என் மலர்
காஞ்சிபுரம்
- நங்கநல்லூர் பகுதியில் இருந்து ஆதம்பாக்கம் வரை காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை பேரணி.
- தமிழக மக்கள் பொங்கி எழுந்தால் நீங்கள் பஸ்பமாகி விடுவீர்கள்.
ஆலந்தூர்:
நங்கநல்லூர் பகுதியில் இருந்து ஆதம்பாக்கம் வரை காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை பேரணி நடை பெற்றது.
தென் சென்னை மேற்கு மாவட்டதலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமை தாங்கினார். பாதயாத்திரை பேரணியை முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவின் 75 - வது சுதந்திர தின பவள விழாவிற்கு காங்கிரஸ்காரர்கள் தான் சொந்தகாரர்கள். தேசத்திற்கு துரோகம் செய்தவர்கள், மூவர்ண கொடியை தூக்கி கொண்டு இருக்கிறார்கள்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரில் தேசியக்கொடியை கட்டி செல்கிறார். அவர் மீது பா.ஜனதாவினர் செருப்பு வீசுகிறார்கள். தேசிய கொடி மீது மரியாதை இருந்திருந்தால் செருப்பை வீசி இருப்பார்களா?
பா.ஜனதாவினர் ரவுடி தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்கள் பொங்கி எழுந்தால் நீங்கள் பஸ்பமாகி விடுவீர்கள். நாட்டை காப்பாற்றுகின்ற தாய் கட்சி காங்கிரஸ். அதனால் தான் சொல்கிறேன், தேச துரோக புழுக்களை அழிக்க நாங்கள் ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம்.
காங்கிரஸ் கட்சிகாரர்களுக்கு கொடியை பிடிக்கவும் தெரியும், கொடியை திருப்பி பிடித்து தடியாக மாற்றவும் தெரியும்.
பெருந்தலைவர் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அவரது வீட்டிற்கு தீவைத்தவர்கள் இந்த கொள்ளைக்காரர்கள். இன்று காமராஜரை புகழ்ந்து பேசுகிறார்கள். தேசிய கொடியை ஏற்றுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நாசே. ராமச்சந்திரன், பொன். கிருஷ்ண மூர்த்தி, டி.செல்வம், ரங்க பாஷ்யம், தளபதி பாஸ்கர், வி. சிவராமன், கவுன்சிலர் மோ.பானுபிரியா,அய்யம் பெருமாள், ஆலந்தூர் பகுதி தலைவர்கள் தனசேகரன், வி.ரமேஷ்,முகப்பேர் ஜி.பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சுங்கத்துறை அதிகாரிகள் மத்திய வனக்குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
- சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:
தாய்லாந்து நாட்டில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முகமது ஷகீல் (வயது 21) என்பவர் மீது அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பெரிய கூடையை திறந்து சோதனை செய்தனர்.
அதில் தனித்தனி சிறிய பாக்கெட்டுகளில் மத்திய ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, செசல்ஸ் தீவு போன்றவைகளில் வசிக்கும் பாம்புகள், குரங்கு, ஆமை போன்றவைகள் கடத்தி வரப்பட்டிருந்தன. அதற்கு வேண்டிய ஆவணங்களும் அவர் வைத்திருக்கவில்லை.
இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் மத்திய வனக்குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
வட அமெரிக்கா நாட்டில் உள்ள ராஜநாகம் என்ற விஷமற்ற 15 பாம்புகளும், மேலும் ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய பகுதிகளில் உள்ள காடுகளில் வசிக்கும் பால் பைத்தான் என்ற ஒரு வகை மலைப்பாம்பு குட்டிகள் 5, ஆப்பிரிக்க நாட்டில் செஷல்ஸ் தீவில் காணப்படும் அல்ட்ரா பிராட் டாடாஸ் என்ற ஒருவகை ஆமை வகைகள் 2, மத்திய ஆப்பிரிக்காவில் வசிக்கும் டி பிராசா மங்கி என்ற குரங்கு குட்டி 1 என மொத்தம் 23 விலங்குகள் இருந்தன.
