search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழையவூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
    X

    பழையவூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

    • பாதையில் கற்களை அகற்றி தனி நபர்கள் சிலர் பொதுவழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளனர்.
    • நடவடிக்கை எடுக்கா விட்டால் 160 குடும்பத்தாரும் வாக்காளர் , ரேஷன் அட்டைகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து விடுவோம் என கூறினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பழையவூர் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம், கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பழையவூரில் தார் சாலை அமைப்பதற்காக, பொதுவழி பாதையில் வருவாய் துறையினர் கற்கள் நட்டு வைத்திருந்தனர். இந்நிலையில், அந்த கற்களை அகற்றி தனி நபர்கள் சிலர் பொதுவழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளனர். இந்தப் பாதை வழியாகவே பழையவூர், எராளிமேடு, எலுமிச்சங்கரி, எம்.சி., பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும்.

    இந்த சாலையை ஆக்கிரமித்தும், அந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள், பால் எடுத்து செல்லும் வாகனங்களையும் தடுத்து, அவர்களை, ஆக்கிரமிப்பாளர்கள் தாக்கி வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இப்பகுதியை சேர்ந்த, 160 குடும்பத்தாரும் தங்கள் வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டைகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து விடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே போல ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் படப்பள்ளி அம்பேத்கர் நகரில், 35 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறோம். இங்கு, 70 குடும்பங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். கடந்த, 1998-ல், இப்பகுதியில் வசித்த எங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, மொத்த நபர்களுக்கும் ஒரே நிபந்தனை பட்டாவும் வருவாய் துறையினரால் வழங்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது, பல வீடுகளில் மேற்கூரைகள் பெயர்ந்தும், சிதிலமடைந்தும் உள்ளன.

    அவற்றை சரி செய்யவோ, புது வீடு கட்டவோ, வங்கிகளில் கடன் பெற நிபந்தனை பட்டா செல்லாது என கூறுகின்றனர். பட்டா வழங்கப்பட்ட, 10 ஆண்டு காலத்திற்குள் விற்பனையோ, அடமானமோ வைக்க கூடாது என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்ட நிபந்தனை பட்டாவை மாற்றி, எங்கள் நிலங்களுக்கான தனிப்பட்டா வழங்கினால் மட்டுமே வங்கியில் கடன் பெற்று எங்களால் வீடு கட்ட முடியும். இது குறித்து அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×