என் மலர்
கிருஷ்ணகிரி
- கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஓசூர் ரயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், கிருஷ்ணகிரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் ரயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில துணை செயலாளர் கலாவதி கலந்து கொண்டு பேசினார். மற்றும் சிஐடியு மாவட்ட தலைவர் வாசுதேவன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000- ஓய்வுதியம் வழங்க வேண்டும், நல வாரியத்தில் நோடிப் பதிவை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
- பக்தர்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
ஆடி மாத பிறப்பை யொட்டி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் நேற்று பிறந்தது. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறுவது வழக்கம். வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பொங்கல் வைத்தல் என இந்த மாதம் முழுவதும் அம்மனை வேண்டி பக்தர்கள் வழிபடுவார்கள்.
நேற்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.
அதன்படி, கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில், அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.
இதே போல், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுர மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடந்தன. இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்களில் நேற்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
- கூட்டத்திற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.டி.சி.ஆர்.சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார்.
- பாம்புகளின் குணங்கள் குறித்து விளக்கம் அளிக்கபட்டது.
கிருஷ்ணகிரி,
பாம்பு இனங்களை பாதுகாக்கும் நோக்கிலும், பாம்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக பாம்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு நேற்று முன்தினம் கிருஷ்ண கிரியில் உள்ள டி.சி.ஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில், பாம்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.டி.சி.ஆர்.சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். டி.சி.ஆர். பஸ் உரிமையாளர் முருகேசன், சங்கீதா சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை டாக்டர்.சின்னராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தி னர்களாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செல்லக்குமார், சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை யாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்கள் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகள் நல்ல பாம்பு, கட்டு வீரியன், கண்ணாடி வீரியன், சுருட்டை வீரியன், பூ பாம்பு ஆகியவையாகும் என கூறிய அவர்கள், பாம்புகளின் குணங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம், வக்கீல் காசிலிங்கம், டாக்டர்கள் அறிவுச்செல்வன், ராஜா, உமாபதி, பர்கூர் விஜய் வித்யாலயா நர்சிங் கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவி தலைமையில் மாணவ, மாணவிகள், ஜீவா நர்சிங் கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமையில் மாணவ, மாணவிகள், டி.சி.ஆர். கல்லூரி முதல்வர் சுமதி தலைமையில் மாணவ, மாணவிகள், நாளந்தா சர்வதேச பொதுப்பணி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.சி.ஆர். மருத்துவமனை மருத்துவர்கள் ரஞ்சனா, உதயசந்திரிகா, கெமிலா, பவித்ரா, யுவதாரணி, சையத் மோகித் உசைன், முதன்மை செயல் அலுவலர் அனிதா, நிர்வாக அலுவலர் சாவீர்பாஷா ஆகியோர் செய்திருந்தனர்.
- புத்தக வடிவில் நியூயார்க் நகரில் உள்ள ப்ரோக்ளின் ஓவிய நூலகத்திற்கு அனுப்பி உள்ளார்.
- வார்லி, மதுபானி, கலம்காரி மற்றும் கோண்டுவகை என 4 வகை ஓவியங்களை வழங்கி உள்ளார்.
கிருஷ்ணகிரி,
பெங்களூரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் சாஸ்தா ரமேஷ். இவர் தான் வரைந்த இந்திய பாரம்பரிய ஓவியங்களை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜிடம் வழங்கினார். இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
மாணவர் சாஸ்தா ரமேஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க வந்தபோது இங்குள்ள சிற்பங்களைப் பார்த்து இதே போன்று பாரம்பரியம் மிக்க ஓவியங்களை வரைய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி, இந்திய பாரம்பரிய ஓவியங்களான 13 வகையான மயில்களை வாட்டர் கலரில் வரைந்து, புத்தக வடிவில் நியூயார்க் நகரில் உள்ள ப்ரோக்ளின் ஓவிய நூலகத்திற்கு அனுப்பி உள்ளார்.
