என் மலர்
மயிலாடுதுறை
சீர்காழி அருகே வடபாதி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வருகிற 11-ந்தேதி நடக்கிறது
சீர்காழி:
சீர்காழி அருகே வடபாதி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் பத்து நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு உத்ஸவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது. நேற்று 5&ம் நாள் திருவிழாவாக பிடாரி வடக்கு வீதி பகுதி பக்தர்கள், பொதுமக்களால் சிறப்பு மண்டகப்படி வழிபாடு நடந்தது.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் அம்மன் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் புஷ்ப அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.
சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது
சீர்காழி:
சீர்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையோரம் சூரக்காடு பகுதியில் உப்பனாறு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டில் கோழி கழிவுகள் தினந்தோறும் எங்கிருந்தோ கொண்டு வந்து சிலர் கொட்டி செல்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. திறந்த வெளியில் கொட்டப்படும் கோழி கழிவுகளை நாய், காக்கைகள் தூக்கி சென்று குடியிருப்பு பகுதிகளில் போட்டு செல்வதால் குடியிருப்புவாசிகளும் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர்.
ஆகையால் காரைமேடு ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கோழி கழிவுகளை கொட்டாமல் தடுப்பதோடு அங்கு கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடன் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே பரசலூர் செல்லப்பார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்து பரசலூர் ஊராட்சி, மேலக்கட்டளை கிராமத்தில் பழைமை வாய்ந்த செல்லப்பார் கோவில் உள்ளது. வடக்குநோக்கி அமைந்துள்ள இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது.
சாஸ்தாவின் ரூபங்களில் ஒருவரான குமார சாஸ்தாவாக வீற்றிருந்து செல்லப்பார் என்ற திருநாமத்துடன் உத்குடிகாசனம் எனும் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர், பரசலூர் வீரேட்டேஸ்வரர் ஆகிய கோவில்களில் உள்ள சாமிகளுக்கு எல்லை காவல் தெய்வமாக செல்லப்பார் சாமி விளங்குகிறார்.
இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்த மறைந்த காஞ்சி மாமுனிவர் ஸ்ரீ சந்திரசேகர பரமாச்சாரிய சுவாமிகள் வழிபட்டு குமாரசாஸ்தா என்று அழைத்தார். செம்பனார்கோவல் பரசலூர் பகுதியை சேர்ந்த பல்வேறு குடும்பங்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது.
இத்தகைய சிறப்புகளை கொண்ட இந்த கோவலில் திருப்பணிகள் முடிவடைந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாக குண்டங்கள் அமைத்து சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யானை ஊர்வலத்துடன் புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து கோபுரத்தை அடைந்து வேத மந்திரங்கள் ஓத, கருடன் வட்டமிட, பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று கோஷம் எழுப்ப கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து கருவறையில் உள்ள செல்லப்பார் திருவுருவத்துக்கு புனீத நீரை ஊற்றி மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், அர்ச்சகர்கள் ஷண்முகசுந்தரம், ஸ்ரீநாத், ஸ்ரீகாந்த், ஊராட்சி தலைவர் சண்முகம், வி.ஏ.ஓ. சிவசங்கர், ஊராட்சி செயலர் நாகராஜன், தெய்வ திருப்பணி குழுவினர், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சீர்காழி அருகே காரைக்காலில் இருந்து மதுபானம் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி:
சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்துக்கு உட்பட்ட சங்கரன்பந்தல் பகுதியில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந் தனர். அப்போது அவ் வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த மூட்டையில் காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட 450 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனம் மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
திருவாவடுதுறை ஆதீனத்தில் நாளை இரவு நடைபெறவுள்ள பட்டணப் பிரவேசத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் வலுத்து வருகிறது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ளது திருவாவடுதுறை ஆதீனம். திருவாவடுதுறை ஆதீனத்தை 14-ம் நூற்றாண்டில் தோற்றுவித்த ஆதீன குருமுதல்வர் நமசிவாய மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் நமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை என 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டு குருபூஜை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 10ம் நாள் விழா ஆதீன மடத்தில் நாளை (7ந் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி, குருபூஜை விழா, மாகேஸ்வர பூஜை, கோயில் வழிபாடு ஆகியன நடைபெற்று இரவு பட்டணப் பிரவேசம் நடைபெறவுள்ளது.
