என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திருமருகல் அருகே கீழப்பூதனூரில் ரூ.28 லட்சத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சியில் பெருநாட்டான்தோப்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்தவெளியில் தாழ்வான இடத்தில் செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளர் சுரேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யத்தில் பிளஸ்-2 மாணவர்கள் தங்கள் வகுப்பறைக்கு வர்ணம் தீட்டி ஆசிரியர்களின் ஆசியுடன் பிரியா விடை பெற்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கடிநெல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 301 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் இந்த ஆண்டு பிளஸ்2 வகுப்பில் 58 மாணவ- மாணவிகள் படித்து தேர்வு எழுதி உள்ளனர்.

    இந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்து மாணவ, மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தலா ரூ.300 வீதம் அளித்து ரூ.15,000 சேகரித்தனர்.

    இந்த தொகையில் தாங்கள் படித்த பள்ளியில்  2 வகுப்பறைகளுக்கு புதிதாக மாணவ-மாணவிகளே பெயிண்ட் அடித்து சுவர்களில் திருக்குறளையும் எழுதி புதுப்பொலிவு பெறச் செய்தனர்.

    ்மேலும் தங்களுக்கு பாடம் நடத்திய அனைத்து ஆசிரிர்்களுக்கும் பாராட்டு விழா நடத்தினர். விழாவிற்கு மாணவி மணிபாரதி தலைமை தங்கினார். மாணவன் ராஜதுரை வரவேற்றார்.

    விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்தர்மதுரை, பொரு ளாளர் ராமலிங்கம்,தலைமை யாசிரியர் பெருமாள், ஆசிரியர்கள் மதிவாணன், வடிவேல், வேம்பையன், கலை இலக்கிய பெருமன்ற நாகை மாவட்ட செயலாளர் அம்பிகாபதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவி களை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.தற்போது பள்ளிகளில் மாணவர்கள் பெஞ்ச், நாற்காலிகளை உடைப்பதும், ஆசிரியர்களை அடிக்க செல்வதும் ஆங்காங்கே  நடந்து   வருகிறது.  இதனால் பெற்றோர் மட்டுமல்லாது அனைத்து தரப்பிலும் இச்சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

    இந்நிலையில் இப்பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறையை தூய்மைப்ப டுத்தியும், வண்ணம் தீட்டி, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி அவர்களின் ஆசியுடன் பிரியா விடை பெற்ற சம்பவம் அனைத்து தரப்பிலும் பாராட்டுறையை பெற்றள்ளது. தெரிவிக்கும் நிகழ்ச்சி மற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

    பாராட்டு விழா நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் மற்றுகிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டபணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம், கீழ்வேளுர், கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

     ஐநல்லூர் ஊராட்சி சவேரியார் கோவில் சுனாமி குடியிருப்பு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் ரூ.11.62 லட்சம் மதிப்பீட்டில் செல்லூர், ஆவராணி, வடுகச்சேரி ஆகிய ஊராட்சி பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளையும், அந்தண பேட்டை ஊராட்சியில் ரூ.23.56 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும், சிக்கல் ஊராட்சியில் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணிகளையும், சிங்கநெரி தோட்டத்தில் ரூ.8.87லட்சம் மதிப்பீட்டில் அமுத குளம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    மேலும் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் இருக்கை ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும், நூலகம் கட்டிடம் பழுது நீக்கம் செய்யப்பட்ட பணியினையும், இரிஞ்யூர் அங்காடி கட்டிடம் கட்டும் பணியினையும், 75 அனக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.50.லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால் தூர்வாரும் பணியினையும், புதிய அங்காடி கட்டும் பணியினையும், 

    அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளையும், 75 அனக்குடி, வலிவலம் புதிய அமுத குளம் அமைக்கும் பணி உள்ளிட்ட ஏராளமான பணிகளை  ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர்.பசுபதி, பேபி உதவி செயற்பொறியாளர், நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ராஜாராமன், கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், ராஜகோபால், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றி, தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நாகை அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓட்டல் மீது மணல் லாரி மோதியதில் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி படுகாயம் அடைந்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் காரப்பிடாகை தெற்கு ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கடை பகுதியில் ஓட்டல் மற்றும் டீக்கடை செயல்பட்டு வருகிறது. கடை உரிமையாளர் கார்த்திகேயன் வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் நடத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் நாகப்பட்டினம்-வேதாரண்யம் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடத்தில் இருந்து ஆற்று மணல் ஏற்றி வந்துக் கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது.
     
    இதில் கடையில் டீ மற்றும் உணவு அருந்திக் கொண்டிருந்த 
    10-க்கும் மேற்பட்டோர் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்நிலையில் அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற வேளாண் துறை அலுவலர் சிவசண்முகம் பலத்த காயமடைந்தார்.
     
    உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து அவரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
    இடதுபுறமாக சென்ற லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் உள்ள கடையில் புகுந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
    மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திட்டச்சேரியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடந்த பூமிபூஜையில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு மரைக்கான்சாவடியில் கடந்த 20 ஆண்டு காலமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இது கொடுத்து முகமது ஷாநவாஸ் எம்எல்ஏவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதனை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஆத்மா திட்ட வட்டார தலைவர் செல்வ செங்குட்டவன், திட்டச்சேரி தி.மு.க நகர செயலாளர் முகமது சுல்தான், பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. 

    இதில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி, ஊராட்சி செயலாளர் பாலசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த தஞ்சை கல்லூரி மாணவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முகுந்தன், தஞ்சாவூரை சேர்ந்த ராஜஸ்ரீ, வேதராண்யத்தைச் சேர்ந்த அபிசேக், கும்பகோணத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், நீடாமங்கலத்தைச் சேர்ந்த தினகரன், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுதர்ஷன், மதுரையைச் சேர்ந்த பாண்டியம்மாள், புதுக்கோட்டையைச் சேர்ந்த அனுசுயா ஆகியோர் நேற்று மாலை வந்து தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கடலில் ஆற்று முகத்தூவாரம் அருகே 8 மாணவர்களும் குளித்துள்ளனர். அப்போது முகுந்தன் மற்றும் ராஜஸ்ரீ இருவரும் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் சக மாணவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து ராஜஸ்ரீயை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடல் அலையில் இழுத்துச் சென்ற மாணவர் முகுந்தனை தேடிய நிலையில் வேளாங்கண்ணி கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளார். 

    இதுகுறித்து கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த முகுந்தனின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் எட்டு பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் உயிருக்கு போராடி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    ஆயக்காரன்புலத்தில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைத்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், வேதாரண்யம் மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளரும், மருதூர் கூட்டுறவு சங்க இயக்குனருமான உதயம் முருகையன், வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு சட்டமன்றம் 2021-22ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது பேரவை விதிகள் விதி 110ன் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் பகுதியில் புதிதாக கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஒரு வங்கி கிளை ரூ.22.00 லட்சம் மதிப்பில் புதிதாக துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். தொடர்ந்து ஆயக்காரன்புலத்தில் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பயனாளிக்கு வைப்பு தொகைக்கான சேமிப்பு பத்திரத்தினை வழங்கினார்.

    இந்த வங்கி கிளை துவங்குவதன் மூலம் ஆயக்காரன்புலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு பயிர்க்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படுவதுடன், வங்கிக் கிளை மூலம் வழங்கப்படும் 

    கடன்களான பொது நகைக்கடன்கள், சிறுவணிகக்கடன், மகளிர் சுயஉதவிக்குழுக்கடன், மாற்றுத் திறனாளி–களுக்கான கடன், டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ, சம்பளக்கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், பணிபுரியும் மகளிர் கடன், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கைம்பெண்களுக்கான கடன் ஆகிய கடன்கள் வழங்கப்படுவதால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்பெறுவார்கள். 

    இவ்விழாவில் இணைப்பதிவாளர் அருளரசு, நாகப்பட்டினம் மண்டல மேலாண்மை இயக்குநர் பெரியசாமி, இணைப்பதிவாளர் ஜெகத்ரட்சகன், முதன்மை வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், துணைப்ப–திவாளர் கண்ணன், மருதூர் கூட்டுறவு வங்கி தலைவர் சோமசுந்தரம், நாகை மாவட்ட விவசாய தொழியாளர் அணி அமை–ப்பாளர் துரைராசு வங்கி அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    திருக்குவளை அருகே 20 அடி பள்ளத்தில் வாகனத்தோடு விழுந்த வாலிபர் பலியானார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள பிரிஞ்சுமூலை கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் ஆலத்தம்பாடி ஆலங்குடி வரை செல்லும் சாலை வழியாக பிரிச்சுமூலையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது புத்தூர் பகுதியில் அரிச்சந்திரா ஆற்றுக்கரை தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் இருசக்கர வாகனத்தோடு தலைக்கீழாக கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்தவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனி ன்றி அவர் உயிரிழந்தார்.