இந்த ஓவியப் புத்தகம் நியூயார்க் நூலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த 13 வகையான ஓவியங்களில், பல நூறு ஆண்டுகள் பழமையான வார்லி, மதுபானி, கலம்காரி மற்றும் கோண்டுவகை என 4 வகை ஓவியங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்கி உள்ளார். இதைத் தொடர்ந்து ஓவிய ஆர்வம் உள்ளவர்களுக்கு, இந்திய பாரம்பரிய ஓவியங்களைப் பற்றியும், வகுப்புகள் எடுக்கவும், இது பற்றிய புத்தகம் எழுதவும் முயற்சி மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் பன்னீர்செல்வம், அருங்காட்சியக பணியாளர்கள் பெருமாள், செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சியின் போது 13 வகையான ஓவியங்கள் குறித்து அருங்காட்சியகத்தில் கல்வெட்டு பயிற்சி பெற்று வரும் 3-ம் ஆண்டு வரலாற்று மாணவ, மாணவிகளுக்கு சாஸ்தா ரமேஷ் விளக்கம் அளித்தார்.
- பலமுறை அரசை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
- வீடுகளில் கருப்புகொடிகளை கட்டி பட்டா கோஷங்களை எழுப்பினர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே கோலட்டி ஊராட்சிக்குட்பட்டது பிக்கனப்பள்ளி கிராமம்.
இந்த கிராமத்தில் 300-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. 4 தலைமுறைகளாக வசித்துவரும் நிலையில் பலருக்கும் பட்டா வழங்கப்பட்டு அடிப்படை வசதிகள் மேம்படுத்தி இருந்தாலும் 45 குடியிருப்புக்கள் அருகே உள்ள 10 வீடுகள் என 55 வீடுகளுக்கு இன்று வரை பட்டா வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
இதுக்குறித்து ஒசூர் திமுக எம்எல்ஏ, தளி கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஆகியோர் மூலம் மாவட்ட ஆட்சியரை பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். ஒசூர் சார் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தும் இதற்கான பதிலோ, பட்டா வழங்க இத்தனை நாட்களாகும் என்றோ எவ்வித பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டனர்.
பலமுறை அரசை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஊராட்சி மன்ற தலைவர் நாராயணப்பா தலைமையில் கிராம மக்கள் அரசின் கவனத்தை ஈர்க்க வீடுகளில் கருப்புகொடிகளை கட்டி பட்டா வழங்க வேண்டும் என்கிற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுக்குறித்து ஊராட்சி மன்ற தலைவர் நாராயணப்பா கூறுகையில்:-
சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை கொண்டாடி முடித்துவிட்டோம் ஆனால் எங்கள் கிராமத்தில் 55 வீடுகளுக்கு சுதந்திரம் இல்லை வீடுகளுக்கு பட்டா இல்லாததால் ஊராட்சி சார்பில் தொகுப்பு வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்ய முடியவில்லை, வீடு கட்ட வங்கி கடன்கள் பெற முடியவில்லை என்கிற சூழலில் இருந்து வருகிறார்கள்
தமிழக அரசு இதற்கான நடவடிக்கை மேற்க்கொள்ளாவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்க்கொள்ள இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- பாதையில் கற்களை அகற்றி தனி நபர்கள் சிலர் பொதுவழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளனர்.
- நடவடிக்கை எடுக்கா விட்டால் 160 குடும்பத்தாரும் வாக்காளர் , ரேஷன் அட்டைகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து விடுவோம் என கூறினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பழையவூர் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பழையவூரில் தார் சாலை அமைப்பதற்காக, பொதுவழி பாதையில் வருவாய் துறையினர் கற்கள் நட்டு வைத்திருந்தனர். இந்நிலையில், அந்த கற்களை அகற்றி தனி நபர்கள் சிலர் பொதுவழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளனர். இந்தப் பாதை வழியாகவே பழையவூர், எராளிமேடு, எலுமிச்சங்கரி, எம்.சி., பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும்.
இந்த சாலையை ஆக்கிரமித்தும், அந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள், பால் எடுத்து செல்லும் வாகனங்களையும் தடுத்து, அவர்களை, ஆக்கிரமிப்பாளர்கள் தாக்கி வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இப்பகுதியை சேர்ந்த, 160 குடும்பத்தாரும் தங்கள் வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டைகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து விடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே போல ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் படப்பள்ளி அம்பேத்கர் நகரில், 35 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறோம். இங்கு, 70 குடும்பங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். கடந்த, 1998-ல், இப்பகுதியில் வசித்த எங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, மொத்த நபர்களுக்கும் ஒரே நிபந்தனை பட்டாவும் வருவாய் துறையினரால் வழங்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது, பல வீடுகளில் மேற்கூரைகள் பெயர்ந்தும், சிதிலமடைந்தும் உள்ளன.
