என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • மார்த்தாண்டம் மேம்பாலம் தமிழகத்தில் முதல் இரும்புப்பாலமாகும்.
    • பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

    குழித்துறை:

    மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. பம்மம் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மார்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.222 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் தமிழகத்தில் முதல் இரும்புப்பாலமாகும். இந்த மேம்பாலத்தில் 112 ராட்சத பில்லர்கள் (தூண்கள்) அமைக்கப்பட்டது.

    இதில் 21 தூண்கள் கான்கிரீட்டால் ஆனவை. மற்ற தூண்கள் அனைத்தும் இரும்பால் ஆனவை. இந்த பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது முதல் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடி குறைய தொடங்கியது. பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று காலை அதிக பாரம் ஏற்றிச்சென்ற கனரக லாரிகள் வரிசையாக பாலத்தில் நின்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலம் தொடங்குகின்ற பம்மம் பகுதியில் 100 மீட்டர் தொலைவில் சாலையின் மையப்பகுதியில் 2 மீட்டர் விட்டத்தில் சிமெண்ட் கலவை உடைந்து விழுந்தது. ஆனால் சாலையின் தூண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தற்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக செல்கின்ற போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பஸ்கள் அனைத்தும் பாலத்தின் கீழ்பகுதி வழியாக இயக்கப்பட்டது. இதனால் மார்த்தாண்டத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது பற்றிய தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர்.

    அதனை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் என்னென்ன நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மார்த்தாண்டம் பாலம் கட்டிய பிறகு சரியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வில்லை. பாலத்தின் மேல் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளித்தது.

    சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நேரங்களில் தண்ணீரும் தேங்கி நின்றது. தற்போது கனரக வாகனங்களில் அதிக எடையில் கனிம வளங்கள் பாலத்தின் வழியாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. நேற்று இரவும் கனிம வள வாகனங்கள் அணிவகுத்து நின்றதே பாலம் சேதம் அடைவதற்கு காரணம் என குற்றம் சாட்டினர்.

    • இன்று காலை திற்பரப்பு அருவிக்கு செல்வதற்காக 6 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர்.
    • கடற்கரை பகுதியில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

    நாகர்கோவில்:

    திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு பயிற்சி டாக்டராக உள்ள நாகர்கோவில் பறக்கையை சேர்ந்த சர்வதர்ஷித், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் ஷாம் மற்றும் வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி ஆகிய 6 பேரும் நேற்று அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர்.

    நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்த இவர்கள் இங்கு தங்கினார்கள். இன்று காலை திற்பரப்பு அருவிக்கு செல்வதற்காக 6 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர். திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைவான அளவில் கொட்டியது. இதையடுத்து 6 பேரும் அங்கிருந்து புறப்பட்டு ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு வந்தனர்.

    கடற்கரை பகுதியில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ராட்சத அலை 6 பேரையும் இழுத்துச்சென்றது. இதை பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் பறக்கையை சேர்ந்த சர்வ தர்ஷித், நேசி இருவரையும் மீட்டனர். மற்ற 4 பேரையும் மீட்க முடியவில்லை. அவர்கள் உடல் பிணமாக கரை ஒதுங்கியது. இதற்கிடையில் மீட்கப்பட்ட 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் சர்வதர்ஷித் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆனது. பலியான வெங்கடேஷ், பிரவீன் சாம், காயத்ரி, சாருகவி, சர்வ தர்ஷித் ஆகியோரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுற்றுலா வந்த இடத்தில் 5 பயிற்சி டாக்டர்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் 2 நாட்களாக கடல் சீற்றமாக இருக்கும் என்று கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் குளச்சல் கோடிமுனை பகுதியில் நேற்று கடல் அலையில் சிக்கி சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள். தேங்காய்பட்டினம் பகுதியில் தந்தையுடன் வந்திருந்த சிறுமி ஆதிரா (7) என்பவரை கடல் அலை இழுத்துச்சென்றது.

    அவரது உடலை இன்று காலை மீட்டனர். நேற்றும், இன்றும் கடல் அலையில் சிக்கி குமரி மாவட்டத்தில் 8 பேர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    பூதப்பாண்டி:

    பூதப்பாண்டி அருகே முக்கடல் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் அனீஸ் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் சுபின் (21). இருவரும் கூலி தொழிலாளிகள். நேற்று மதியம் இருவரும் பூதப்பாண்டி பகுதியில் உள்ள பழைய ஆற்றில் குளிக்க சென்றனர்.

