என் மலர்
மயிலாடுதுறை
குத்தாலம் அருகே இயற்கை முறையில் விவசாயம் செய்த வயல்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள கந்தமங்கலம் கிராமத்தில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலமாக பாரம்பரிய நெல் ரகங்களை ஊக்குவிக்கும் வகையில் கருப்பு கவுணி, கிச்சலி சம்பா, சீரக சம்பா மற்றும் தூயமல்லி போன்ற பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்த வயல்களில் வேளாண் துறையினரின் ஆய்வு நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குல அகன்டராவ், சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ராகுல். வேளாண் உதவி இயக்குனர் வெற்றிவேலன்.
வட்டார தொழில் நுட்ப மேலாளர் லெக்ஷ்மி நாராயணன், உதவி தொழில் நுட்ப மேலாளர் ஆரோக்கிய அலெக்சாண்டர், வேளாண் உதவி அலுவலர் கலையரசன், ஐசிஐசிஐ பவுண்டேஷன் வளர்ச்சி அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு இயற்கை பண்ணையம் குறித்து ஆய்வு செய்தனர்.
நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் இயற்கை விவசாயம் செய்த விவசாயிகளை பாராட்டினார்.
மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவிலில் படிச்சட்டத்தை திருடிய 2 பேர் கைது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் உற்சவ மூர்த்தியை தூக்கி செல்ல பயன்படும் படிச்சட்டம் தோளுக்குகினியாள் என்றழைக்கப்படும்.
கடந்த 2014-&ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த படிச்சட்டத்தில் கவசமாக போடப்பட்டிருந்த வெள்ளி தகடுகள் உரித்து எடுக்கப்பட்டு திருடு போனது.
இது குறித்து சென்னை கே.கே.நகரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சிலை தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். இந்த மனுவின் மீது பூர்வாங்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு மனுவில் கூறியதுபடி வெள்ளி தகடுகள் உரிக்கப் பட்டு களவு- போனது உண்மை எனத் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஸ்ரீநிவாச ரெங்க பட்டாச்சாரியார், முரளிதரன் பட்டாச்சாரியார் ஆகியோர் படிச்சட்டத்தில் வெள்ளி தகடுகளை உரித்து களவாடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பழைய படிச்சட்டத்தை போன்றே வெள்ளி தகடுகள் பதித்து புதியதாக படிச்சட்டம் செய்திட ஒரு கடையில் பழைய படிச்சட்டத்திலிருந்து உரித்து எடுத்து உருக்கி வெள்ளிகட்டிகளை கொடுத்தும், மேலும் நன்கொடையாளர்கள் மூலம் பணம் கொடுக்க செய்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் ஸ்ரீநிவாசரெங்க பட்டாச்சாரியார், முரளிதரன் பட்டாச்சாரியார் ஆகிய 2 பேரையும் கைது செய்து மயிலாடுதுறையில் உள்ள ஒரு ஜீவல்லரியில் புதிதாக செய்யப்பட்ட புதிய படிச்சட்ட வெள்ளி உருப்படிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் எஸ்.காமராஜ் இல்ல திருமண விழா வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை 5-ந்தேதி தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மகாராஜா மஹாலில் மாலை 6.00 மணிக்கு வரவேற்பு விழாவும்,6-ந்தேதி தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மகாராஜா மஹாலில் காலை திருமண விழாவும் நடைபெற உள்ளது.
ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து கூட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை தாலுக்கா, ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் ராணிராஜகோபால் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் வரவேற்றார். இத்திட்டத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டம் குறித்த விளக்கங்களை எடுத்து கூறினர். வேளாண்மை உதவி இயக்குநர் இந்த திட்டம் நடப்பாண்டு மயிலாடுதுறை வட்டாரத்தில் ஒன்பது கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தபட உள்ளது.
அந்த வகையில் ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் அனைத்து துறை அலுவலர்கள் ஊராட்சிமன்ற தலைவர், துணை தலைவர், கவுன்சிலர், கிராம நிர்வாக அலுவலர், தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, வேளாண்வணிகத்துறை, கால்நடைபராமரிப்பு துறை ஆகிய துறைகளிலிருந்து அலுவலர்கள் கலந்து கொண்டு இத்திட்டம் பற்றிய விளக்கங்கள் கூறினர். மேலும் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில் உள்ள விவசாய குடும்பங்களை தேர்வு செய்து ஒவ்வொரு விவசாய குடும்பமும் பயன் பெறும் வகையில் திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றோம்.
இத்திட்டத்தில் தென்னங்கன்றுகள், மரக்கன்று வகைகள், வேளாண்மை உபகரணங்கள், பண்ணை இயந்திரங்கள் வழங்கபடவுள்ளது. வேளாண்மை பொறியியல்துறை மூலம் பண்ணை கருவிகள், வாடகை இயந்திர நிலையம், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக செந்தில்குமார் இளநிலை பொறியாளர் தெரிவித்தார்.
வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத்துறையில் இருந்து வருகை தந்த வேளாண்மை அலுவலர் கிருத்திகா கூறுகையில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதற்கும் மதிப்பு கூட்டி விற்பதற்க்கும் தேவையான நவீன யுக்திகளை கையாள இருப்பதாக கூறினார்கள்.
கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கால்நடை உதவி மருத்துவர் இரமாபிரபா விளக்கமாக எடுத்து கூறினர். இதனை தொடர்ந்து அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் உழவன் செயலி பயன்பாடு குறித்தும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விளக்கமாக எடுத்து கூறினர்.
இதில், கிராம நிர்வாக அலுவலர் திருமலைபாண்டியன், கூட்டுறவு வங்கி செயலாளர் அருள், வேளாண்மை உதவி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள், விவசாயிகள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.
திருவாவடுதுறையில் உள்ள ஸ்ரீ அதுல்யகுஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி அளித்த ஐதீக விழா நடைபெற்றது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ள ஸ்ரீஅதுல்யகுஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியாக 5-ஆம் நாள் விழாவான நேற்று, திருஞான சம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி அளித்த ஐதீக விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடைய திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்தர் தங்கி தரிசனம் செய்து வந்தார். அப்போது அவரது தந்தை சிவபாத இருதயன் உலக நன்மைக்காக தான் ஏற்பாடு செய்திருந்த யாகத்திற்கு, திருஞானசம்பந்தரிடம் பொருளுதவி கேட்டு திருவாவடுதுறை வந்தார்.
இதனையடுத்து திருஞான சம்பந்தர், கோமுக்தீஸ்வரர் கோவிலில் உலவாக்கிழி பதிகம் பாடி ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பொற்கிழி பெற்றதாக ஐதீகம்.
இந்த ஐதீக விழாவை போற்றும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்திகள் பல்லக்கில் வீதியுலா வந்து கோமுக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினார். அங்கு உலவாக்கிழி பதிகத்தை ஓதுவார்கள் பாடினர்.
தொடர்ந்து கோவிலிலிருந்து பூதகணம் பொற்கிழியை சுமந்து வந்து, பலி பீடத்தில் வைத்து, பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புராண சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில், திருவாவடு துறை ஆதீனம் 24&வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, திருமுறை இசை அறிஞர் 4 பேருக்கு ரூ.5ஆயிரம் அடங்கிய பொற்கிழியை வழங்கி ஆசியுரை வழங்கினார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கடையூர் கொள்முதல் நிலையத்தில் எந்திரம் பழுதால் 2 நாட்களாக நெல் கொள்முதல் பணி பாதிப்படைந்துள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய 165 அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.
கடந்த 27-ம்தேதி முதல் தினந்தோறும் 1000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருக்கடையூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் நேற்று நெல் தூற்றும் எந்திரம் பழுதடைந்தது. இதனால் கொள்முதல் நிறுத்தப்பட்டது.
ஆன்லைனில் பதிவு செய்து டோக்கன் பெற்று காத்திருந்த விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யமுடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
எந்திரம் பழுதுநீக்கம் செய்யப்பட்டு இன்று மீண்டும் கொள்முதல் செய்தபோது நேற்று டோக்கன் பெற்றவர்கள் நெல்லை கொள்முதல் செய்யாமல் மீண்டும் ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு வரச்சொல்வதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெல் தூற்றும் எந்திரம் மீண்டும் பழுது ஏற்பட்டதால் இன்றும் கொள்முதல் நிறுத்தப்படலாம். உடனடியாக எந்திரத்தை பழுது நீக்கம் செய்து முன்பதிவு செய்து டோக்கன் பெற்ற விவசாயிகளை அலைகழிக்காமல் கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிபகழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகே பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்காத ரேசன்கடை விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ரேசன்கடை விற்பனையாளராக சக்கரவர்த்தி பணியாற்றி வருகிறார்.
சட்டநாதபுரம் ரேசன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக வழங்க தவறியதால் அங்கு சில தினங்களுக்கு முன்பு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் பொது வினியோகத்திட்ட உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பொங்கல் பரிசு தொகுப்பினை முறையாக வழங்க தவறியது.
அன்றாட விற்பனை தொகையினை முறையாக சங்கத்தில் செலுத்த தவறிய காரணங் களை எடுத்துரைத்து விற்பனையாளர் சக்கர வர்த்தி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராம சாலையை மேம்படுத்த வேண்டும் என கிராம வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்திலிருந்து திருநாவுக்கரசு நல்லூர் செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர தார்சாலை அமைக்கப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
இந்த சாலை கடந்த 5 வருடங்களாக பராமரிக்கப்படாமல் விட்டுவிட்டதால் மிகவும் மோசமாகவும் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் திருநாவுக்கரசுநல்லூர் கிராமத்திற்கு செல்லும் மாணவர்கள், பெரியவர்கள் மற்றும் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். திருநாவுக்கரசு நல்லூரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பள்ளி மாணவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த சாலையை மேம்படுத்த கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.எனவே சாலையை மேம்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் பகுதியில் வளர்ச்சிப் பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கீழமாத்தூர், எருக்கூர், புத்தூர், கோபாலசமுத்திரம், ஆனைக்காரன் சத்திரம், ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி, அரசு கான்கிரீட் வீடு கட்டும்பணி, குடிநீர் குழாய் அமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் முருகண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பணியை தரமாகவும் விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார். ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, பி.டி.ஓ உமாசங்கர், ஒன்றிய பொறியாளர் தாரா மற்றும் ஊராட்சி தலைவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.
