இருந்தன.
ஆனால் தற்போது சென்டிமென்டல் அனாலிசிஸ் (உணா்வுபூா்வமான விஷயங்கள் குறித்த பகுப்பாய்வு) எனப்படும் புதிய மென்பொருள் மேற்கு மண்ட லத்தில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூக வலைதளங்களில் யாராவது வெளியிடும் கருத்துகள் சா்ச்சை, பதற்றம் ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அதை எளிதில் கண்டறியலாம்.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு பிரச்னைகளும் ஏதேனும் ஒரு வகையில் சைபா் குற்றச் சம்பவங்கள் தொடா்பாகத்தான் உள்ளன. எனவே அது போன்ற விஷயங்கள் குறித்து விசாரிக்கத் தேவையான தகுதிகள் நமக்கு வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் துளிா் என்ற தற்கொலை தடுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் பணியாற்றுபவா்களும் இங்கு கவுன்சலிங் வருபவா்களுக்கும் சிறந்த நோ்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் அடையாள அட்டைகள் இல்லாமல் யாரையும் தங்க வைக்கக்கூடாது. மேலும் தங்கும் விடுதிகளுக்கு வருபவா்கள் தரும் கைப்பேசி எண் பயன்பாட்டில் உள்ளதா என்று சோதனை செய்யவும் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நவீன ஆயுதங்கள் கொண்ட ஒமேகா-3 என்ற புதுப்படை தொடங்கப்பட்டு மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இதில் மேற்கு மண்டல டி.ஐ.ஜி. முத்துசாமி, நீலகிரி காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- உலிக்கல் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அனைத்து வாா்டுகளிலும் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து தர வேண்டும்.
ஊட்டி,
குன்னூா் உலிக்கல் பேரூராட்சியின் மாதாந்திரக் கூட்டம் தலைவா் ராதா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் ரமேஷ், செயல் அலுவலா் நந்தகுமாா் மற்றும் மன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், டேன்டீ தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுப்பெற்ற தொழிலாளா்களுக்கு அரசு வீடு கட்டித் தருவது போல தனியாா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கும் வீடு கட்டித்தர வேண்டும் என்ற அனைத்து கவுன்சிலா்களால் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீா்மானத்தை தமிழக முதல்வருக்கு அனுப்ப கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும் அனைத்து வாா்டுகளிலும் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து தர மன்றக் கூட்டத்தில் கவுன்சிலா்கள் வலியுறுத்திப் பேசினா்.
- 8 வயது சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.
- சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
ஊட்டி,
ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் அஜித்குமார்(21) என்ற வாலிபர், சிறுமியிடம் சென்று நைசாக பேச்சு கொடுத்தார்.
சிறுமியிடம், சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அருகே உள்ள கடைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அங்கு வீட்டில் யாரும் இல்லாததால் சிறுமிக்கு, அஜித்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியில் கூறினால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டலும் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சியான சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து தனது வீட்டிற்கு அழுது கொண்டே சென்றார். சிறுமியிடம் அவர் தாயார் விசாரித்தார்.
அப்போது சிறுமி தனக்கு நடந்தசம்பவங்களை பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர்கள் ஊட்டி புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அஜித்குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- இரவில் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வண்டிசோலை, கட்டபெட்டு, பர்லியார் உள்பட பல்வேறு இடங்களிலும் திடீரென மழை பெய்தது.
- கடும் குளிரால் காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் உறைபனி மற்றும் குளிர் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை வழக்கம் போல குளிர் நிலவியது. மதியத்திற்கு பிறகு வானில் மேக கூட்டங்கள் திரண்டு மழை பெய்வது போல் காணப்பட்டது. மாலையில் லேசான மழை பெய்தது.
இரவில் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வண்டிசோலை, கட்டபெட்டு, பர்லியார் உள்பட பல்வேறு இடங்களிலும் திடீரென மழை பெய்தது.
லேசான மழையாக தொடங்கி பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் நிலவி வரும் கடும் குளிரால் காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
கடும் குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்வதையும் காணமுடிகிறது. நீலகிரியில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மக்களுக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டு வருகிறது. அதிகாலையில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் தங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர்.
- 4 மாதங்களுக்கு பிறகு போலீசில் பிடிபட்டார்
- ஜூலை மாதம் 26-ந் தேதி மர்ம ஆசாமி குறுந்தகவல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டராக அம்ரித் பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி மர்ம ஆசாமி குறுந்தகவல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்திடம், கலெக்டர் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை கொண்டு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.
மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிக்கினார் இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி, தஞ்சை பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
உடனே அங்கு சென்ற ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி குமார் தலைமையிலான போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், டெல்லியை சேர்ந்த நிதின் சர்மா (வயது 40) என்பதும், செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் என்பதும், அதுபோன்ற திருட்டு செல்போன் மூலம் பலருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்ததோடு, ஊட்டி கலெக்டருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதும் தெரியவந்தது
. எனினும் அவர் தொடர்ந்து தனது பெயரை மாற்றி, மாற்றி கூறி வருகிறார். இதனால் அவருக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு சிக்கியது குறிப்பிடத்தக்கது.
- கோத்தகிரி முதல் குஞ்சப்பனை வரையிலான மலைப்பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டது
- சாலை விரிவாக்க பணிகள் பெரும்பாலான இடங்களில் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது.
கோத்தகிரி,
கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் மழையால் கோத்தகிரி முதல் குஞ்சப்பனை வரையிலான மலைப்பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டது. இதனால் சாலை குறுகலாகி போக்குவரத்து ஆங்காங்கே பாதிப்படைந்தது. இதனை சரி செய்யும் விதமாக மண்சரிவுகள் ஏற்பட்ட மற்றும் குறுகலாக இருந்த சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் பெரும்பாலான இடங்களில் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. மீதமுள்ள 10 சதவீத பணிகள் நடைபெறாமல் இருப்பதால் அந்த பகுதிகளில் வாகனங்கள் செல்ல தொய்வு ஏற்படுகிறது. மேலும் இந்த சாலைகளில் புதிதாக போடப்பட்டுள்ள வேகத்தடைக்கான பணிகளும் நடைபெறாமல் இருப்பதால் அந்த பகுதிகளிலும் போக்குவரத்து பாதிப்படைகிறது. எனவே இந்த இந்த சாலைகளில் நடைபெற்றிருக்கும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினர்.
- பேரூராட்சி பகுதியில் அனைத்து வரிகளும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மன்ற தலைவர் வள்ளி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பிரதீப் குமார், துணைத்தலைவர் யூனைஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினர்.
அதன் விவரம் வருமாறு:-
13-வது வார்டு கவுன்சிலர் கிரிஜா: எனது வார்டில் நடைபெறும் பணிகள் தரம் இருப்பதி ல்லை. இது தொடர்பாக ஒப்பந்த–தாரரிடம் பலமுறை முறையிட்டும் அலட்சியமாக பதில் அளிக்கிறார். இது தொடர்பாக பொது–மக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வருகிறது.எனவே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
2-வது வார்டு கவுன்சிலர் மாதேவ்: எனது வார்டில் எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் பேரூராட்சி பகுதியில் அனைத்து வரிகளும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்த விவரங்களை கவுன்சிலர்களுக்கு தர வேண்டும் என்றுக்கோரி துணைத்தலைவர் யூனைஷ் பாபு, கவுன்சிலர்கள் மாதேவ், கிரிஜா, ஹனிபா, நாசர், ஜோஸ், ரம்ஷினா, சாய்னா, முகேஷ், சாய் பிரியா உள்பட 12 பேர் மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் அலுவலகம் முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பினர்.
சில கவுன்சிலர்கள் அலுவலகத்தின் வெளியே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
- ஜீப்பில் ரகசிய அறைகள் அமைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
- கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்துக்கு காரில் கஞ்சா கடத்துவதாக காளிகாவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கூடலூர்-மலப்புரம் சாலையில் செருதோடு பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு ஜீப்பை போலீசார் நிறுத்தினர்.போலீசார் மறித்ததை பார்த்ததும், அதில் இருந்த சிலர் ஜீப்பில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். தொடர்ந்து அவர்களை போலீசார் துரத்தி சென்றனர்.அதில் ஒருவர் மட்டுமே போலீசிடம் சிக்கினார். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.
