என் மலர்
கிருஷ்ணகிரி
- ராம நவமி விழா கடந்த மாதம் 29-ந் தேதி மாலை பூஜையுடன் தொடங்கியது.
- நேற்று முன்தினம் மாலை குத்துவிளக்கு பூஜை நடந்தன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திர சாமி கோவிலில் ராம நவமி விழா கடந்த மாதம் 29-ந் தேதி மாலை பூஜையுடன் தொடங்கியது.
30-ந் தேதி நவகிரக ஹோமம், கலச ஸ்தாபனத்துடன் ராமநவமி உற்சவம் நடந்தன. மாலை லட்சார்ச்சனை நடந்தது.
தொடர்ந்து கடந்த 3-ந் தேதி இரவு 8 மணிக்கு சீதா திருக்கல்யாண வைபமும், மங்களாரத்தியும் நடந்தன. நேற்று முன்தினம் மாலை குத்துவிளக்கு பூஜை நடந்தன. நேற்று காலை 9 மணிக்கு ஸ்ரீகர அஷ்டாக்ஷர ஹோமமும், காலை 11.30 மணிக்கு ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் நடந்தன. தொடர்ந்து மங்களாரத்தி நடந்தன. மாலை 6 மணிக்கு சாமி நகர்வலம் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டன.
- வனத்துறை வனவர் சம்பத்குமார், வன காப்பாளர் செந்தில் ஆகியோர் கூட்டு களஆய்வு மேற்கொண்டனர்.
- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மின்வேலிகள் அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்சாரம் தாக்கி உயிழப்பதை தடுக்கும் வகையில், தாழ்வான நிலையில் மின்கம்பிகள் செல்வதை உயர்த்தியும், பழுதான மின்கம்பங்களை மாற்றியும் அமைக்க மின்சாரத்துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, கிருஷ்ணகிரி கோட்ட செயற்பொறியாளர் பவுன்ராஜ், கிருஷ்ணகிரி நகர் உதவி செயற்பொறியாளர் கந்தசாமி, மேகலசின்னம்பள்ளி உதவி பொறியாளர் லட்சுமணன், வனத்துறை வனவர் சம்பத்குமார், வன காப்பாளர் செந்தில் ஆகியோர் கூட்டு களஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து மின்சார வாரியத்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், மின்விபத்துகளில் இருந்து விலங்குகளை பாதுகாக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்படும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மின்வேலிகள் அமைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே, மின்வேலி அமைப்பதை தவிர்த்து, மின்வேலியினால் மனித மற்றும் வன விலங்குகள் உயிரிழப்பதை தவிர்க்க உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
- மேல் மண் கீழாகவும் மாறும் போது மண்ணில் உள்ள சத்துக்கள் சீராக பரவுவதால் சத்துப் பற்றாக்குறை பிரச்னை குறைய வழி ஏற்படுகின்றது
- மழை நீர் மண்ணில் சேமிக்கப்படுவதால் மண்ணில் ஈரப் பதம் தக்க வைக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மழையை அனைத்து விவசாயிகளும் தவறாது கோடை உழவு செய்ய பயன்படுத்திக் கொள்ளுமாறு கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோடை உழவு செய்வதனால் மண்ணின் அடியில் உள்ள பயிர்களை உண்ணும் மற்றும் பல நோய்களை கடத்தும் பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப்புழுக்கள் ஆகியவை வெளியே கொண்டு வரப்பட்டு சூரிய ஒளி மற்றும் வெப்பம் காரணமாக கொல்லப்படும்.
மேலும் மண்ணிலிருந்து வெளி வரும் சிறு பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் போன்றவற்றை பறவைகள் கொத்தி தின்று அவைகளை அழித்து விடுவதால், அடுத்து சாகுபடி செய்யும் பயிரில் பூச்சி நோய் தாக்குதல் இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்த ஏதுவாகிறது.
