என் மலர்
கிருஷ்ணகிரி
- போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் ஏராளமான மாணவ மாணவியர் இங்கு வந்து நூல்களை படித்து பயனடைந்து வருகின்றனர்.
- வெற்றி பெற்ற மாணவருக்கு வாசகர் வட்டம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கிளை நூலகத்தில் யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட எல்லாவித தேர்வுகளும் எழுத மேற்கோள் நூல்கள் அடங்கிய தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் ஏராளமான மாணவ மாணவியர் இங்கு வந்து நூல்களை படித்து பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிளை நூலகத்தில் மேற்கோள் நூல்களை வாசித்து தேர்வெழுதிய கார்த்திக் விஜய் என்ற ஓசூர் மாணவர், யு.பி.எஸ்.சி. தேர்வெழுதி, இந்திய அளவில் 551-வது ரேங்க்கில் தேர்ச்சி பெற்று ஐ.ஆர்.எஸ், ஐ.பி.எஸ். பணிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர், கோவை வேளாண் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ஓசூர் கிளை நூலகத்தில் மேற்கோள் நூல்களை படித்து யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார்.
ஓசூர் கிளை நூலகத்தில் மேற்கோள் நூல்களை பயன்படுத்தி வெற்றி பெற்றதால், அந்த மாணவருக்கு, வாசகர் வட்டம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, வாசகர் வட்ட தலைவர் கருமலைத்தமிழாழன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெகந்நாதன், மகளிரணி தலைவர் மணிமேகலை, செயற்குழு உறுப்பினர் புருசப்பன் ஆகியோர் மாணவரை பாராட்டி பேசினர். மேலும் அவருக்கு சால்வை அணிவித்து, நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. பின்னர், மாணவர் கார்த்திக் விஜய் ஏற்புரை நிகழ்த்தினார். இதில் மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, நூலக அலுவலர்கள் செய்திருந்தனர். முடிவில், நூலகர் ரேணுகா சக்திவேல் நன்றி கூறினார்.
- நாகதோனை ரெயில் நிலையம் பகுதியில், குழந்தைகள் ஆபத்தான முறையில் இருப்புப் பாதையில் கடந்து பள்ளிக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது.
- ரெயில்வே மந்திரி, மேம்பாலங்கள் அமைக்க உரிய சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - தேன்கனிக்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே ரெயில்வே துறையில் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கீழ்மை பாலம் குறுகிய நிலையில் இருப்பதால் அந்தப் பகுதியில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதற்கு தீர்வு காணுமாறு, பல முறை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஓசூரில் அந்தப் பகுதிகளை கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி டாக்டர் செல்லகுமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓசூர், மத்திகிரி வழியாக தேன்கனிக்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலை குறுக்கே தற்போது உள்ள குறுகிய கீழ்மை பாலம் காரணமாக மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது, தொடர்கதையாகி வருகிறது. எனவே இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என நாடாளுமன்றத்திலும் மற்றும் மத்திய ரெயில்வே மந்திரியிடமும் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய ரெயில்வே அமைச்சகம் இந்த பகுதியில் பயன்பாட்டில் உள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்தி இரு வழி பாதை கீழ்மை பாலமாக அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், பெரிய நாகதோனை ரெயில் நிலையம் பகுதியில், குழந்தைகள் ஆபத்தான முறையில் இருப்புப் பாதையில் கடந்து பள்ளிக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சென்று வருவதற்கும் கூட மிகுந்த அவதிக்கு ஆளாகி வருவதால், இந்த இருப்புப் பாதை பகுதியில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை பற்றி,
ரெயில்வே அமைச்சகத்திடம் எடுத்துக் கூறி இந்த பகுதியில் குறைந்தபட்சம் லகு ரக வாகனங்கள் சென்று வரும் அளவிற்காகவாவது மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனையும் பரிசீலனை செய்த ரெயில்வே மந்திரி, இதற்கான உரிய சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் சீராகி, பொதுமக்கள் சிரமமின்றி இருப்புப் பாதையை கடக்க முடியும். இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். இந்த ஆய்வின்போது, காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
- பள்ளியின் முதல்வர் விவேக் மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வத்தையும் பாராட்டினார்.
கிருஷ்ணகிரி,
சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள ஆச்சார்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கையுந்து போட்டி நடைபெற்றது.
