என் மலர்
நீலகிரி
- நீலகிரி மலை ரெயிலை லாபகரமாக இயக்கும் நோக்கத்துடன் தனி நபா்கள் ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்ய தெற்கு ரெயில்வே அனுமதி அளித்து வருகிறது.
- வெளிநாடுகளை சோ்ந்த சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணிப்பதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூருக்கு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த மலை ரெயில் அடர்ந்த வனத்திற்கு நடுவே செல்வதாலும், அப்படி செல்லும்போது இயற்கை காட்சிகள் மற்றும் வனவிலங்குகளை பார்க்க முடியும்.
இதன் காரணமாக இந்த ரெயிலில் பயணிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இதனால் ஊட்டி மலை ரெயிலில் எப்போது கூட்டம் காணப்படும்.
சில நேரங்களில் நீலகிரி மலை ரெயிலை லாபகரமாக இயக்கும் நோக்கத்துடன் தனி நபா்கள் ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்யவும் தெற்கு ரெயில்வே அனுமதி அளித்து வருகிறது.
இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவ்வப்போது மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணிப்பதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். குறிப்பாக இங்கிலாந்து, ரஷியா, அா்ஜென்டினா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளை சோ்ந்த சுற்றுலா பயணிகள் கடந்த காலங்களில் மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இங்கிலாந்தை சோ்ந்த 16 சுற்றுலா பயணிகள் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 675 வாடகை செலுத்தி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரெயிலில் பயணம் மேற்கொண்டனா். அவர்கள் வனத்தில் உள்ள இயற்கை காட்சிகள், நிரூற்றுகள், வனவிலங்குகளை கண்டு ரசித்தபடி ரெயிலில் பயணித்தனர்.
இதுகுறித்து ரெயில்வே துறையினா் கூறுகையில், வெளிநாடுகளை சோ்ந்த சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணிப்பதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால் இந்த நீராவி ரெயிலின் பெருமை உலக அளவில் தெரிய வரும்.
வரும் காலங்களில் உள்ளூா் மற்றும் வெளிநாட்டினா் இந்த ரெயிலை வாடகைக்கு எடுத்து ரெயில் பயணம் மேற்கொள்வதன் மூலம் ரெயில்வே துறைக்கு இழப்பு ஏற்படாமல் இந்த மலை ரெயில் சேவை தொடா்ந்து இருக்கும் என்றனா்.
- திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொண்டிமேடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கடந்த 6-ந் தேதி முளைப்பாரி இடும் நிகழ்சியுடன் விழா தொடங்கியது. நேற்றுமுன்தினம் காலை ஆலயவிமானம், ஸ்ரீசக்தி விநாயகர், சிவபெருமான், அம்பாளுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
- உறுப்பினா்களு–க்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- மரங்களை வெட்ட நகராட்சி ஆணையா் அனுமதியளித்தாா்.
குன்னூர்,
குன்னூா் நகா்மன்ற கூட்டம் தலைவா் ஷீலா கேத்தரின் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், குன்னூா் உழவா் சந்தை பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து தி.மு.க.வினா் கேள்வி எழுப்பினா். இதற்கு அனுமதி பெறாமல் மரம் வெட்டியதற்கு கூட்டத்தில் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி வருத்தம் தெரிவித்தாா்.
நகா் மன்ற உறுப்பினா் ராமசாமி (திமுக) பேசுகையில், உழவா் சந்தை பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள 6 மரங்களை வெட்ட நகராட்சி ஆணையா் அனுமதியளித்தாா். ஆனால் அங்கு நன்றாக இருந்த மரங்களும் சோ்த்து வெட்டி கடத்தப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினாா்.
இது தொடா்பாக திமுக-அதிமுக உறுப்பினா்களு–க்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
பின்னா் நகராட்சித் தலைவா் ஷீலா கேத்தரின் பேசியதாவது:-
கடந்த மாதம் கூட்டம் நடந்தபோது நகராட்சி ஆணையா் பாதியில் எழுந்து சென்று விட்டாா். இந்த மாத கூட்டத்தில் அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டது குறித்த கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் வருத்தம் தெரிவிக்கிறாா். தோ்ந்தெடுக்கப்பட்ட நகராட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்களுடன் இணைந்து செயல்படாமல் தன்னிச்சையாக செயல்படும் நகராட்சி ஆணையா் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விரைவில் புகாா் அளிக்க உள்ளோம் என்றாா்.
- பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாவதால் விளைச்சல் குறைந்து உள்ளது
- நஷ்டம் எற்படுவது இல்லை.
