என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தலையில் கட்டியால் அவதிபட்டு 7 லட்சத்திற்கும் மேல் செலவு செய்தும் பலனின்றி ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.
    • ஜஞ்சுவப்பாவின் 3 - வது மகள் சுஜாதா மற்றும் 4-வது மகன் பஸ்வராஜ் இருவருக்கும் சிறு வயதில் இருந்தே கண் பார்வையில்லை

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பெத்த சிகரளப்பள்ளி ஊராட்சி, கங்கசந்திரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசப்பா மகன் ஜஞ்சுவப்பா (வயது 47). இவர் அருகே உள்ள குவாரியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பர்வதம்மா என்ற மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர்.இந்த நிலையில் பர்வதம்மா தலையில் கட்டியால் அவதிபட்டு 7 லட்சத்திற்கும் மேல் செலவு செய்தும் பலனின்றி ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் ஜஞ்சுவப்பாவின் மூத்த மகள் கமலாவுக்கு திருமண மாகி 2 குழந்தைகள் உள்ளனர். கெலமங்கலத்தில் வசித்து வந்த கமலா ரத்த புற்றுநோயால் அவதிபட்டு அவரும் இறந்துவிட்டார்.ஜஞ்சுவப்பாவின் 2-வது மகன் தனுஜெயம் திருமண மாகி வெளியூரில் உள்ளார். ஜஞ்சுவப்பாவின் 3 - வது மகள் சுஜாதா மற்றும் 4-வது மகன் பஸ்வராஜ் இருவருக்கும் சிறு வயதில் இருந்தே கண் பார்வையில்லை. தற்போது 2 பேரும் ஆஸ்டலில் தங்கி இருந்து படித்து வருகின்றனர். 2 பேரும் படிப்பிலும், பாடல் பாடுவதிலும் இசை அமைப்பதிலும் ஆர்வமாக உள்ளனர். அரசு மூலம் உதவிகள் கிடைத்தால் இவர்களது எதிர்காலத்திற்கு வாய்ப்பாக அமையும் என்று ஜஞ்சுவப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

    • கொடியேற்று விழா மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார்.

    ஓசூர்,

    ஓசூர் தாலுக்கா அலுவலகம் முன்பு மற்றும் சீதாராம்நகரில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலம் முன்பு கட்சியின் கட்டமைப்பு மாநில செயலாளர் சிவஇளங்கோ, தகவல், தொழில்நுட்பம் மற்றும் ஊடக பிரிவு மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம், கட்டமைப்பு மாநில துணை செயலாளர் ஜெய்கணேஷ், பொறியாளர் அணி மாநில செயலாளர் வைத்தீஸ்வரன் ஆகியோர் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழா மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார். மேலும் இதில்மண்டல பொறியாளர் அணி அமைப்பாளர் சார்லஸ் ராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்வின் டேவிட் , பரந்தாமன், இளைஞரணி அமைப்பாளர் மசூத் , மாணவரணி அமைப்பாளர் தௌசிப், ஊடக பிரிவு அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட தொழிலாளர் அணி நிர்வாகி அம்ரேஷ் , மகளிரணி நிர்வாகி ஜோய்ஸ் மேரி, மாநகர செயலாளர்கள் பால கிருஷ்ணன்,தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • காரை ஒட்டி வந்த சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த செர்மலி (வயது 43) என்பவரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் சிப்காட் போலீசார் ரிங் ரோடு மூக்கண்டபள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்

    அப்போது அந்த காரில் ரூ.4,82,300 மதிப்பிலான 218 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிய வந்தது. காரை ஒட்டி வந்த சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த செர்மலி (வயது 43) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது இந்த புகையிலை பொருட்களை பெங்களூருவிலிருந்து சென்னைக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    புகையிலை பொருட்களை காருடன் பறிமுதல் செய்த போலீசார் இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி ஒன்று முருகன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வாழப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் தனது மோட்டார்சைக்கிளில் ஓசூர் பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    ஓசூர்-தளி சாலையில் அவர் சென்ற போது பின்னால் வந்த லாரி ஒன்று முருகன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • துர்க்கையம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட புனித இஞ்ஞாசியாரின் திருத்தேர் விழா நடந்தது.

    ஓசூர்,

    ஓசூர் பெரியார் நகரிலுள்ள வேல்முருகன் கோவில் வளாகத்தில் துர்க்கையம்மன் சன்னிதி உள்ளது. இங்கு ஆடிப்பூரத்தையொட்டி நேற்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து துர்க்கையம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர், நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.இதனை தொடர்ந்து 11 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

    பாகலூர் அட்கோ பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு ஆடிப்பூரத்தை யொட்டி ஒரு லட்சம் வளையல் அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும் ஓசூர் பிரம்மமலையில் உள்ள வராகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    • உண்டியலை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் சிலையை எடுத்து சென்றனர்.
    • இன்றுகாலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்றிரவு உண்டியலை உடைப்பதற்கு மர்ம நபர்கள் புகுந்து முயற்சி செய்துள்ளனர்.

    சுவற்றுடன் ஓட்டி இருப்பதால் உண்டியலை உடைக்க முடியவில்லை. இதனால் அருகில் இருந்த துர்கை அம்மன் சிலையை உடைத்து எடுத்து சென்றனர். இன்றுகாலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பாலமுருகன் கோவிலில் துர்கை அம்மன் சிலையை உடைத்து எடுத்து சென்றுள்ளனர். பணம் கிடைக்காத காரணத்தால் சுமார் 4-க்கும் மேற்பட்ட சிலைகளை சேதப்படுத்தியும் சென்றது தெரியவந்துள்ளது.