அவற்றை சரி செய்யவோ, புது வீடு கட்டவோ, வங்கிகளில் கடன் பெற நிபந்தனை பட்டா செல்லாது என கூறுகின்றனர். பட்டா வழங்கப்பட்ட, 10 ஆண்டு காலத்திற்குள் விற்பனையோ, அடமானமோ வைக்க கூடாது என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்ட நிபந்தனை பட்டாவை மாற்றி, எங்கள் நிலங்களுக்கான தனிப்பட்டா வழங்கினால் மட்டுமே வங்கியில் கடன் பெற்று எங்களால் வீடு கட்ட முடியும். இது குறித்து அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பேரணியை இன்று காலை மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.
- வாகனத்தில் தமிழ்நாடு நாள் குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ஜூலை 18 தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணியை இன்று காலை மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி பெங்களூர் சாலை வழியாக சென்று மாங்கனி வளாகத்தில் தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கிற்கு சென்றது. அப்போது கலெக்டர் சரயு சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்தார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் தமிழ்நாடு நாள் குறித்த புகைப்பட கண்காட்சியையும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அதிநவீன வீடியோ வாகனத்தில் தமிழ்நாடு நாள் குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதையும் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், வருவாய் கோட்டாட்சியர் பாபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகர மன்ற தலைவர் பரிதா நவாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை சீனிவாசன், துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி, வட்டாட்சியர் சம்பத், நகராட்சி அலுவலர்கள், அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 269 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.56 ஆயிரம் மத்தியிலான திறன் பேசிகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, ஜூலை.18-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்களிடம் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 269 மனுக்களை வழங்கினார்கள்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.14 ஆயிரம் வீதம் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.56 ஆயிரம் மத்தியிலான திறன் பேசிகளையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில் விரிவாக்கம் மற்றும் புதிய தொழில் தொடங்க 17 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நுண் நிறுவன கடன் உதவிகள் என மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் வசந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தானம்பட்டி முதல் கங்கலேரி வரை ரூ.30 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது.
- பணிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் கொண்டேப்பள்ளி முதல் சின்னதானம்பட்டி வரை, கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 31 லட்சத்து 7ஆயிரம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது. அதே போல், கொண்டேப்பள்ளி ஊராட்சி தானம்பட்டி முதல் கங்கலேரி சாலை வரை 30 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது.
இந்த சாலை பணிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் கிருஷ்ண பிரகாஷ் சினிமா பட தயாரிப்பாளர்.
- கிருஷ்ணகிரிக்கு கிருஷ்ணபிரகாஷ் வந்த தகவல் அறிந்து 3 பேரும், தங்களுடைய நண்பர் அருண் என்பவரை அழைத்து வந்து, அவரை கடத்தி சென்றது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் பண விவகாரத்தில், தங்கும் விடுதியில் இருந்து சினிமா பட தயாரிப்பாளரை ஆம்னி வேனில் கடத்திய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரிய வந்தது.
கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் கிருஷ்ண பிரகாஷ் (வயது 36). சினிமா பட தயாரிப்பாளர். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் குறும்படங்கள் எடுத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரிக்கு சினிமா படம் எடுப்பது தொடர்பாக வந்த அவர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி இருந்தார்.
அப்போது 4 பேர் அங்கு ஆம்னி வேனில் வந்தனர். அவர்கள் கிருஷ்ண பிரகாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், அவர்கள் தாங்கள் வந்த ஆம்னி வேனில் அவரை கடத்தி சென்றனர். இதை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டவுன் போலீசார் கடத்தப்பட்ட கிருஷ்ண பிரகாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்கத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வடக்கு பேட்டை அத்தாணி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு ஆம்னி வேன் வந்தது. அந்த வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கடத்தப்பட்ட கிருஷ்ண பிரகாஷ் இருந்தது தெரிய வந்தது.
அவரை மீட்ட போலீசார் அவரை கடத்தியதாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலையை சேர்ந்த தயா என்கிற கரிகாலன் (43), சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (23), அருண் (21), ஆம்னி வேன் டிரைவர் சிவசக்தி (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பின்னர் நடந்த சம்பவம் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலைய எல்லை என்பதால் கிருஷ்ணகிரி போலீசாரிடம் 4 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து 4 பேரையும் கைது செய்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். மேலும் மீட்கப்பட்ட சினிமா பட தயாரிப்பாளர் கிருஷ்ண பிரகாசிடம் விசாரணை நடத்தினார்கள்.
கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சினிமா பட தயாரிப்பாளர் கிருஷ்ண பிரகாஷ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிக்கு சினிமா படப்பிடிப்புக்காக இடம் தேர்வு செய்வதற்காக வந்தார்.