இதில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
பள்ளியின் முதல்வர் விவேக் மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வத்தையும் பாராட்டினார்.
- மாணவர்கள் படிப்பில் மட்டும் இல்லாமல், விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- இதில் மன வலிமையோடு செயல்பட்டால் அனைவரும் உலக அளவில் சாதிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், விளையாட்டு விடுதி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில், கால்பந்து, ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்களின் வசதிக்காக உயர் மின்விளக்கு அமைக்க வேண்டும் என, விளையாட்டு விடுதி மாணவர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக செல்லகுமார் எம்.பி. கலந்துக்கொண்டு, புதிய உயர் மின்விளக்கினை தொடங்கி வைத்து பேசுகையில், மாணவர்கள் படிப்பில் மட்டும் இல்லாமல், விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில் மன வலிமையோடு செயல்பட்டால் அனைவரும் உலக அளவில் சாதிக்கலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், மாவட்டத் துணைத்தலைவர் சேகர், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் விக்னேஷ், வழக்கறிஞர் அசோகன், ஆடிட்டர் வடிவேல், ஆறுமுகசுப்பிரமணி உள்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.
- பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் மட்டும் 800 மாணவிகள் படிக்கின்றனர்.
- வகுப்பறையில் 40 பேர் அமர்ந்து படிக்க வேண்டிய நிலையில் 80 பேர் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வகுப்பறையில் மாணவிகளுக்குக் கவனச் சிதறல் ஏற்படுகிறது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் 40 சென்ட் நிலப்பரப்பில் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப்பள்ளி கடந்த 1986-ம் ஆண்டு பெண்கள் உயர்நிலைப் பள்ளியாகவும், 2014-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
22 வகுப்பறைகளுடன் செயல்படும் இப்பள்ளியில் தற்போது, 1,800 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 52 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லை.
இதனால், ஒரே வகுப்பறையில் 80 மாணவிகள் அமர்ந்து கல்வி பயிலும் நிலையும், வகுப்பறை நடைபாதைகளில் அமர்ந்து கல்வி பயிலும் நிலையுள்ளது.
மேலும், விளையாட்டு மைதானம், போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், மாணவிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையைப் போக்க கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் கூறுகையில் இப்பள்ளியில் மலைக் கிராம மாணவிகள் அதிகம் படித்து வரும் நிலையில், பள்ளி 40 சென்ட் நிலத்தில் உள்ளது. மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் தேவை.
மேலும், இதேபள்ளியில் உருது பள்ளியும் உள்ளது. போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால், இட நெருக்கடியில் மாணவிகள் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது.
இப்பள்ளியின் அருகே செயல்பட்ட நீதிமன்றம் தற்போது, வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தைப் பள்ளி பெயருக்கு மாற்ற அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை பள்ளி பெயருக்கு மாற்றவில்லை. இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பெண் கல்விக்கு முக்கியம் என விழிப்புணர்வு செய்யும் நிலையில், இங்கு கூடுதல் வகுப்பறை கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
மேலும், கழிவறை, விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில், மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையுள்ளது. எனவே, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறிய தாவது:-
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் மட்டும் 800 மாணவிகள் படிக்கின்றனர். ஆண்டுக்கு 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் உயர் கல்விக்குச் செல்கின்றனர்.
வகுப்பறையில் 40 பேர் அமர்ந்து படிக்க வேண்டிய நிலையில் 80 பேர் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வகுப்பறையில் மாணவிகளுக்குக் கவனச் சிதறல் ஏற்படுகிறது.
போதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் விளையாட்டு மைதானம், கழிவறை வசதி களை மேம்படுத்தினால், மலைக் கிராம மாணவிகள் கல்வியில் சிறப்பிடம் பிடிக்கும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒரு ஆண் கல்வி கற்றால் தனியொருவன் பயனடைவான். ஆனால், ஒரு பெண் கல்வி கற்றால் அவள் குடும்பமும், சமுதாயமும் மட்டுமின்றி நாட்டுக்கே நற்பயன் கிட்டும். இதை செயல்படுத்த மாணவிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்களைக் கட்ட வேண்டும் என்பதே தேன்கனிகோட்டை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- தொட்டப்பனூரில் நுண்ணூர் பாசனம் அமைத்து சாமந்தி பூ செடிகள் உற்பத்தியை பார்வையிட்ட கலெக்டர் பாசன வசதிகள், செடி நடவு பணிகளை பார்வையிட்டார்.
