என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் மோதியதில் பெயர் பலகை விழுந்து விபத்து: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தனியார் நிறுவன ஊழியர் பலி
- பரங்கிமலை போக்குவரத்து பிரிவு போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- வாலிபர் சண்முக சுந்தரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆலந்தூர்:
தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து நேற்று மதியம் ஆலந்தூர் கத்திப் பாரா மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே வழிகாட்டு பெயர் பலகை தூண் மீது மோதியது.
இதில் பெயர் பலகையுடன் ராட்சத இரும்பு தூண் சரிந்து சாலை நடுவே விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சண்முக சுந்தரம் (28) என்ற வாலிபர் படுகாயம் அடைந்தார்.
புதுக்கோட்டை அருகே உள்ள திருமயம் மகமாயிபுரத்தை சேர்ந்த இவர் சென்னையில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேைல செய்து வந்தார்.
பெயர் பலகை சரிந்து விழுந்த வேகத்தில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிக் கொண்ட சண்முக சுந்தரம் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக பரங்கிமலை போக்குவரத்து பிரிவு போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு வாலிபர் சண்முக சுந்தரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் தனியார் ஐஸ்கிரீம் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வாலிபர் சண்முக சுந்தரத்துக்கு திருமணமாகி விட்டது. மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் அவர் சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் வசித்து வந்துள்ளார்.
மனைவி பெயர் ராதிகா, 5 வயதில் அனுசுயா என்ற பெண் குழந்தையும், சந்தீப் ரோஷன் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் தான் அவர் வழிகாட்டி பெயர் பலகை விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அவரது மனைவியும், 2 குழந்தைகளும் தவியாய் தவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக அவரது உறவினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.
சண்முக சுந்தரம் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டே பயணம் செய்ததாகவும், மாநகர பேருந்து டிரைவரின் அஜாக்கிரதை காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் மாநகர போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இந்த விபத்தில் மினி வேன் டிரைவரான ஜான் பீட்டர் என்பவரும் காயம் அடைந்தார். மோதிய வேகத்தில் பஸ்சின் முன் பக்கமும் பலத்த சேதம் அடைந்தது. இதில் 4 பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதற்கிடையே பஸ் டிரைவர் ரகுநாத், கண்டக்டர் சின்னையன் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி இருந்தனர். மாலையில் இருவரும் போலீசில் சரண் அடைந்தனர். இவர்களில் டிரைவர் ரகுநாத்தை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