    குளித்து விட்டு மீண்டும் இருவரும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அனீஸ் ஓட்டினார். சுபின் பின்னால் அமர்ந்திருந்தார். பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் அனீஸ், சுபின் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அனீஸ், சுபின் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சுற்றுலா வேன் டிரைவர் கோவில்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் (36) மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    பலியான அனீஸ், சுபின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் அங்கே திரண்டு இருந்தனர். வாலிபர்கள் 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • படகு துறையில் நிழல் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் வெயிலினால் சில நேரங்களில் மயங்கி விழும் சூழ்நிலை இருந்து வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் கூடாரத்தின் கீழ் வரிசையில் நின்றபடி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி இருப்பதால் கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகள் படகு துறையில் கொளுத்தும் வெயிலில் தவித்தபடி பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

    படகு துறையில் நிழல் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் வெயிலினால் சில நேரங்களில் மயங்கி விழும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி படகுதுறை வளாகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக நிழல் தரும் வகையில் தார்பாய் மூலம் கூடாரம் அமைத்துள்ளனர்.

    இதனால் சுற்றுலா பயணிகள் இந்த கூடாரத்தின் கீழ் வரிசையில் நின்றபடி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி படகுத்துறையில் நிழல் வசதி ஏற்படுத்தி இருந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • சுற்றுலா பயணிகள் இந்த கூடாரத்தின் கீழ் வரிசையில் நின்றபடி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி இருப்பதால் கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகள் படகு துறையில் கொளுத்தும் வெயிலில் தவித்தபடி பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

    படகு துறையில் நிழல் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் வெயிலினால் சில நேரங்களில் மயங்கி விழும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி படகுதுறை வளாகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக நிழல் தரும் வகையில் தார்பாய் மூலம் கூடாரம் அமைத்துள்ளனர்.

    இதனால் சுற்றுலா பயணிகள் இந்த கூடாரத்தின் கீழ் வரிசையில் நின்றபடி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி படகுத்துறையில் நிழல் வசதி ஏற்படுத்தி இருந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • வெண்டிலேட்டர் வழியாக செல்போன் காமிரா வீடியோ பதிவு.
    • 2 செல்போன், லேப்டாப் பறிமுதல்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் ஆயுர்வேத மற்றும் சித்தா சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண், பெண்களுக்கு மசாஜ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் ஒருவர் அங்கு மசாஜ் செய்வதற்காக வந்தார். அவருக்கு அங்கு பணியமர்த்தப்பட்ட பெண் ஒருவர் மசாஜ் சிகிச்சை அளித்தார்.

    அந்த அறையில் உள்ள வெண்டிலேட்டர் வழியாக செல்போன் காமிரா மூலமாக வீடியோ பதிவு செய்யப்பட்டதை பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இது தொடர்பாக அவர் உறவினர்களுக்கும், வடசேரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

    அவர்கள் அந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது பெண்ணின் வீடியோ காட்சிகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் முன்னிலையிலேயே பெண்ணின் உறவி னர்கள் சரமாரியாக தாக்கினர். பின்பு அவரை போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    அவர் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார். இதையடுத்து அவரது 2 செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆய்வு செய்தனர்.

    அவரது லேப்டாப்பில் மேலும் சில பெண்களின் கிளு கிளு வீடியோ காட்சிகள் இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை வந்தவர்களா? வேறு ஏதாவது பெண்களின் வீடியோ காட்சிகளா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
    • கடல் நடுவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த ராட்சத தூண்கள் ஒவ்வொன்றும் தலா 27 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளன.

    இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் இயக்கப்படுவதில்லை. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதைத்தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டுபாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன் பயனாக ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பாலத்துக்கான கட்டுமான பணிகள் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள பாறையில் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இதன் மறுபுறம் அமைந்து உள்ள விவேகானந்தர் பாறையிலும் கண்ணாடி கூண்டு இணைப்பு பாலத்துக்கான பணிகள் நடைபெற்றன. மேலும் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்காக நடுக்கடலில் 6 ராட்சத தூண்கள் அமைக்கும் பணியும் நடைபெற்றது.

    விவேகானந்தர் பாறை அமைந்துள்ள கடல் பகுதியில் 3 ராட்சத தூண்களும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள கடல் பகுதியில் 3 ராட்சத தூண்களும் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. கடல் நடுவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த ராட்சத தூண்கள் ஒவ்வொன்றும் தலா 27 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. கடலில் அமைக்கப்பட்டுஉள்ள இந்த ராட்சத தூண்கள் கடல் உப்பு காற்றினால் பாதிக்காத வகையில் ரசாயன கலவை கலந்த சிமெண்ட் காங்கிரீட் மூலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில் தற்போது திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் பாலத்தை இணைக்கும் வகையில் 27 அடி உயரத்துக்கு ராட்சத தூண் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில் புதுச்சேரியில் இந்த இணைப்பு பாலத்துக்கான கூண்டு ஸ்டீன்லெஸ் கம்பிகள் மூலம் வடிவமைத்து தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூண்டு மொத்தம் 222 டன் எடை கொண்டதாகும்.

