என் மலர்
கிருஷ்ணகிரி
- ரூ.35 ஆயிரம் மதிப்பில் சமையல் அறை கூடம் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- தொடர்ந்து பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை உட்கொண்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகளை கலெக்டர் சரயு நேரில் ஆய்வு செய்தார்.
மல்லப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் (2022-23) கீழ் ரூ.44 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் 3 வகுப்பறை கட்டிட கட்டுமான பணி நடந்து வருகிறது. அதை கலெக்டர் பார்வையிட்டார்.
மேலும் மரிமானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நிடுநிலைப்பள்ளியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் புதிய சமையல் அறை கட்டிட கட்டுமான பணி மற்றும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இதே போல சிகரலப்பள்ளி ஊராட்சி சக்கில்நத்தம் கிராமத்தில் சமத்துவபுரம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.26 ஆயிரம் மதிப்பில் தந்தை பெரியார் சிலை வர்ணம் பூசும் பணி, ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சமத்துவபுரத்தில் உள்ள 89 வீடுகளுக்கு வர்ணம் பூசும் பணி, ரூ.35 ஆயிரம் மதிப்பில் புதியதாக தந்தை பெரியார் நினைவு சமத்துவபுர நுழைவு வாயில் வளைவு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதே போல் ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் வெண்ணம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ரூ.35 ஆயிரம் மதிப்பில் சமையல் அறை கூடம் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை உட்கொண்டு ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு, முட்டை ஆகியவற்றின் விவரங்களை மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், பொறியாளர்கள் செல்வம், பூங்கோதை மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
- ஆத்திரமடைந்த முனிசந்திரன் இருவரையும் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
- கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் குற்றத்திற்கு முனிசந்தி ரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள இருதாளம் கிராமத்தை சேர்ந்தவர் முனிசந்திரன் (வயது35). கட்டிட தொழிலாளி.
இவடைய மனைவி ரேகா. இவர்களுக்கு கடந்த 26.7.2021 அன்று குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை முனிசந்திரன் அடித்துள்ளார்.
அப்போது ரேகாவின் உறவினர்களான வெங்கடேஷ் (45), மாதேஷ் (31) ஆகிய இருவரும் முனி சந்திரனை தடுத்துள்ளனர். அதில் ஆத்திரமடைந்த முனிசந்திரன் இருவரையும் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அப்போதைய போலீஸ் இன்ஸ்ெபக்டர் சுப்பிரமணி முனிசந்திரனை கைது செய்து கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த வழக்கு தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் குற்றத்திற்கு முனிசந்தி ரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து போலீசார் முனிசந்திரனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு கூடுதல் வக்கீல் ரவீந்திரநாத் ஆஜரானார்.
- ஆவினில் கடந்த, 2005 முதல், 2017 வரை பணிஓய்வு பெற்றவர்களுக்கு ஈட்டிய, ஈட்டா விடுப்பு தொகை வழங்கப்படாமல் உள்ளது.
- ஓய்வூதியர்கள் தங்களுக்கான விடுப்பு நிலுவைத்தொகையை கேட்டால் வழங்குவதில்லை.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி ஆவின் முன்பு, ஆவின் ஓய்வூதிய திட்ட பயனாளிகள் நலச்சங்கம் சார்பில் கண்டன நுழைவாயில் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி ஆவினில் கடந்த, 2005 முதல், 2017 வரை பணிஓய்வு பெற்றவர்களுக்கு ஈட்டிய, ஈட்டா விடுப்பு தொகை வழங்கப்படாமல் உள்ளது. கடந்த, 2017-க்கு பிறகு சிலருக்கு விடுப்புத்தொகை வழங்கப்பட்டாலும், முரண்பாடாக பணி மூப்பு அடிப்படை இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி ஆவினில் கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. அதற்கான கமிஷனை அதிகாரிகள் பெறுகின்றனர். ஓய்வூதியர்கள் தங்களுக்கான விடுப்பு நிலுவைத்தொகையை கேட்டால் வழங்குவதில்லை.
