என் மலர்
கன்னியாகுமரி
- ஜவான் அய்யப்பன் தொடங்கி வைத்தார்
- பா.ஜ.க. உறுப்பினர் அமர்நாத், கோவில் நிர்வாகி ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
என்.ஜி.ஓ.காலனி :
சொத்தவிளை சிவசுடலைமாட சுவாமி கோவிலில் வருடாந்திர கொடை விழாவினை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை பா.ஜ.க பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ஜவான் அய்யப்பன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் சுடலைமணி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய துணை தலைவர் ராஜன், பா.ஜ.க. உறுப்பினர் அமர்நாத், கோவில் நிர்வாகி ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
+2
- வனத்துறையினர் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- யாருக்கு விற்பனை செய்ய அம்பர் கிரிசை கொண்டு வந்தார்கள்? என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
நாகர்கோவில்:
அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சம் வாசனை திரவியங்கள் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை சிலர் கடத்தி கொண்டு சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் அம்பர் கிரிஸ் விற்பனை செய்யப்படுவதாகவும், சிலர் கடத்தி கொண்டு வருவதாகவும் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காரில் வந்த ஒரு கும்பலை வனத்துறையினர் பிடித்தனர். அந்த காரில் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் அவர்களது காரை வனத்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது அவர்களது காரில் அம்பர் கிரிஸ் கடத்தியது தெரியவந்தது. காரில் இருந்த 11 கிலோ அம்பர் கிரிசை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த நாராயணன்(வயது41), மேலப்பாளையத்தைச் சேர்ந்த அருணாச்சலம்(53), வேலாயுதம்(47), நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தர் (25) என்பது தெரியவந்தது.
நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு அம்பர் கிரிசை விற்பனைக்காக கடத்தி கொண்டு வந்திருக்கின்றனர். அது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் யாருக்கு விற்பனை செய்ய அம்பர் கிரிசை கொண்டு வந்தார்கள்? என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
இதில் தொடர்புடைய நாகர்கோவில் சேர்ந்த நபரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரிசின் மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது.
- தேரடி மூடு பகுதியில் உள்ள புரோட்டா கடையின் மேல் கூரை ஒன்று ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது
- வீடுகள் முன்பு போடப்பட்டிருந்த சீட்டுகளை அவர்களே தாமாக முன்வந்து அப்புறப்படுத்தினார்கள்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது. வடிவீஸ்வரம் நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று நடந்தது.
சுகாதார ஆய்வாளர் ஜான் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மேற்கொண்டனர். தேரடி மூடு பகுதியில் உள்ள புரோட்டா கடையின் மேல் கூரை ஒன்று ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.
அதை மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றினார்கள். இதேபோல் வீடுகள் முன்பு போடப்பட்டிருந்த சீட்டுகளை அவர்களே தாமாக முன்வந்து அப்புறப்படுத்தினார்கள். ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து கோட்டார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- டிசம்பர் மாதம் 4-ந்தேதி 11-ம் நாள் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாகவும், கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாகவும் விளங்குவது நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள புனித சவேரியார் பேரால யம் ஆகும். ஆண்டுதோறும் இந்த பேராலயத்தின் திருவிழா நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறைவுபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து பேராலய பங்குத்தந்தை பஸ் காலிஸ், உதவி பங்குத்தந்தை ஜெனிஷ் கவின் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதா வது:-
கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம், உலகில் புனித சவேரியாருக்கென்று முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் ஆகும்.
போர்த்துக்கீசிய மன்னரின் ஆளுகைக்குட்பட்ட இந்தியாவின் சில பகுதிகளுக்கு மறைதூது அருட்பணியாளர்கள் தேவைப்பட்டனர். புனித சவேரியார் இந்தியாவில் மறைதூது பணி செய்ய அனுப்பப்பட்டார். குமரி மாவட்டத்தில் கோட்டாருக்கு வந்த சவேரியார் இந்த பகுதியில் சுற்றி வந்து, மக்களை சந்தித்து மக்களின் அன்றாட வாழ்வோடு இணைந்தார். இவர் சாதி, சமய பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி பணியாற்றினார்.
கோட்டார் பேரால யத்துக்கு இன்னும் ஒரு சிறப்பு உண்டு. மறை சாட்சி தேவசகாயம் பிள்ளையின் கல்லறை அமைந்துள்ளது. இங்குதான் புனித சவேரி யார் தங்கியிருந்து திருப்பலி நிறைவேற்றினார். அவர் தங்கியிருந்து, அருட்பணி யாற்றிய இந்த புண்ணிய பூமியில் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பேராலய 11 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6.15 மணி திருப்பலியை ராஜாவூர் பங்கு இறை மக்களும், 8 மணி திருப்பலியை அருகுவிளை பங்கு இறை மக்களும் நிறைவேற்றுகிறார்கள். மாலை 6 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.
கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜான் ரூபஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியை குமரி மாவட்ட போலீஸ் துறையினர் சிறப்பிக்கிறார்கள்.
3-ம் நாள் திருவிழாவான 26-ந்தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு இறை இரக்க தூதுவர் குழுவினரின் குணமளிக்கும் திருப்பலியும் நடைபெறுகிறது. 9-ம் நாள் திருவிழாவான டிசம்பர் மாதம் 2-ந்தேதியன்று மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். 10-வது நாளான 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். 11-ம் நாள் திருவிழாவான 4-ந்தேதி காலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடைபெறும்.
டிசம்பர் மாதம் 4-ந்தேதி 11-ம் நாள் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது. அன்றைய தினத்தில் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கலெக்டரால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அனுமதித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
திருவிழா முடிந்த பிறகு 8-ந்தேதி மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்வும், புனித இஞ்ஞாசியார், புனித சவேரியார், புனித தேவசகாயம் ஆகியோரின் திருப்பண் பவனி, திருப்பண் டம் முத்தம் செய்தல் மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெ றும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பேட்டி யின் போது கோட்டார் பங்குப்பே ரவை துணை தலைவர் ஜேசு ராஜா, செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- 14,589 ரூபாயை கைப்பற்றி கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
குழித்துறை :
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு பகுதியில் பள்ளியின் அருகாமையில் உள்ள கடைகளை மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மருதம்கோடு குந்நுவிளையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(வயது44) என்பவது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவரது கடையில் ரூ6,845 மதிப்பிலான புகையிலை பொருட்களை செய்த போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஏற்கனவே புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வைக்கப்பட்டிருந்த 14,589 ரூபாயை கைப்பற்றி கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
- ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- தற்கொலை செய்து கொண்ட முத்தம்மாளுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
ராஜாக்கமங்கலம் :
மேலசங்கரன்குழியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி முத்தம் மாள் (வயது 76). சிவலிங்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் முத்தம்மாள் சோகத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கணவரின் கல்லறைக்கு சென்ற அவர், அப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து அவரது மகன் கலைக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட முத்தம்மாளுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
- பிளஸ்-1 பயிலும் ஆன்றோ மெர்பின் என்ற மாணவர் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட கோ-கோ போட்டியில் வெற்றி
- மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட கபடி அணி வீரர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.
தக்கலை ;
முளகுமூடு புனித ேஜாசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் விஜோலின் என்ற மாணவன் இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட கபடி அணி வீரர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதுபோல் பிளஸ்-1 பயிலும் ஆன்றோ மெர்பின் என்ற மாணவர் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட கோ-கோ போட்டியில் வெற்றி பெற்று தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இந்திய அளவில் நடைபெறும் கபடி மற்றும் கோ-கோ போட்டிகளில் தமிழக அணிக்காக விளையாட உள்ளார்கள். அவர்களை பள்ளி தாளாளர் டோமினிக் கடாட்ச் தாஸ், பள்ளி முதல்வர் பின்சி செபாஸ்டின், உடற்கல்வி ஆசிரியர்கள், இதர ஆசிரியர்கள், தூய மரியன்னை பசிலிக்கா ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது
- சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகி கொண்டிருக்கிறது.
கன்னியாகுமரி ;
இந்தியாவின் தென்கோடிமுனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும்.
மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும்.
இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் சபரிமலை சீசன் காலமாக கருதப்படுகிறது. கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
சீசனையொட்டி கன்னியாகுமரியில் இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.
ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 100-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சீசன் கடைகளும் ஏலம் விடப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் சீசனையொட்டி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் சிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள் வசதி செய்யப்பட உள்ளது.
பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடும் செய்யப்பட உள்ளது. சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகி கொண்டிருக்கிறது.
- 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லறைத்தோட்ட காம்பவுண்டு சுவரை இடித்ததுடன் ‘கேட்’டையும் எடுத்து சென்றார்கள்.
மணவாளக்குறிச்சி ;
மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலம் கோட்டவிளையை சேர்ந்தவர் ஜோஸ். டிம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்ப கல்லறை தோட்டம் செறுவன்தட்டுவிளையில் உள்ளது.
இதன் பின் பக்கம் அப்பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் அம்மன்கோயில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு பாதை ஏற்படுத்த சசிகுமாரின் உறவினர் ராஜகுசேலன் மற்றும் கிருஷ்ணகுமார் என்ற காந்தி, மேலும் 2 பேர் கடப்பாறை, வெட்டுக்கத்தியுடன் சென்றனர். அப்போது அவர்கள் ஜோஸின் குடும்ப கல்லறைத்தோட்ட காம்பவுண்டு சுவரை இடித்ததுடன் 'கேட்'டையும் எடுத்து சென்றார்கள்.
