என் மலர்
கிருஷ்ணகிரி
- காயமடைந்த ஹக்கீம் வலியால் அலறினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ்பாபு, சல்மான், தபுரேஷ், மதன்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல்.
இவரது மகன் ஹக்கீம் (வயது32). கூலித்தொழிலாளியான இவரும், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் பாபு என்கிற வெங்கடேஷ்பாபு (28), சல்மான் (30), தபுரேஷ் (24), மதன்குமார் (32) ஆகியோர் 4 பேரும் நண்பர்கள் ஆவர்.
இந்த நிலையில் ஹக்கீமும், அவரது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கடந்த 17-ந் தேதி மது குடிக்க சென்றார். அப்போது போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து ஹக்கீமை கையால் தாக்கினர். பின்னர் அங்கிருந்த பீர்பாட்டில் அவரை சராமாரியாக 4 பேரும் சேர்ந்து தாக்கினர். இதில் காயமடைந்த ஹக்கீம் வலியால் அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஹக்கீமை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ஹக்கீம் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ்பாபு, சல்மான், தபுரேஷ், மதன்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
- சோதனை நடைபெற்ற நேரத்தில் பத்திரப்பதிவுக்காக சுமார் 40-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
- சம்பந்தப்பட்ட துணை சார்பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக பணம் வசூலிப்பதாக புகார்கள் சென்றன.
இதையடுத்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபு உள்ளிட்ட 7 போலீசார் நேற்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சார்பதிவாளர் ரகோத்தமன் விடுமுறையில் இருந்ததால், பொறுப்பில் இருந்த துணை சார்பதிவாளர் ஷகீலா பேகத்திடம் விசாரணை நடத்தினர்.
மேலும் மற்ற அலுவலர்கள், ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணியை கடந்தும் நீடித்தது.
சோதனை நடைபெற்ற நேரத்தில் பத்திரப்பதிவுக்காக சுமார் 40-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
அவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் சிக்கியது. மேலும் சம்பந்தப்பட்ட துணை சார்பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
- உரிமை தொகை பெறுவதற்காக விண்ணப்ப படிவங்கள் நேற்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
- முதல் கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணிகள் நடந்தன.
கிருஷ்ணகிரி,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த உரிமை தொகை பெறுவதற்காக விண்ணப்ப படிவங்கள் நேற்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1094 ரேஷன் கடைகளில் 5 லட்சத்து 64 ஆயிரத்து 624 ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளன. இதில் 404 ரேஷன் கார்டுகள் நீங்கலாக மற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கலெக்டர் சரயு தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று முதல் கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணிகள் நடந்தன. கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம் தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார்கள்.
இது குறித்து சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் கூறுகையில், கலைஞர் உரிமை தொகை திட்டத்தை செயல்ப டுத்தும் தமிழக முதல் -அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள், நேரத்தில் வந்து விண்ணப்பத்தை வழங்க வேண்டும் என்றும், இந்த திட்டம் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது அலுவலர் சண்முகம் உடன் இருந்தார்.
- மறுநாள் மீண்டும் பட்டறை திறக்க வந்தபோது அங்கு இருந்த லாரி டயர் ஒன்றை காணவில்லை.
- மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது32).
லாரி மெக்கானிக்கான இவர் அதேபகுதியில் ஆட்டோ டீசல் ஒர்க்ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த 15-ந் தேதி வழக்கம் போல் பட்டறையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் மீண்டும் பட்டறை திறக்க வந்தபோது அங்கு இருந்த லாரி டயர் ஒன்றை காணவில்லை. அதனை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சிவலிங்கம் மகாராஜா கடை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், கிருஷ்ணகிரி தொன்னையன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த நல்லரசு (32) என்பவர் டயரை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் நல்லரசுவை கைது செய்தனர்.
