என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பருத்தி ஏலத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் 800 மூட்டை பருத்தி வருகையால் அமோக ஏலம் நடைபெற்றது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தும், பருத்தி விற்பனைக்கான தொகையை உடனடியாக பெற்று சென்று மகிழ்ந்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 2-வது வாரமாக நடைபெற்று வந்த பருத்தி ஏலத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் 800 மூட்டை பருத்தி வருகையால் அமோக ஏலம் நடைபெற்றது.

    இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பருத்தி வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்ததில் நல்ல விலை போனது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தும், பருத்தி விற்பனைக்கான தொகையை உடனடியாக பெற்று சென்று மகிழ்ந்தனர்.

    இதனையடுத்து கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் மேலாண்மை இயக்குநர் மற்றும் பொது மேலாளரான சுந்தரம் உத்தரவின் பேரிலும், கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ஜெயபாலன் தலைமையிலும் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவு சங்க செயலாளர் முருகன் மற்றும் இளநிலை உதவியாளர் விஜியன், கூட்டுறவு சங்க பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமியை செயலாளராக தேர்வு.
    • எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    மத்தூர்,

    அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமியை செயலாளராக தேர்ந்தெடுக் கப்பட்டதையடுத்து மத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் சக்கரவர்த்தி (வடக்கு), தேவராசன் (தெற்கு), மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் பியாரஜான், களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி, சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், கொடமாண்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல்,

    ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி அக்ரி சீனிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைத் தலைவர் வினாயகமூர்த்தி,

    முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னபாப்பா நடராஜன், ஒன்றிய மீனவரணி செயலாளர் எம்.ஆர் முனுசாமி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் டி.ஜெகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பூபதி, இளம் பாசறை செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது.
    • வடிவேலு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அமராவதியை குத்தினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த காளிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி அமராவதி (வயது33). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வடிவேலு (35) என்பவருக்கும் இடையே கடந்த 6 வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வடிவேலு சூளகிரியில் உள்ள வெல்டிங் பட்டரையில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வடிவேலுவுக்கும், அமராவதிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது.

    அப்போது வடிவேலு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அமராவதியை குத்தினார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அமராவதியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து சூளகிரி போலீசார் வடிவேலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நீங்கள், மாணவர்களுக்கு நல்ல கல்வியை கற்றுத் தாருங்கள்.
    • எதிர்கால மாணவச்செல்வங்களை உருவாக்கி தாருங்கள்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சியின் கல்விக்குழு முதல் கூட்டம் நேற்று நடை பெற்றது. மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கல்விக்குழு தலைவர் எச். ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். இதில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழக அரசு, கல்வித் துறை மீது தனி கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட, கல்விக்கென அதிக நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. ஓசூர் மாநகராட்சியில் மற்ற பணிகளுடன் சேர்க்காமல், கல்விக்கென்று தனியாக டெண்டர் வைக்கப்படும்.

    இதன்மூலம், ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன பணிகள் தேவை என்பதை கண்டறிந்து, தனி டெண்டர் மூலம் அனைத்து பள்ளிகளின் தேவைகளும் நிறைவேற்றி தரப்படும். கொரோனாவிற்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தற்போது, 9 பள்ளிகளில், ரூ.6 கோடியே 36 லட்சம் செலவில் ஸ்மார்ட் வகுப்புகள் நடை பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து.பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    மாநகராட்சிக்குட்பட்ட தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி உடனடியாக நிறைவேற்றப்படும். மேலும், படிப்படியாக வகுப்பறை வசதிகளும் செய்து தரப்படும்.

    இந்த அரசையும், ஓசூர் மாநகராட்சியையும் நம்பி ஆசிரியர்கள் தைரியமாக செயல்படலாம். அரசு பள்ளி ஆசிரியர்கள், கற்பித்தல் திறமையில்லை தேர்ந்தவர்கள் என்பதை அனைவரும் நன்கு அறிந்துள்ளனர்.

