என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஒரு மாத காலம் மின்இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • தகுந்த ஆவண ங்களை சமர்ப்பித்து பெயர் மாற்றம் செய்து பயன்பெற வேண்டும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும், இன்று (திங்கட்கிழமை) தொடங்கி, ஒரு மாத காலம் மின்இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    எனவே, அந்தந்த பிரிவு அலுவலங்களில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு, தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து பெயர் மாற்றம் செய்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை பதிவு எண் கொண்ட காரில் ஓட்டுனர் இருக்கை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் குட்கா மூட்டைகளை பதுக்கி கடத்தி வந்தது தெரிய வருகிறது.
    • விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த தீரன் சின்னமலை தனியார் பள்ளி அருகே பெங்களூருவில் இருந்து ஊத்தங்கரை நோக்கி நேற்று இரவு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த படதாசம்பட்டி கிராமத்தை சேர்ந்த முரளி மகன் தீபன் என்பவர் மீது கார் மோதியது.

    இதில் தீபன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விபத்தை ஏற்படுத்திய காரை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த காரில் 30 குட்கா மூட்டைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. உடனே குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சென்னை பதிவு எண் கொண்ட அந்த காரில் ஓட்டுனர் இருக்கை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் குட்கா மூட்டைகளை பதுக்கி கடத்தி வந்தது தெரிய வருகிறது.

    விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்நிகழ்ச்சிக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்
    • நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அடுத்த பெல்லம்பள்ளி கிராமத்தில் வட்டார அட்மா திட்டத்தில், கோலாட்டம் மூலம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சிக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். பர்கூர், பெல்லம்பள்ளி ஸ்ரீ விநாயகர் கோலாட்டம் கும்மி ஆட்ட கிராமிய கலை குழுவினர், விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள், அவற்றின் பயன்கள் குறித்தும், விதைகளின் ரகங்கள் குறித்தும், இயற்கை முறையில் சாகுபடி செய்தல் மற்றும் சிறுதானியங்களின் பயன்கள், மண் மாதிரி எடுத்தல், எடுக்கும் முறைகள், தவிர்க்க வேண்டிய இடங்கள், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், சொட்டுநீர் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம், விதை நேர்த்தி பயன்கள், கோடை உழவின் பயன்கள், அசோலா பயன்கள், பஞ்சகாவ்யா தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள், ராகி வரிசை நடவு குறுத்து கலை நிகழ்ச்சியின் மூலம் எடுத்து கூறினர்.

    இதில், கிருஷ்ணகிரி வேளாண்மை அலுவலர் எலிசபெத்மேரி பங்கேற்று, வேளாண்மைத்துறையின் திட்ட செயல்பாடுகள், கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் பயன்கள் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் பெறுதல் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • பிறந்த நாள் முதல் 6 வயது வரை அங்கன்வாடியில் கிடைக்கும் அனைத்து சேவைகளை பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
    • இப்போட்டியில் 1 வயது முதல் 3 வயது வரையிலான 41 குழந்தைகள் கலந்துகொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டி நடைபெற்றது.

    தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட குழந்தை களுக்கு மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பேசுகையில், குழந்தைகளில் முதல் 1000 நாட்களில் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்போட்டியானது நடத்தப்படுகிறது.

    மேலும், பிறந்த நாள் முதல் 6 வயது வரை அங்கன்வாடியில் கிடைக்கும் அனைத்து சேவைகளை பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    தாய்மார்கள் குழந்தை பராமரிப்பு மற்றும் பேணுதல் குறித்த எந்த அளவிற்கு தெரிந்துள்ளார்கள் என்பதை அறியும் வண்ணம் இப்போட்டியானது நடத்தப்பட்டு ஆரோக்கிய குழந்தைகளை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இப்போட்டியில் 1 வயது முதல் 3 வயது வரையிலான 41 குழந்தைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் திப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திலகா உதயகுமாரின் ஒன்றரை வயது குழந்தை திலகாவிற்கு முதல் பரிசும், கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த பவித்ரா சரத்குமாரின் ஒன்றரை வயது குழந்தையான ஏக்ஷிதாவிற்கு இரண்டாம் பரிசும், வேப்பனபள்ளி பவானியின் 10 மாத குழந்தையான தனுஜாவிற்கு மூன்றாம் பரிசும், பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    • கிருஷ்ணகிரியில் சமரசம் குறித்த முத்தரப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கலந்தாய்வு கூட்டத்தில் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசம் மூலம், எளிய முறையில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டன.