அரவேணு,
கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரதான தொழிலாக தேயிலை மற்றும் மலைக்காய்கறிகள் விவசாயம் நடைபெற்று வருகிறது. மலைக்காய்கறிகள் சரியான விலைகள் கிடைப்பதில்லை என பெரும்பான்மையான விவசாயிகள் சைனீஸ் காய்கறிகளான ஐஸ்பிரிக், லிக்ஸ் , செல்லறி போன்ற பல வகையான காய்கறிகள் விளைவிக்கும் பணியை செய்து வருகின்றனர். இதில் அவர்களுக்கு எந்தவித நஷ்டம் எற்படுவது இல்லை. இதனால் பெரும் மக்கள் சைனீஸ் காய்கறிகளை விதைத்து விளைவித்து வருகின்றனர். தற்போது பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாவதால் சைனீஸ் காய்கறி விளைச்சல் குறைந்து உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் காய்கறிகளை விற்பனைக்கு கொடுக்க முடியாமல் வருத்தம் அடைந்து வருகின்றனர்.
- கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி யானைகள் சுற்றி திரிகின்றன.
- நீண்ட நேரத்திற்கு பிறகு தானாகவே காட்டுக்குள் யானை சென்று விட்டது.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.
இங்கு காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி வனத்தையொட்டி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகிறது.
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி யானைகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஒற்றை யானை ஒன்று கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை சுற்றி திரிந்தது.
சாலையில் வெகுநேரம் நின்று சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. இதனால் சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீண்ட நேரத்திற்கு பிறகு தானாகவே காட்டுக்குள் யானை சென்று விட்டது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
இதுபோன்ற ஒற்றை காட்டு யானை அடிக்கடி சாலையில் நின்று வருவதால் பெரிதும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறி வருகிறார்கள்.
- சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.மாதவன் தலைமையில் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.
இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நேற்று ஊட்டி பிங்கா்போஸ்ட் பகுதியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவா்களாக கூறப்படும் சயான், வாளையாா் மனோஜ், சதீசன், தீபு, ஜித்தின் ஜாய், சந்தோஷ் சமி ஆகியோா் ஆஜராகினா். மேலும் அரசு தரப்பில் வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்பி முருகவேல், டிஎஸ்பிகள் சந்திரசேகா், அண்ணாதுரை ஆகியோா் ஆஜராகினா்.
விசாரணையின்போது, தொலைத்தொடா்பு நிறுவனங்களிடம் இருந்து தகவல் கேட்க வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என சி.பி.சி.ஐ.டி தரப்பில் கோரப்பட்டது.
இதனை ஏற்ற மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முருகன், வழக்கை பிப்ரவரி 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
இது தொடர்பாக அரசு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் கூறியதாவது:-
கொடநாடு சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த எஸ்.பி.முரளி ரம்பாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்க உள்ளது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் புதிதாக 48 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.மாதவன் தலைமையில் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வழக்கின் விசாரணை அதிகாரியான கூடுதல் எஸ்.பி முருகவேல், டிஎஸ்பிகள் சந்திரசேகா், அண்ணாதுரை, அரசு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் அடுத்த கட்ட விசாரணை பற்றியும், அடுத்து யாருக்கு எல்லாம் சம்மன் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற சமயத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர், குன்னூர் டி.எஸ்.பி. ஆகியோருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
- அரசு தரப்பில் வழக்கு தொடர்பான செல்போன் பதிவுகளை விசாரிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.
- வழக்கை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு தள்ளி வைத்து மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கொடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. இதன்படி 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதுவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டு உள்ளது. வாகன விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சீல் வைக்கப்பட்ட விசாரணை ஆவணங்களை ஊட்டி கோர்ட்டில் நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று ஊட்டி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. சயான், வாளையார் மனோஜ், தீபு, சதீசன், ஜித்தின் ஜாய், சந்தோஷ்சாமி ஆகிய 6 பேர் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் ஆஜரானார்.
இதையடுத்து அரசு தரப்பில் வழக்கு தொடர்பான செல்போன் பதிவுகளை விசாரிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.
இதை ஏற்று வழக்கை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு தள்ளி வைத்து மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.
- குடியரசு பற்றியும் நாட்டு பற்று பற்றியும் உரையாற்றப்பட்டது.
- பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர்.எஸ்.பி தனபால் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கி, குடியரசு பற்றியும் நாட்டு பற்று பற்றியும் சிறப்புரையாற்றினார்.இதில் கல்லூரி முதன்மை அலுவலர் பசவண்ணா, பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.விழாவில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்சிகள் அனைவரையும் கவர்ந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும் பேராசிரியருமான பாபு மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்
- 62 நிறுவனங்களில் தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
- மாற்று விடுமுறையோ வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடாமலும் இருந்த நிறுவனங்கள் கண்டறியப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளா் நலத்துறை சாா்பில் கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 62 நிறுவனங்களில் தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வில் 37 நிறுவனங்களில் பணியாளா்களுக்கு விடுமுறை அளிக்காமலும் இரட்டிப்பு சம்பளம் மற்றும் மாற்று விடுமுறையோ வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடாமலும் இருந்த நிறுவனங்கள் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் அமலாக்கம் (பொறுப்பு) சதீஷ்குமாா் தெரிவித்துள்ளனர்.
- மலைகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கென எப்போதும் ஒரு தனி கிராக்கியுள்ளது.
- முக்கிய காய்கறிகளாக விளங்கும் கேரட் மற்றும் முட்டைகோஸ் பக்கம் விவசாயிகள் திரும்பியுள்ளனர்.