    நீங்கள், மாணவர்களுக்கு நல்ல கல்வியை கற்றுத் தாருங்கள். நல்ல சமுதாயத்தை உருவாக்கித்தா ருங்கள். எதிர்கால மாணவச்செல்வங்களை உருவாக்கி தாருங்கள். மாணவர்களுக்கு பள்ளிப்பாடங்களுடன், நமது நாட்டின் கலாச்சாரம், மொழி கலாச்சாரம் ஆகியவற்றையும் கற்றுக்கொடுங்கள்.

    பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டும், அதனை பராமரிக்கவும் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். ஓசூர் மாநகராட்சி பள்ளிகளுக்கென்று தனியாக வர்ணம் பூசப்பட வேண்டும். ஓசூர் மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளும் ஒரே வர்ணத்தில், யூனிபார்மாக காட்சி யளிப்பதை காணும்போது. குழந்தைகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.

    இவ்வாறு கூட்டத்தில், சத்யா பேசினார்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பால சுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் ஆகியோர் பேசினார். மேலும், சிவராமன், யசஷ்வினி மோகன் உள்ளிட்ட கல்விக்குழு உறுப்பினர்கள், ஓசூர் மாநகராட்சிக்குட்ட 36 பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    • ஓசூரில் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • மேலும், ஓசூர்-தளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர்:

    ஓசூரில் 2,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் வாகன உதிரி பாகங்கள் மற்றும் இதர பொறியியல் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கிறது.

    இந்த நிறுவனங்கள், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் ஜாப் ஆர்டர்களுக்கு உரிய நியாயமான விலையை வழங்க பெருநிறுவன வாடிக்கையாளர்கள் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியும், சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு சுமூக தீர்வு காணவும் வலியுறுத்தி, 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி, நேற்று, ஓசூரில் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், ஓசூர்-தளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் 3,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்கள், பதாகைகளை ஏந்தியவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். வேலைநிறுத்த போராட்டம், 2-வது நாளாக இன்றும் தொடர்ந்தது.

    இதையொட்டி, ஓசூரில் அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இந்த 2 நாள் போராட்டத்தினால் ரூ.1,000 கோடி அளவில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • கடையில் இருந்த ரூ.95,000- மதிப்பிலான 23 பேட்டரிகளை திருடு போனது ெதரியவந்தது.

    ஓசூர்,

    ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 51). இவர் அந்த பகுதியில் பேட்டரி கடை வைத்துள்ளார்.

    இந்தநிலையில், நேற்று அந்த கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து கிடந்ததை கிருஷ்ணன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.95,000- மதிப்பிலான 23 பேட்டரிகளை திருடு போனது ெதரியவந்தது.

    மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

    இது குறித்து கிருஷ்ணன், ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார்.அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ராஜேஸ்வரி, சிவன்யா வீட்டின் அருகில் உள்ள பெரிய ஏரிக்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர்.
    • சிவன்யா எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்தார்.

    கிருஷ்ணகிரி:

    திருவண்ணாமலை மாவட்டம், புதூர் செங்கம் அடுத்துள்ள உண்ணாமலை பாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (வயது22). கட்டிட மேஸ்திரியான இவரது மனைவி ராஜேஸ்வரி (22). இவர்களுக்கு சிவன்யா என்கிற 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது வசந்த் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.பூசாரிப்பட்டி கன்னியப்பன் நகரில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வசந்த் வேலைக்கு சென்று வீடு திரும்பினார். பின்னர் ராஜேஸ்வரி மற்றும் குழந்தை சிவன்யா ஆகிய இருவரும் வீட்டின் அருகில் உள்ள பெரிய ஏரிக்கு துணி, துவைப்பதற்காக சென்றுள்ளனர்.