இது குறித்து விசாரித்தும், விடுமுறை நிலுவைத்தொகையை பணி மூப்பு அடிப்படையில் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஆவின் ஓய்வூதிய திட்ட பயனாளிகள் நலச்சங்க துணை தலைவர் உதயணன், செயலாளர் டேவிட் மரியநாதன், நிர்வாக குழு உறுப்பினர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், அறிவழகன், முத்துமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 1ம் தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- இதற்கு சேவை கட்டணமாக ரூ.70-ஐ தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி,
தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு தபால்காரர் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று வீடு தேடி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கடந்த 1-ந் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே, தங்களது உயிர்வாழ் சான்றிதழை, டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் முலம் சமர்ப்பிப்தற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், இந்திய அஞ்சல் துறையின் கீழ செயல்படும் இந்தியா போஸ்ட் மேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதியன்று கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஆண்டு சுமார் 7 லட்சத்து 198 தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், கடந்த 1ம் தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் "இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி", ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது.
இதற்கு சேவை கட்டணமாக ரூ.70-ஐ தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். கடந்த ஆண்டு சுமார் 1.75 லட்சம் தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே, தங்களது உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பித்தனர்.
மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய அஞ்சல் துறையின் சார்பில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நாடு தழுவிய அளவில் 2018-ம் அண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதியன்று தொடங்கப்பட்டு இந்த குறுகிய காலத்தில், நாட்டின் ஒவ்வொரு மூலம் முடுக்கிலும் உள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரம் அஞ்சலகங்களுக்கு வங்கி சேவைகளை விரிவுப்படுத்தி, 7 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கி உள்ளது.
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கிருஷ்ணகிரி கோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் மூலமாகவும், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ள 450க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாகவும் வங்கி மற்றும் இதர சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழக அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 32 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொக்கு மருந்து சாப்பிட்டு வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார்.
- அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரன் உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள அங்கம்பட்டி வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது58). இவர் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோவிந்தம்மாள்.
இந்த நிலையில் நேற்று சந்திரன் கொக்கு மருந்து சாப்பிட்டு வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரன் உயிரிழந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வழக்குகளில் தொடர்புடைய 13 பேர் கோர்ட்டில் ஜாமீன் பெற்றனர்.
- போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் ஊத்தங்கரை பகுதிகளில் வழக்குகளில் தொடர்புடைய 13 பேர் கோர்ட்டில் ஜாமீன் பெற்றனர்.
அவர்கள் ஜாமீன் உத்தரவுகளை பின்பற்றாமல் இருந்ததற்காகவும், கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் இருந்ததாக ஓசூர் டவுன் மற்றும் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தேன்கனிக்கோட்டை போலீசார் ஆட்டோ ஸ்டேண்டு பகுதியில் ரோந்து சென்றனர்.
- லாட்டரி சீட்டுக்கள் விற்ற முபாரக் (22) என்பவரை கைது செய்தனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் போலீசார் கொசமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற காவேரிப்பட்டணம் சந்தபாளையத்தைச் சேர்ந்த காவேரி (45) என்பவரை கைது செய்தனர்.
அதே போல தேன்கனிக்கோட்டை போலீசார் ஆட்டோ ஸ்டேண்டு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுக்கள் விற்ற தேன்கனிக்கோட்டை மேல் வீதியை சேர்ந்த முபாரக் (22) என்பவரை கைது செய்தனர்.
மாவட்டத்தில் எங்கும் குட்கா விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் குட்கா விற்பனை செய்த ஓசூர் எலசகிரி சத்யஜித் ராய் (32), கிருஷ்ணப்பள்ளி கோவிந்தசாமி (47) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- நாளை (வெள்ளிக்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளன.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மின்சாரம் இருக்காது.
ஓசூர்,
ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் மின் நகர் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளன.
எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை,சான சந்திரம், ஒன்னல்வாடி, தொரப்பள்ளி, சானமாவு, கொல்லப்பள்ளி, திருச்சி பள்ளி, பழைய டெம்பிள் ஹட்கோ, சீதாராம் நகர், வானவில் நகர், புனுகன் தொட்டி, தோட்டகிரி, பஸ்தி, சமத்துவபுரம், தின்னூர், நவதி, ஐ.டி.ஐ, வாசுகி நகர், அம்மன் நகர், குருபட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது.