    கடல் உப்பு காற்றினால் துருப்பிடிக்காத வகையில் ஸ்டீன்லெஸ் கம்பிகள் மூலம் இந்த கூண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 101 பாகங்களாக இந்த கூண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூண்டில் தற்போது வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. வர்ணம் பூசும் பணியும் முடிந்ததும் இந்த கூண்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.

    அதன் பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள ராட்சத தூண்கள் மீது தொழில் நுட்ப வல்லுனர்கள் மூலம் இந்த 101 பாகங்களும் இணைக்கப்பட்டு கூண்டு பொருத்தப்பட உள்ளது. புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கூண்டை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உதவி கோட்ட பொறியாளர் ஹெரால்டு ஆன்றனி, உதவி பொறியாளர்கள் அரவிந்த், ஜோஸ் ஆன்றனி சிறில் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • சுரேஷ் குமார் அதிக மதுபோதையில் இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • குடிபோதையில் தினமும் என்னை திட்டி வந்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை ஆலடி காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 46), தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

    சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து மனைவியும் ஒரு மகளும் தனியாக சென்று விட்டனர். சுரேஷ்குமாருடன் அவரது மூத்த மகள் ஆர்த்தி (21) வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி சுரேஷ்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மதுபோதையில் தந்தை இறந்து விட்டதாக ஆர்த்தி கூறினார். இதையடுத்து சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுரேஷ் குமார் அதிக மதுபோதையில் இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சுரேஷ்குமாரின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு தலையில் காயங்கள் இருப்பதாக கூறினார்கள். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து அவரது மகள் ஆர்த்தியை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது தந்தையை கொலை செய்ததை ஆர்த்தி ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-

    எனது தந்தை தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்ததால் எனது தாயார் மற்றும் சகோதரி தனியாக சென்று விட்டனர். நான் தந்தையுடன் வசித்து வந்தேன்.

    குடிபோதையில் தினமும் என்னை திட்டி வந்தார். சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் குடிபோதையில் வந்து என்னை தாக்க முயன்றார். அப்போது நான் என்னை பாதுகாத்துக்கொள்ள அவரை தாக்கினேன். அப்போது அவர் சுவரில் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் மறுநாள் மீண்டும் என்னிடம் தகராறு செய்தார்.

    என்னை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தந்தையின் கழுத்தை பிடித்து நெரித்தேன். அப்போது அவர் மயங்கி விழுந்துவிட்டார். ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். மதுபோதையில் தந்தை விழுந்து விட்டதாக கூறினேன். ஆனால் பிரேத பரிசோதனையில் கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார் ஆர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தந்தையை மகள் கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • களியல், சுருளோடு, இரணியல், கோழிப்போர் விளை, முள்ளங்கினாவிளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.45 அடியாக உள்ளது. அணைக்கு 43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மேற்கு மாவட்ட பகுதியில் நேற்று மதியத்துக்கு பிறகு இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    தக்கலை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது மழை பெய்ததையடுத்து அங்கு வெப்பம் தணிந்தது. மார்த்தாண்டம், திங்கள்சந்தை, களியக்காவிளை, திருவட்டார், ஊரம்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது. பத்துகாணி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. அங்கு ஆலங்கட்டி மழை பெய்தது. அதை கையில் எடுத்து பொது மக்கள் ரசித்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆலங்கட்டி மலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    களியல், சுருளோடு, இரணியல், கோழிப்போர் விளை, முள்ளங்கினாவிளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    அவர்கள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். அணைப்பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்ததையடுத்து பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.60 அடியாக உள்ளது. அணைக்கு 372 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.45 அடியாக உள்ளது. அணைக்கு 43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 9.28 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 9.38 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 16.90 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 3.90 அடியாக இருந்தது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 7.2, பெருஞ்சாணி 7.6, சிற்றாறு 1-15.2, சிற்றாறு 2-12.4, களியல் 10, குழித்துறை 23.2, புத்தன் அணை 5.8, சுருளோடு 28.4, தக்கலை 45, குளச்சல் 4, இரணியல் 5, பாலமோர் 2.4, திற்பரப்பு 11, கோழிப்போர்விளை 32.5, அடையாமடை 4.2, முள்ளங்கினாவிளை 16.8.

    மேற்கு மாவட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில் கிழக்கு மாவட்ட பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. நாகர்கோவில் கன்னியா குமரி, அஞ்சுகிராமம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டனர். இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். 

