என் மலர்
கிருஷ்ணகிரி
- ஹைதர் அலி, ஷானுமாவும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
- குடும்ப தகராறு காரணமா? அல்லது கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா? வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஹைதர் அலி (வயது45). இவருடைய மனைவி ஷானுமா (40). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.
கணவன்-மனைவி இருவரும் பை செய்யும் தொழில் செய்து வந்தனர். நேற்று காலையில் ஹைதர் அலியும், ஷானுமாவும் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கணவன்-மனைவி இருவரும் வீட்டிலேயே இருந்தனர்.
மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த பிள்ளைகள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஒரு அறையில் ஹைதர் அலி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிள்ளைகள் கதறி அழுதனர். உடனே ஷானுமாவை தேடினார்கள். மற்றொரு அறையில் அவரும் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஹைதர் அலி, ஷானுமா இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதர் அலி, ஷானுமாவும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. குடும்ப தகராறு காரணமா? அல்லது கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா? வேறு ஏதேனும் காரணமா?என்று பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- இருசக்கர வாகனத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார்.
- சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தாஸ் உயிரிழந்தார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள நஞ்சுண்டேஸ்வரர் நகர் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது64). ஓய்வு பெற்ற தாசில்தாரரான இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தாஸ் உயிரிழந்தார்.
- நகரின் முக்கியமான பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு பழுதடைந்ததாக வந்த புகாரையடுத்து, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
- ஜனவரி மாதம் முதல், மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்குகளில் எல்.இ.டி., பல்புகள் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகரின் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின் விளக்கில் சில பல்புகள் செயல்படவில்லை. நகரின் முக்கியமான பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு பழுதடைந்ததால் இரவு நேரங்களில் வணிகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் உயர் கோபுர மின் விளக்கில் பழுதடைந்த பல்புகளை மாற்றி, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகளை நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் ஆய்வு செய்தார். அப்போது தி.மு.க. நகர செயலாளர் நவாப், கவுன்சிலர்கள் மத்தீன், பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனல்சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
இது குறித்து நகராட்சி தலைவர் கூறுகையில், நகரின் முக்கியமான பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு பழுதடைந்ததாக வந்த புகாரையடுத்து, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வரும் ஜனவரி மாதம் முதல், மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்குகளில் எல்.இ.டி., பல்புகள் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார், ரூ.2.50 கோடி ரூபாய் மதிப்பில், 1,990 எல்.இ.டி., பல்புகள் அமைக்கப்படவுள்ளன என தெரிவித்தார்.
- வளாகத்திற்குள் தெரு நாய்கள் புகுந்து பள்ளி மாணவர்களை அச்சுறுத்துவதால் பள்ளியில் சுற்று சுவர் உடனடியாக அமைக்க வேண்டும்,
- இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்ற வேண்டும்,
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி மார்கிரேட் சோபியா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி வினோதினி சின்னதம்பி, வார்டு கவுன்சிலர் கௌரி சென்னீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பள்ளி வளாகத்திற்குள் தெரு நாய்கள் புகுந்து பள்ளி மாணவர்களை அச்சுறுத்துவதால் பள்ளியில் சுற்று சுவர் உடனடியாக அமைக்க வேண்டும், இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்ற வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதிக்காக குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பெரும்பாலான குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஹேமலதா நன்றி கூறினார். கூட்டத்தில் அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.
- பயிற்சி முகாம் திட்ட இயக்குனர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.
- முகாமில் 624 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
சூளகிரி,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பாக சூளகிரி வட்டார அளவில் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் திட்ட இயக்குனர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 624 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் 26 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் 126 நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- நேரடியாக கள ஆய்வு மேற்கொள்வதற்கும் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஓசூருக்கு வருகை தர உள்ளார்.
- பெங்களூருவில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ெரயில் திட்டமானது, விரிவாக்கம் செய்யப்படுவதற்கு சாத்தியக்கூறுகளை ஆய்வு.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மேற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில், கட்சியின் மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான சி.நரசிம்மன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
"ஓசூர்-கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு சென்னை ரயில்வே பாதை அமைக்கும் புதிய திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயாரிப்பதற்கு ஏற்கனவே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது சம்பந்தமாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏற்கனவே 1,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்ட பணிகளை தொடக்குவதற்கான முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இந்த நிலையில், அடுத்த (ஜனவரி) மாதம் இந்த திட்டம் குறித்து விளக்குவதற்கும் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்வதற்கும் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஓசூருக்கு வருகை தர உள்ளார்.