- விலைவாசியை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டிப்பது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கொடநாடு வழக்கில் நீதி விசாரணை நடைபெற வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீராமுலு தலைமை தாங்கினார். நகர செயலாளர் செல்வம் வரவேற்றார். நிர்வாகிகள் ராமமூர்த்தி, நாகரத்தினம், வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.கோவிந்தராஜ், அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியும், கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதை கண்டிப்பது, ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது, கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கும் வரையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் அனைத்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் திரளாக பங்கேற்பது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்காத தி.மு.க. அரசை கண்டிப்பது, விலைவாசியை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டிப்பது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகிகள் சுப்பிரமணி, கோவிந்தராஜ், முனியப்பன் உள்பட பலர் கலந் தகொண்டனர். முடிவில் பாபு நன்றி கூறினார்.
- இவருக்கும், பரிமளாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் இளஞ்செழியனுக்கு தெரியவந்தது.
- தனது மனைவியை கண்டித்துள்ளார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள பெரியதள்ளப்பாடி பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன் (வயது47). இவரது மனைவி பரிமளா (43). அதே பகுதியை சேர்ந்த லட்சுமி காந்தன் (42).
இவருக்கும், பரிமளாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் இளஞ்செழியனுக்கு தெரியவந்தது. இதனால் தனது மனைவியை கண்டித்துள்ளார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் நேற்று பரிமளா, நண்பர் லட்சுமி காந்தன் ஆகியோர் சேர்ந்து இளஞ்செழியனை கத்தி, அரிவாள், கட்டை ஆகியவை கொண்டு சரமாரியாக தாக்கியு ள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்த இளஞ்செழியன் ஊத்தங்கரை அரசு மருத்து வனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து லட்சுமி காந்தன், பரிமளா ஆகியோரை கைது செய்தனர்.
- சக்தி இன்றுகாலை இருசக்கர வாகனத்தில் 3 பேருடன் ஆற்றில் குளிக்க சென்று கொண்டிருந்தார்.
- அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சின்னமஞ்சமேடு அடுத்துள்ள தாதம்பட்டியை சேர்ந்தவர் சக்தி (வயது35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (30), இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் சக்தி இன்றுகாலை இருசக்கர வாகனத்தில் 3 பேருடன் ஆற்றில் குளிக்க சென்று கொண்டிருந்தார். அப்போது மேட்டுபுலியூர் என்கிற இடத்தின் அருகில் சென்ற போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோர டிரான்ஸ்பார்மரில் மோதி பின்னர் அந்த வழியாக வந்த மினிலாரியின் மீது மோதி நின்றது.
இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சக்தியை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வான்வழி மிதந்து வரும் மேகக் கூட்டங்களைக் குளிரவைத்து மழையாய் பொழியச் செய்வது மரம், செடி கொடிகள் தாம்.
- திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்ச வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா தலைவர் அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார். அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் தனபால் கூறுகையில், மரம், செடி, கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகளாகும்.
வான்வழி மிதந்து வரும் மேகக் கூட்டங்களைக் குளிரவைத்து மழையாய் பொழியச் செய்வது மரம், செடி கொடிகள் தாம்.
மக்கள் தொகை பெருக்கத்தால் அவை இருந்த இடங்கள் மக்கள் வாழும் இடங்களாக மாறி வருகின்றன. அதனால் மழை குறைந்து வருகிறது.
மழைநீரை பல்வேறு வழிகளில் சேகரிக்கலாம்.மொட்டை மாடியில் விழும் மழைநீரை குழாய்கள் மூலம் தரைப்பகுதிக்கு கொண்டு வந்து கிணற்றுக்கும், வீட்டு சுவருக்கும் இடையில் தொட்டி அமைத்துச் சேகரிக்க வேண்டும். அங்கு வடிகட்டிய பின்னர் திறந்தவெளி கிணற்றுக்குள் மழை நீரை விழச்செய்து சேகரிக்கலாம்.
திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்ச வேண்டும். அங்கிருந்து சிறு தொட்டிக்குள் மழைநீரைச் செலுத்தி சேகரிக்கலாம்.
மழைநீரைச் சேமிப்போம். வாழ்விற்கு வளம் சேர்ப்போம். விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று பேசினார்.
விழாவில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், நேரு யுவகேந்திரா இளைஞர் நல தலைவர் பிரேம் பாரத்குமார் மற்றும் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் வேல்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்கள்.
கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெகன் வாழ்த்துரை கூறினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான ஸ்டீபன், விக்டர், ஆண்டனி, சரவணகுமார் ஆகியோர் மற்றும் கிருஷ்ணகிரி நேரு யுவகேந்திரா, ஏபிஜே அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் முடிவில் பாலாஜி நன்றி கூறினார்.






