என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    பர்கூர் அருகே கார் மோதி ஜவுளிக்கடை ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    பர்கூர் எம்.ஜி.ஆர். நகர் செட்டியார் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). ஜவுளிக்கடை ஊழியர். சம்பவத்தன்று இவர் பர்கூர்-ஜெகதேவி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் சரவணன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தளி அருகே பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் கிராமத்தில் பதட்டமான நிலை இருந்து வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள கும்மளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது தேன்கனிகோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், கர்நாடக மாநிலத்தில் 2 கொலை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர் சிறையில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஜாமினில் வெளியே வந்துள்ளார்,

    இந்த நிலையில் உதயகுமார் நேற்று இரவு 10 மணியளவில் தனது காரில் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கிராமத்தில் உள்ள கவுரம்மா கோவில் அருகே வந்த போது காரை மர்ம கும்பல் வழிமறித்தனர். அவர்களிடம் ஆயுதங்கள் இருப்பதை கண்ட உதயகுமார் அதிர்ச்சி அடைந்தனர்,

    உடனே சிறிதும் தாமதிக்காமல் அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் காரை விட்டுகிழே இறங்கி ஒடினார். ஆனால் மர்ம கும்பல் உதயகுமாரை ஓட ஒட விரட்டி அரிவாளால் சராமாரியாக வெட்டி சாய்த்தனர். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் விரைந்து வந்தனர். இதை பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதற்கிடையே பலத்த வெட்டு காயம் அடைந்த உதயகுமார், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து தளி போலீஸ் நிலையத்திற்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட பேலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. கிருத்திகா, இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் உதயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ரவுடி உதயகுமாரை மர்ம கும்பல் வெட்டி கொன்றது தெரியவந்தது. இதனால் உதயகுமாரை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    பிரபல ரவுடி உதயகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் கிராமத்தில் பதட்ட நிலை இருந்து வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிராம மக்களும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். 

    கல்லாவி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்லாவி:

    கல்லாவி அருகே உள்ள வேலம்பட்டியை சேர்ந்தவர் சபரிமுத்து (வயது 47). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று அவர் ஸ்கூட்டரில், கல்லாவியில் இருந்து மொரப்பூர் செல்லும் சாலையில் வேலம்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சபரிமுத்து இறந்தார். இது குறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 300 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர், 75 வயது முதியவர், 60 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 300 ஆக உள்ளது. இதற்கிடையே தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 126 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை 39 ஆயிரத்து 668 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 38 ஆயிரத்து 306 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது ஆயிரத்து 62 பேர் சிகிச்சையில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 300 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பாப்பாரப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அண்ணா நகர் தமிழரசு (வயது 21), ரெயில்வே காலனி வடிவேல் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதே போல காவேரிப்பட்டணம் போலீசார் குரும்பட்டி மோட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சின்னமுத்தூர் கோவிந்தசாமி (45), குரும்பட்டி சம்பத் (41) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 67 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் பலியாகிஉள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சற்று குறைந்த நிலையில், கடந்த மே மாதம் முதல் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதில் இள வயதினர், வயதானவர்கள் என ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்பும் அதிகமாக இருந்து வருகிறது.

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலையே கட்டுக்குள் வராத நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரையில் மாவட்டம் முழுவதும் 67 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் இறந்து உள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறுகையில், மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனா வந்தவர்கள் 42 பேரும், கொரோனா இல்லாதவர்கள் 25 பேரும் அடங்குவார்கள். இவர்களில் 3 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துள்ளனர். தற்போது 16 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவித்தார்.
    போச்சம்பள்ளி அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி அருகே உள்ள வடமலம்பட்டியை சேர்ந்தவர் அலி அகமத். இவருடைய மனைவி தில்ஷாத் பேகம் (வயது 26). இவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 20-ந் தேதி இரவு இவர்களுடைய வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கு பையில் வைத்திருந்த 8 பவுன் நகைகளை திருடி சென்றனர்.

    இந்த திருட்டு குறித்து தில்ஷாத் பேகம் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் தில்ஷாத் பேகம் வீடு உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து அந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜூன் (26), மகேந்திரன் (26) என்பதும், வங்கி காசாளர் தில்ஷாத் பேகம் வீட்டில்திருடியதும் தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் இருந்து 8 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் மல்லிகார்ஜூன், மகேந்திரன் ஆகிய 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
    கிருஷ்ணகிரி அருகே இரும்பு கம்பி தலையில் விழுந்து கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள நாட்ராம்பள்ளியை சேர்ந்தவர் கமல் (வயது 40). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று அவர் பெத்ததாளப்பள்ளி இந்திரா நகர் பகுதியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மேல்தளத்தில் இருந்த இரும்பு கம்பி ஒன்று கமலின் தலை மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கமல் இறந்து விட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    உத்தனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் கிருஷ்ணாபுரம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய விஜயகுமார் (வயது 28), மூர்த்தி (30), கிருஷ்ணன் (42), முனிராஜ் (26), பாலாஜி (32), சேஷாத்திரி (27) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,300 பறிமுதல் செய்யப்பட்டது.

    ராயக்கோட்டை போலீசார் தண்ணீர்தொட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கோவிந்தராஜ் (27), ஸ்ரீகாந்த் (18), முத்துக்குமார் (23), சங்கர் (28) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 39 ஆயிரத்து 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 69 வயது முதியவர், 68 வயது பெண் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 156 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 39 ஆயிரத்து 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 38 ஆயிரத்து 35 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது ஆயிரத்து 112 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 295 ஆக உள்ளது.
    கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கிருஷ்ணகிரி அண்ணா சிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் சிவராஜ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். 2020 புதிய மின்சாரசட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பயிர்களுக்கு உரிய விலை நிர்ணயம் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இதேபோன்று தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனபள்ளி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகளின் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டத்தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். விவசாய சங்க வட்ட செயலாளர் அனுமப்பா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் வெங்கடேஷ், தமிழ்நாடு விவசாய சங்க துணை தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் ராஜா, சிவா, பட்டாபிராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வேளாண் திருத்த சட்டத்தை திரும்பவேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
    கோவில்களை திறக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக வழிபாட்டு தலங்களான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    இந்த நிலையில் கோவில்களை திறக்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரி வடக்கு மாட வீதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் முன்பு, இந்து முன்னணி சார்பில் நேற்று காலை கற்பூரம் ஏற்றும் போராட்டம் நடந்தது. இதற்கு நகர தலைவர் கலைகோபி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் யுகேஷ்வரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    இந்த போராட்டத்தில், கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி கோவில்களை திறக்க வலியுறுத்தி நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினார்கள். இதே போல், கிருஷ்ணகிரி பாரதிநகரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் முன்பும் இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோவில் வெளி பகுதியில் கற்பூரம் ஏற்றினர்.
    ×