என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொட்டப்பட்டுள்ள குப்பைகள்
கொள்ளிடம் அருகே சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்
கொள்ளிடம் அருகே சாலையோரம் கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புளியந்துறை கிராமத்திலிருந்து பழையார் மீன்பிடி துறைமுகத்துக்கு செல்லும் சாலையில் புதுப்பட்டினத்தில், ஊராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் தினந்தோறும் ஒரே இடத்தில் குவியலாக கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்துக்கு மிக அருகாமையில் கடலோர காவல் நிலையம், குடியிருப்புகள் மற்றும் புயல் வெள்ளப் பாதுகாப்பு மையம் ஆகியவை அமைந்துள்ளன.
உப்பனாற்றங் கரைசாலையில் குப்பைகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு வருவதால் காற்று வேகமாக வீசுகின்ற போது ஆற்று தண்ணீரில் கலந்து தண்ணீர் மாசுபடும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த குப்பைகளுடன் பிளாஸ்டிக் பொருட்கள், இறந்த விலங்கினங்கள், கோழி இறைச்சிகள் உள்ளிட்டவைகள் குப்பைகளுடன் சேர்த்து கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுப்புறச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மக்கும் குப்பை மக்காத குப்பை என்று ஊராட்சி குப்பைகளை தரம் பிரித்து அவைகளை மறுசுழற்சி செய்வதற்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அந்தப் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படியிருந்தும் ஒரே இடத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.குப்பைகள் சாலையிலேயே கொட்டப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் கால்நடையாக நடந்து செல்பவர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கிராம மக்கள் நலன் கருதியும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க வேண்டியும் குப்பைகளை வேறு ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story






