என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பூவத்தி, மிட்டப்பள்ளி, சூளகுண்டா, ராஜீவ் நகர், சோமார்பேட்டை, பூசாரிப்பட்டி, காட்டிநாயனப்பள்ளி, கொண்டேப்பள்ளி, தானம்பட்டி, பாஞ்சாலிபுதூர், மணி நகர், நாட்டான்கொட்டாய், துறிஞ்சிப்பட்டி, ராசுவீதி, அம்பேத்கர் நகர், திருமலை நகர், அரசு கலைக்கல்லூரி, ஜெகதாப், போத்தாபுரம், பையூர், எர்ரசீகலஅள்ளி, புதூர், கல்குட்டப்பட்டி, அகரம், ஆவத்தவாடி, மாரிசெட்டிஅள்ளி, தளிஅள்ளி, கானலட்டி, ரவுத்தஅள்ளி, கோனேரிப்பள்ளி, டி.எம்.ஜி. கோட்டா, பாத்தகோட்டா, பேட்டேப்பள்ளி, ராமாபுரம், மணவாரனப்பள்ளி, எட்டிப்பள்ளி, கங்கோஜிகொத்தூர், கத்திரிப்பள்ளி, சாமல்பள்ளம், ஒசஅள்ளி, ஒட்டையனூர், அஞ்சாலம், பிக்கனப்பள்ளி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து மின் தடை இருந்ததால் வெண்டிலேட்டர் செயல்படாததால் கொரோனா நோயாளி பரிதாபமாக இறந்தார். இதனால் அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஒபிலிகாட்டூரை சேர்ந்தவர் பிரபு (வயது 30). விவசாயி. இவர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 14-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று கொரோனா சிறப்பு வார்டின் கீழ் தளத்தில் மின்சாரம் தடைபட்டது. இதனால் வெண்டிலேட்டரின் பேட்டரி அளவு குறைந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக வெண்டிலேட்டர் அளவு குறைந்ததாக பிரபுவின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் பிரபு மூச்சு விட சிரமப்பட்டார். இதனால் பிரபு தங்கி இருந்த அறையில், மின் இணைப்பு வராததால் அவரை வேறு இடத்திற்கு ஊழியர்கள் அழைத்து சென்றனர். ஆனாலும் அவர் இறந்து விட்டார்.

    இந்த நிலையில் மருத்துவமனை அலட்சியத்தால் பிரபு இறந்ததாக அவரது உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டவுன் போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.

    இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அசோகனிடம் கேட்டபோது, பிரபுவிற்கு பேட்டரி லெவல் குறைவதற்கு முன்பு வெண்டிலேட்டரை மாற்றிவிட்டோம். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்றார்
    கெலமங்கலம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் துளசி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற சின்னட்டியை சேர்ந்த பிரகாஷ் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    பர்கூர் அருகே ஜவுளிக்கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    பர்கூர் ஜெகதேவி அருகே உள்ள சாப்பமுட்லு பகுதியை சேர்ந்தவர் சாதிக் (வயது 30). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சாதிக் சத்தலப்பள்ளியில் உள்ள மாந்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    பாரூர் போலீசார் அரசம்பட்டி மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பாலனம்பதி பாண்டியன் (வயது 26), அரசம்பட்டி சரத்குமார் (28), ராஜேஷ் (27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிங்காரப்பேட்டை போலீசார் ஒபகவலசை ஏரி பக்கமாக ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய மிட்டப்பள்ளி மூர்த்தி (44), குணசேகரன் (35), ஜெயக்குமார் (43), உத்திரகுமார் (48) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கிருஷ்ணகிரி அணையில் பரிசலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தாளாப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 46), மீனவரான இவர் கிருஷ்ணகிரி அணையில் மீன் பிடிக்க குத்தகைக்கு எடுத்தவர்களுக்கு, பரிசலில் சென்று மீன் பிடித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மீன் பிடிக்க வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். நேற்றுஅதிகாலை 2 மணி அளவில் அவர், பரிசலில் அணைக்குள் மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி இது குறித்து கிருஷ்ணகிரி அணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் போலீசார் அணைக்கு விரைந்தனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் மோட்டார் படகில் நேற்று மதியம் முதல் மாலை வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் முனியப்பனோ, அவர் சென்ற பரிசலோ கிடைக்கவில்லை.

