என் மலர்
காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
- தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தங்களுக்கான மனித வள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தங்களுக்கான மனித வள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அது சமயம் பட்டதாரிகள் (BE.உட்பட), டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள், ஆய்வக உதவியாளர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண் மூலம் கேட்டறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- குப்பையநல்லூர் அருகே கஞ்சா விற்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.
- சோதனை செய்ததில் அவரிடம் ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் பேரூராட்சி குப்பையநல்லூர் அருகே கஞ்சா விற்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாதமுனி மற்றும் போலீசார் குப்பையநல்லூர் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விக்னேஷ் (வயது 21) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். மேலும் அவரிடம் சோதனை செய்ததில் அவரிடம் ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் விக்னேஷை கைது செய்தனர்.
- குழு போட்டு இன்றைக்கு சாதனை படைத்த ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
- ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதலமைச்சர் என்ற பெருமையை மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட எல்லையான பாலுசெட்டி சத்திரம் பகுதியில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஏற்பாட்டில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ஒரு சாதாரண கிளைச் செயலாளர் இன்றைய தினம் இயக்கத்தினுடைய இடைக்கால பொதுச் செயலாளராக வந்திருக்கிறேன் என்று சொன்னால் அது அ.தி.மு.க. கட்சியில் மட்டும்தான் நடக்கும். இது ஜனநாயக அமைப்பு உள்ள ஒரு கட்சி. உழைக்கின்றவர்கள், இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கின்றவர்கள் என்றைக்காவது ஒரு நாள் உயர்ந்த பதவி உச்ச பதவிக்கு வர முடியும்.
தி.மு.க.வில் வர முடியுமா, வந்துவிட முடியுமா. தி.மு.க.வில் நிதிகள் மட்டும் தான் தொடர்ச்சியாக வாரிசாக பதவிக்கு வர முடியும். என்னை சுற்றி பல பேர் இருக்கிறார்கள், மு.க. ஸ்டாலினை சுற்றி நிற்க முடியுமா? ஏனென்றால் நாங்கள் எல்லாம் குடும்பமாக இருக்கின்றோம், நீங்களும் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்களாக இருக்கிறீர்கள்.
தி.மு.க.வில் மக்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள். வீட்டு மக்களை பற்றி தான் கவலைப்படுவார்கள், வீட்டில் இருக்கிறவர்களுக்கு யாருக்கு பதவி கொடுக்க வேண்டும், கட்சியில அதிகாரம் வழங்க வேண்டும் அதிகாரப்பதிவு இப்படி கூறு போட்டு நடத்துகின்ற கட்சி. தி.மு.க. ஒரு கட்சி இல்லை. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.
அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுவது, நிர்வாகியின் மீது வழக்கு போடுவது, கஷ்டப்படுத்துவது, துன்பப்படுத்துவதால் அ.தி.மு.க.வை அடக்கப்படுமாம். ஒருபோதும் நடக்காது.
உங்களுக்கு அரிதான முதல்-அமைச்சர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் நீங்கள் முதலமைச்சராகி விட்டீர்கள். கிடைக்கின்ற பதவியை வைத்து மக்களுக்கு நன்மை செய்து பாராட்டை பெறுங்கள். அதைவேண்டாம் என்று சொல்லவில்லை. வழி தவறி பாதை மாறி போனீர்கள் என்றால் எதிர்காலத்தில் நீங்கள் நிறைய சந்திக்க நேரிடும்.
அவர் எல்லா திட்டத்தையும் வேகமாக அறிவிப்பார். அறிவித்த உடனே அதற்கு குழு போட்டு விடுவார். இதுவரைக்கும் 37 குழு போட்டு இருக்கிறார். குழு போட்டு இன்றைக்கு சாதனை படைத்த ஒரே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான்.
ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதல்-அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை. நாட்டின் மீதும் அக்கறையில்லை. அக்கறை இல்லாத ஒரு முதல்-அமைச்சர் இன்றைக்கு தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்தால் வேதனை தான் நமக்கு மிச்சம்
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி, நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு. எஸ். சோமசுந்தரம், வள்ளி நாயகம், பாலாஜி, வாலாஜா பாத் அரிக்குமார், குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, துன்பவனம் ஜீவானந்தம், ஜெயராஜ், திலக்குமார், கரூர் மாணிக்கம், படுநெல்லி தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கொலையுண்ட சிவஞானத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கைதான சரவணன், கொலையுண்ட சிவஞானத்தின் மளிகை கடை அருகே துரித உணவகம் நடத்தி வருகிறார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது56). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டுவதற்கு தயாரானார். அப்போது அங்கு வந்த 3 போலீசார்கள் திடீரென சிவஞானத்தை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவஞானம், அவர்களிடம் இருந்து தப்பி செல்ல ஓடினார். ஆனாலும் விரட்டி சென்ற கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தனர். தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சிவஞானம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
உடனே கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலையுண்ட சிவஞானத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதே பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளிகளான மண்டபத்தெருவை சேர்ந்த சரவணன், அவரது நண்பர்களான சிட்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணி கண்டன், ஆபேல் ஆகிய 3 பேரையும் கொலை நடந்த ஒரு மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
கைதான சரவணன், கொலையுண்ட சிவஞானத்தின் மளிகை கடை அருகே துரித உணவகம் நடத்தி வருகிறார். இடப்பிரச்சினை தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்த தகராறில் சிவஞானம் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று கைதான 3 பேரிடமும் மேலும் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரெயில், பஸ் நிலையங்கள் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
- விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பும், பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆலந்தூர்:
இந்தியாவின் 75-வது சுதந்திரதின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிஉள்ளதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டு இருக்கிறது.
