search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வழக்குகள் போடுவதால் அ.தி.மு.க.வை அடக்க முடியாது- எடப்பாடி பழனிசாமி பேச்சு
    X

    தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி

    வழக்குகள் போடுவதால் அ.தி.மு.க.வை அடக்க முடியாது- எடப்பாடி பழனிசாமி பேச்சு

    • குழு போட்டு இன்றைக்கு சாதனை படைத்த ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
    • ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதலமைச்சர் என்ற பெருமையை மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட எல்லையான பாலுசெட்டி சத்திரம் பகுதியில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஏற்பாட்டில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    ஒரு சாதாரண கிளைச் செயலாளர் இன்றைய தினம் இயக்கத்தினுடைய இடைக்கால பொதுச் செயலாளராக வந்திருக்கிறேன் என்று சொன்னால் அது அ.தி.மு.க. கட்சியில் மட்டும்தான் நடக்கும். இது ஜனநாயக அமைப்பு உள்ள ஒரு கட்சி. உழைக்கின்றவர்கள், இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கின்றவர்கள் என்றைக்காவது ஒரு நாள் உயர்ந்த பதவி உச்ச பதவிக்கு வர முடியும்.

    தி.மு.க.வில் வர முடியுமா, வந்துவிட முடியுமா. தி.மு.க.வில் நிதிகள் மட்டும் தான் தொடர்ச்சியாக வாரிசாக பதவிக்கு வர முடியும். என்னை சுற்றி பல பேர் இருக்கிறார்கள், மு.க. ஸ்டாலினை சுற்றி நிற்க முடியுமா? ஏனென்றால் நாங்கள் எல்லாம் குடும்பமாக இருக்கின்றோம், நீங்களும் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்களாக இருக்கிறீர்கள்.

    தி.மு.க.வில் மக்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள். வீட்டு மக்களை பற்றி தான் கவலைப்படுவார்கள், வீட்டில் இருக்கிறவர்களுக்கு யாருக்கு பதவி கொடுக்க வேண்டும், கட்சியில அதிகாரம் வழங்க வேண்டும் அதிகாரப்பதிவு இப்படி கூறு போட்டு நடத்துகின்ற கட்சி. தி.மு.க. ஒரு கட்சி இல்லை. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.

    அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுவது, நிர்வாகியின் மீது வழக்கு போடுவது, கஷ்டப்படுத்துவது, துன்பப்படுத்துவதால் அ.தி.மு.க.வை அடக்கப்படுமாம். ஒருபோதும் நடக்காது.

    உங்களுக்கு அரிதான முதல்-அமைச்சர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் நீங்கள் முதலமைச்சராகி விட்டீர்கள். கிடைக்கின்ற பதவியை வைத்து மக்களுக்கு நன்மை செய்து பாராட்டை பெறுங்கள். அதைவேண்டாம் என்று சொல்லவில்லை. வழி தவறி பாதை மாறி போனீர்கள் என்றால் எதிர்காலத்தில் நீங்கள் நிறைய சந்திக்க நேரிடும்.

    அவர் எல்லா திட்டத்தையும் வேகமாக அறிவிப்பார். அறிவித்த உடனே அதற்கு குழு போட்டு விடுவார். இதுவரைக்கும் 37 குழு போட்டு இருக்கிறார். குழு போட்டு இன்றைக்கு சாதனை படைத்த ஒரே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான்.

    ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதல்-அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை. நாட்டின் மீதும் அக்கறையில்லை. அக்கறை இல்லாத ஒரு முதல்-அமைச்சர் இன்றைக்கு தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்தால் வேதனை தான் நமக்கு மிச்சம்

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி, நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு. எஸ். சோமசுந்தரம், வள்ளி நாயகம், பாலாஜி, வாலாஜா பாத் அரிக்குமார், குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, துன்பவனம் ஜீவானந்தம், ஜெயராஜ், திலக்குமார், கரூர் மாணிக்கம், படுநெல்லி தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×