    நேற்று மாலை வெகு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தேடும் பணி நடைபெற உள்ளது.

    உரிகம் வனப்பகுதியில் பிரசவத்தின் போது பெண் யானையும், வயிற்றுக்குள் இருந்த குட்டியும் பரிதாபமாக பலியாகின.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. ஓசூர் வனக்கோட்டம், உரிகம் காப்புக்காட்டில் ஜோடுகரை ஏரிப்பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணியிலஈடுபட்டனர்.

    அப்போது 20 முதல் 24 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்த வன ஊழியர்கள் இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பிரபுவிற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் தலைமையில், ஓசூர் கோட்ட தலைமையிட உதவி வன பாதுகாவலர் காத்திகேயினி, உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம், வன பணியாளர்கள், கால்நடை டாக்டர் பிரகாஷ் உள்ளிட்டோர் சம்பவஇடத்திற்கு சென்றனர்.

    இதைத்தொடந்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது யானையின் வயிற்றுக்குள் ஆண் யானைக்குட்டி ஒன்று இறந்த நிலையில்இருந்தது.

    தொடர்ந்து யானையின் உடலும், குட்டி யானையின் உடலும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, ‘பெண் யானை சினையாக இருந்ததும், குட்டியை ஈனும் போது எதிர்பாராதவிதமாக குட்டி வெளியே வர முடியாமல் சிரமப்பட்டு இருக்கலாம். இதில் குட்டி யானையும், தாய் யானையும் பரிதாபமாக இறந்துள்ளன’ என்றார்கள்.

    உரிகம் வனப்பகுதியில் பிரசவத்தின் போது தாய் யானையும், குட்டியும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
    கிருஷ்ணகிரி அருகே விவசாயிகள் கீரை சாகுபடியில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவி வரும் சூழ்நிலையில், கொரோனா கற்றுக்கொடுத்த பாடம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதே ஆகும். இதனை அறிந்து கொண்ட பொதுமக்கள் தற்போது சத்தான உணவுகளை சாப்பிட, அதற்கான பொருட்களை வாங்குவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, இயற்கையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை வாங்குவதில் பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி அருகே தாளாபள்ளி பகுதியில் கீரை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    பொதுமக்களின் ஆர்வம் மற்றும் தேவைகளை அறிந்து, அதற்கு ஏற்றவாறு, சத்தான இயற்கையான காய்கறி, கீரை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் வலிமைக்கு தேவையான வைட்டமின்கள் அதிகரிக்கும் வகையில் குறைந்த செலவில், அதிக மகசூல் பெறும் வகையில் கீரை சாகுபடி செய்து வருகிறோம். சிறு கீரை, தண்டுக்கீரை, பாலக்கீரை, அரைக்கீரை போன்றவற்றை சாகுபடி செய்து, தினமும் அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறோம்.

    நோய் எதிர்ப்பு சக்திக்கு 10 நாட்களில் பலன் தரக்கூடிய இந்த கீரைகளை சாகுபடி செய்ய விதைகள், உரங்கள் என ரூ.10 ஆயிரம் மூலதனமாக கொண்டு சாகுபடி செய்துள்ளோம். தற்போது கீரைகளை பிடுங்கி, சிறுசிறு கட்டுகளாக கட்டி ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்கிறோம். அத்துடன் மொத்த வியாபாரிகளும் கீரை சாகுபடி செய்த விவசாய நிலங்களுக்கே நேரில் வந்து விற்பனைக்கு வாங்கி செய்கிறார்கள்.

