என் மலர்
நீலகிரி
- வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்.
- கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சேரம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் சேரம்பாடி அடுத்த செப்பந்தோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படி வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் எருமாடு பஜார் பகுதியை சேர்ந்த முகமது நிசார் (வயது 32) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் சேரம்பாடி எலியாஸ் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த முருகேசன் (35), எருமாடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மண்ணாத்தி வயல் பகுதியை சேர்ந்த பிரேம நாதன் (32) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
- போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
- போதை பழக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார் கூட்டடா கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கு போதை பொருள் மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்தும் போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பன குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
- வெளி மாநில பயணிகளும் விரைவாக ஊருக்குச் செல்ல வசதியாக இருக்கும்.
ஊட்டி,
கூடலூா் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணக்கோரி கோட்டாட்சியர் முகமது குதுரத்துல்லாவிடம், கவுன்சிலர்கள் மனு அளித்தனா். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனம்கூட செல்லமுடியாத நிலை உள்ளது. தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியானதால் இந்த நகரில் பயணிகள் போக்குவரத்து உள்பட தென்மாநிலங்களுக்குச் செல்லும் சரக்கு போக்குவரத்து அனைத்தும் சாலையில் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே நகரில் வாகன நெரிசலைக் குறைக்க நடுகூடலூா் பிள்ளையாா் கோவில் தெருவிலிருந்து மாக்கமூலா, புதிய பஸ் நிலையம் பகுதியை இணைக்கும் இணைப்பு சாலையை மேம்படுத்தி திறந்துவிட வேண்டும். இதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம். வெளி மாநில பயணிகளும் விரைவாக ஊருக்குச் செல்ல வசதியாக இருக்கும்.
மேலும், கூடலூா் நகராட்சி அலுவலகம் முதல் புதிய பஸ் நிலையம் வரையிலும், கள்ளிக்கோட்டை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.இதுவும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே, கூடலூா் நகரில் வாகன நிறுத்துமிடங்களைத் தோ்வு செய்து வழங்கவேண்டும். இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் நலன் கருதி கூடலூா் நகரில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பச்சை மற்றும் நீல நிற கூடைகள் வழங்கினார்.
- தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சி காந்தி மைதானத்தில், கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ், ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில், கோத்தகிரி, ஜெகதளா, நடுவட்டம் பேரூராட்சிகளுக்கு குப்பைகளை அகற்ற பேட்டரி மூலம் இயங்கும் 21 ஆட்டோ வாகனங்களை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், இயற்கையை பேணி காத்திடவும், மாசற்ற நிலையை ஏற்படுத்திட கோத்தகிரி பேரூராட்சிக்கு 9 பேட்டரி வாகனங்களும், ஜெகதளா பேரூராட்சிக்கு 6 பேட்டரி வாகனங்களும், நடுவட்டம் பேரூராட்சிக்கு 6 பேட்டரி வாகனங்களும் என மொத்தம் குப்பைகளை அகற்றும் 21 பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோ வாகனம் ரூ.31.50 லட்சம் மதிப்பில் பேரூராட்சிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை சரியான முறையில் அகற்றுவதற்காகவும், தூய்மையாக்கவும் இந்த பேட்டரி ஆட்டோ வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபடாது. மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. இந்த ஆட்டோ அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாகனத்தின் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு ஆர்கானிக் உரமாக வழங்கப்படும். எனவே அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனி தனியாக பிரித்து வழங்கி பேரூராட்சிப்பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, அமைச்சர் அவர்கள் காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு அரங்கத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்.சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கியும் கவுரவித்தார்.
கோத்தகிரி, ஜெகதளா, நடுவட்டம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கிய 21 வார்டில் உள்ள பொதுமக்களுக்கு பரிசுக ளும், பேரூராட்சிக்குட்பட்ட 22 தூய்மை பணியா ளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும், 5 தயர்களுக்கு உரங்களையும், வணிக வியாபாரிகளுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க, பச்சை மற்றும் நீல நிற கூடைகள் வழங்கினார்.