இந்த பட்டணப் பிரவேச நிகழ்வுக்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நவீன யுகத்தில் பட்டணப் பிரவேசம் என்ற பெயரில் மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்றும், பட்டணப் பிரவேசத்தை கைவிடவில்லை என்றால் திருவாவடுதுறையில் திராவிடர் கழகத்தின் சார்பில் தோழமை அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்களோடு இணைந்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என தி.க மாவட்டத் தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் தளபதிராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சமய மரபுகளில் தலையிடுவதை திராவிடர் கழகம் கைவிட வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன், தொன்றுதொட்டு நடந்துவரும் பட்டணப் பிரவேசம் பக்தர்களின் சுயவிருப்பத்தின்படியே நடைபெறுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25, 26 ஆகியவை சமய மரபுகளை, பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை கடைப்பிடிக்க முழு சுதந்திரம் வழங்கியுள்ளது.
எனவே, திருவாவடுதுறை ஆதீனம் பட்டணப்பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய உள்விஷயங்களில் ஆண்டான் - அடிமை, மனிதனை மனிதனே சுமப்பதா, மனித உரிமை என்றெல்லாம் சொல்லி சமய மரபுகளில் தலையிடுவதை தி.கவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பட்டணப் பிரவேச நிகழ்வை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம், தமிழ்நாடு ஆன்மீகப் பேரவை, இந்து திருக்கோயில் பாதுகாப்புப் பேரவை, கர்நாடக மாநில அகில பாரத இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்பினரும் குரல் எழுப்பியுள்ளனர்.
மேலும், மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதோடு சமய மரபுகளுக்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாவடுதுறை ஆதீன நிர்வாகம் சார்பில் விழாவுக்கு பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், திராவிடர் கழகத்தினர் உடன்படாததால், திருவாவடுதுறையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தடையை மீறி பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது. இச்சம்பவம் ஆன்மீக பக்தர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்காக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைத்து காட்டப்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
சீர்காழி:
சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இதனை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இவ்வாறு இறங்குமுகமாக இருக்கும் போதுதான் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு 170 வரை இருந்த நிலையில் தற்போது நாள் ஒன்று பாதிப்பு 70 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் நாள் ஒன்று தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தேர்தலுக்காக தொற்று பாதிப்பை குறைத்து காட்டப்படவில்லை. மும்பை, தாராவி, டெல்லி, கேரளா போன்ற பகுதிகளிலும் தொற்று எண்ணிக்கை நன்றாக குறைந்துள்ளது.
2&வது அலையைவிட, 3&வது அலையில் உயிர் இழப்பு மற்றும் பாதிப்பு விழுக்காடு அதிகளவு குறைவாக உள்ளதற்கு தடுப்பூசி மக்கள் செலுத்திக் கொண்டதுதான் காரணம். அதோடு தற்போது முககவசம், சமூக இடைவெளி போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற தொடங்கி விட்டனர்.
தமிழகத்தில் 1.34 லட்சம் படுக்கைகள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ள நிலையில் தொற்று பாதிப்பாளர்கள் 4 சதவீதம் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். இனி வரும் காலங்களில் பொதுமுடக்க விலக்குகள் அதிகமாக இருக்கும், கட்டுபாடுகள் குறைக்கப்படும் என்றார்.
அப்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா, சீர்காழி கோட்டாட்சியர் நாராணன் மற்றும் சுகாதாரத் துறையினர் உடனிருந்தனர். தொடர்ந்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வைத்தீஸ்வரன்கோவிலில் ரிசனம் செய்தார்.