மண்ணின் இறுக்கம் குறைந்து மழை நீர் எளிதில் ஊடுருவி மண்ணில் நைட்ரஜன் சத்து இயற்கையாக நிலை நிறுத்தப் படுகின்றது. மழை நீர் மண்ணில் சேமிக்கப்படுவதால் மண்ணில் ஈரப் பதம் தக்க வைக்கப்படுகிறது. மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. மண்ணில் உள்ள களைகளின் விதைகள் முளைத்து செடிகளாக வளர்கின்றது. மறு உழவு செய்யும்போது களை செடிகள் மடக்கி உழப்பட்டு மீண்டும் களைகள் வளராமல் தடுக்கப் படுவதால் களை மேலாண்மைக்கான செலவு மற்றும் நேரம் சேமிக்கப்படுகின்றது. களை செடிகள் இயற்கை எருவாக்கப்படுகிறது.
நன்கு ஆழமாக உழவு செய்யும்போது கீழ் மண் மேலாகவும், மேல் மண் கீழாகவும் மாறும் போது மண்ணில் உள்ள சத்துக்கள் சீராக பரவுவதால் சத்துப் பற்றாக்குறை பிரச்னை குறைய வழி ஏற்படுகின்றது. கோடை உழவு செய்த பின் மண் மாதிரி எடுத்து ஆய்விற்கு அனுப்பும் போது ஆய்வு முடிவுகள் மிகவும் சரியாக இருக்கும்.
மண் வளம் மற்றும் சத்து மேலாண்மை எளிதாகும். கோடை உழவு செய்யும் போது மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் வேர்கள் எளிதில் வளர்வதுடன் சத்துக்கள் எளிதாக பயிருக்கு கிடைப்பதால் நல்ல வளர்ச்சி கிடைக்கின்றது. எனவே, அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதல் கூறப்பட்டுள்ளது.
- உடனே போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
- அவரிடமிருந்து 940 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவ்குமார் மற்றும் போலீசார் நேற்று காவேரிப்பட்டணம் தேர்பேட்டை பகுதியில் எம்.ஜி.ஆர். நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் மகன் லோகேஷ் (வயது22) என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்து. அவரை உடனே போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 940 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.9400 இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- நாட்டு நல பணி திட்ட முகாம் நிறைவு விழா இட்டிக்கல் அகரம் ஊராட்சி பால குறி கிராமத்தில் நடைபெற்றது.
- கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெகன் வரவேற்றார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்ட முகாம் நிறைவு விழா இட்டிக்கல் அகரம் ஊராட்சி பால குறி கிராமத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெகன் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் நிறைவு பேருரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் குமரவேல் மாணவ, மாணவியர்களுக்கு எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்து சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். பாலக்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் சூரியப் பெருமாள், கவுன்சிலர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழாவில் அனைத்து துறை தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் இட்டிகல் அகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி சேகர், இட்டிக்கல் அகரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராதிகா திருப்பதி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெகன், ராமமூர்த்தி, ஸ்டீபன் விக்டர் ஆண்டனி ஆகியோர் நாட்டு நலப்பணித் திட்ட அறிக்கையை வாசித்தனர். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவி தனுஜா நன்றி கூறினார்.
- மர்ம கும்பல் தன்னிடம் இருந்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது.
- புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மத்திகிரி பகுதியைச் சேர்ந்த சுந்தேரசன் மகள் சுமதி (வயது28).
இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இவரது செல்போனிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் குறைந்த முதலீடு செய்ததால் தொழில் தொடங்கி அதன் மூலம் கமிஷனும், லாபம் கிடைக்கும் என்று ஒரு விளம்பர மெசேஜ் (குறுஞ்செய்தி) வந்தது. அதனை நம்பிய சுமதி உடனே மெசேஜ்-ல் வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு அவர் விவரங்களை கேட்டறிந்தார். அதன்பின்பு அந்த எண்ணில் தொடர்பு கொண்ட நபர் கூறிய வங்கி கணக்கிற்கு சுமதி ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்தை செலுத்தினார்.
அதன்பின்பு அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் மர்ம கும்பல் தன்னிடம் இருந்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் பதறிப்போன சுமதி செய்வதறியாது திணறினார்.
இதுகுறித்து சுமதி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் குற்றபிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஜினீரிங் படித்த இளம்பெண்ணிடமே வாடஸ் அப் மூலம் நூதன முறையில் மர்ம கும்பல் பணம் மோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.
- இணையவழி மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம்.
- விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
கிருஷ்ணகிரி,
டேராடூன் இந்திய ராணுவ கல்லூரியில் சிறுவர், சிறுமிகள் சேர்க்கைக்கான தகுதி தேர்வு நடைபெற ள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2023-ம் ஆண்டு பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தகுதித்தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த தேர்வு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்களை கொண்டதாகும்.