மேலும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ெரயில் திட்டமானது, விரிவாக்கம் செய்யப்படுவதற்கு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை தயாரிப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் 17-வது இடத்தை பிடித்துள்ள ஓசூர் மாநகருக்கு உலகத்தரம் வாய்ந்த மாவட்ட அளவிலான மிகப்பெரிய மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அரசு சார்பில் ஏற்கனவே 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை அமைப்பதற்கு தேவையான நிலத்தை, தமிழக அரசு விரைவில் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். பேட்டியின்போது, மாவட்ட தலைவர் நாகராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- மாநகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- பள்ளிகளில் கல்வித்தரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டி ற்காக மேற்கொள்ளப்படும் சிறப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சியில், கல்விக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு, கல்விக்குழு தலைவர் எச். ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில், மாநகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும்,பள்ளிகளில் கல்வித்தரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டி ற்காக மேற்கொள்ளப்படும் சிறப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் பேசுகையில்:-
"ஓசூர் மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் 44 அரசு பள்ளிகளையும் தூய்மை மற்றும் சுகாதாரத்தில், தமிழகத்திலேயே முன்மாதி ரியான பள்ளிகளாக மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், டெல்லி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இயங்கும் அரசு பள்ளிகளை முன் உதாரணமாக சுட்டிக் காட்டும் நிலைமை மாறி, அவர்கள் தமிழகத்தில் குறிப்பாக, ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளின் நிலவும் தூய்மை மற்றும் சுகாதார மேம்பாட்டு அம்சங்களை முன் உதாரணமாக சுட்டிக் காட்டும் அளவிற்கு மாற்றி அமைக்க உறுதி எடுத்துள்ளோம் என்று கூறினார்.
கூட்டத்தில் பேசிய ஆணை யாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சிக்குப்பட்ட 34 அரசு பள்ளிகளில், பராமரிப்பு பணிகளுக்காக ரூ. 5.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் இந்த கூட்டத்தில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முனிராஜ் மற்றும் சிவராமன், யசஷ்வினி மோகன் உள்ளிட்ட கல்விக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியும் கடந்த, 2019 ஜனவரி மாதம் 16- ந் தேதி இறந்தார்.
- குற்றம் சாட்டப்பட்ட தமிழரசனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ், 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, 20 ஆண்டு சிறை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
கிருஷ்ணகிரி,
கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கூலிதொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த புங்கனை கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர், கடந்த, 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த நிலையில் கல்லூரி மாணவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை பெற்றோர்
மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்த போது அவர், 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இது குறித்து மாணவியிடம் பெற்றோர் கேட்ட போது அதற்கு தமிழரசன் காரணம் என தெரிவித்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் தமிழரசனிடம் கேட்டபோது, மாணவியின் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை எனக்கூறி தகராறு செய்தார்.
இந்த நிலையில் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்தது. மேலும் ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியும் கடந்த, 2019 ஜனவரி மாதம் 16&ந் தேதி இறந்தார். மகளை கர்ப்பமாக்கி, ஏமாற்றியதாக கல்லூரி மாணவியின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தமிழரசனை போலீசார் கைது செய்தனர்.
மரபணு பரிசோதனையில் இறந்த குழந்தை தமிழரசன் மூலம் பிறந்தது உறுதியானது.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுதா நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தமிழரசனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ், 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, 20 ஆண்டு சிறை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.
- சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
- பணம் வைத்து சூதாடிய மாதேஷ் (26), சிவக்குமார் (25) உள்பட நான்கு பேர் கைது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னபத்தலப்பள்ளி கிராமம் சுற்று வட்டார பகுதிகளில் வேப்பனப்பள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் மார்க்கண்டேயன் நதியின் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
விசாரணையில் சின்னபத்தலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது21), குமார் (26), மாதேஷ் (26), சிவக்குமார் (25) ஆகிய நான்கு நபர்களும் அப்பகுதியில் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீ சார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து ரூபாய் 400 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
- திடக்கழிவு கட்டிடத்தில் இருந்து வந்த ரசாயனம் பரவி தான் மாணவர்கள் பாதிப்பு அடைந்தனர் என்று தெரிகிறது.