- மத்திகிரி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள், பஸ் நிறுத்தம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் தளி ஊராட்சி ஒன்றியங்களில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.1 கோடியே 85 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதை கலெக்டர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலில் சூளகிரியில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து ஓசூர் ஒன்றியம் பூனப்பள்ளியில் மானியத்தில் ஜெர்பரா மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சொட்டு நீர்பாசனம் அமைத்து பட்டர் ரோஸ் பயிரிட்டுள்ளது. செடி நடவு பணிகள், மலர் சாகுபடி ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் தளி ஒன்றியம் தொட்டப்பனூரில் நுண்ணூர் பாசனம் அமைத்து சாமந்தி பூ செடிகள் உற்பத்தியை பார்வையிட்ட கலெக்டர் பாசன வசதிகள், செடி நடவு பணிகளை பார்வையிட்டார்.
மேலும் ஆருபள்ளியில் தோட்டக்கலைத்துறை மூலம் டிராகன் பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்ட கலெக்டர், டிராகன் பழ பராமரிப்பு பணிகள், சாகுபடி மற்றும் விற்பனை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, தளி கொய்மலர் மகத்துவ மையம் மற்றும் அலங்கார தாவரங்கள் உற்பத்தி கூடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து தளி ஒன்றியம் சங்கேப்பள்ளி கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம் மற்றும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனையும், அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை மற்றும் உணவுகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மத்திகிரி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள், பஸ் நிறுத்தம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து 5 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 460 மதிப்பில் விவசாய இடு பொருட்களை கலெக்டர் சரயு வழங்கினார்.
இந்த ஆய்வின் போது ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி, இந்தோ&இஸ்ரேல் கொய்மலர் சாகுபடி மைய திட்ட அலுவலர் ஆறுமுகம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் சரவணன், ஜெனிபர், சிவசங்கரி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- பாலியல் பலாத்காரம் மற்றும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட காரணமாக இருந்த போலீசார் மீது எஸ்.சி., எஸ்.டி., வழக்கில் பதிவு செய்ய வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஆந்திரா மாநில போலீசாரால் பாதிக்கப்பட்ட குறவர் இன பழங்குடி மக்களுக்கு நீதி விசாரணை வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவா் டில்லி பாபு தெரிவித்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரியில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- சட்ட விரோதமாக அழைத்து சென்றனர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த புளியாண்டபட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், பெண்கள் உள்ளிட்டோரை ஆந்திர மாநில போலீசார் சட்ட விரோதமாக விசாரணைக்காக அழைத்து சென்றனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு குறவர் பழங்குடி சங்கத்தின் மாநில பொருளாளர் வேலு என்பவரை நாங்கள் சித்தூர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்து, வலுவான சட்டப் போராட்டம் நடத்தினோம். இதையடுத்து வேறு வழியின்றி ஆந்திர போலீசார் 5 பேரை அனுப்பி வைத்தனர்.
திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபரை கைது செய்வதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எந்தவித தொடர்பும் இல்லாத பெண்கள், சிறுவன் ஆகியோரை கைது செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர். பெண்களை பாலியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தி உள்ளனர். ஆந்திரா மாநில போலீசாரால் பாதிக்கப்பட்ட குறவர் இன பழங்குடி மக்களுக்கு நீதி விசாரணை செய்ய வேண்டும்.
பாலியல் பலாத்காரம் மற்றும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட காரணமாக இருந்த போலீசார் மீது எஸ்.சி., எஸ்.டி., வழக்கில் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் இதில் தலையிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- தொடர்ந்து கட்டாய நிதி வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார் வந்தது.
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கட்டாய நிதி வசூலில் ஈடுபட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்சாண்டரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அலெக்சாண்டர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 3 ஆண்டுகளாக அரசு பள்ளி மேம்பாட்டு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் என்றும், தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் 5 லட்சம் ரூபாய் வரை கடந்த மூன்று ஆண்டுகளில் கட்டாய நிதி வசூல் செய்து மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடி குறித்து வந்த புகாரின் பேரில் ஏற்கனவே மாவட்ட கலெக்டர், தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கையும், சுற்றறிக்கையும் அனுப்பிய நிலையில் தொடர்ந்து கட்டாய நிதி வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார் வந்தது.