    கிருஷ்ணகிரி, 

    சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்தின் வழிகாட்டுதலின்படி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களைச் சார்ந்த நீதிபதிகள், மத்தியஸ்தர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு, சமரசம் குறித்த முத்தரப்பு கலந்தாய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி தலைமை தாங்கி சமரச மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமரச மையத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் புள்ளி விவரங்கள் குறித்தும் பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற மூத்த பயிற்சியாளர், மத்தியஸ்தர் கீதாராமசேஷன், சமரசம் குறித்த விழிப்புணர்வை வழங்கி, அனைத்து நீதிபதிகளுடன் சமரசம் குறித்து கலந்துரையாடினார். முன்னதாக, மக்கள் நீதிமன்றத் தலைவர் மற்றும் குடும்பநல நீதிமன்ற நீதிபதி நாகராஜன் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசம் மூலம், எளிய முறையில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டன. முடிவில், மாவட்ட சமரச யைத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெனிபர் நன்றி கூறினார். இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சூளிகிரி ஊராட்சிக்குட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் நெரிகம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.
    • நெரிகம் அரசு பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் தொலைதூர ஊராட்சியாக நெரிகம் உள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமமான குடிசாதனப்பள்ளி, சின்னாரன் தொட்டி, கெதளன் தொட்டி, மழகலக்கி, தண்ணீர் கொண்டலப்பள்ளி, சிகலப்பள்ளி, மற்றும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மிகவும் பின் தங்கிய சமுதாயத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் பல ஆண்டுக்கு முன்பு கட்டபட்ட கழிவறையை பயன்படுத்தி வந்தனர். இந்த கழிப்பறையானது சில ஆண்டுக்கு முன்பு முற்றிலும் சேதமானதால் அதை புதுப்பிக்க முடியாமல் போனது.

    இதனால் பள்ளி எஸ். எம்.சி.நிர்வாகிகள், ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு புதிய கழிவறை கட்டிதர கோரிக்கை வைத்தனர். ஆனால் கழிவறை இல்லாததால் மாணவர்கள் பள்ளி சுற்று சுவரை தாண்டி ஒதுக்கு புறத்திற்கு சென்று வருகின்றனர்.

    இதை அறிந்த அதிகாரிகள் தனியார் நிறுவனங்கள் முன் வந்து மாணவர்களுக்கு தனித்தனியே கழிப்பறை கட்டி தந்து மாணவர்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் இந்துராணி ராமசந்திரன், நாராயணசுவாமி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • ஆடி முதல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

    கிருஷ்ணகிரி, ஜூலை.22--

    ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முதல் ஆடி வெள்ளி என்பதால், கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் காய்கறி அலங்காரத்திலும், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்திலும், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், அக்ரஹாரம் அம்பா பவானி கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரத்திலும் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை அம்மன் கோவிலில், ஆடிபண்டிகை உற்சவத்தை முன்னிட்டு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

    ஆடி வெள்ளியையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதே போல கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்களில் நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • காவேரி‌பட்டணத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.
    • மகளிருக்கான உரிமை தொகை வழங்க தற்போது ரேசன் கடைகளில் விண்ணப்படிவத்தை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் ரேசன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பெண்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    காவேரிப்பட்டினம்,

    தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப படிவத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வீடு, வீடாக வழங்கி வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் பேரூராட்சி 2-வது வார்டு கோவிந்தப்ப முதலியார் தெருவில் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான மனுக்கள் மற்றும் பதிவு ரசீதுக்கான டோக்கன்களை மகளிர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், வார்டு கிளைச் செயலாளர் ரவி மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இதனை வாக்காளர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    • வாக்காளர் சரிபார்க்கும் பணி இன்று முதல் வருகிற செப்டம்பர் 29-ந் தேதிவரை நடைபெறும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அட்டவணை அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் வீட்டுக்கு, வீடு சரிபார்க்கும் பணி இன்று முதல் அடுத்த மாதம் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது.வாக்காளர் பட்டியலில் உள்ள மோசமான, மங்கலான, தரமற்ற புகைப்படங்களை தரமாக மாற்ற மற்றும் வாக்குச் சாவடிகளின் எல்லைகள் மறுசீரமைப்பு மற்றும் திருத்த பணிகள் 22.08.2023 முதல் 29.09.2023 வரை நடைபெற உள்ளது.

    ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 17.10.2023 அன்று வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்த விண்ணப்பிக்கும் காலம் 17.10.2023 முதல் 30.11.2023 வரை நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2024 அன்று தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பி.எல்.ஏ.-2 வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள தேதிகளில் மேற்கண்ட பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் உடனிருந்து சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.

    கிழக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் வாரியாக 100 வாக்காளர்களுக்கு ஒரு முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த முகவர்கள் விரைந்து செயல்பட்டு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 வாக்காளர்களது விவரங்களை சேகரித்து உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ஓசூரில் வணிக வரித்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வரிக் கோட்ட இணை ஆணையர், நுண்ணறிவு இணை ஆணையர் அலுவலகங்களை காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
    • சேலம் வணிக வரிக் கோட்டத்திலிருந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய ஓசூர் வணிக வரிக் கோட்டம் உருவாக்கப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பெட்ரோல் நிலையம் அருகே வணிக வரித்துறை சார்பில், வணிக வரிக் கோட்ட இணை ஆணையர் (மாநில வரிகள்), மற்றும் நுண்ணறிவு இணை ஆணையர் .ஆகிய அலுவலகங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன,

