என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கட்டுபாட்டை இழந்து லாரி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
    • அதிர்ஷ்ட வசமாக ஓட்டுனர் செந்தில் உயிர்த்தப்பினார்.

    மத்தூர்,

    வேலூரில் இருந்து லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை வேலூரை சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டினார்.

    அப்போது நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காட்டேரி கிராமம் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து லாரி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் அதிர்ஷ்ட வசமாக ஓட்டுனர் செந்தில் உயிர்த்தப்பினார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மானியத்தில் இருந்து 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
    • மூன்று பணிகளையும் அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த அகசிப்பள்ளி ஊராட்சி மோட்டூர் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், 15&வது நிதிக்குழு மானியத்தில் இருந்து, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் பஞ்சாயத்து நேதாஜி நகரில் நீண்ட நாட்களாக சாக்கடைக் கால்வாய் வசதி இன்றி கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் சாக்கடைக் கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி அ.தி.மு.க,., எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்தூர் கிராமத்தில், 15வது நிதிக்குழு மானியத்தில் இருந்து 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இந்த மூன்று பணிகளையும் அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர், முன்னாள் வங்கித் தலைவர் சின்னசாமி, கிளை செயலாளர்கள் பாண்டியன், சுப்பு, கவுன்சிலர் ரவி, மாவட்ட பிரதிநிதி மாது, வங்கி துணைத் தலைவர் ரமேஷ், கவுன்சிலர் ராதா சென்றாயன், திம்மராயன், குமார், செல்வன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் பாலம் கீழே ஆண் சடலம் மிதந்தது.
    • சடலத்தின் முகங்கள் சிதைக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் சரியாக வயது கூட கணிக்க முடியாத நிலையில் கண்டெடு க்கப்பட்டுள்ளது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் நேற்று காலை சேலம் செல்லும் பாலம் கீழே ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஊத்தங்கரை காவல்துறையினர் தீயணைப்புத் துறையினரை வரவழைக்கப்பட்டு சடலத்தை மீட்டு பார்த்தபோது சடலம் ஆற்றில் அடித்து வரப்பட்டது தெரியவந்தது.

    சடலத்தின் முகங்கள் சிதைக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் சரியாக வயது கூட கணிக்க முடியாத நிலையில் கண்டெடு க்கப்பட்டுள்ளது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீசார் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் யார்? எந்த பகுதியைச் சார்ந்தவர்? இது கொலையா? தற்கொலையா? என போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் சடலம் மீதந்து வந்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார்கள் அனைத்தும் நாளை மூடப்படும்
    • உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மகாவீர் ஜெயந்தி தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) மது விற்பனை இல்லாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், மதுக்கூடங்களுக்கு உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார்கள் அனைத்தும் நாளை மூடப்படும்.

    இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரவு, பகல் வேலைகளில் கழிவுகளை சாக்கு மூட்டையில் எடுத்து வந்து சாலை ஓரமாக விசிசெல்கின்றனர்.
    • பொதுமக்கள் முகம் சுழித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 100- மேற்பட்ட கோழி, ஆடு, இைறச்சி கடைகள் உள்ளன.

    இந்த கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை ஒசூர், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பாளையம் எதிரே இரவு, பகல் வேலைகளில் கழிவுகளை சாக்கு மூட்டையில் எடுத்து வந்து சாலை ஓரமாக விசிசெல்கின்றனர்.

    இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முகம் சுழித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

    சாலை ஓரம் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் வாய்தகராறு நடந்தது.
    • விரக்தியடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பந்தாரபள்ளி பகுதியைச் நஞ்சுப்பா (வயது34).

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் வாய்தகராறு நடந்தது.

    உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் சமாதானப் படுத்தினர்.

    அப்போது நஞ்சுப்பாவை கிராம மக்கள் திட்டியதாக தெரிகிறது.

    இதனால் விரக்தியடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நஞ்சுப்பாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேன்கனிக்கோட்டை பேட்ட ராயசுவாமி கோவில் பிரம்மோத்சவ விழா நடைபெற்று வருகிறது.
    • முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை 4-ம் தேதி காலை 10 மணி அளவில் தேர்திருவிழா நடைபெறுகிறது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேட்ட ராயசுவாமி கோவில் பிரம்மோத்சவ விழா நடைபெற்று வருகிறது.

    இன்று இரவு இரவு 9 மணிக்கு கஜேந்திர மோக்ஷம் என்ற ராமபானம் நிகழ்ச்சி, முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை 4-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி அளவில் தேர்திருவிழா நடைபெறுகிறது.

    இரவு 8 மணிக்கு சம்பூர்ன இராமயானம் நாடகம், மறுநாள் (5ம் தேதி) காலை 8 மணிக்கு. எருது விடும் விழா, இரவு பாட்டுகச்சேரி பல்லக்கு ஊர்வலம் மற்றும் வானவேடிக்கை நடை பெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • வீட்டின் வெளியே விளையாடிய போது சங்கரி யை தாய் திட்டியதாக தெரிகிறது.
    • சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கால்வேஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் சங்கரி (வயது16).

    இந்த சிறுமி அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது தாய் திட்டியதாக தெரிகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த சிறுமி சங்கரி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனேஅவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார்.
    • சிறுமி இந்துபிரியா நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீெரன்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியை அடுத்த சின்னகரடி முருகேசன்.

    இவரது மகள் இந்துபிரியா (வயது 14). இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார்.

    இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலனில்லாமல் போனது.

    இதனால் விரக்தியடைந்த அந்த சிறுமி இந்துபிரியா நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீெரன்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட பெற்றோர்கள் சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்த தகவலறிந்த நாகரசம்பட்டி போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை ஆக்கிரமிப்பு செய்து தங்களின் கடைக்கு வெளியே இருபுறமும் தங்கள் கடை பொருட்களை வைத்துள்ளனர்.
    • சாலை ஓரமாகவே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் அங்கு மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக காவேரிப்பட்டணம் நகரம் திகழ்ந்து வருகிறது.

    இந்த நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்நகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஏராளமானவை உள்ளன. அவற்றுக்கு தினமும் பல தரப்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.

    காவேரிப்பட்டணம் நகரில் முக்கிய சாலையாக சேலம் மெயின் ரோடு உள்ளது. இந்த மெயின் ரோட்டில் பூக்கடை, பழக்கடை, பூஜைக்கடை, புத்தகக்கடை, மளிகைக்கடை, பாத்திரக்கடை, செருப்புக்கடை, துணிக்கடை, எலக்ட்ரிக்கல் கடை உள்ளிட்ட ஏராளமான கடைகளை நடத்தி வரும் கடைக்காரர்கள் அவர்களின் கடைக்கு வெளியே சுமார் 5 அடி தூரத்திற்கு நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து தங்களின் கடைக்கு வெளியே தங்கள் கடைகளை வைத்துள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் நடைபாதையில் செல்ல முடியாமலும், காலை மற்றும் மாலை நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும், மேலும் அக்கடைகளுக்கு வருவோர் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகளை சாலையை ஆக்கிரமித்து ரோட்டிலேயே நிறுத்தி ஏற்றி இறக்கி விடுவதால் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

    மேலும் காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய பகுதியாக சக்தி விநாயகர் கோவில் நான்கு ரோடு சந்திப்பு உள்ளது. இச்சந்திப்பிலிருந்துதான் சேலம் நெடுஞ்சாலை மற்றும் பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் செல்ல வேண்டும்.

    இச்சந்திப்பில் உள்ள கடை வைத்திருக்கும் கடைக்காரர்கள் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து கடை வைத்திருப்பதால் இங்கு முக்கிய நான்கு ரோட்டில் உள்ள மசூதி முன்பும், சேலம் நெடுஞ்சாலையின் நெடுகிலும் சாலை ஓரமாகவே இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது அங்கு பேரிகார்டுகளை வைத்து சாலையின் ஓரமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும்.

    இது குறித்து காவல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுத்தி பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    • ஊர் திருவிழா பல்வேறு காரணங்களால் 16 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது
    • ஊர்வலமாக சென்று,அம்மனுக்கு படைத்து, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சின்னஎலசகிரி கிராமத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டை மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு விழா மற்றும் ஊர் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக சென்று,அம்மனுக்கு படைத்து, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

    சின்ன எலசகிரி கிராமத்தில் தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெற்று வந்த ஊர் திருவிழா பல்வேறு காரணங்களால் 16 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

    இந்த நிலையில், மாவிளக்கு மற்றும் ஊர் திருவிழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழா நிகழ்ச்சிகள், கடந்த 31-ஆம் தேதி சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் தொடங்கியது.

    இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக, ஓசூர் தர்கா பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்தும், மாவிளக்கு ஏந்தியும், தாரை, தப்பட்டைகள் முழங்க சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நடனமாடியவாறு, ஊர்வலமாக சென்று சின்ன எலசகிரியில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒரே நேர்கோட்டில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கோட்டை மாரியம்மன், முத்து மாரியம்மன், ஓம் சக்தி அம்மன், முனீஸ்வரர் உள்ளிட்ட 15 கிராம தேவதைகளுக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.

    மேலும், பக்தர்கள் பலர் அலகு குத்திக்கொண்டு, அந்தரத்தில் தொங்கியவாறு ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து, மாலை பூங்கரம் எடுத்துச் சென்றும், இரவு இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.  

    • 10 ஆண்டுகளில் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் 100 சதவிதம் தேர்ச்சியை பெற்று வருகிறது.
    • பள்ளியில் கணினி ஆய்வகங்கள் மற்றும் மிதிவண்டிக்கான நிழல்கூடம் இடத்தை திறந்து வைத்தனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள திப்பனப்பள்ளி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 450 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளி தொடங்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளில் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் 100 சதவிதம் தேர்ச்சியை பெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்த அரசு பள்ளியின் வளர்ச்சியை கண்டு பெங்களூரில் இயங்கி வரும் தனியார் அறக்கட்டளை நிறுவனம் சார்பில் பள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச அதிநவீன 10 கணினி மற்றும் கணினி ஆய்வகம் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மிதிவண்டி நிறுத்தும் இடமும் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனியார் அறக்கட்டளை சார்பாக பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பள்ளியில் கணினி ஆய்வகங்கள் மற்றும் மிதிவண்டிக்கான நிழல்கூடம் இடத்தை திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் இந்த பள்ளி கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியில் 100 சதவீதம் பெற்று வந்ததை எடுத்து அறக்கட்டளை சார்பாக தமிழ்நாட்டின் முதல் பணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளிக்கு 15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற உதவிகளை வழங்கி அறக்கட்டளைக்கு பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர் சார்பாக நன்றிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×