    இதன் மூலம் தினமும் ரூ.500 வரை வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு 3 மாதங்கள் தொடர்ந்து அறுவடை செய்வதால் குறைந்தபட்சமாக ரூ.45 ஆயிரம் வருவாய் ஈட்ட முடிகிறது. இதனால் இப்பகுதியில் தற்போது விவசாயிகள் கீரை சாகுபடியில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

    இவ்வாறு விவசாயிகள்கூறினர்.
    விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வெப்படை அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பள்ளிபாளையம்:

    குமாரபாளையம் தாலுகா வெப்படை அருகே உள்ள பாதரை ஊராட்சிக்குட்பட்ட தோப்புக்காட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மின் கோபுரம் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி பாதரை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள், தங்களது குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை தாங்கினார். சங்ககிரி விவசாய சங்க தலைவர் ராஜேந்திரன், பள்ளிபாளையம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ராமசாமி, தனேந்திரன், வெப்படை தனபால், படைவீடு ராஜா, மேட்டுக்கடை ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும் மகசூல் குறைகிறது. இதனால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகும். ஏற்கனவே பல்வேறு நூற்பாலைகளுக்கு சாலையோரம் கேபிள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இதேபோல் பாதரையிலும் சாலையோரம் கேபிள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பாதரையில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஓசூர் அருகே இரட்டை கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த விவசாயி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டி டோபி காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). விவசாயியான இவர் உத்தனப்பள்ளி அருகேயுள்ள ஒரு அட்டை கம்பெனியில் ஊழியராகவும் வேலை செய்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம், உத்தனப்பள்ளி அருகே சானமாவு என்ற இடத்தில் காரில் வந்தவர்கள் மீது லாரியை மோத விட்டு, பெட்ரோல் குண்டுகள் வீசி, ஓசூரை சேர்ந்த பெண் தொழில்அதிபர் நீலிமா மற்றும் அவரது டிரைவர் முரளி ஆகியோரை எரித்து கொலை செய்த வழக்கில், முருகன் 13-வது குற்றவாளி ஆவார்.

    இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர், மோட்டார் சைக்கிளில் விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக மனைவி ரெஜினம்மாவிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர், உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் முருகன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், முருகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் காமன்தொட்டி அருகே கங்காபுரம் என்ற இடத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் கிடந்தது. இது குறித்து அவரது மனைவி சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே நேற்று காலை, ஓசூர் தாலுகா தொரப்பள்ளி அக்ரஹாரம் அருகே கொல்லப்பள்ளி பக்கமுள்ள ராஜாபுரத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் ஆண் பிணம் மிதப்பதாக ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, பிணமாக கிடந்தது முருகன் என்பதும், மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று கல்லால் தாக்கி கொலை செய்து, உடலை கல்குவாரி குட்டையில் வீசி சென்றதும் தெரியவந்தது. பின்னர், முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்யப்பட்ட முருகனுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக தகராறு இருந்து வருவதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கடத்தி கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றர்.

    இரட்டை கொலை சம்பவத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர், கடத்தி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணத்தை அடுத்த பாலே குளி அருகே உள்ள சந்தியப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி சந்தியா (வயது 22). இவர்களுக்கு 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 11 மாதத்தில் கீர்த்தி என்ற பெண் குழந்தை உள்ளது. சந்தியாவுக்கு அடிக்கடி வயிற்று வலி வந்துள்ளது.

    இதற்காக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவர் குட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த சந்தியா விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சந்தியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்ெகாலை செய்து கொண்டதால் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் லிப்ட் கேட்டு சென்ற இளம்பெண் பலியானார். மேலும் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜசேகர் (வயது28). இவருடைய நண்பர் மஞ்சுநாதன் (27). மெக்கானிக். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது 24 வயது இளம்பெண் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

    இதனால் ராஜசேகரும், மஞ்சுநாதனும் அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி அணை ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே இரும்பு கம்பி பாரம் ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜசேகர், மஞ்சுநாதன் படுகாயமடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கொல்கத்தாவை சேர்ந்த அயுப்மண்டலின் மகள் செரீன் என்ற கதுன் (24) என்பது தெரியவந்துள்ளது. செரீன் எதற்காக இங்கு வந்தார்? அவரது குடும்பத்தினர் கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×