நேர்முகத் தேர்வு அறிவுக் கூர்மை மற்றும் தனித்தன்மையை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன், உத்தரகண்ட் 248003 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து, கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், டெல் பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் (வங்கி குறியீடு எண். 01576) செலுத்தத்தக்க வகையில் பொது பிரிவினருக்கு ரூ.600 மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ரூ.555 கேட்புக் காசோலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். இணையவழி மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
மேலும், 1.1.2011-ம் தேதிக்கு முன்னதாகவும், 1.7.2012-ம் தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்க கூடாது. சேர்க்கையின் போது 1.1.2024-ம் தேதியன்று அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ம் வகுபபு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். பூர்த்திய செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை - 600003 என்ற முகவரிக்கு வருகிற 15-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையத்தளத்தை பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இருசக்கர வாகனங்களை வழிப்பறி செய்த கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
- அவர்களிட மிருந்து சுமார் 32 செல்போன்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
ஓசூர்,
கடந்த 3 மாதங்களாக ஓசூர் சிப்காட் மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் கம்பெனிக்கு வேலைக்கு செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை வழிப்பறி செய்த கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் உத்தரவுப்படி ஓசூர் டி.எஸ்.பி. பாபுபிரசாந்த் மேற்பார்வையில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்ரி, தலைமையில் சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர்கள் மஞ்சுநாதன், பட்டு அன்புக்கரசன் மற்றும் போலீசார் சகிதம் தனிப்படை அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது வழிப்பறி செய்த கொள்ளையர்கள் ஓசூர் அருகே பேட்ரப்பள்ளியை சேர்ந்த ஈஸ்வரன், அபு, பரத் தனுஷ், கிரன்குமார், தினேஷ், ஆகாஷ்ராஜு, கணேஷ் மற்றும் சக்திகுமார் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிட மிருந்து சுமார் 32 செல்போன்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
- காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்கி பரிசுகளையும் அலங்கார தட்டிகளையும் பறித்து சென்றனர்.
- ஆயிரக்கணக்கான பொதுக்கள் கலந்து கொண்டு எருது விடும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பேட்டராயசுவாமி கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு முதன்முதலாக எருதுவிடும் விழா நடைபெற்றது.
இந்த எருது விடும் நிகழ்ச்சிகளில் அலங்கார தட்டிகள் மற்றும் பரிசுபொருட்களுடன் கிராமத்தின் மையப்பகுதியிலிருந்து அவிழ்த்து விடப்படும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்கி பரிசுகளையும் அலங்கார தட்டிகளையும் பறித்து செல்வார்கள்.
இதில் இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு மாடுகளை பிடித்து அடக்குவார்கள்.
இந்த நிலையில் இன்று தேன்கனிகோட்டை எருது விடும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டன.
வண்ண வண்ண கொடிகள், அலங்கார தட்டிகள் மற்றும் பரிசுப்பொருட்கள் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான காளைகள் அணி அணியாக கூட்டத்தில் சீறிப்பாய்ந்தன. களத்தில் சீறி வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் பிடித்து அடக்கினர். அப்போது காளைகளின் மேல் இருந்த பரிசு பொருட்களையும் அலங்கார தட்டிகளையும் பறித்து சென்றனர்.
இந்த விழாவில் தேன்கனிகோட்டை மற்றும் அதன் அருகேயுள்ள அஞ்செட்டி ராயகோட்டை கெலமங்கலம் சூளகிரி உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுக்கள் கலந்து கொண்டு எருது விடும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர்.
தேன்கனிகோட்டையில் முதன்முறையாக எருதுவிடும் விழா நடைபெறுவதால் இப்பகுதியோ திருவிழா போல் காட்சி அளிக்கிறது.