அந்த கடத்தல் ஆசாமியிடம் சுங்க அதிகாரிகளும், மத்திய வன குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அப்போது இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று விட்டு, அங்கு தங்கி, இவைகளை அங்கிருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. இவைகளை எதற்காக வாங்கி வந்தார் என்பது தெரியவில்லை. இது விஷமற்ற பாம்பு என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனாலும் இவைகளை கொண்டு வரும்போது, முறையாக சர்வதேச வனத்துறை மற்றும் சர்வதேச சுகாதாரத் துறையிடம் சான்றுகள் பெற்று, அந்த விலங்குகளை மருத்துவ பரிசோதனை செய்தே கொண்டு வர வேண்டும். ஆனால் இந்த விலங்குகள் எதற்குமே மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றுகள் இல்லை. எனவே இவைகளை திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதோடு அந்த திருப்பி அனுப்புவதற்கான செலவுகளையும் அந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கடத்தல் ஆசாமியிடமே வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை இவர் எதற்காக கொண்டு வந்தார் என்பது பற்றி விசாரணை செய்கின்றனர்.
இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.
- வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
போரூர்:
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.
2 வாலிபர்கள் கடப்பாரையை கொண்டு ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தனர் அப்போது எச்சரிக்கை மணி அடித்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து வந்த வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த வினோத் (22) மற்றும் அவனது கூட்டாளியான 18வயதுக்கு உட்பட்ட சிறுவன் இருவரும் சேர்ந்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயன்று தப்பியது தெரிந்தது. தலைமறைவாக இருந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர் அவர்களிடம் இருந்து ஒரு மொப்பட் பறிமுதல் செய்யப்பட்டது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகம்.
- தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் வருகிற 15-ந் தேதி 75-வது சுதந்திர தினத்தையொட்டி சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் தேசியக்கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்களின் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வாலாஜாபாத்தில் உள்ள மதுக்கடை அருகே உள்ள மின் கம்பம் மீது லாரி மோதியதில் சேதம் அடைந்தது.
- பலியான மோகன்ராஜீக்கு காஞ்சனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 46). இவர் வாலாஜாபாத்தில் துணை மின்நிலையத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு வாலாஜாபாத்தில் உள்ள மதுக்கடை அருகே உள்ள மின் கம்பம் மீது லாரி மோதியதில் சேதம் அடைந்தது. அதில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் மோகன்ராஜ் ஈடுபட்டார்.
அவர் மின் கம்பத்தில் ஏறி பணி செய்து கொண்டு இருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் மின் கம்பியில் தொங்கிய நிலையில் மோகன்ராஜ் பலியானார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக போலீசுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் பலியான மோகன்ராஜின் உடலை மின் கம்பத்தில் ஏறி மீட்டனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பலியான மோகன்ராஜீக்கு காஞ்சனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
பணியின்போது மின்சாரம் தாக்கி ஊழியர் இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கிராம ஊராட்சிகளுக்கு 60 ஆயிரம் தேசிய கொடி வழங்கும் விழா நடைபெற்றது.
- அமைச்சர் தா.மோ.அன்பசரன் 42 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேசிய கொடியை வழங்கினார்.
காஞ்சிபுரம்:
75-வது சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்காக குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கு 60 ஆயிரம் தேசிய கொடி வழங்கும் விழா நடைபெற்றது.
அமைச்சர் தா.மோ.அன்பசரன் 42 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேசிய கொடியை வழங்கினார்.
மேலும் பசுமை மூலிகை தோட்டம், உணவு வழங்கும் குடில், தேனீர் விடுதி குடில், வாகனங்கள் நிறுத்துமிடம், தமிழ் வாழ்க பெயர் பலகை திறப்பு விழா ஆகிய பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அடையாள அட்டை, மஞ்சள் பையும் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கிட்டத்தட்ட 60 ஆயிரம் வீடுகள் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில், அனைத்து வீடுகளுக்கும், தேசிய கொடிகள் வழங்கப்படுகிறது.