இதில், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூசணகுமார், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) இப்ராஹிம்ஷா, கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, பேரூராட்சி தலைவர்கள் ஜெயக்குமாரி (கோத்தகிரி), யங்களும் (ஜெகதளா), கலியமூர்த்தி (நடுவட்டம்), பேரூராட்சி செயல் அலுவலர்கள் மணிகண்டன் (கோத்தகிரி), சதாசிவம் (ஜெகதளா), பிரதீப்குமார் (நடுவட்டம்) கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், ஜெய்சங்கர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது.
- சுற்றுலா தலங்களில் முககவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் வழங்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சுற்றுலா தலங்களில் முககவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் வழங்கவும், கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கவும், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் நேற்று காலை வரை விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது.
- அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.4,100 வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் நேற்று காலை வரை விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் வீட்டின் சுவற்றில் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக, கோத்தகிரி அருகே கெங்கரை முத்தமிழ் நகரை சேர்ந்த பாக்யம் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தாசில்தார் உத்தரவின் பேரில், வீடு இடிந்து பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.4,100 வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
- வனச்சரகர் அலுவலகத்தையொட்டி வன ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது.
- லாரி மூலம் கூடலூரில் உள்ள மரம் அறுக்கும் ஆலைக்கு கடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
ஊட்டி,
பந்தலூர் அருகே பிதிர்காடு வனச்சரகர் அலுவலகத்தையொட்டி வன ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு மரத்துண்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனச்சரகர் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராவை ஆப் செய்து விட்டு, வளாகத்திற்குள் லாரி வந்து உள்ளதாகவும், அங்குள்ள மரத்துண்டுகள் லாரி மூலம் கூடலூரில் உள்ள மரம் அறுக்கும் ஆலைக்கு கடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. அதன் பேரில் உதவி வன பாதுகாவலர் கருப்புசாமி வனச்சரக அலுவலக வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வனச்சரகர் அய்யனார் மற்றும் வனத்துறையினர் கூடலூர் மரம் அறுக்கும் ஆலையில் இருந்து கடத்தல் மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில வாரங்களாக முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறியது.
- சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
கூடலூர் பகுதியில் காட்டு யானைகளால் பொதுமக்கள், விவசாயிகள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறி தொரப்பள்ளி, குனில் வயல், புத்தூர் வயல் உள்ளிட்ட சுற்று வட்டார விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்று அதிகாலை 3 மணிக்கு குனில் வயல் பகுதியில் காட்டு யானை நுழைந்தது. பின்னர் அப்பகுதியில் பயிரிட்டு இருந்த மரவள்ளிக் கிழங்கு செடிகளை மிதித்து நாசம் செய்தது. தொடர்ந்து சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த அப்துல் முத்தலிப் என்பவரது கார் கதவு மற்றும் கண்ணாடியை உடைத்தது. இதை அறிந்த பொதுமக்கள், விவசாயிகள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். கேரட்டுகளை தின்றது இதனால் அங்கிருந்து முக்கிய சாலை வழியாக சென்ற காட்டு யானை தொரப்பள்ளி பஜாருக்குள் சென்றது. அப்போது ஊட்டியில் இருந்து கர்நாடகா செல்வதற்காக கேரட் மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு லாரியை யானை மறித்தது. தொடர்ந்து லாரியில் இருந்த மூட்டைகளை சேதப்படுத்தி கேரட்டுகளை தின்றது. இதில் கேரட்டுகள் நாசமானது. பின்னர் டிரைவர் லாரியை வேகமாக ஓட்டி சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் வனத்துறையினர் விரைந்து வந்து சேதமடைந்த பயிர்கள், காரை பார்வையிட்டனர். அப்போது காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும் சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.
- கடும் குளிரின் காரணமாக தேயிலை மற்றும் காய்கறி தோட்ட பணிக்கு செல்பவா்கள் அவதிக்குள்ளாகினா்.
- பெரும்பாலான தோட்டங்களில் தொழிலாளா்கள் வேலைக்கு செல்லாததால் வெறிச்சோடிக் காணப்பட்டன.