- வயது 18 வயதிலிருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
- ஒருவார கால திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி,
திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு கட்டுமான தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம் மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து மூன்று ஆண்டு பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. படிப்பும் இருக்கலாம். தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க. வேண்டும். வயது 18 வயதிலிருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இப்பயிற்சிக்கு வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்றவைப்பவர், மின்சாரப் பயிற்சி, குழாய் பொருத்துதல், மரவேலை, செய்பவர் மற்றும் கம்பி வளைப்பவர் ஆகும். பயிற்சிக்கான கட்டணம், உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி பெறும் அனைவருக்கும் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்தால் 100 சதவீத வேலை வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. 3 மாத பயிற்சியில் முதல் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் தையூரில் உள்ள கட்டுமான கழகப்பயிற்சி நிறுவனத்திலும் அடுத்து 2 மாதங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் நீவழுரில் உள்ள எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெறும்.மேற்படி ஒருவார கால திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
இத்தொகையில் உணவுக்கும் மட்டும் பிடித்தம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சேலம் மெயின் ரோடு, எல்.ஐ.சி. அலுவலகம் அருகில், கிருஷ்ணகிரி - 635 001 (தொலைபேசி எண்: 04343 -231321) என்ற அலுவலக முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நவம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
- தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்
அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டிற்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் கோயம்புத்தூர் ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் மூலம் வருகிற நவம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தேனி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தகவல் அறிய மற்றும் விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த முகாமில் பெருமளவில் இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- மாணவர் களிடையே அதிக நேரம் செல்போன் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே முதல்முறையாக அரசுப் பள்ளியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
தமிழக எல்லையில் உள்ள ஓசூர் ஜுஜுவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,720 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
அதிக அளவில் கிராமப் பகுதி மாணவர்கள் படித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கப் பள்ளியில் புதியதாக நூலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் ரூ.7 லட்சம் மதிப்பில் 2 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய புதிய நூலகம் அமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.
இதில், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களைத் தேர்வு செய்து வாசித்து மகிழ்ந்தனர்.
இது தொடர்பாக தலைமை ஆசிரியை நர்மதாதேவி கூறுகையில் கொரோனா பரவல் ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவ, மாணவி களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து மாணவர் களிடையே அதிக நேரம் செல்போன் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இப்பழ க்கத்தை மாற்றவும், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், பள்ளியில் நூலகம் அமைக்க வேண்டும் எனப் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தரிடம் கோரிக்கை வைத்தோம்.
இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் ரூ.7 லட்சம் நிதியுதவி பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே முதல்முறையாக அரசுப் பள்ளியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
நூலகத்தில் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு துறைகள் சார்ந்த 2 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் புத்தகங்களை வாசிக்க பாட நேரத்தில் வாரம் ஒரு முறை நூலகப் பாட வேளையை புதியதாக தொடங்க உள்ளோம்.
மாணவர்கள் வாரத்துக்கு ஒரு புத்தகம் படித்து அதில் உள்ள முக்கிய குறிப்புகளை எழுதி வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் செல்போன் பழக்கத்திலிருந்து விடு பட்டு, வாசிப்பு பழக்கத்துக்கு மாறி சிறந்த ஆளுமைகளாகத் திகழ்வார்கள் என்று கூறினார்.
- சட்டை பையில் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூ.7 ஆயிரத்தை திருடி சென்று தப்பி ஓடினர்.
- இதனை பார்த்த சரவணசங்கர் அவர்களை பிடிப்பதற்காக பின்தொடர்ந்து துரத்தி சென்றார். அப்போது ஒரு மடக்கி பிடித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சின்னாறு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணசங்கர் (வயது47). இவர் சூளகிரியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக உள்ளார்.
இந்தநிலையில் இவர் சின்னாறு பகுதியில் ஒரு புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் சரவணசங்கர் நேற்று புதிய கட்டிடத்திற்கு சென்று வேலையாட்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்று பார்வையிட்டார். தனது சட்டையை கழற்றி கீழே உள்ள ஒரு அறையில் வைத்து விட்டு, மேல் மாடிக்கு பார்வையிட சென்றார்.