சுதந்திர தின விழா எந்த ஊராட்டசியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறதோ அந்த ஊராட்சிக்கு ஒன்றிய தொகுதி நிதியில் இருந்து வளர்ச்சி நிதியாக ரூ.10 லட்சம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு எம்.பி., செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி, மனோகரன் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் கலந்து கொண்டனர்.
மீஞ்சூர் ஒன்றியம் சார்பில் 55 ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு தேசியக்கொடியை ஒன்றிய சேர்மன் ரவி ஊராட்சி தலைவர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன் அத்திப்பட்டு துணை தலைவர் எம்.டி.ஜி கதிர்வேல், வல்லூர் தலைவர் உஷா ஜெயகுமார், வேலூர் சசிகுமார், கானியம் பாக்கம்ஜெகதீசன், கோளூர் குமார், தடப் பெரும்பாக்கம் பாபு, திருப்பாலைவனம் கங்கை அமரன், கோட்டை குப்பம் சம்பத், வஞ்சி வாக்கம் வனிதா ஸ்ரீ ரமேஷ், பெரும்பேடு ராஜேஷ், கொடூர் கஸ்தூரி மகேந்திரன், ஏலியம்பேடு சுகுணா, ஊராட்சி செயலாளர்கள் கொண்ட கரை முருகன், அனுப்பம்பட்டு செந்தில்குமார், ஏலியம்பேடு நவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
- தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தங்களுக்கான மனித வள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தங்களுக்கான மனித வள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அது சமயம் பட்டதாரிகள் (BE.உட்பட), டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள், ஆய்வக உதவியாளர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண் மூலம் கேட்டறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- குப்பையநல்லூர் அருகே கஞ்சா விற்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.
- சோதனை செய்ததில் அவரிடம் ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் பேரூராட்சி குப்பையநல்லூர் அருகே கஞ்சா விற்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாதமுனி மற்றும் போலீசார் குப்பையநல்லூர் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விக்னேஷ் (வயது 21) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். மேலும் அவரிடம் சோதனை செய்ததில் அவரிடம் ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் விக்னேஷை கைது செய்தனர்.
- குழு போட்டு இன்றைக்கு சாதனை படைத்த ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
- ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதலமைச்சர் என்ற பெருமையை மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட எல்லையான பாலுசெட்டி சத்திரம் பகுதியில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஏற்பாட்டில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ஒரு சாதாரண கிளைச் செயலாளர் இன்றைய தினம் இயக்கத்தினுடைய இடைக்கால பொதுச் செயலாளராக வந்திருக்கிறேன் என்று சொன்னால் அது அ.தி.மு.க. கட்சியில் மட்டும்தான் நடக்கும். இது ஜனநாயக அமைப்பு உள்ள ஒரு கட்சி. உழைக்கின்றவர்கள், இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கின்றவர்கள் என்றைக்காவது ஒரு நாள் உயர்ந்த பதவி உச்ச பதவிக்கு வர முடியும்.
தி.மு.க.வில் வர முடியுமா, வந்துவிட முடியுமா. தி.மு.க.வில் நிதிகள் மட்டும் தான் தொடர்ச்சியாக வாரிசாக பதவிக்கு வர முடியும். என்னை சுற்றி பல பேர் இருக்கிறார்கள், மு.க. ஸ்டாலினை சுற்றி நிற்க முடியுமா? ஏனென்றால் நாங்கள் எல்லாம் குடும்பமாக இருக்கின்றோம், நீங்களும் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்களாக இருக்கிறீர்கள்.
தி.மு.க.வில் மக்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள். வீட்டு மக்களை பற்றி தான் கவலைப்படுவார்கள், வீட்டில் இருக்கிறவர்களுக்கு யாருக்கு பதவி கொடுக்க வேண்டும், கட்சியில அதிகாரம் வழங்க வேண்டும் அதிகாரப்பதிவு இப்படி கூறு போட்டு நடத்துகின்ற கட்சி. தி.மு.க. ஒரு கட்சி இல்லை. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.
அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுவது, நிர்வாகியின் மீது வழக்கு போடுவது, கஷ்டப்படுத்துவது, துன்பப்படுத்துவதால் அ.தி.மு.க.வை அடக்கப்படுமாம். ஒருபோதும் நடக்காது.