    ஊத்தங்கரை பகுதியில் கோவிலில் உண்டியலை உடைப்பது வழக்கமாக இருந்த நிலையில் தற்போது உண்டியல் உடைக்க முடியாத காரணத்தினால் சிலையை திருடிச் சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நீங்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் வெற்றிகரமாக செலுத்திக்கொண்டு ள்ளீர்கள் என குறுஞ்செய்தி வந்தது.
    • வேடிக்கை என்னவென்றால், அவர் 2-ம் தவணை தடுப்பூசியை இன்னும் செலுத்திக்கொள்ள வில்லை.

    ஓசூர்,

    ஓசூர் நகர ம.தி.மு.க. செயலாளராக இருப்பவர் குமரேசன். இவரது மொபைலுக்கு, ஓசூர் சீதாராம் நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில், நீங்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் வெற்றிகரமாக செலுத்திக்கொண்டு ள்ளீர்கள். அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் 2-ம் தவணை தடுப்பூசியை இன்னும் செலுத்திக்கொள்ள வில்லை. ஆனால், 2- ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக பதிவேற்றம் ஆனதால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்பு கொண்டபோது, அங்கிருந்து அலட்சியமாக பதில் கிடைத்ததாம்.

    எனவே, இதுபோன்று இன்னும் எத்தனை பேருக்கு, தடுப்பூசி செலுத்திக்கொள்ளா மலேயே தவறான தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்பதை ஓசூர் சப்- கலெக்டர் மற்றும் அரசு மருத்துவனை தலைமை மருத்துவர் ஆகியோர் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரேசன் வலியுறுத்தியுள்ளார்.

    • கடந்த மாதம் 11-ந்தேதியன்று வீட்டை விட்டு சென்ற சித்ரா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற வாலிபருடன் சித்ரா சென்றது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி.

    ஓசூர் டவுன் போலீஸ் சரகம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சித்ரா (வயது 23)கடந்த மாதம் 11-ந்தேதியன்று வீட்டை விட்டு சென்ற சித்ரா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து பல்வேறு இடங்களிலும் சதீஷ் தேடிப்பார்த்ததும் சித்ரா குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற வாலிபருடன் சித்ரா சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசில் சதீஷ் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சித்ராவையும், பாலமுருகனையும் தேடி வருகின்றனர்.

    • தீராத வயிற்று வலியால் அருண்குமார் அவதிப்பட்டு வந்தார்.
    • கடந்த 25-ந்தேதி விஷம் குடித்துவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் திட்டம்பட்டியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் அருண்குமார் (வயது 24).

    தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அருண்குமார் இதில் மனமுடைந்து கடந்த 25-ந்தேதி விஷம் குடித்துவிட்டார்.

    மயங்கி கிடந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    • கடந்த 2 ஆண்டுகளாக பணி மாறுதல்கள் வழங்கப்படாமல் உள்ளது.
    • பணியாளர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அந்தோணி ஆல்பர்ட் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் தில்லை நடராஜன், மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

    தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாநில துணை தலைவர் திலகர், மாநில துணை பொதுச் செயலாளர் ஹென்றி தாமஸ், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் பள்ளி கல்வித்துறையில் அடிப்படை பணியாளர் முதல் நேர்முக உதவியாளர் வரை பணிபுரிபவர்களுக்கு காலி பணியிடங்கள் இருந்தும்,

    கடந்த 2 ஆண்டுகளாக பணி மாறுதல்கள் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பணியாளர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் பணிபுரிந்து வருகிறார்கள். எனவே உடனடியாக பணி மாறுதல்கள் வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி, மாவட்ட செயலாளர் கண்ணன், முன்னாள் மாநில துணை தலைவர் நந்தகுமார், நிர்வாகிகள் நாகராஜன், நாராயணன், ராமகிருஷ்ணன், கிருஷ்ணன், விஜியேந்திரன், அஞ்சலா, ஜெயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக இன்று காலை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
    • இதன் மூலம் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்த 22 கிராமங்களில் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

    ஓசூர்,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவுப்படி, ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக இன்று காலை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இதில், ஒய் பிரகாஷ்.எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஷ்வரி, ஓசூர் சப்-கலெக்டர் தேன்மொழி, ஆகியோர் கலந்துகொண்டு, அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.

    இதன் மூலம் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்த 22 கிராமங்களில் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் இந்த நிகழ்ச்சியில், தாசில்தார் கவாஸ்கர், துணை மேயர் ஆனந்தய்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள கருமாரி யம்மன் கோவில் அருகே கூட்டம் நடந்தது.
    • இக்கூட்டத்திற்கு, 29-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தில்ஷாத் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    ஓசூர் 29-வது வார்டு அ.தி.மு.க.செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள கருமாரி யம்மன் கோவில் அருகே நடந்த இக்கூட்டத்திற்கு, 29-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தில்ஷாத் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

    கிழக்கு பகுதி அ.தி.மு.க. அவைத்தலைவர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கிழக்கு பகுதி அ.தி.மு.க.செயலாளர் ராஜி, மண்டல தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், புருஷோத்தம ரெட்டி ஆகியோர் கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்கள். வட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சங்கர் என்ற குபேரன் உள்பட பலர் பேசினர்.

    கூட்டத்தில் வட்ட பொருளாளர் மகாதேவன், மோகன்ராஜ், வெங்கடேஷ், தனபால் சுரேஷ், மதுராஜ் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

    ×