    திருமருகலில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் சந்தைபே ட்டைகடை த்தெருவில் பெட்ரோல், டீசல்,  கேஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

    ஆர்ப்பா ட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல்,கேஸ் மீதான வரிகளை கைவிட்டு, விலை உயர்வுகளை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாய விலை கடைகளில் வழங்கிடு, வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 வழங்க வேண்டும், 

    ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்து, வேலை வாய்ப்யை பெருக்கிடு நகர்ப்புற வேலை உறுதி சட்டம் கொண்டுவர வேண்டும், அரசுத்துறையில் உள்ள காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளி ட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் கோ ஷங்கள் எழுப்பப்பட்டது.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

    இந்திய அரசு கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக்குலத்து புலிகள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

    1974-ம் ஆண்டு வரை இந்தியாவின் ஒரு பகுதியாக தமிழகத்தின் சேதுபதி மன்னருக்கு சொந்தமான இடம் கச்சத்தீவு. தமிழக அரசை கேட்காமல் பிரதமர் இந்திராகாந்தி தன்னிச்சையாக கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் தாரை வார்த்து விட்டார். அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அரசியல் நிர்ப்பந்தங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்போது பார்வர்டு ப்ளாக் எம்.பி யாக இருந்த பி.கே.மூக்கையா தேவர் மட்டும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இந்த ஒப்பந்தங்களில் 10 வருடங்களுக்கு இந்திய மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் அனுமதி இருக்கிறது. அந்த அனுமதியை ரத்து செய்து விட்டது மத்திய அரசு. இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமையை இழந்தனர்.ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும், படகுகள், வலைகளை இழந்துள்ளனர். 2008 ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறாமல் தாரைவார்க்கப் பட்டதால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2011 ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

    இப்போது இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் இந்திய அரசு தான் நிதி உதவிகள், பெட்ரோலிய பொருட்கள் எல்லாம் உதவி வருகிறது. இந்த சூழலில் தமிழக மீனவர்களின் நலன் கருதியும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் விதமாகவும் கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வேதாரண்யத்தில் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி ரூ.96 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் குறைந்த விலையில் ஒரு கிராமிற்கு 400 ரூபாய் குறைத்து தங்கம் வாங்கித் தருவதாக சின்ன சேலத்தைச் சேர்ந்த இடைத்தரகர் தியாகு என்பவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் முருகன் வயது 47 என்பவரிடம் பேசி வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலம் கிராமத்தைச் சேர்ந்த பண்டரிநாதன் (வயது 65) என்பவரிடம் பேசி உள்ளனர்.

    அவரும் உடனே வாருங்கள் பணம் கொண்டு வாருங்கள் என கூறியுள்ளார்.இந்த வார்த்தையை நம்பி கள்ளக்குறிச்சி நகைக்கடை அதிபர் முருகன் இடைத்தரகர் தியாகு மற்றும் சிலர் 96 லட்சம் பணத்துடன் கருப்பம்புலம் வந்தனர் அவர்களிடம் பண்டரிநாதன் 860 கிராம் தங்க கட்டியை கொடுத்துவிட்டு 96 லட்சத்தை முருகனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். மீதி தங்கம் நாளை மறுநாள் தருவதாக கூறி அனுப்பி விட்டார்.

    முருகனை பண்டரிநாதன் உட்பட பலர் பல ஊரைச் சார்ந்த 7 பேர் பின் தொடர்ந்து சென்று முருகனின் காரை வழிமறித்து தாக்கி நகைகளை பறித்துக் கொண்டனர். முன்கூட்டியே சுதாரித்த கள்ளக்குறிச்சி முருகன் தான் பெற்ற 860 கிராம் தங்க கட்டியை வேறு நபரிடம் கொடுத்து அனுப்பி விட்டார். 

    அதனால் இந்த மோசடிக்காரர்கள் இடமிருந்து தப்பியது. இதனால் பாதிக்கப்பட்ட முருகன் இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்து உள்ளார் புகாரின் பெயரில் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முருகவேல், இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்து பண்டரிநாதன் உட்பட 7 பேரை கைது செய்து இந்த மோசடிக்கு பயன்படுத்திய நான்கு சொகுசு கார்கள் ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

    இதில் தலைமறைவாக இருந்த இடைத்தரகர் சின்ன சேலத்தைச் சேர்ந்த தியாகு (47) என்பவரை தேடிவந்தனர் இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தோப்புத்துறை சோதனைச் சாவடி அருகே பஸ்ஸில் ஏறுவதற்காக மறைந்திருந்த தியாகுவை பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்பு சிறையில் அடைத்தனர்.
    திருமருகலில் சார்பதிவாளர் அலுவலகத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என மாதர் சங்கம், இளைஞர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய தலைவர் வாசுகி, இளைஞர் மன்ற ஒன்றிய தலைவர் பழனிவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா, மாவட்ட பொருளாளர் சரோஜா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கார்த்திகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பரிதா வரவேற்றார்.

    கூட்டத்தில் திருமருகலை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கட்டாயப்படுத்த வேண்டும், திருமருகலில் பாரத ஸ்டேட் பேங்க் கிளை துவக்க வேண்டும், 54 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய திருமருகலில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும், 100 நாள் வேலையின் துவக்க நேரம் 7 மணி என்பதை 10 மணி என மாற்றி அமைக்க வேண்டும், படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு மாத மாதம் உதவி தொகை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    ×