பின்னர் ஜீப்பை போலீசார் சோதனை செய்தனர். அதில், ஜீப்பின் உள்ளே ரகசிய அறைகள் அமைத்து இருப்பதை கண்டனர். மேலும் இருக்கைகள் அடியிலும் அறைகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அறைகளை திறந்து பார்த்த போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த ரகசிய அறைகளில் 67 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் பிடிபட்ட நபரை காளிகாவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர் கூடலூர் மண்வயலை சேர்ந்த ஜஸ்டின்(வயது 28) என்பதும், அவர் ஆந்திராவில் இருந்து கர்நாடகா, கூடலூர் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அதிகமாக 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது கல்லட்டி மலைப்பாதையாகும்.
- வனவிலங்குகள் பாதுகாப்புக்காக அங்கு வேகத்த டைகள் அமைக்க வன ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை பாதைகள் அதிக கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட தாகும்.
இதில் அதிகமாக 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது கல்லட்டி மலைப்பாதை யாகும். மலைப்பாதைகளில் வாகனங்களில் செல்வோர் கவனமாக செல்ல அறிவு றுத்தப்பட்டு வருகிறது.
முதுமலையில் இருந்து கக்கனல்லா வரை சாலை செல்கிறது. இந்த சாலையின் இரு புறமும் வனப்பகுதி யாகும். இங்கு காட்டு யானை, மான், கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்குகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக இந்த சாலையை தான் கடந்து வருகின்றன. அவ்வாறு கடக்கும் போது சில வனவிலங்குகள் வாக னங்களில் அடிபடுகின்றன.
இதனால் வனவிலங்கு களின் பாதுகாப்புக்காக அப்பகு தியில் வேகத்த டைகள் அமைக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து முதுமலை-கக்கனல்லா சாலையில் 18 வேகத்தடைகள் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் தற்போது 8 இடங்களில் வேகத்தடைகள் அமைக்க ப்பட்டுள்ளது.
இதனால் இந்த சாலையில் வாகனங்கள் மிதமான வேகத்துடன் இயக்கப்படும். வனவிலங்குகளும் பாதுகாக்கப்படும் என வன ஆர்வலர்களும் இயற்கை ஆர்வலர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
- தொழிற்சாலையில் உள்ள மருந்து தயாரிக்கும் பகுதி அருகே செட் அமைப்பதற்காக குழாய்கள் எடுத்து செல்லப்பட்டு ஊழியர்கள் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றிய மனோஜ், இமான்ஷூ ஆகிய 2 பேர் பலத்தகாயம் அடைந்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காட்டில் ராணுவ வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு ராணுவத்திற்கு தேவையான வெடிமருந்துகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் இங்கிருந்து நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.
இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அவர்கள் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த தொழிற்சாலையில் உள்ள மருந்து தயாரிக்கும் பகுதி அருகே செட் அமைப்பதற்காக குழாய்கள் எடுத்து செல்லப்பட்டு ஊழியர்கள் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றிய மனோஜ், இமான்ஷூ ஆகிய 2 பேர் பலத்தகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த சக ஊழியர்கள் ஓடி வந்து, காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கனவே கடந்த வாரம் இந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு 8 பேர் காயம் அடைந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- விளையாட்டு நிகழ்ச்சி, முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல் போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 30 வார்டுகளில் இருந்து இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டர்.
ஊட்டி,
தி.மு.க இளைஞர் அணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி_ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு குன்னூர் நகர அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மற்றும் நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை துனை செயலாளர் அன்வர்கான், தலைமை பேச்சாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 30 வார்டுகளில் இருந்து இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டர். இந்நிகழ்ச்சியில் அனைத்து வாடுகளிலும் கொடி ஏற்றுதல், ரத்ததான முகாம், விளையாட்டு நிகழ்ச்சி, முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல் போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சையது மன்சூர், சாதிக் பாட்சா, பிரவீன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் செலின் ராஜா நன்றியுரை கூறினார்.
- சச்சின் போஸ்லே துக்காராம், சென்னை உதவி வன பாதுகாவலர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
- கவுதம், நீலகிரி மாவட்ட வன அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட வன அதிகாரியாக பணியாற்றி வந்த சச்சின் போஸ்லே துக்காராம், சென்னை உதவி வன பாதுகாவலர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நீலகிரியில் பணியில் சேர்ந்திருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்ட வன அதிகாரியாக பணியாற்றி வந்த கவுதம், நீலகிரி மாவட்ட வன அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவரது சொந்த ஊர், கரூர் மாவட்டமாகும். இந்த பணியிட மாறுதல் உத்தரவு கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கவுதம், நீலகிரி மாவட்ட வன அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






