என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் மத்திய அரசின் ரூ.100 கோடி நிதியில் மாவட்ட அளவிலான மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது- பாஜனதா கட்சி மாநில செய்தி தொடர்பாளர் தகவல்
- நேரடியாக கள ஆய்வு மேற்கொள்வதற்கும் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஓசூருக்கு வருகை தர உள்ளார்.
- பெங்களூருவில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ெரயில் திட்டமானது, விரிவாக்கம் செய்யப்படுவதற்கு சாத்தியக்கூறுகளை ஆய்வு.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மேற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில், கட்சியின் மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான சி.நரசிம்மன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
"ஓசூர்-கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு சென்னை ரயில்வே பாதை அமைக்கும் புதிய திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயாரிப்பதற்கு ஏற்கனவே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது சம்பந்தமாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏற்கனவே 1,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்ட பணிகளை தொடக்குவதற்கான முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இந்த நிலையில், அடுத்த (ஜனவரி) மாதம் இந்த திட்டம் குறித்து விளக்குவதற்கும் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்வதற்கும் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஓசூருக்கு வருகை தர உள்ளார்.
மேலும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ெரயில் திட்டமானது, விரிவாக்கம் செய்யப்படுவதற்கு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை தயாரிப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் 17-வது இடத்தை பிடித்துள்ள ஓசூர் மாநகருக்கு உலகத்தரம் வாய்ந்த மாவட்ட அளவிலான மிகப்பெரிய மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அரசு சார்பில் ஏற்கனவே 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை அமைப்பதற்கு தேவையான நிலத்தை, தமிழக அரசு விரைவில் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். பேட்டியின்போது, மாவட்ட தலைவர் நாகராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