    அப்போது சிவன்யா எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்தார். இதில் தத்தளித்த அவரை ராஜேஸ்வரி காப்பாற்றுவதற்காக ஏரியில் குதித்துள்ளார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி மகாராஜா கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாய்-மகள் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கமலாவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
    • தாய்-மகன் இருவரும் கருகிய நிலையில் உடல் கிடந்தது. தடவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்துள்ள செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன். இவருக்கு 3 மனைவிகள் உள்ளன. இவரது முதல் மனைவி கமலா (வயது50). இவரது மகன் குரு (17). இவர் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று செந்தாமரைக்கண்ணனிடம், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும். அதனால் அவரிடம் கமலா பணம் கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் மீண்டும் தகராறு நடந்தது.

    இன்று காலை வெகுநேரமாகியும் கமலாவின் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.

    அப்போது கமலா, மகன் குரு ஆகிய 2 பேரின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே கல்லாவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கமலாவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். தாய்-மகன் இருவரும் கருகிய நிலையில் உடல் கிடந்தது. தடவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் கொலையா? தற்கொலை? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக் எதிர்பாராதவிதமாக எல்லப்பன் மீது மோதியது.
    • ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி, மாவட்டம் மத்தூர் அடுத்த அத்திக்கானூர், பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன். இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக எல்லப்பன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1060 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
    • 5-வது பிரதான மதகு ரோப், துண்டானதால் தற்போது அந்த மதகு செயல்படுத்த முடியாத வகையில் இருந்து வருகிறது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை உள்ளது.

    7மதகுகளை கொண்ட இந்த அணையில், ஒவ்வொரு மதகுகளை திறந்து மூடுவதற்கு இருபுறமும் 2 ரோப்கள் (இரும்பு கயிறுகள்) தாங்கி பிடிக்கின்றன. பிரதான 5-வது மதகின் 2 இரும்புக்கயிறுகளில், ஒன்று துண்டான நிலையில், 3 நாட்களாக அணையிலிருந்து நீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் முழுக்கொள்ளளவான 44.28 அடிகளில் தற்போது 26.9 அடியாக, நீர் குறைக்கப்பட்டுள்ளது.

    இன்று, அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 722 கன அடியாக இருந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1060 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர் வேகமாக குறைந்து வருவதால், அனைத்து மதகுகளை சரிசெய்ய பொதுப்பணித்து றையினர் வேகம் காட்டி வருகின்றனர். 5-வது பிரதான மதகு ரோப், துண்டானதால் தற்போது அந்த மதகு செயல்படுத்த முடியாத வகையில் இருந்து வருகிறது, மேலும், அணையில் நீர் குறைந்து ஏரி போன்று காட்சியளிக்கிறது.

    • பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
    • நேர்த்திக்கடனான ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலி கொடுத்தும் பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.

    காவேரிப்பட்டினம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சாமுண்டியம்மன் ஊர் பண்டிகை அனைத்து சமுதாய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதமாக ஊர் திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவில் அனைத்து சமுதாய பெண்கள் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் பொங்கல் வைக்க இடம் ஒதுக்கி உள்ள இடத்தில் தங்கள் நேர்த்திக்கடனான ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலி கொடுத்தும் பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ சாமுண்டி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு பட்டிமன்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

    ஊர் பொதுமக்களாலும் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் வானவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு காவேரிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கெலமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • இந்த ரத்த தான முகாமில் தன்னார்வலர்கள் சுமார் 100-க்கு மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அஞ்செட்டி சாலையில் உள்ள ஸ்ரீ சவுடேஸ்வரி மகாலில் கெலமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்த முகாம் வட்டார மருத்துவஅலுவலர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். இம்முகாமை தேன்க னிக்கோட்டைபேரூராட்சி தலைவர் சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், வட்டாட்சியர் குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    முகாமில் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயன், கெலமங்கலம் பள்ளி சிறார் நல மருத்துவர்கள் சங்கீதா, மணிகண்டன், அன்புச்செல்வன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த ரத்த தான முகாமில் தன்னார்வலர்கள் சுமார் 100-க்கு மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

    பொது மக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சிவகுருநாதன், ராமச்சந்திரன், ரங்கநாதன், அசோக், நவீன், சந்தோஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×