இதனை ஜோசின் உறவினர் ஒருவர் பார்த்து தட்டிக்கேட்டார். அப்போது அவர்கள் ஜோஸின் உறவினரை தகாத வார்த்தையால் திட்டி சென்றனர். இது குறித்து ஜோஸ் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜகுசேலன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.
- தேவசகாயம் மவுண்ட் வட்டார முதல்வர் ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து தேர்பவனி நடக்கிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு கோட்டார் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருவிழாகொடியை ஏற்றி வைத்து மறையுரையாற்றிறுகிறார். விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.
விழாவில் 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மறைமாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் எட்மண்ட் மறையுரையாற்றுகிறார்.
விழாவின் 9-ம் நாளான 25-ந்தேதி காலை 7 மணிக்கு இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்பணியாளர் சைமன் தலைமை தாங்கி திருமுழுக்கு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். 10 மணிக்கு நோயாளி களுக்கான திருப்பலியை அருட்பணியாளர் ஆன்டணி பெர்டிக் புரூனோ தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஆராதனையை கோட்டார் மறைமாவட்ட செயலாளர் மரிய கிளாட்ஸ்டன் நடத்துகிறார். தேவசகாயம் மவுண்ட் வட்டார முதல்வர் ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து தேர்பவனி நடக்கிறது.
விழாவின் 10-ம் நாளான 26-ந்தேதி காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி பெருவிழா திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலி, கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் டோனி ஜெரோம், இணை பங்கு அருட்பணியாளர் விஜின் பிரைட் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை, மக்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகிறார்கள்.
- தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
- நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தென்தாமரைகுளம் :
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் கன்னியாகுமரி வந்தார். இதையடுத்து மாலையில் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி சென்றார். அங்கு அவரை தலைமைபதி சார்பில் குருமார்கள் சாமி, தங்க பாண்டியன், ராஜசேகர், அரவிந்த், ஆனந்த், அஜித் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து வடக்கு வாசல் வழியாக பதிக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் அய்யா வைகுண்டரை சாமி தரிசனம் செய்தார். அவருக்கு இனிமம் வழங்கப்பட்டது.
அதன்பின் அவர் பேசியதாவது:-
தே.மு.தி.க. ஆட்சியாக இருந்திருந்தால் இந்த இடத்திலே மாசி 20 அய்யா வைகுண்டர் அவதாரதினத்தன்று பொது விடுமுறை அறிவித்திருப்போம். மாசி 20 பொது விடுமுறையாக அறிவிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.
இங்கு உருவ வழிபாடு இல்லை. கண்ணாடி வைத்து அதில் நமது முகமே தெரிகிறது. அது என்னை மிகவும் கவர்ந்துள்ளது. தலைவர் விஜயகாந்த் சொல்வது போல் இங்கு நமக்குள் மதம், ஜாதி, இனம், மொழி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரே இனம், ஒரே குலம் என்பது தான் இங்கு தத்துவம். விஜய காந்த் மீண்டும் அதே கம்பீரத்துடன் இங்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய அய்யாவிடம் பிரார்த்தனை செய்துள்ளேன். ஒரு உயர்ந்த கொள்கை தத்து வத்துடன் இக்கோவில் அமைந் துள்ளது. தமிழ்நாட்டிலேயே எல்லோரும் சமம் என்கிற ஒரு தலமாக நான் இதை பார்க்கிறேன். அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தது மன நிறைவாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பட்டதாரி ஆசிரியர், கல்வியாளர் 2222 பணி காலியிடங்கள்
- கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் பட்டதாரி ஆசிரியர், கல்வியாளர்கள் பணிக்கு 2222 பணி காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக் கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் தொடக்க கல்வியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது இளங்கலை 4 வருட பி.ஏ., பி.எஸ்.சி.,பி.எட். அல்லது பி.ஏ., பி.எட்., பி.எஸ்.சி. பி.எட். முடித்திருக்க வேண்டும்.
இதனுடன் கட்டாயம் டெட் பேப்பர்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 30-ந்தேதி ஆகும். இத்தேர்வு நடை பெறும் நாள் 07-01-2024. இப்போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடத்தப்படவுள்ளது. இப்போட்டி தேர்வுக்கான அறிமுக வகுப்பு 17-11-2023 காலை 11 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இத்தேர்வுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு trb.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து 30-11-2023-ம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும், முதலில் வரும் 80 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், ஸ்மார்ட் போர்டு வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் வாரந்திர மாதிரித் தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. மேலும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைய தளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