அந்த நேரம் அவருக்கு சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலையை சேர்ந்த தயா என்கிற கரிகாலன், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த கார்த்திகேயன், கொத்தமங்கலத்தை சேர்ந்த சிவசக்தி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.
அவர்கள் 3 பேரும் கிருஷ்ண பிரகாசிடம், தாங்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்படுவதாக கூறினார்கள். மேலும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரையில் பணமும் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு ஆண்டாகியும் அவர்களை கிருஷ்ணபிரகாஷ் படத்தில் நடிக்க வைக்கவில்லை. மேலும் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் கிருஷ்ணகிரிக்கு கிருஷ்ணபிரகாஷ் வந்த தகவல் அறிந்து 3 பேரும், தங்களுடைய நண்பர் அருண் என்பவரை அழைத்து வந்து, அவரை கடத்தி சென்றது தெரிய வந்தது.
கைதானவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதால் கடத்தியதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- நேற்று இரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தது.
- தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மாட்டை லாவகமாக பிடித்து அதில் கட்டியிருந்த கயிறை அவிழ்த்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் இரண்டு இடங்களில் திறந்த வெளியில் பெரிய கழிவு நீர் கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாயில் அவ்வப்போது அப்பகுதியில் உணவுக்காக சுற்றித்திரியும் காளை மாடுகள், பசு மாடுகள் விழுந்து விடுகின்றன. இதனை சாக்கடையில் இருந்து மீட்கும் பணிகளும் அவ்வப்போது நடக்கிறது.
இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தது.
இதனைப்பார்த்த பொதுமக்கள் ஓசூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்த மாட்டை கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்புத் துறையினரின் பணிக்கு அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உதவினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் கால்வாயில் விழுந்து தவித்த மாட்டை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
அப்போது நீளமான கயிறால் கட்டப்பட்டிருந்த மாடு அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக துள்ளி குதித்து ஓடியது. கார்களுக்கு இடையே மாடு துள்ளி ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மாட்டை லாவகமாக பிடித்து அதில் கட்டியிருந்த கயிறை அவிழ்த்தனர்.
அதன் பின்னர் மாடு அங்கிருந்து ஓடி சென்றது. இந்த மீட்பு பணிகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில் அடிக்கடி கால்நடைகள் விழுந்து தவிப்பதும், அதனை மீட்பதும் தொடர் கதையாக உள்ளது.
எனவே இது போன்ற சாக்கடை கால்வாய்களைச்சுற்றி கம்பி வேலிகளை அமைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குறிப்பாக மனைவி பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்த தொகை ரூ.20 லட்சத்தை சின்னத்துரை கேட்டதாக கூறப்படுகிறது.
- கணவன் - மனைவி இடையே பண விவகாரம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிட்டம் பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கவுரி (41). இவர்களுக்கு விஜி என்ற மகனும், சத்யா, சினேகா என்ற 2 மகள்களும் உள்ளனர். விஜி ராணுவத்தில் லடாக்கில் பணிபுரிந்து வருகிறார்.
மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. சின்னத்துரை-கவுரி தம்பதியினர் கடந்த 30 ஆண்டு களாக தேன்கனிக்கோட்டையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சொத்தை விற்று கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னேப்பள்ளியில் இடம் ஒன்றை வாங்கினார்கள். மீதி பணத்தை கணவர்-மனைவி 2 பேர் பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்தனர்.
மேலும் கணவன் - மனைவி 2 பேரும் கிருஷ்ணகிரி அருகே அம்மன் நகர் 2-வது கிராசில் வீடு ஒன்றில் போகியத்திற்கு குடி போனார்கள். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்தது. குறிப்பாக மனைவி பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்த தொகை ரூ.20 லட்சத்தை சின்னத்துரை கேட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருந்த பிரச்சினையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கவுரி கிருஷ்ணகிரி அருகே மேலேரிகொட்டாயில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னத்துரை சமாதானம் பேசி அழைத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இடையே பண விவகாரம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை அரிவாளால் மனைவியின் கழுத்து, கை, வாய், தாடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் கவுரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
அவரை கொலை செய்ததும் சின்னத்துரை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் நேற்று காலை ரத்த வெள்ளத்தில் வீட்டில் கவுரி பிணமாக கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் மனைவியை கொன்று விட்டு தலைமறைவாக சின்னத்துரையை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர்.






