search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- புதிதாக 48 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை
    X

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- புதிதாக 48 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

    • சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.மாதவன் தலைமையில் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.

    இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

    இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நேற்று ஊட்டி பிங்கா்போஸ்ட் பகுதியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இந்த விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவா்களாக கூறப்படும் சயான், வாளையாா் மனோஜ், சதீசன், தீபு, ஜித்தின் ஜாய், சந்தோஷ் சமி ஆகியோா் ஆஜராகினா். மேலும் அரசு தரப்பில் வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்பி முருகவேல், டிஎஸ்பிகள் சந்திரசேகா், அண்ணாதுரை ஆகியோா் ஆஜராகினா்.

    விசாரணையின்போது, தொலைத்தொடா்பு நிறுவனங்களிடம் இருந்து தகவல் கேட்க வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என சி.பி.சி.ஐ.டி தரப்பில் கோரப்பட்டது.

    இதனை ஏற்ற மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முருகன், வழக்கை பிப்ரவரி 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

    இது தொடர்பாக அரசு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் கூறியதாவது:-

    கொடநாடு சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த எஸ்.பி.முரளி ரம்பாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்க உள்ளது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் புதிதாக 48 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.மாதவன் தலைமையில் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வழக்கின் விசாரணை அதிகாரியான கூடுதல் எஸ்.பி முருகவேல், டிஎஸ்பிகள் சந்திரசேகா், அண்ணாதுரை, அரசு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    இதில் அடுத்த கட்ட விசாரணை பற்றியும், அடுத்து யாருக்கு எல்லாம் சம்மன் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    சம்பவம் நடைபெற்ற சமயத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர், குன்னூர் டி.எஸ்.பி. ஆகியோருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    Next Story
    ×