என் மலர்
உள்ளூர் செய்திகள்

சின்னஎலசகிரியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவிழாவில் பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக சென்றனர்.
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா
- ஊர் திருவிழா பல்வேறு காரணங்களால் 16 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது
- ஊர்வலமாக சென்று,அம்மனுக்கு படைத்து, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சின்னஎலசகிரி கிராமத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டை மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு விழா மற்றும் ஊர் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக சென்று,அம்மனுக்கு படைத்து, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
சின்ன எலசகிரி கிராமத்தில் தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெற்று வந்த ஊர் திருவிழா பல்வேறு காரணங்களால் 16 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில், மாவிளக்கு மற்றும் ஊர் திருவிழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழா நிகழ்ச்சிகள், கடந்த 31-ஆம் தேதி சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் தொடங்கியது.
இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக, ஓசூர் தர்கா பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்தும், மாவிளக்கு ஏந்தியும், தாரை, தப்பட்டைகள் முழங்க சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நடனமாடியவாறு, ஊர்வலமாக சென்று சின்ன எலசகிரியில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒரே நேர்கோட்டில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கோட்டை மாரியம்மன், முத்து மாரியம்மன், ஓம் சக்தி அம்மன், முனீஸ்வரர் உள்ளிட்ட 15 கிராம தேவதைகளுக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.
மேலும், பக்தர்கள் பலர் அலகு குத்திக்கொண்டு, அந்தரத்தில் தொங்கியவாறு ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து, மாலை பூங்கரம் எடுத்துச் சென்றும், இரவு இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.