கொள்ளிடம் அருகே சாலையோரம் கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புளியந்துறை கிராமத்திலிருந்து பழையார் மீன்பிடி துறைமுகத்துக்கு செல்லும் சாலையில் புதுப்பட்டினத்தில், ஊராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் தினந்தோறும் ஒரே இடத்தில் குவியலாக கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்துக்கு மிக அருகாமையில் கடலோர காவல் நிலையம், குடியிருப்புகள் மற்றும் புயல் வெள்ளப் பாதுகாப்பு மையம் ஆகியவை அமைந்துள்ளன.
உப்பனாற்றங் கரைசாலையில் குப்பைகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு வருவதால் காற்று வேகமாக வீசுகின்ற போது ஆற்று தண்ணீரில் கலந்து தண்ணீர் மாசுபடும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த குப்பைகளுடன் பிளாஸ்டிக் பொருட்கள், இறந்த விலங்கினங்கள், கோழி இறைச்சிகள் உள்ளிட்டவைகள் குப்பைகளுடன் சேர்த்து கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுப்புறச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மக்கும் குப்பை மக்காத குப்பை என்று ஊராட்சி குப்பைகளை தரம் பிரித்து அவைகளை மறுசுழற்சி செய்வதற்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அந்தப் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படியிருந்தும் ஒரே இடத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.குப்பைகள் சாலையிலேயே கொட்டப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் கால்நடையாக நடந்து செல்பவர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கிராம மக்கள் நலன் கருதியும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க வேண்டியும் குப்பைகளை வேறு ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை காவிரி இல்லத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
முன்னிட்டு, மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர், இயக்குநர் மின்ஆளுமை முகமை விஜயேந்திர பாண்டியன் தலைமையில், மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இரா.லலிதா முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் மயிலாடுதுறை காவேரி இல்லத்தில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நேரிலோ அல்லது 9344450337 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புக் கொண்டு தேர்தல் தொடர்பாக தகவல் அல்லது புகார்களை தெரிவிக்கலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை சீர்காழி என 2 நகராட்சிகளும். மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் வைத்தீஸ்வரன்கோயில்
ஆகிய 4 பேரூராட்சிகளும் உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-2022-ல் மயிலாடுதுறை மாவட்டத்தில்
72846 ஆண் வாக்காளர்கள் 77077 பெண் வாக்காளர்கள் மற்றும் 15 இதர வாக்காளர்கள் ஆக மொத்தம் 1,49,938 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சிகளில் 60 வார்டுகளும், பேரூராட்சிகளில் 63 வார்டுகளும் கூடுதலாக 123 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 182 வாக்குச்சாவடிகள் உள்ளது.
வாக்குச்சாவடிகள் 71 அமைவிடங்களில் உள்ளது. 182 வாக்குச்சவாடிகளில்
54 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி கேமிரா பொருத்தப்படவுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் கீழ்காணும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகள், பேரூராட்சிகள் வாக்கு எண்ணிக்கை மையங்களாக மயிலாடுதுறை தருமபுரம் ஞாணாம்பிகை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மயிலாடுதுறை. சீர்காழி சபாநாயக முதலியார் மேல்நிலைப்பள்ளி, சீர்காழி. குத்தாலம் திவான் பகதூர் தி.இ.ரெங்காச்சாரி தேசிய மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை. மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில்.
தேர்தலில் 6 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் மற்றும் 16 உதவி தேர்தல் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலில் 6 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன.
தேர்தல் தொடர்பான பணிகளை கண்காணித்திட 14 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் ஒரு நகர்புற உள்ளாட்சி அமைப்பிற்கு 3 பறக்கும் படை குழு வீதம் (ஒரு குழுவிற்கு 8 மணி நேரம் என சுழற்சி முறையில்) 18 குழுக்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்க்கொள்ள மாவட்ட அளவில் பொறுப்பு அலுவலராக மயிலாடுதுறை துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பிரதாப்குமார், வட்டார அளவிலான பொறுப்பு அலுவலர்களாக அந்தந்த வட்டார மருத்துவ அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டார பார்வையாளரர்களாக துணை கலெக்டர் நிலையில் 6 பேரும் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் தேர்தல் பணியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்கு அனைத்து வேட்பு மனு பெறப்படும் இடங்களிலும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள
182 வாக்குச்சாவடி மைங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.