பேட்டராயசுவாமி கோயில் தேர்திருவிழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- 2 உண்டு உறைவிடப் பள்ளியை நடத்துவதற்கு அனுபவம் மற்றும் ஆர்வமுள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- அந்நிறுவனத்தின் பெயரில் 80 ஜி அல்லது 12 ஏஏ எக்சம்சன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் கொல்லப்பள்ளியில் செயல்பட்டு வரும் பள்ளி செல்லா, இடைநின்ற 14 வயதிற்குட்பட்ட 100 பெண் குழந்தைகள் தங்கி படிக்கும் வகையில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் 100 மாணவ, மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் கெலமங்கலம் ஒன்றியம், தேன்கனிக்கோட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி என மொத்தம் 2 உண்டு உறைவிடப் பள்ளியை நடத்துவதற்கு அனுபவம் மற்றும் ஆர்வமுள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் அனுப்பும் தொண்டு நிறுவனங்கள், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான கல்விப் பணியில் குறைந்தது 3 ஆண்டு கால அனுபவம் கண்டிப்பாக பெற்றிருத்தல் வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் சொசைட்டி ஆக்ட், டிரஸ்ட் ஆக்ட்-ன் கீழ் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.
அப்பதிவு அவ்வப்போது புதுபிக்கப்பட்டிருக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள், அந்நிறுவனத்தின் பெயரில் 80 ஜி அல்லது 12 ஏஏ எக்சம்சன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தமிழக, மத்திய அரசால் நீக்கம் செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் பட்டியலில் இருத்தல் கூடாது. அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்து, தனி அடையாளம் (யுனிக்கோடு ஐடி) பெற்றிருத்தல் வேண்டும்.
மேலும், அந்த நிறுவனத்தின் பெயரில் பேன் கார்டு வைத்திருக்க வேண்டும். கடந்த 3 நிதி ஆண்டுகளில் சுய நிதிக்குழுவின் வரவு, செலவு சார்ந்த ஆண்டு தணிக்கை விவரங்களை வைத்திருத்தல் வேண்டும்.
நிதி நிலை விவரங்கள் திருப்திகரமாக இருத்தல் வேண்டும். கடந்த 3 நிதி ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்திருக்க வேண்டும். இதுவரை எவ்வித துறை ரீதியான புகார்களுக்கும் இடமளி க்காமல் பணியாற்றிய மிக சிறந்த தொண்டு நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
இந்த தகுதியுடைய தொண்டு நிறுவனங்கள், விண்ணப்பத்தை கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் பெற்று கருத்துருக்களை வருகிற 19-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எங்கு சிகிச்சை பார்த்தும் வயிற்று வலி சரியாகவில்லை.
- கணவன் மனைவிக் கிடையே அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பாகலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரித். இவருடைய மனைவி கீதா (வயது 31). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கீதா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.எங்கு சிகிச்சை பார்த்தும் வயிற்று வலி சரியாகவில்லை.
இதனால் மன விரக்தியில் இருந்த கீதா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் ஆட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் பெரியமன வாரனப் பள்ளி அருகே உள்ள கங்கா மேடு பகுதியை சேர்ந்தவர் திம்மராஜ். இவருடைய மனைவி தீபா (எ) தேவம்மா (வயது22). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிய நிலையில் 3 குழந்தைகள் உள்ளது. கணவன் மனைவிக் கிடையே அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட தீபா கங்கா மேடு பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் தேன்கனிக் கோட்டை அருகே உள்ள தொட்ட திம்மன அள்ளி பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது18). இவருக்கு திருமணம் செய்ய வீட்டில் வரன் பார்த்து உள்ளனர். ஆனால் சரண்யாவுக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை.
இதனால் மனவரக்தியில் இருந்த சரண்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதை அறிந்த இவருடைய பெற்றோர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பயிற்சி முகாமானது மே மாதம் 31-ம் தேதி வரை நடைபெறும்.
- 10 வயது முதல் வயது வரையிலான மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பேராதரவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானம், கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது. இப் பயிற்சி முகாமானது மே மாதம் 31-ம் தேதி வரை நடைபெறும்.
10 வயது முதல் வயது வரையிலான மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் "கோச்சிங்கில்" லெவல்-1 தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் இந்த முகாமினை நடத்துவார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் விருப்பமுள்ள வர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துக்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம், 33- கே தியேட்டர் சாலை, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கொண்டு கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் குறித்து அறிய விருப்பமுள்ளவர்கள் காளிதாசன் 9994182296 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து பயிற்சிக்கான விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்துக் கொள்ளவும்.
மேற்கண்ட கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் குறித்த விவரங்களை பிரசுரிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.