அரவேணு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடும் உறைபனியும், குளிரும் நிலவி வந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது. இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது பனிமூட்டமும், குளிர்ந்த காலநிலையும் நிலவுகிறது.
ஊட்டி, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே கடும் பனி மூட்டம் நிலவுகிறது.
பனிமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்வதால் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகாலையில் தொடங்கும் கடும் பனிமூட்டமானது காலை 11 மணி வரை நிலவுகிறது. இதன் காரணமாக காலை நேரமே இரவு போன்றே காட்சியளிக்கிறது.
இன்று காலை நேரத்திலேயே கடும் மேகமூட்டம் ஏற்பட்டு சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் மேகம் சூழ்ந்து சாலையே தெரியாத அளவுக்கு காணப்பட்டது.
கடும் பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்களும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கிறார்கள்.
கடும் குளிரின் காரணமாக தேயிலை மற்றும் காய்கறி தோட்ட பணிக்கு செல்பவா்கள் அவதிக்குள்ளாகினா். பெரும்பாலான தோட்டங்களில் தொழிலாளா்கள் வேலைக்கு செல்லாததால் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தொடர்ந்து மேகமூட்டம் சூழ்ந்த காலநிலை நிலவி வருவதால் கடும் குளிர் நிலவி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
- கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சிறப்பு புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
- ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.சி.ஐடி சிறப்பு புலனாய்வுக்குழு முன் சி.பி.ஐ. எஸ்.பி. முரளி ரம்பா விசாரணைக்காக ஆஜராவார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இதில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதுடன், பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டன.
இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மறு விசாரணை நடத்தப்பட்டது. தனிப்படையினர் சசிகலா உள்பட இதுவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர்.
இதையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் 1,500 பக்கம் கொண்ட விசாரணை ஆவணங்களை ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதேபோல் மற்றொரு நகல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சிறப்பு புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.சி.ஐடி சிறப்பு புலனாய்வுக்குழு முன் அவர் விசாரணைக்காக ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017-ல் கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது நீலகிரி மாவட்ட எஸ்.பியாக இருந்தவர் முரளி ரம்பா. தற்போது அவர், சி.பி.ஐ-யில் பணிபுரிவதால் அவருக்கான சம்மனை சி.பி.ஐ தலைமைச் செயலகத்துக்கு சிறப்பு புலனாய்வுத்துறை அனுப்பியுள்ளது.
- ஊட்டிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
- ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையில் பொழுதை கழிப்பதற்காக வெளிமாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஊட்டியில் ஓட்டல்கள், விடுதிகள் நிரம்பி வழிகிறது.
ஊட்டிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அவர்கள் அங்கிருந்த மலர்களையும், அலங்கார செடிகளையும் போட்டோ எடுத்ததுடன், அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
பெரிய புல்வெளி மைதானத்தில் அமர்ந்து தங்கள் குடும்பத்தினருடன் விளையாடி மகிழ்ந்து பொழுதை கழித்தனர்.
இதேபோல் ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். தொட்டபெட்ட மலைசிகரத்தில் தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம், கேத்திபள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, அடர்ந்த வனப்பகுதிகள் மாநில எல்லைகளை கண்டு ரசித்தனர்.
ஊட்டி தேயிலை பூங்கா, ரோஜா பூங்கா, பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லாம், நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.
கோத்தகிரி அடுத்த கேத்தரின் நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அங்கு இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து, நீர்வீழ்ச்சியின் அழகை செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
- உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் நகர்புறங்களை நோக்கி வருகின்றன.
- கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகளாக காணப்பட்டு வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அவ்வப்போது தொடர்ந்து வனங்களை விட்டு வெளியே நகர்புறங்களை நோக்கி வருகின்றன.
நேற்று இரவு கோத்தகிரி காமராஜர் சதுக்க பகுதியில் ஒற்றை கரடி சுற்றியது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் அச்சம் அடைந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகப்படியாக கரடிகள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். எனவே கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.