    இதனை, நேற்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    தொடர்ந்து, ஓசூர் வணிகவரிக்கோட்ட அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: "தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வணிக வரித்துறையில் தமிழக அளவில் 7 நிர்வாக கோட்டங்கள் மற்றும் 6 நுண்ணறிவு கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியாக தற்போது, சேலம் வணிக வரிக் கோட்டத்திலிருந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய ஓசூர் வணிக வரிக் கோட்டம் உருவாக்கப்பட்டு முதலமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கோட்டத்தில், மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டிணம், பர்கூர், போச்சம்பள்ளி, ஓசூர், சூளகிரி, வேப்பனபள்ளி ஆகிய தாலுக்காக்களில் பதிவு பெற்ற வணிகர்கள் பயன் பெறுவார்கள். கிருஷ்ணகிரி வணிகவரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி - 1, கிருஷ்ணகிரி-2, ஓசூர் தெற்கு-1, தெற்கு - 2, தெற்கு- 3 மற்றும் ஓசூர் வடக்கு - 1, வடக்கு - 2 ஆகிய 7 வணிக வரி சரகங்கள் செயல்படும்.ஓசூரில் உருவாகியுள்ள புதிய கோட்டத்தில் 2022 - 2023-ல், ரூ. 7 கோடியே 46 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இக்கோட்டத்தில் மொத்தம் 25,367 வணிகர்கள் பதிவு பெற்றுள்ளனர். பெருவாரியான வரி செலுத்தும் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி வணிகர்களின் நலனை கருத்தில்கொண்டு, இந்த புதிய கோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது".

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, சப்-கலெக்டர் சரண்யா, வணிகவரித்துறை இணை ஆணையர்கள் நாராயணன் (நிர்வாகம்), ஜெயராமன் (நுண்ணறிவு), துணை ஆணையர்கள் ஹேமா (கிருஷ்ணகிரி), சங்கரமூர்த்தி மற்றும் உதவி ஆணையர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சூளகிரியில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக விண்ணப்பங்கள் மாதிரி பதிவு முன்னோட்டத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பங்கள் பெண்களுக்கு வீடு, வீடாக அரசு ஊழியர்க்ள விநியோகம் செய்து வருகின்றனர்.

    சூளகிரி, ஜூலை.22-

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பேரண்டப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் இணையதளத்தில் மாதிரி முன்னோட்ட விண்ணப்ப பதிவு நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 1094 நியாயவிலைக்கடைகளில் உள்ள 5,64,624 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக நாளை வரை தொடர்புடைய நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

    2-ம் கட்டமாக பதிவு செய்யும் நபர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும், மேற்படி ஒப்புதல் ரசீதில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரும் என்ன தேதியில் எந்த நேரத்திற்கு வரவேண்டும் என்ற விவரம்ப திவு செய்யப்பட்டிருக்கும். மேற்படி விவரம் தினந்தோறும் விற்பனை–யாளரால் விளம்பரப் பலகையில் எழுதி வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்ய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண இரசீது, வங்கி பாஸ்புக் ஆகிய ஆவணங்கள் எடுத்து வர வேண்டும். மேலும், ஒரு குடும்பத்துக்கு ஒருவர் (குடும்பத்தலைவி மட்டும்) விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாமிற்கும் ஒரு முகாம் பொறுப்பு அலுவலர், ஒரு காவலர், ஒரு உதவி மைய தன்னார்வலர்கள் அலுவலர், ஒவ்வொரு 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு பதிவாளர் வீதம் பணிய மர்த்தப்பட்டு, உரிய பயிற்சிகள் வழங்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக 584 இடங்களில் 823 பதிவாளர்கள் 24.07.2023 முதல் 04.08.2023 வரை பதிவு செய்யப்பட உள்ளனர்.

    மாவட்ட அளவில் மற்றும் வட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் 2-ம் கட்டமாக மீதமுள்ள 510 இடங்களில் 774 பதிவாளர்கள் 5.8.2023 முதல் 16.8.2023 வரை பதிவு செய்ய திட்டமி டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்டிட கட்டுமான பொருட்கள் மொத்தவிலைக்கு விற்பனை செய்யும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் ஜாகீர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது35). இவர் அதேபகுதியில் கட்டிட கட்டுமான பொருட்கள் மொத்தவிலைக்கு விற்பனை செய்யும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று ஆன்லைன் மூலம் கட்டுமான பொருட்களை குறைந்த விலைக்கு வாங்குவதற்காக இணையதளம் மூலம் தேடிபார்த்தார். அப்போது இந்தியா மார்ட் என்ற நிறுவனத்தின் இணையதள முகவரியில் குறைந்த விலைக்கு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே அந்த இணையதளத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தனக்கு குறைந்த விலைக்கு கட்டுமான பொருட்கள் வேண்டும் என்று கூறியுள்ளார்.

    உடனே அதற்காக ரூ.5 லட்சத்து 66 ஆயிரத்தை வங்கியில் செலுத்தினால், உடடினயாக பொருட்களை அனுப்பிவைத்ததாக செல்போனில் பேசிய மர்ம நபர் கூறினார். அதனை நம்பிய குமரேசன் ரூ.5.66 லட்சத்தை மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதன்பிறகு அந்த நபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச்ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமரேசன் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×