அப்போது அங்கு வந்த 2 பேர் சரவணசங்கரின் சட்டை பையில் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூ.7 ஆயிரத்தை திருடி சென்று தப்பி ஓடினர். இதனை பார்த்த சரவணசங்கர் அவர்களை பிடிப்பதற்காக பின்தொடர்ந்து துரத்தி சென்றார். அப்போது ஒரு வாலிபரை மடக்கி பிடித்தார். மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து சரவணசங்கர் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசாரிடம் பிடிப்பட்ட வாலிபரை ஒப்படைத்தனர். அப்போது அந்தவாலிபரிடம் போலீசார் விசாரித்ததில், திருப்பத்தூர் மாவட்டம் மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த காத்தா என்கிற பூபாலன் (19) என்பதும், அவருடன் வந்தவர் வாணியம்பாடி உத்திதேந்திர பகுதியைச் சேர்ந்த ரகுராமன் (19) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூபாலனை கைது செய்தனர். தப்பி ஓடிய ரகுராமனை போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று தென்காசி மாவட்டம் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர் (34). லாரி டிரைவரான இவர் சென்னையில் இருந்து பெங்களூருக்கு லாரியில் இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு வந்தார். சம்பவத்தன்று லாரியை ஓசூர் தொரப்பள்ளியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வண்டியை நிறுத்தி விட்டு அபுபக்கர் தனத சட்டையை கழற்றிவிட்டு தூங்க சென்றார்.
காலையில் எழுந்து பார்த்தபோது தனது சட்டையில் இருந்த செல்போன், ரூ.2 ஆயிரத்தை காணவில்லை.
இதுகுறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
புகாரின்பேரில் போலீசார் விசாரித்தில் அபுபக்கர் லாரியில் தூங்கி கொண்டிருந்த போது, 2 வாலிபர்கள் வண்டியின் மீது ஏறி பணம், செல்போனை திருடி சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- கல்லூரி முதல்வர் சீனி.திருமால்முருகன் கணிதத்தின் பயன்பாடுகள் பற்றியும்,கணிதம் எவ்வாறு வாழ்க்கைக்கு பயன்படுகிறது என்பதைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
- இறுதியாக இளம் அறிவியல் கணிதத்துறை மூன்றாமாண்டு மாணவி விக்னேஷ்வரி நன்றி கூறினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் சீனிவாச நகரில் அமைந்துள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் கணிதத்துறை யின் சார்பாக சிறப்புரை நிகழ்வு நடை பெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்க மாக முதுநிலை இரண்டா மாண்டு கணிதத்துறை மாணவி தமிழரசி அனைவரையும் வரவேற்றார்.
அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சீனி.திருமால்முருகன் கணிதத்தின் பயன்பாடுகள் பற்றியும்,கணிதம் எவ்வாறு வாழ்க்கைக்கு பயன்படுகிறது என்பதைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர்ஷோபா கணிதம் பயில்வதின் முக்கியத்துவத்தையும், கணிதத்துறையின் வேலைவாய்ப்புகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி கணிதத்துறை உதவிப்பேராசிரியர் ஜோதிபாசு கலந்து கொண்டார்.
இந்நகழ்ச்சியில் கணிதத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். இறுதியாக இளம் அறிவியல் கணிதத்துறை மூன்றாமாண்டு மாணவி விக்னேஷ்வரி நன்றி கூறினார்.
- வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் வரும் ஜூலை 22 மற்றும் 23ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
- சப்ஜுனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். சப்ஜுனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான ரோல் பால் விளையாட்டு போட்டி பர்கூர் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வேளாங்கண்ணிபள்ளி தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். இதில் மாநில மேற்பார்வையாளர் அசோக்குமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சக்தி குமார் ஆகியோர் மேற்பார்வையில் மூன்று பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மினி, சப் -ஜூனியர், ஜூனியர் ஆகிய மூன்று பிரிவுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கி பாராட்டப்பட்டன.
மேலும் இதில் மினி பிரிவில் வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் வரும் ஜூலை 22 மற்றும் 23ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் சப்ஜுனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்று தேர்வான மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
- ஓசூர் பகுதியில் அதிக வெயில் மற்றும் நோய் தாக்கம் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது.
- மானிய விலையில் நாற்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக் கோட்டை, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கு விளையும் காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களுக்கும் கர்நாடக, கேரள மாநிலத்துக்கும் விற்பனைக்குச் செல்கின்றன. இப்பகுதியில் கடந்தாண்டு சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டி ருந்தது.