இக்கூட்டத்தில் தேர்தல் வட்டார பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
மயிலாடுதுறையில் பழைய பஸ்நிலைய நுழைவுவாயிலில் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை பழைய பஸ்நிலையம் நுழைவுவாயில் உள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் வழிந்து பஸ் நிலையத்தில் ஓடுகிறது. இதுபற்றி மயிலாடுதுறை நகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மயிலாடுதுறைக்கு வரும் வெளியூர், வெளி மாவட்டம், உள்ளூர்வாசிகள் வந்து செல்லும் முக்கிய இடமாக பழைய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.
அடிக்கடி இதுபோல் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி வழிந்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மாணவ-மாணவிகள் இதனை கடந்து சென்று வருவதால் அவர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு வருவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
நகர்ப்புற தேர்தல் நடக்க இருப்பதால், வேட்பாளர்கள் எதைச் சொல்லி
வாக்கு கேட்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். அதிமுக
ஆட்சியில் மயிலாடுதுறை நகரத்தில் பாதாள சாக்கடையை சரி
செய்யாமல் கிடப்பில் போட்டப்பட்டது.
தற்போது தி.மு.க. ஆட்சியில் போதுமான நிதி உடனே வழங்க இயலாததாலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்துவிட்ட நிலையில் தி.மு.க.வினரும் செய்வதறியாது உள்ளனர்.
இதனை அவசர வேலையாக கருதி நகராட்சி நிர்வாகத்தினர் இதனை
உடனே சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செம்மங்குடி தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் உள்ள தர்மராஜா மாரியம்மன் கோவிலில் தை மாத தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 26-ந்தேதி கொடி ஏற்றப்பட்டு காப்பு கட்டி தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்
அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து தீமிதி உற்சவ திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை காளியம்மன் கோவிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து கோயிலை அடைந்தனர்.
மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து மாலை பொறை வாய்க்காலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் மற்றும் அலகு காவடிகள் மேள, தாளங்கள் முழங்க வந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இரவு மாரியம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.
சீர்காழியில் நகராட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி தேர்தலை முன்னிட்டு உப்பனாறு, தென்பாதி, கைகாட்டி புறவழிச்சாலை, செம்மங்குடி சாலை சூரக்காடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் மற்றும் பொருட்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து வருகின்றனர்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரி கூட்டுறவு சார்பதிவாளர் செல்வராணி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களிலிருந்து சீர்காழியை நோக்கி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து ஆவணங்களை சரிபார்த்து அனுப்பி வைக்கின்றனர். மேலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை வீடியோ கேமராவில் பதிவு செய்து வருகின்றனர்.
சீர்காழியில் அச்சக உரிமையாளர்கள் நல சங்க கூட்டம் நடைபெற்றது
சீர்காழி:
சீர்காழியில் அச்சக உரிமையாளர்கள் நல சங்க கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு அதன் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். பொருளாளர் பார்த்திபன், துணை செயலர்கள் தில்லை.நடராஜன், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க வரும் வேட்பாளர்களின் முழு விவரங்களை பெற்று துண்டுபிரசுரம் அச்சடித்துதருவது, தேர்தலில் போட்டியிடும் எதிர் வேட்பாளர்கள் குறித்து தனிநபர் விமர்சனம், அரசியல் காழ்புணர்ச்சி, பதற்றம் ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் போன்ற ஏதும் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான துண்டுபிரசுரங்கள் அச்சடிப்பதில்லை, துண்டுபிரசுரங்கள் அச்சடிக்க வரும் வேட்பாளர்கள் உடன் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே அச்சடித்து தர ஆர்டர் பெறவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் அச்சக உரிமையாளர்கள் சிவகுருநாதன், விஜி, ஞானவேல், உத்திரா, கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