உங்களுக்கு அரிதான முதல்-அமைச்சர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் நீங்கள் முதலமைச்சராகி விட்டீர்கள். கிடைக்கின்ற பதவியை வைத்து மக்களுக்கு நன்மை செய்து பாராட்டை பெறுங்கள். அதைவேண்டாம் என்று சொல்லவில்லை. வழி தவறி பாதை மாறி போனீர்கள் என்றால் எதிர்காலத்தில் நீங்கள் நிறைய சந்திக்க நேரிடும்.
அவர் எல்லா திட்டத்தையும் வேகமாக அறிவிப்பார். அறிவித்த உடனே அதற்கு குழு போட்டு விடுவார். இதுவரைக்கும் 37 குழு போட்டு இருக்கிறார். குழு போட்டு இன்றைக்கு சாதனை படைத்த ஒரே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான்.
ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதல்-அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை. நாட்டின் மீதும் அக்கறையில்லை. அக்கறை இல்லாத ஒரு முதல்-அமைச்சர் இன்றைக்கு தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்தால் வேதனை தான் நமக்கு மிச்சம்
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி, நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு. எஸ். சோமசுந்தரம், வள்ளி நாயகம், பாலாஜி, வாலாஜா பாத் அரிக்குமார், குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, துன்பவனம் ஜீவானந்தம், ஜெயராஜ், திலக்குமார், கரூர் மாணிக்கம், படுநெல்லி தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கொலையுண்ட சிவஞானத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கைதான சரவணன், கொலையுண்ட சிவஞானத்தின் மளிகை கடை அருகே துரித உணவகம் நடத்தி வருகிறார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது56). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டுவதற்கு தயாரானார். அப்போது அங்கு வந்த 3 போலீசார்கள் திடீரென சிவஞானத்தை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவஞானம், அவர்களிடம் இருந்து தப்பி செல்ல ஓடினார். ஆனாலும் விரட்டி சென்ற கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தனர். தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சிவஞானம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
உடனே கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலையுண்ட சிவஞானத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதே பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளிகளான மண்டபத்தெருவை சேர்ந்த சரவணன், அவரது நண்பர்களான சிட்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணி கண்டன், ஆபேல் ஆகிய 3 பேரையும் கொலை நடந்த ஒரு மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
கைதான சரவணன், கொலையுண்ட சிவஞானத்தின் மளிகை கடை அருகே துரித உணவகம் நடத்தி வருகிறார். இடப்பிரச்சினை தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்த தகராறில் சிவஞானம் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று கைதான 3 பேரிடமும் மேலும் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரெயில், பஸ் நிலையங்கள் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
- விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பும், பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆலந்தூர்:
இந்தியாவின் 75-வது சுதந்திரதின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிஉள்ளதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டு இருக்கிறது.
அதன்படி விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரெயில், பஸ் நிலையங்கள் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மோப்ப நாய் உதவியுடன் சோதனை, விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே அமலில் இருப்பதால், அதை மேலும் தீவிரமாக செயல்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதைப்போல் பி.சி.ஏ.எஸ்.பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பும், பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இதைப்போல் விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, பார்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப்பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதித்து வருகின்றனர்.
மேலும் விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள், பயணிகளை அறிவுறுத்தி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பாதுகாப்பு வருகிற 20-ந்தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும், தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வருகிற 13, 14, 15-ந்தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஆகஸ்ட் மாதம் ரெயில் பயணிகள் பாதுகாப்பு மாதமாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. பரங்கிமலை, மீனம்பாக்கம், பழவந்தாங்கல், திரிசூலம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பரங்கிமலை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் ரெயில்வே போலீசார் தேசிய கொடியின்பெருமை, ரெயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி குறித்து மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.
- நவரத்தினம் மாலைகளுடன் தங்க கவசத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
- இதைத்தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தியாகி விஸ்வதாஸ் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் ஆடி மாத கூழ்வார்த்தல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
பின்னர் நவரத்தினம் மாலைகளுடன் தங்க கவசத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதைத்தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