வெயில் மற்றும் நோய் தாக்கம் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது தக்காளி கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தக்காளி சாகுபடியில் மீண்டும் விவசாயிகள் ஆர்வம் கட்டி வரும் நிலையில், கடந்த காலங்களில் பசுமைக் குடில்களில் 50 பைசா-வுக்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நாற்று தற்போது, ரூ.1 முதல் ரூ.2 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
எனவே, தோட்டக்கலைத் துறை மூலம் மானிய விலையில் நாற்றுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், இலவசமாக நாற்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தோட்டக்கலைத் துறை அலுவலர் கூறுகையில் ஓசூர் பகுதியில் அதிக வெயில் மற்றும் நோய் தாக்கம் காரணமாகத் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது.
விலை உயர்ந்துள்ள நிலையில், மீண்டும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தக்காளி நாற்று தேவை அதிகரித்துள்ளதால், பசுமைக் குடில்களில் நாற்றின் விலை கடந்த காலங்களை விட அதிகரித்துள்ளது.
இதனால், விவசாயிகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவைக் குறைக்கவும், தக்காளி உற்பத்தியை அதிகரிக்கவும் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக நாற்று வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஒரு ஹெக்டேருக்கு 15 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும் நிலையில், ஓசூர் பகுதியில் முதல்கட்ட பருவத்துக்கு 100 ஹெக்டேருக்கு தேவையான 15 லட்சம் நாற்றுகள் மற்றும் இயற்கை உரத்தை இலவசமாக வழங்க உள்ளோம். இந்த நாற்றுகள் மூலம் 45 நாட்களில் விளைச்சல் கிடைக்கும் என அவர்கள் கூறினர்.
- பாலுக்கான தொகை வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தாமதமின்றி வழங்கப்படுகிறது.
- அனைத்து விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களும், அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாலிநாயனப்பள்ளி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கிளை மிட்டப்பள்ளியில், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பால் உற்பத்தி கருத்தரங்கு நேற்று நடந்தது.
இதற்கு கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். டி.மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் பூச்சி மருந்துகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-
உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு பாலின் தரத்தின் அடிப்படையில் வெளிப்படை தன்மையுடன் அரசு நிர்ணயித்த விலை வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனம் போல் விலை கூட்டவோ, குறைப்பதோ இல்லை. பாலுக்கான தொகை வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தாமதமின்றி வழங்கப்படுகிறது.
கலப்பு தீவனம், தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலையில் கிலோ ரூ.21-க்கு விநியோகம் செய்யப்படுகிறது. மாவட்ட மண் பரிசோதனைப்படி சிறப்பு தாது உப்பு கலவை குறைந்த விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என வழங்கப்பட்டு கால்நடையின் உடல் ஆரோக்கியம் மற்றும் பால் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள் ளப்படுகிறது.
மேலும், பேரறிஞர் அண்ணா நலநிதி திட்டத்தின் மூலம் வருடம் முழுவதும் தொடர்ந்து பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு, அதன் மூலம் விபத்தில் ஒரு உறுப்பு இழப்புக்கு ரூ.75,000-ம், விபத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பு இழப்புக்கு ரூ.1,75,000-ம், விபத்தில் உயிர்நீத்த உற்பத்தியாளர் குடும்பத்திற்கு ரூ.2,50,000-ம்,
இறந்தவரின் இறுதிசடங்கிற்கு ரூ.5,000-ம், குழந்தையின் திருமண செலவுக்கு ஒரு நபருக்கு ரூ.30,000-ம் மற்றும் அவரின் 2 குழந்தைகள் கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரம் என காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களும், அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் சுந்தரவடிவேலு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அருள்ராஜ், பால்வள துணைப்பதிவாளர் கோபி, ஆவின் உதவி பொது மேலாளர் நாகராஜன், பாலிநாயனப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் மகேந்திரன், பாலிநாயனப்பள்ளி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சரஸ்வதி சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஜி.ராஜேந்திரன், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