திருநாங்கூரில், நாளை 11 பெருமாள்கள் தங்க கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது.
சீர்காழி:
108 வைணவ ஸ்தலங்களில், 11பெருமாள் கோயில்கள் சீர்காழி வட்டம் திருநாங்கூர் பகுதியில் சில கிலோமீட்டர் தூரங்களில் அருகருகே ஒரே தொகுப்பாக அமைந்துள்ளது.
இங்கு மணிமாடக் கோயில் எனும் நாராயணப்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் இரவு 11 பெருமாள் கோயில்களின் உத்ஸவர்கள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளும் கருடசேவை உத்ஸவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நாளை தங்க கருடசேவை உத்ஸவம் நடைபெறவுள்ளது. முன்னதாக இன்று அதிகாலை திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார் புறப்பாடாகி குறவளூர், மங்கைமடம், காவாளம்பாடி, திருமேனிக்கூடம், பார்த்தன்பள்ளி ஆகிய பெருமாள் கோயில்களுக்கு சென்று பெருமாள்களுக்கு அழைப்பு விடுக்கும் ஐதீகமும், பின்னர் நைனிபுரம் மஞ்சள்குளி மண்டபத்தில் திருமங்கையாழ்வாருக்கு தீர்த்தவாரி மற்றும் மஞ்சக்குளி உத்ஸவமும் நடைபெறவுள்ளது.
அங்கிருந்து நாராயணபெருமாள், புருஷோத்தமன், வைகுண்டநாதர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்டபெருமாள், குடமாடுகூத்தர் ஆகிய கோயில்களுக்கு திருமங்கையாழ்வார் சென்று பெருமாள்களுக்கு அழைப்பு விடுத்து மீண்டும் நாராயண பெருமாள் கோயிலுக்கு இரவு அர்த்த ஜாமத்திற்கு எழுந்தருள்கிறார்.
தொடர்ந்து விழா அன்று காலைமுதல் நாராயணப்பெருமாள், குடமாடுகூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்டபெருமாள், அண்ணன்பெருமாள், புருஷோத்தமன்பெருமாள், வரதராஜப்பெருமாள், வைகுந்தநாதப்பெருமாள், மாதவன்பெருமாள், பார்த்தசாரதிபெருமாள், கோபாலன்பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் மணிமாடக்கோயிலுக்கு எழுந்தருளிவரும், பெருமாள்களை திருமங்கையாழ்வார் பாசுரங்கள் பாடி கோயில் வாசலில் நின்று வரவேற்கும் ஐதீகமும் நடைபெறும்.
பின்னர் 11பெருமாள்களும், 11மாடங்களில் வைக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடைபெறும்.பின்னர் இரவு 11பெருமாள்களும் தங்க கருடவாகனத்திலும், திருமங்கையாழ்வார் குமுதவள்ளிநாச்சியாருடன் ஹம்சவாகனத்திலும் எழுந்தருள்வர். இதைத்தொடர்ந்து தங்க கருடவாகனத்தில் எழுந்தருளும் 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி மகாதீபாராதனை மற்றும் வீதியுலா நடைபெறவுள்ளது.
இதனிடையே சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 11பெருமாள் தங்க கருடசேவை விழாவையொட்டி ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கோட்டாட்சியர் ஜி.நாராயணன் தலைமை வகித்தார். டிஎஸ்பி.லாமெக், வட்டாட்சியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி பெருமாள் வீதியுலா புறப்பாடு, வழிபாடு நிகழ்வுகளை மேற்கொள்ளவேண்டும்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிவதை உறுதிப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கோயில் நிர்வாக அலுவலர் குணசேகரன் மற்றும் விழா கமிட்டியினர், விழா குழுவினர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தரங்கம்பாடி:
ஐக்கிய விவசாயிகள் முன்னணியுடன் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்று, துரோகம் செய்யாதே என்ற முழக்கத்தோடு மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் துரோக நாள் ஆர்ப்பாட்டம் மாநில செயற்பாட்டுக்குழு உறுப்பினர் சாமி.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்டத்தலைவர் சிம்சன், இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முருகன் ஆகியோர் முன்னணியில் சங்கம் வகிக்கும் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டு ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
கொள்ளிடம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சோதியக்குடி கிராமத்தில் சம்பா அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் கலந்துகொண்டு புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல் கொள்முதலை தொடக்கி வைத்தார்.
கொள்முதல் நிலைய ஊழியர் விஜயகாந்த் மற்றும் விவசாயிகள், ஊழியர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் கொண்ணகாட்டுபடுகை, கீரங்குடி, சிதம்பரநாதபுரம், ஆனந்தக்கூத்தன், சோதியக்குடி, சரஸ்வதிவிளாகம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த சம்பா நெல் மூட்டைகளை சிரமமின்றி கொண்டு வந்து விற்பனை செய்யும் வகையில் இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்று ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.