கோத்தகிரி,
மலை மாவட்டமான நீலகிரியில் மலைகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கென தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் கூட எப்போதும் ஒரு தனி கிராக்கியுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு அதிக அளவு இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்துவதால் சுவைக்கும் தனிச்சிறப்பு உண்டு என்றும் கூட சொல்லலாம்.
இந்த மலைப்பிரதேசங்களில் விளைவிக்கும் காய்கறிகள் பொதுவாக மேட்டுப்பாளையம், கோவை போன்ற பகுதிகளில் உள்ள மொத்த காய்கறி வியாபாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு பின்பு அங்கிருந்து பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள வியாபாரிகள் அதனை வாங்கி அப்பகுதிகளில் வியாபாரம் செய்வது வழக்கம்.
மலைப்பகுதிகளில் பொதுவாக தண்ணீருக்கு பஞ்சம் இல்லை என்பதால் இது போன்ற காய்கறிகளை விளைவிப்பதில் விவசாயிகளுக்கு சிரமங்களும் ஏற்படுவதில்லை.
சீசனுக்கு ஏற்றது போல் விவசாயிகள் காய்கறிகளை மாறி மாறி விளைவிப்பது வழக்கம். இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனி காலம் நிறைவடையும் நிலையில் அதற்க்கு ஏற்றது போல் விவசாயிகள் முக்கிய காய்கறிகளாக விளங்கும் கேரட் மற்றும் முட்டைகோஸ் பக்கம் திரும்பியுள்ளனர்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகமாக இந்த பயிர்களை விளைவித்து வருகின்றனர். இருப்பினும் நீலகிரியில் ஏற்பட்ட பனிபொழிவின் தாக்கம் இந்த முறை சற்று அதிகம் என்பதால் முட்டைகோஸ் பனிப்பொழிவால் சற்று பாதிப்படைந்துள்ளது. பனிப்பொழிவின் தாக்கம் இருப்பினும் விவசாயிகள் இந்த பயிர்கள் மீது அதிக ஆர்வம் கொண்டு விளைவித்து வருகின்றனர்.
- நெடுகுளா ஆகிய கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- 25 பழங்குடியினருக்கு ரூ.3 லட்சம் செலவில் கட்டப்பட்ட பசுமை குடில் வீடுகள் வழங்கப்பட்டது.
அரவேணு,
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 ஊராட்களில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கொணவக்கரை, ஜக்கனாரை, கெங்கரை, தேனாடு, நடுஹட்டி, கோடநாடு, நெடுகுளா, குஞ்சப்பனை தெங்குமரஹடா, கடினமலா, அரக்கோடு, நெடுகுளா ஆகிய கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நடுஹட்டி ஊராட்சி கெட்டிகம்பை கிராமத்தில் தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். மேலும் கொணவக்கரை ஊராட்சி சார்பில் மேல்கூப்பு கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் ஜெயபிரியா தலைமை தாங்கினார். அப்போது தமிழக அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 25 பழங்குடியினருக்கு ரூ.3 லட்சம் செலவில் கட்டப்பட்ட பசுமை குடில் வீடுகள் வழங்கப்பட்டது. இதில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து ஜக்கனாரை ஊராட்சியில் தலைவர் சுமதி சுரேஷ், கெங்கரை ஊராட்சியில் தலைவர் முருகன், கொடநாடு ஊராட்சியில் தலைவர் சுப்பிகாரி, தேனாடு ஊராட்சியில் தலைவர் ஆல்வின், குஞ்சப்பணை ஊராட்சியில் தலைவர் இம்மானுவேல் மணிகண்டன், தெங்குமரஹடா தலைவர் மனோகரன், நெடுகுளா தலைவர் சுகுணா சிவா மற்றும் அரக்கோடுதலவர் சாந்தி, கடினமலா தலைவர் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல் போன்ற கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- அங்கன்வாடி மையங்களில் சத்துமாவு, முட்டை போன்ற சத்தான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட கல்லக்கொரை கிராமத்தில், குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டார்.கூட்டத்தில் அடிப்படை தேவைகள் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல் போன்ற கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-
இத்தலார் ஊராட்சியில் அனைத்து அரசின் திட்டங்களும் சிறப்பான முறையில் பொதுமக்களுக்கு சென்றடைய துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
6 வயது உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் சத்துமாவு, முட்டை போன்ற சத்தான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் பணிகள் எடுக்கப்பட்டு, குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் மற்றும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து, கிராமங்களை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கலெக்டர் அம்ரித் கல்லக்கொரை அரசு உயர்நிலைப்பள்ளியில், சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் என்ற தலைப்பில் உறுதிமொழியினை அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் மகளிர் திட்டம் சார்பில் 3 உதவிக்குழுக்களுக்கு ரூ.36 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாலகணேஷ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலாமேரி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீணாதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் மலர்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், இத்தலார் ஊராட்சி தலைவர் பந்தையன், குந்தா வட்டாட்சியர் இந்திரா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், விஜயா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






