என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டணபிரவேச காட்சி
திருவாவடுதுறை ஆதீனத்தில் நாளை பட்டணப் பிரவேசம்
திருவாவடுதுறை ஆதீனத்தில் நாளை இரவு நடைபெறவுள்ள பட்டணப் பிரவேசத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் வலுத்து வருகிறது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ளது திருவாவடுதுறை ஆதீனம். திருவாவடுதுறை ஆதீனத்தை 14-ம் நூற்றாண்டில் தோற்றுவித்த ஆதீன குருமுதல்வர் நமசிவாய மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் நமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை என 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டு குருபூஜை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 10ம் நாள் விழா ஆதீன மடத்தில் நாளை (7ந் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி, குருபூஜை விழா, மாகேஸ்வர பூஜை, கோயில் வழிபாடு ஆகியன நடைபெற்று இரவு பட்டணப் பிரவேசம் நடைபெறவுள்ளது.
இந்த பட்டணப் பிரவேச நிகழ்வுக்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நவீன யுகத்தில் பட்டணப் பிரவேசம் என்ற பெயரில் மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்றும், பட்டணப் பிரவேசத்தை கைவிடவில்லை என்றால் திருவாவடுதுறையில் திராவிடர் கழகத்தின் சார்பில் தோழமை அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்களோடு இணைந்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என தி.க மாவட்டத் தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் தளபதிராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சமய மரபுகளில் தலையிடுவதை திராவிடர் கழகம் கைவிட வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன், தொன்றுதொட்டு நடந்துவரும் பட்டணப் பிரவேசம் பக்தர்களின் சுயவிருப்பத்தின்படியே நடைபெறுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25, 26 ஆகியவை சமய மரபுகளை, பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை கடைப்பிடிக்க முழு சுதந்திரம் வழங்கியுள்ளது.
எனவே, திருவாவடுதுறை ஆதீனம் பட்டணப்பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய உள்விஷயங்களில் ஆண்டான் - அடிமை, மனிதனை மனிதனே சுமப்பதா, மனித உரிமை என்றெல்லாம் சொல்லி சமய மரபுகளில் தலையிடுவதை தி.கவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பட்டணப் பிரவேச நிகழ்வை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம், தமிழ்நாடு ஆன்மீகப் பேரவை, இந்து திருக்கோயில் பாதுகாப்புப் பேரவை, கர்நாடக மாநில அகில பாரத இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்பினரும் குரல் எழுப்பியுள்ளனர்.
மேலும், மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதோடு சமய மரபுகளுக்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாவடுதுறை ஆதீன நிர்வாகம் சார்பில் விழாவுக்கு பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், திராவிடர் கழகத்தினர் உடன்படாததால், திருவாவடுதுறையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தடையை மீறி பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது. இச்சம்பவம் ஆன்மீக பக்தர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