    • 3 ஆண்டுகளாக துபாயில் இருந்து வந்த ராஜேஷ் நேற்று சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
    • ராஜேஷ் கைது செய்யப்பட்டதையடுத்து வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி (வயது 29). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஏராளமான இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து காசி மிரட்டி பணம் பறித்தது அம்பலமானது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்க பாண்டியனை கைது செய்தனர். அவரது நண்பர்கள் டைசன் ஜினோ, தினேஷ் கவுதம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஜாமீ னில் விடுதலை ஆனார்கள்.

    இதையடுத்து காசி மீது தொடரப்பட்ட ஒரு பாலியல் வழக்கில் காசிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் காசி தொடர்ந்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காசி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதுவரை 7 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் காசியுடன் அவரது நண்பர் நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்த ராஜேஷ் என்ற ராஜேஷ்சிங் (43) என்பவர் மீதும் பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் வெளிநாட்டில் இருந்து வந்தார்.

    இதையடுத்து அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இது தொடர்பாக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. 3 ஆண்டுகளாக துபாயில் இருந்து வந்த ராஜேஷ் நேற்று சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ராஜேஷை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. 3 மணி நேரத்திற்கு மேலாக ராஜேஷிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை ஜெயிலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    பின்னர் ராஜேஷ் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜேஷ் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் இந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • கோவில் விழாவில் மது அருந்தி ஒருவர் பலியான சம்பவம் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் பாப்பாக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 32), துப்புரவு தொழிலாளி. இவர் கடந்த மாதம் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து கோட்டார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோட்டார் போலீசார் பால்ராஜ் குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் பால்ராஜின் உடல் பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    கோட்டார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தன்று பால்ராஜிக்கும், வாலிபர் ஒருவருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது அந்த வாலிபர் பால்ராஜை தாக்கியதும் தெரியவந்துள்ளது.

    மேலும் நள்ளிரவு மீண்டும் பால்ராஜை அவர் அடித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பால்ராஜ் பிணமாக கிடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அந்த வாலிபரின் முகம் பதிவாகியுள்ளது.

    ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. கொலையாளியின் புகைப்படத்தை கோட்டார் போலீசார் வெளியிட்டுள்ளார். அவரை பற்றி தகவல் தெரிந்தால் கோட்டார் போலீசார் மற்றும் கட்டுப்பட்டறைக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டுமே 4 வழக்குகள் தற்கொலை வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் டிரைவர் ஒருவர் பிணமாக கிடந்ததை வடசேரி போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு கொலை வழக்கமாக மாற்றப்பட்டது. இதேபோல் கோட்டார் பகுதியில் கோவில் விழாவில் மது அருந்தி ஒருவர் பலியான சம்பவம் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.

    இதுபோல் மாவட்டத்தில் வேறு 2 வழக்குகளும் தற்கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை:

    குமரி மாவட்ட தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜின். இவருக்கு சொந்தமாக தென் ஆப்பிரிக்கா நாட்டில் முந்திரி பருப்பு பதனிடும் தொழிற்சாலை உள்ளது. அங்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக இரணியல் அருகே வட்டம் பகுதியை சேர்ந்த ஷைபின் (வயது 32) என்பவரும், மேலாளராக தக்கலை அருகே புங்கறை பகுதியை சேர்ந்த ஜெயசந்திர சேகர் என்ற சதீஷ் (42) என்பவரும் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 22-ந்தேதி ஷைபின் பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்காக தென் ஆப்பிரிக்கா பகுதியில் உள்ள கானா என்னும் இடத்துக்கு செல்ல அப்பகுதியை சேர்ந்த தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஒருவரின் சொகுசு காரில் ஷைபின், ஜெயசந்திரசேகர் உள்பட 3 பேர் சென்றனர். அப்போது டெமா என்னும் இடத்தில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வாகனத்தில் வேகமாக மோதினர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயசந்திர சேகரும், ஷைபினும் உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விபத்தில் பலியான ஷைபின் மற்றும் ஜெயசந்திரசேகர் ஆகியோரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். மேலும் தென் ஆப்பிரிக்காவில் பலியானவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பலியான ஷைபின் மற்றும் ஜெயசந்திர சேகர் உடல்கள் நாளை (27-ந்தேதி) விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு நாளை மறுநாள் (28-ந்தேதி) அவர்களின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறந்துபோன ஷைபினுக்கு சுஷ்மி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஜெயசந்திர சேகருக்கு மினி என்ற மனைவியும், 7 வயதில் ரியான்ஸ் என்ற மகனும். 3 வயதில் ரியானா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இதில் ரியானாவுக்கு தந்தை இறந்த அதே நாளில் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×