- திடக்கழிவு பிரிக்கும் கட்டிடம் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஓசூர்,
ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகே, மாநகராட்சி நிர்வாகம் சார்பில்
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கட்டிடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குபகுதி மக்கள், விளையாட்டு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி, விளையாட்டு மைதானத்தை நேரில்
பார்வையிட்டு, பின்னர் நிருபர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
, இந்த இடம் ஒரு டிரஸ்டுக்கு சொந்தமான இடம். இந்த இடத்தில் மாநகராட்சி கட்டிடம் கட்டுவதற்கோ, கல்லூரி கட்டுவதற்கோ அனுமதி அளிக்கவில்லை. இந்த இடத்தில் சர்வதேச விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் கிரிகெட், ஹாக்கி, ஸ்கேட்டிங், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை இங்கு நடத்த வரைவு போடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்த இடத்தில் திடக்கழிவு பிரிக்கும் கட்டிடம் கட்டும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த பணியை உடனே நிறுத்த வேண்டும். மேலும் இங்கு சர்வதேச விளையாட்டு அரங்கம் கட்டவேண்டும்.
கடந்தசில நாட்கள் முன்பு காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்றனர். எதனால் அவர்கள் மயக்கம் அடைந்தார்கள்? என இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. பள்ளியின் அருகே இருக்கும் மாநகராட்சியின் திடக்கழிவு கட்டிடத்தில் இருந்து வந்த ரசாயனம் பரவி தான் மாணவர்கள் பாதிப்பு அடைந்தனர் என்று தெரிகிறது.
எனவே இங்கு திடக்கழிவு பிரிக்கும் கட்டிடம் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கட்சி தலைமையின் அனுமதி பெற்று, மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயபிரகாஷ், நகரமைப்பு குழு தலைவர் அசோகா, அதிமுக கிழக்குபகுதி செயலாளர் , ராஜி, நாகொண்டபள்ளி கூட்டுறவு வங்கி தலைவர் கே.சாக்கப்பா, நடைபயிற்சியாளர்கள் சங்க தலைவர் மல்லேஷ், செயலாளர் லிங்கம், செந்தில் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நேற்று முன்தினம் நள்ளிரவு விஜய் தனது நண்பர்களுடன் மாணவியின் ஊருக்குள் விஜய் மற்றும் அவருடன் 10-க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
- கிராம மக்களிடையே பேச்சிவார்த்தை நடத்தி இளைஞர்களை மீட்டு மத்தூர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள குள்ளம்பட்டி ஊராட்சி, சந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த கல்லூரி ஒருவர் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இந்த மாணவியை காவே ரிப்பட்டிணம் ஒன்றியம் மலையாண்டஹள்ளி புதூர், குட்டி வேடிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்கரை என்பவரது மகன் விஜய் (வயது 22), கார் டிரைவரான இவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவி கல்லூரி முடித்து பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது விஜய் மாணவியிடம் காதலிக்குமாறு வற்புர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அந்த கல்லூரி மாணவியை விஜய் தாக்கியுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு விஜய் தனது நண்பர்களுடன் மாணவியின் ஊருக்குள் விஜய் மற்றும் அவருடன் 10-க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அங்கு திரண்ட கிராம மக்கள் அந்த இளைஞர்களை பிடித்து கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்பேரில் அங்கு வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அமலா அட்வின் நேரில் விசாரணை நடத்தினார்.
பின்னர் கிராம மக்களிடையே பேச்சிவார்த்தை நடத்தி இளைஞர்களை மீட்டு மத்தூர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் அவர்களிடம் இருந்து பத்து செல்போன் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் விஜய் மீது வழக்கு பதிவு போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 14 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தூர்:
பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விருதாச்சலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் இன்று அதிகாலை 2 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகில் வரும்போது எதிரே வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்தின்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.
விபத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த கணபதி (வயது32), திருக்கோவிலூரை சேர்ந்த ரேணுகா (33), சேட்டு (36), மங்களம் பேட்டையை சேர்ந்த சேகர் (40), வேட்டவலத்தை சேர்ந்த முத்து (40), சங்கீதா (31), அரியூரை சேர்ந்த செல்வகுமார் (48), சென்னம்மாள் (40), அரும்பாலவாடியை சேர்ந்த சக்திவேல் (26), கீழ் பெண்ணாத்தூரை சேர்ந்த மேகராஜ் (32), விருத்தாசலத்தை சேர்ந்த ரோஜா (45), கள்ளக்குறிச்சியை சேர்ந்த அலமேலு (40), ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மூர்த்தி (48), குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பேருந்து நடத்துனர் வீரமணி (40) உள்பட 14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து சிங்காரபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 14 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் விபத்தில் சிக்கிய லாரி, பேருந்து ஆகியவை அகற்றினர்.
இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