அதன்படி விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரெயில், பஸ் நிலையங்கள் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மோப்ப நாய் உதவியுடன் சோதனை, விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே அமலில் இருப்பதால், அதை மேலும் தீவிரமாக செயல்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதைப்போல் பி.சி.ஏ.எஸ்.பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பும், பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இதைப்போல் விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, பார்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப்பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதித்து வருகின்றனர்.
மேலும் விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள், பயணிகளை அறிவுறுத்தி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பாதுகாப்பு வருகிற 20-ந்தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும், தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வருகிற 13, 14, 15-ந்தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஆகஸ்ட் மாதம் ரெயில் பயணிகள் பாதுகாப்பு மாதமாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. பரங்கிமலை, மீனம்பாக்கம், பழவந்தாங்கல், திரிசூலம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பரங்கிமலை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் ரெயில்வே போலீசார் தேசிய கொடியின்பெருமை, ரெயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி குறித்து மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.
- நவரத்தினம் மாலைகளுடன் தங்க கவசத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
- இதைத்தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தியாகி விஸ்வதாஸ் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் ஆடி மாத கூழ்வார்த்தல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
பின்னர் நவரத்தினம் மாலைகளுடன் தங்க கவசத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதைத்தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- பரங்கிமலை போக்குவரத்து பிரிவு போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- வாலிபர் சண்முக சுந்தரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆலந்தூர்:
தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து நேற்று மதியம் ஆலந்தூர் கத்திப் பாரா மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே வழிகாட்டு பெயர் பலகை தூண் மீது மோதியது.
இதில் பெயர் பலகையுடன் ராட்சத இரும்பு தூண் சரிந்து சாலை நடுவே விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சண்முக சுந்தரம் (28) என்ற வாலிபர் படுகாயம் அடைந்தார்.
புதுக்கோட்டை அருகே உள்ள திருமயம் மகமாயிபுரத்தை சேர்ந்த இவர் சென்னையில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேைல செய்து வந்தார்.
பெயர் பலகை சரிந்து விழுந்த வேகத்தில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிக் கொண்ட சண்முக சுந்தரம் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக பரங்கிமலை போக்குவரத்து பிரிவு போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு வாலிபர் சண்முக சுந்தரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் தனியார் ஐஸ்கிரீம் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வாலிபர் சண்முக சுந்தரத்துக்கு திருமணமாகி விட்டது. மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் அவர் சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் வசித்து வந்துள்ளார்.
மனைவி பெயர் ராதிகா, 5 வயதில் அனுசுயா என்ற பெண் குழந்தையும், சந்தீப் ரோஷன் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் தான் அவர் வழிகாட்டி பெயர் பலகை விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அவரது மனைவியும், 2 குழந்தைகளும் தவியாய் தவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக அவரது உறவினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.
சண்முக சுந்தரம் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டே பயணம் செய்ததாகவும், மாநகர பேருந்து டிரைவரின் அஜாக்கிரதை காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் மாநகர போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இந்த விபத்தில் மினி வேன் டிரைவரான ஜான் பீட்டர் என்பவரும் காயம் அடைந்தார். மோதிய வேகத்தில் பஸ்சின் முன் பக்கமும் பலத்த சேதம் அடைந்தது. இதில் 4 பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதற்கிடையே பஸ் டிரைவர் ரகுநாத், கண்டக்டர் சின்னையன் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி இருந்தனர். மாலையில் இருவரும் போலீசில் சரண் அடைந்தனர். இவர்களில் டிரைவர் ரகுநாத்தை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- 2 வடமாநில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.
- 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது 2 வடமாநில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து அவர்களை சோதனை செய்ததில் அவர்கள் 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சகர் (வயது 22), பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆசிப்கான்(22) என்பது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
- பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது.
- காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே தொடங்கிய பேரணி கலைஞர் பவள விழா மாளிகை வரை நடைபெற்றது.
காஞ்சீபுரம்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் தலைமையில், பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேடமணிந்து தி.மு.க.வினர் பேரணியாக சென்றனர்.
காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே தொடங்கிய பேரணி கலைஞர் பவள விழா மாளிகை வரை நடைபெற்றது. பின்னர் அங்குள்ள கருணாநிதி, அண்ணா சிலைகளுக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எழிலரசன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சிவராமன்.
- பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேளச்சேரி:
சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சிவராமன். இவரது மகன் சூர்யா (வயது16) மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே உடல் நிலை பாதிப்பு இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் சூர்யா, வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டியபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் சுதர்சன்,மற்றும் சூர்யா. இருவரும் இரட்டையர்கள். அவர்கள் அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.
இந்தநிலையில் இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள அறையை அகலப்படுத்துவதற்காக நடுவில் இருந்த சுவரை சுதர்சன் இடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மற்றொரு சுவர் இடிந்து சுதர்சன் மீது விழுந்தது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சுதர்சன் பலத்தகாயம் அடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர், அக்கம் பக்கத்தினர் உதவியோடு சுதர்சனை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுதர்சன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலு செட்டி சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் சாலபோகம் தெருவை சேர்ந்தவர் துரை.
- காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் சாலபோகம் தெருவை சேர்ந்தவர் துரை (வயது 71). இவர் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை புதிய மேம்பாலத்தில் இருந்து கீழே எட்டிபார்த்தார். அப்போது தவறி கீழே விழுந்தார். அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