அதன் அடிப்படையில், நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கட்டாய நிதி வசூலில் ஈடுபட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்சாண்டரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- அதேபகுதியில் உள்ள பனைமரத்தில் சிறுவன் ஏறி உள்ளான்.
- அப்போது கால் தவறி மேலே இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தான்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி டைட்டான் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் உதயா (வயது15).
இந்த சிறுவன் அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அதேபகுதியில் உள்ள பனைமரத்தில் சிறுவன் ஏறி உள்ளான்.
அப்போது கால் தவறி மேலே இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தான். உடனே உறவினர்கள் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பதஞ்சலி யோகா சமிதி சார்பில் இன்று யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- இதில், ஏராளமான ஆண்கள் பெண்கள், சிறுவர்,சிறுமியர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 9-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பதஞ்சலி யோகா சமிதி சார்பில் இன்று யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில், ஏராளமான ஆண்கள் பெண்கள், சிறுவர்,சிறுமியர் கலந்துகொண்டு ஆர்வத்துடன் யோகா பயிற்சிகள் செய்தனர்.
இதில், சூரிய நமஸ்காரம், மூச்சு பயிற்சி, வயதானவர்களுக்கு எளிய பயிற்சி, பிராணயாமம் போன்ற பல்வேறு முதற் கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. யோகா சமிதியின் மாநில தலைவர் பாரஸ், பயிற்சிகளை வழங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக, பி.எம்.சி. கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.குமார், வெங்கடேஸ்வரா சுவாமிஜி, மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ், தனியார் பள்ளி தாளாளர் அஸ்வத் நாராயணா, வக்கீல் ராம்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆன்லைன் மூலம் தொடரும் பணமோசடி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மூக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது35). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு டெலிகிராமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் குறுத்தகவல் அனுப்பி இருந்தார்.
அதில் பகுதிநேர வேலை இருப்பதாகவும், இதில் குறைந்த அளவில் பணம் முதலீடு செய்தால், அதிக கமிஷன் பணம் தருவதாக வந்தது.
இதனை நம்பிய தமிழரசன் மர்ம நபர் அனுப்பிய வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்து 89 ஆயிரம் செலுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த நபரை தொடர்பு கொண்டு வேலை தருமாறு கேட்டார்.
ஆனால், அந்த மர்ம நபரை சமூக வலைத்தளத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தமிழரசன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.
இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூரில் உள்ள கே.சி.சி. நகரைச் சேர்ந்த ஸ்ரீக் (22) என்பவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது செல்போன் வாட்ஸ் அப்பில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு வந்த குறுத்தகவலை நம்பி அதிக கமிஷனுக்கு மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.
அதன்பின்பு அந்த நபரின் செல்போன் எண்ணை அவர் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது.
இதேபோன்று பெத்தமேலுபள்ளி அண்ணாநகரைச் சேர்ந்த சவீன் என்பவர் தனது செல்போனில் வந்த மெசேஜை நம்பி மர்ம நபரின் வங்கி கணக்கில் ரூ.14லட்சத்து 24 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பிறகு அந்த நபர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
இந்த தொடர் மோசடிகளை குறித்து ஸ்ரீக் மற்றும் சவீன் ஆகியோர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் தொடரும் பணமோசடி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அலெக்சாண்டர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கையும், சுற்றறிக்கையும் அனுப்பிய நிலையில் தொடர்ந்து கட்டாய நிதி வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார் வந்தது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அலெக்சாண்டர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 3 ஆண்டுகளாக அரசு பள்ளி மேம்பாட்டு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் என்றும், தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் 5 லட்சம் ரூபாய் வரை கடந்த மூன்று ஆண்டுகளில் கட்டாய நிதி வசூல் செய்து மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடி குறித்து வந்த புகாரின் பேரில் ஏற்கனவே மாவட்ட கலெக்டர், தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கையும், சுற்றறிக்கையும் அனுப்பிய நிலையில் தொடர்ந்து கட்டாய நிதி வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார் வந்தது.
அதன் அடிப்படையில், நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கட்டாய நிதி வசூலில் ஈடுபட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்சாண்டரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.






